(ஜாதி ஒரு மன நோயாக பவுதீக உருவமின்றி இருக்கும்போது அந்த மனச்சூழலை எப்படித் தகர்க்க முடியும் என்ற கவலை அம்பேத்கருக்கு இருந்தது. பெரியார், ‘மனநோய்க்கு’ அடித்தளமான பவுதீகக் காரணிகளாக இருந்த கடவுள், மதம், சாஸ்திரம், புனிதங்களைக் கட்டுடைத்து, மக்களிடம் அதைக் கொண்டு செல்ல முடியும் என்று துணிவோடு களமிறங்கி தனது புரட்சியைத் தொடர்ந்தார் என்பதை சமூக அறிவியல் பார்வையில் விளக்குகிறது - இந்தக் கட்டுரை.)
‘பெரியார்’ என்ற ஒரு மனிதர் நம்மிடமிருந்து பௌதீகமாய் மறைந்துபோய் நாற்பத்தியாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்; ‘தந்தை பெரியார்’ என்ற இந்தச் சொல் அளவிற்கு இந்த நூற்றாண்டின் தமிழ்நில அரசியல் தளத்தில் அதிகம் வசையிடப்பட்ட, கொண்டாடப்பட்ட ஒன்று இருக்க முடியாது. ‘பெரியார்’ என்று அரசியல் மிகைப்படுத்தும் ஈ.வெ.ராமசாமியின் பேச்சுக்களும் எழுத்துக்களும் வெற்றுக் கூப்பாடுகள் எந்தவொரு சிந்தனையுமற்ற அற்பங்கள். பார்ப்பனர், பார்ப்பனியம் என குறிப்பிட்டு, வெறுப்பரசியலை உருவாக்கி வெறும் பரப்புரையாகவே வீணாகிப் போனது அவரது வாழ்வு என்ற ஒரு தரப்பின் மேற்புரிதலில், வெறும் பரப்புரையாக அரசியல் தளத்தில் மட்டுமே, இன்று விவாதிக்கப்படும் பெரியாரை, அவரது சொற்களை; சிந்தனை தளத்திற்குள் உள்வாங்கி, இன்றைய தலைமுறைகள் எப்படி உரையாடத் துவங்குவது?
தன்மையில்; பெரியாரின் எழுத்துக்கள், சொற்கள் எதுவும் நுண் வாசிப்புத் தேடல் கொண்ட மனிதர்களுக்கானதல்ல. அது ஒரு பெருந்திரளை வாசிக்கச் சொல்லி, அதன் வழியாக சிந்தனைத்தளம் தாண்டிய சமூகச் செயல்பாடாக மாற வேண்டி பயன்விளைவு நோக்கியது.
மானுட வரலாற்றில் முதல்முறையாக, ஒரு மனிதன் தன்னளவில், தன் சமூகவெளிக்குள் தன் சுயத்தை உணர்ந்து கொள்ளாமல் இழிந்து கிடக்கும் நிலைமீட்சிக்கு “சுயமரியாதை இயக்கம்” (Self Respect Movement) என ஒரு சமூக இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையே, இந்திய நிலப்பரப்பிற்குள் அதுவரை, தத்துவார்த்த தளத்தில் மட்டும் பேசப்பட்டு வந்த தனிமனித “சுயம்” (Self) என்ற ஓர் உணர்நிலையை; பெருந்திரள் மக்கள் வெளிக்குள் உரையாடும் நிலைக்கு கொண்டுவந்தது.
இங்கு மனிதன் மட்டுமல்ல, எந்தவொரு உயிரும் அதனளவில் தன் சுயத்தை உணராமல் இருக்கையிலேயே சுரண்டப்படுகிறது. தம் சுயம் வெட்டப் படுகையில் ஒவ்வொரு தனிமனிதனும், விலங்கு நிலைகொண்டு, அடிமை ஊழியத்திற்கு தள்ளப்பட்டு சுரண்டப்படுவான். ஒரு யானை குட்டியாய்க் கிடக்கையில் காலில் அழுத்திய சங்கிலியில் சிந்தனையை முடக்கி, ஆயுள் முழுக்க தன் பலமெனும் சுயத்தை மறந்து அடிமையாய்க் கிடக்கும் நிலை போல சமூகம் கிடந்தது.
இப்படியாக சகமனிதனை தன்பிறப்பின் அடிப்படையிலேயே சுயமிழக்கச் செய்வது சனாதன வர்ணாசிரமக் கட்டமைப்பு. இந்திய நிலப்பரப்பில் ஆன்மீகமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் ’வர்ணாசிரமம்’; உண்மையில், ஓர் அரசியலதிகார கட்டமைப்புக் கோட்பாடு (Authoritarian Political Ideology). எந்தவொரு அதிகாரக் கட்டமைப்பு கோட்பாடும் தன்னளவில், ஒரு தத்துவார்த்த பின்புலத்தை உருவாக்கிக் கொள்ளாமல் நிற்க முடியாது. ஹிட்லரின் நாசிசத்துக்கு அடித்தளமாக ஆரிய மேட்டிமை பெருமிதம் இருந்தது போன்று, அனைத்து அதிகாரக் கட்டமைப்புக் கோட்பாடும் ஒரு தத்துவார்தத்தைத் தன் இருப்பிற்குக் கட்டமைத்துக் கொள்ளும்.
பெரியார் எதில் தனித்து நிற்கிறார்? வர்ணாஸ்ரமக் கட்டமைப்பு, ஒரு மனிதனின் சுயத்தை அழிக்கும் தத்துவத்தின்மேல் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அது, அதிகாரக் கட்டமைப்பாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது பெரும்பான்மையான உழைக்கும் மானுடத்தின் அடையாளத்தை முற்றாக அழித்து நிற்கும் வர்ணாஸ்ரமக் கட்டமைப்பு, அதன் உச்சத்தில் பார்ப்பனர்களை நிறுத்தியிருக்கிறது. பார்ப்பனர்களுக்கு மனிதர்களை மீறிய, மானுட உயிரின் இயல்சுயத்துக்கு (Normal Self) அப்பாற்பட்ட ஒரு பெருமிதத்தை இந்தக் கட்டமைப்பு வழங்குகிறது. அடையாளங்களும் மரியாதையும் ஒரு பெரும் பகுதியினருக்கு மறுத்து, அழிக்கும் இதே கட்டமைப்பு, பார்ப்பனர்களுக்கு மட்டும் அதீதப் பெருமையை வழங்கும் முரண்பாடுகளை உள்ளடக்கியிருக்கும் இக் கட்டமைப்பில் அடங்கியுள்ள சமூகச் சுரண்டலையும் இந்த சமூகச் சுரண்டலின் வழியாகவே வர்ணாஸ்ரமக் கட்டமைப்பு, தன்னைத் தாக்குப் பிடித்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் புரிந்து கொண்டே ஒரே தலைவர் பெரியார் என்பதுதான், அவரது தனித்துவமான சிந்தனை.
“ஒரு தீண்டத்தகாதவனாக இருந்து கொண்டு இந்த நாட்டின் அடையமுடியா அனைத்து உயரங்களையும் அடைந்த பின்னும் சாதியக் கட்டமைப்பு, என்னை நடுக்கம் கொள்ளச் செய்கிறது என்கிறார் அம்பேத்கர். ஏனெனில் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து சுரண்டல் சமூக அமைப்புகளும் ஒரு பௌதீகத் தன்மை கொண்டவை. இந்தியாவின் வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பு எந்த பௌதீக நிலையுமற்ற அரூப மனநிலையாக இருப்பதால், அதை நெருங்கி உடைக்க முடியாமல் பயங்கரத் தன்மை கொண்டதாக இருக்கிறது” என்று தன் இறுதி நாட்களில் அம்பேத்கர் எழுதுகிறார்.
ஜாதி ஒரு மனநிலை - அதை எப்படி உடைக்கப் போகிறோம் என்ற அச்சம் அம்பேத்கருக்கு இருந்த நிலையில், அதை நெருங்கி உணர்ந்து அடித்து உடைக்கப்படக்கூடிய பௌதீகம் கொண்டவை என கண்டு கொண்டார் பெரியார். வர்ணாசிரம சுரண்டலின் வேர்; இந்த இரு வேறு துருவத் தன்னிலைகளின் (Contradictive Selves) மனக் கட்டமைப்பு என்பதை பெரியார் சிந்தித்ததாலே அந்த இரண்டையும் உடைக்க வேண்டிய செயற்பாட்டில் இறங்குகிறார். அதற்காக பொதுச் சமூகத்தைத் திரட்டுகிறார். எளிமையாகக் கூற வேண்டுமானால் ஒரு சமூகத்தை அடிமையாகவும் பார்ப்பனர்களை உயர் பெருமைக்குரியதாகவும், நிலைநாட்டிய வர்ணக் கட்டமைப்புக்கான வேர்களைத் தகர்த்தால், ஜாதிய மனநிலையைத் தகர்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார் பெரியார்.
ஒரு பார்ப்பனிய மனம், எதன் வழியாக தனக்கான உயர்ப் பெருமை என்ற மீயுணர்வு சுயத்தை அடைகிறது என்பதை பெரியார் ஆராய்கிறார். அது அவர்களின் வர்ணம் (நிறம்), பொதுவில் அறிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்குள்ளாகவே புழங்க வைக்கப்பட்டு, பொதுச் சமூக பயன்பாட்டிற்கு சென்றுவிடாமல் பொத்தி வைக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மொழி, வேத உச்சாடங்கள், ஸ்மிருதிகள், புராணக் கற்பனைகள், பொதுச் சமூகத்திலிருந்து தீண்டாமல் உள்ளடைவு செய்து கொள்ளும் தனித்த வாழ்வியல் செயற்பாடுகள் இதன் வழியாகவே ஒரு பார்ப்பனிய மனம், ஆதிக்கத்தையும் உயர்ச்சிப் பெருமையையும் பெற்று சுயத்தை அடைந்து தக்க வைத்துக் கொள்கிறது.
மாறாக, பார்ப்பனரல்லா பண்பாட்டு மனங்கள் மேற்சொன்ன அதே கூறுகளைக் கொண்டு, தங்கள் இயல்வாழ்நிலையின் அன்றாடங்களை, கலைகளை, படைப்புகளை, ஆன்மீக நம்பிக்கைகளை தாழ்ந்தவையாக்கிக் கொள்ளும் உணர்நிலை எய்தி, வீழ்ந்துபட்டு தங்கள் சுயத்தைப் பறிகொடுக்கின்றன.
இந்த மீயூணர்வு (Imperious), தாழ்நிலை (Inferior) என்ற முரண் சுயங்களை (Contradictive Selves), அவற்றை உணர்ந்து கொண்டுள்ள அந்தந்தத் தரப்பின் திரள் மனங்கள்(Collective Conscious) உணராத வரை, இந்திய நிலப்பரப்பின் இந்த வர்ணாசிரம சுரண்டல் கட்டமைப்பை தொடக்கூட முடியாது என பெரியார் கண்டறிந்தாலேயே, அந்த இரு முரண்சுயங்களையும் உடைத்தெரியும் சொற்களை பேசினார், எழுதினார்.
- உங்களுக்கு முன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளையே நீங்களும் செய்து கொண்டிருந்தால், உங்கள் வாழ்நாளும் அவர்களைப் போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய, திருத்தம் காண முடியவே முடியாது. மலைக் காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் ‘கொய்னா’ சாப்பிடுவதையே அதற்குப் பரிகாரம் என்று கருதுவார்களானால், அம் மக்களுக்கு மருந்து சாப்பிடுகிற வேலையும், மருந்து வியாபாரிகளுக்கு இலாபம் கிடைக்கிற வேலையும் தான் நடைபெறுமே தவிர - அவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் மலைக் காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்பட மாட்டாது. (குடிஅரசு 13.1.1945)
- தோழர்களே! நான் ஏன் இப்படிச் சொல்லி வருகிறேன் என்றால், சாதி முறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியே யாகும். இந்துக் கடவுள்கள் பெயராலும், சாஸ்திரங்கள் பெயராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள், மத சாஸ்திரங்களுக்கும் இந்து மதத்திற்கும், வேதாந்தமும் தத்துவார்த்தமும் சொல்லி, இதை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளைகளாக ஆவதற்கு முயற்சிப்பார்கள். இந்த அறிவீனமும் மோசமும் தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதை யடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலைப் போக்க, ஒரு கடுகளவும் பயன்படாது.
உண்மையில் மலைக் காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால், மலைக் காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பத்தி செய்கிற கொசுப் பூச்சிகள், விஷக் காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும். இவை ஒழிக்கப்பட வேண்டு மானால், மறுபடியும் அவை உற்பத்தியாகா வண்ணம் கசுமாலங்களையும் குப்பை கூளங்களையும் நெருப்பு வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர்க் குட்டைகளை மூடி ஆக வேண்டும். அதுபோலவே தான், நம் சமுதாய இழிவுக்குக் காரணங்களாய் இருக்கிற எப்படிப்பட்ட மதத்தையும், கடவுள்களையும், ஆதாரங்களையும் நாம் அடியோடு அறுத்தே தீர வேண்டியவர்களாய் இருக்கிறோம். (குடிஅரசு 18.1.1945)
- பார்ப்பனர்கள் தம்மைப் ‘பிராமணர்கள்’ என்று கூறிக் கொண்டு, ‘பிராமணாள் ஓட்டல்’ என்று போட்டுக் கெண்டு, நம்மைப் பஞ்சமன், சூத்திரன் என்ற வகுப்பில் குறிக்கும் ஹரிஜனன், நாயுடு, ரெட்டியார், முதலியார், பிள்ளை, ஆச்சாரி, செட்டியார், நாடார் முதலிய பெயர்களால் அழைத்தும், அழைத்துக் கொள்ளும்படி செய்தும் வருகிறார்கள். அதுதான், பதிவு (ரிஜிஸ்டர்) ஆகும். ஆதாரங்களில் அப்படிப் போட்டாக வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். இன்று நடப்பில் இருக்கும் சாதிக்கும், வகுப்புக்கும் இதுதான் தத்துவமாக இருந்து வருகிறது.
பார்ப்பனர்கள், ‘பிராமணர்கள்’ ஆனால் பார்ப்பனர்கள் அல்லாத மற்ற ‘இந்து’க்கள் என்பவர்களாகிய நாம் யார்? சூத்திரர்கள் என்பதாகத் தானே நாமே ஒப்புக் கொண்டதாக ஆகி விடுகிறது.
ஆதலால், பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் - ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது - என்று பெரியார் சாதிய மனநிலைக்குள் புதைந்து கிடக்கும் பவுதீகக் காரணிகளை மக்கள் மன்றத்தில் போட்டுடைத்தார்.
(தொடரும்)
- பூபாலன்