திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை :

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி விட்டது.

இந்தியாவில் அனேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்று விட்டன. ஆனால் இது சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு தானா? என்ற கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. 

இஸ்லாமியர்கள் தரப்பில் எடுத்து வைத்த வாதங்கள் அத்தனையையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், இந்துத்துவாவாதிகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றையும் உச்ச நீதிமன்றம் மறுத்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இராமர் கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று சங்பரிவார்கள் பிரச்சாரம் செய்தன. அங்கு கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

1949 ஆம் ஆண்டு வரை அங்கே தொழுகைகள் நடந்தன என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிப் படுத்தியிருக்கிறது. அந்த மசூதியில் தொழுகைகள் ஏதும் நடக்கவே இல்லை என்று சங்பரிவாரங்கள் முன்வைத்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

450 ஆண்டு கால உரிமை முஸ்லிம்களுக்கு அந்த மசூதியில் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

450 ஆண்டுகாலம் ஒரு இடத்தில் மசூதி இஸ்லாமியர்களுக்கு இருந்தது, அதை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்று சொன்னதற்கு பிறகு அவர்கள் நிலத்திற்கான உரிமை கோருவதற்கு உரிமை இல்லை என்ற தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23 தேதிகளில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து சில விஷமிகள் ராமன் சீதை சிலைகளை போட்டது சட்டவிரோதம் என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. 1992ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதும் குற்றத்திற்கு உரிய நடவடிக்கை என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், அவை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டவைகள். சங்பரிவாரங்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு எதிரான கருத்துக்கள்.

ஆனால் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டது. இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவான விளக்கம் இல்லை மௌனம்தான் சாதிக்கிறது.

ஒப்பீட்டளவில் அது இந்துக்களுக்கு சொந்தம் என்கிற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பில் திரும்பத் திரும்ப கூறுகிறது. எப்படி இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதற்கு தொல்லியல் துறை சமர்ப்பித்த அறிக்கை. அந்த அறிக்கையில், மசூதி இருந்த இடத்தில் பூமிக்கு கீழே நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கே இஸ்லாமிய கட்டுமானங்கள் ஏதும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்று கூறி இருப்பதை ஒரு காரணமாக காட்டுகிறது.

இரண்டாவதாக அங்கேதான் ராமன் பிறந்தான் என்கிற ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையை காரணமாக காட்டுகிறது. ஒட்டு மொத்த இந்துக்களின் நம்பிக்கை என்று சங் பரிவாரங்கள் கூறலாம்; உச்ச நீதிமன்றம் கூறுவதுதான் வியப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்த இந்துக்கள் ராமன் அங்கு தான் பிறந்தான் என்ற நம்பிக்கையை காரணம் காட்டி மசூதி இருந்த இடத்தில் கோயிலைக் கட்டிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையை இந்துக்களுக்கு சாதகமாக பயன்படுத்திய உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் நம்பிக்கையை அவர்களை பாபர் மசூதி பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கிறது. அதாவது தொழுகையை நடத்துவதற்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை எனவே வேறு இடத்தில் மசூதி கட்டி அவர்கள் தொழுகை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆக இஸ்லாமியர்களுடைய நம்பிக்கையை அந்த இடத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்று வதற்கும், இந்துக்களின் நம்பிக்கையை மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமன் கோயில் கட்டுவதற்காகவும் உச்சநீதிமன்றம் இப்போது பயன்படுத்தி இருக்கிறது.

யார் இந்த மசூதியை இடித்தார்களோ, அவர்களே ஒரு அறக்கட்டளையை நிறுவிக் கொண்டு இராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது பற்றி கோரிக்கை எதுவும் இந்த வழக்கு மனுவில் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் இராமர் கோயில் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

ஒருவேளை மசூதி இடிக்கப்படாமல் மசூதி அங்கு இருந்திருக்கும் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. சட்ட விரோதமாக மசூதி இடிக்கப்பட்ட இடம் இப்போது ‘இராமனு’க்கு சட்டபூர்வ கோயிலை எழுப்புவதற்கு வழி வகுத்திருக்கிறது.

இது சட்டத்தின் முன் சரியான தீர்ப்புதானா என்ற கேள்வியை வரலாறு எதிர்காலத்தில் நிச்சயம் எழுப்பத்தான் செய்யும்.                              

Pin It