'வெங்காயம்' என்ற சொல்லைக் கேட்டாலே இதுவரை பெரியார்தான் பலருக்கு ஞாபகம் வருவார்; இப்போது சிலருக்கு நிர்மலா சீதாராமன் ஞாபகம் வரலாம்.

ஆனால் இருவரும் வெங்காயம் என்ற சொல்லைப் பயன்படுத்தியது வெவ்வேறு காரணத்திற்காக.

பெரியார் தனது பேச்சில் அடிக்கடி வெங்காயம் என்ற சொல்லைப் பயன்படுத்துவார். அது ஏன் என்பதற்கு அவரே ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

"வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை அச்சசொல்லின் பொருள் - வெறுங்காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே - சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாததன்மையதாய்-முடிவது என்பது. அது போன்றனவே, கடவுளும் மதமும் ஆகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருள்களே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்”

ஆகவே மதம், கடவுள், சாதி இவையெல்லாம் வெறும் கற்பிதங்கள் அவற்றுக்குள் சாராம்சம் என எதுவும் இல்லை உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் செல்வது என்பதைக் குறிக்கவே அவர் அச்சொல்லை அடிக்கடி பயன்படுத்தினார்.

ஆனால் நிர்மலா சீதாராமன் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் பற்றிய கேள்விக்கு, "நான் வெங்காயம் பூண்டு சாப்பிடும் குடும்பத்திலிருந்து வரவில்லை" என்றார்.

நிர்மலா சீதாராமன் சார்ந்த பார்ப்பன சமுகம் உள்ளிட்ட பல உயர் சாதியினர் வெங்காயம், பூண்டு முதலியவற்றை உணவுகளில் சேர்ப்பதில்லை. ஏனெனில் அவை கீழ் சாதிகளுக்கு உரிய உணவாம், அதை சாப்பிட்டால் இவர்கள் சுத்தம் கெட்டுவிடுமாம் . உணவில் வெங்காயம் பூண்டு சேர்க்காத உணவுப் பழக்கத்தை அவர்கள் சொந்தமாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை, அது சமணர்களிடமிருந்து காப்பி அடித்தது.

அதாவது எப்படி வேத காலத்தில் யாகம் என்ற பெயரில் பசுக்களைக் கொன்று தந்தூரி போட்டுச் சாப்பிட்ட இந்த மகா உத்தமர்கள் பௌத்தத்தின் எழுச்சிக்குப் பின்னர் தங்களை உயர்ந்த சமூகமாகக் காட்டிக் கொள்வதற்கு, அதி தூய்மையானவர்கள் என்று நிறுவுவதற்கு மாட்டுக்கறி உண்பதை தவிர்த்தார்களோ, அதேபோல்தான் தங்கள் சாதிய மேலாதிக்கத்தை நிறுவுவதற்குச் சமணர்களின் உணவுப் பழக்கத்தை ஏற்றுக் கொண்டதும்.

காய்கறிக்குக் கூட சாதிச் சாயம் பூசி ஒரு வகுப்பு ஒதுக்கிய வைத்தாலும் வெங்காயம் இன்று கோடிக்கணக்கான உழைக்கும் பெரும்பான்மை மக்களின் அன்றாட உணவுப் பொருளாகவும், எதிர்ப்பு சக்தி வழங்கி அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவாகவும் இருந்து வருகிறது.

சரி நமது கதைக்கு வருவோம்; நாம் இந்த மாத இதழுக்கு வெங்காயம் என்று பெயர் வைத்ததற்கான காரணங்கள்.

ஒன்று இந்த இதழில் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை எதுவாக இருந்தாலும் அதன் உட்பொருள் சமத்துவத்திற்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டுள்ள சாதி, மதம், கடவுள், சமத்துவத்திற்கு எதிரான தேசியம், ஆட்சி அதிகாரம் எதுவாக இருந்தாலும் சமரசம் இன்றி அதனைத் தோலுரித்து அவை உள்ளீடற்றவை என்று நிறுவுவதாக அமையும்.

பெரியாரியலை உருவாக்கியவர்கள் உணர்ந்திருக்கக் கூடிய கருத்து 'பார்ப்பனர்கள் எதையெல்லாம் நல்லது என்று சொல்கிறார்களோ அவை நமக்குத் தீமையானதாகவே இருக்கும், அதேசமயம் அவர்கள் எதையெல்லாம் தீயது என்ற பிரச்சாரம் செய்கிறார்களோ, ஒதுக்குகிறார்களோ அது நமக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்'.

எனவே இவ்விதழின் மற்றொரு நோக்கம் ஆதிக்க சக்திகளால் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ, சுயநலத்திற்காக திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின உழைக்கும் மக்கள், பெண்கள் ஆகியோரின் சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டிற்காக, வெங்காயத்தைப் போன்ற அவசியமான ஆரோக்கியமான கருத்துக்களை, செய்திகளை அவர்களிடம் சரியாகக் கொண்டு சேர்ப்பது ஆகியவையாகும்.

உலகம் முழுவதும் சமூக, பொருளாதார சமத்துவம் என்ற இலட்சியத்தை அடைவதற்காகப் பல கோடி பேர் தங்களால் இயன்ற அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எங்களின் இந்த மாத இதழும் அத்தகைய முயற்சியின் ஒரு சிறு துளியே. எங்களின் முன்னெடுப்பு தொடர்வதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

- ஆசிரியர் குழு

Pin It