உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மனித இனக் குழுக்களுக்கெல்லாம் மூத்த பேரினமாகவும், வியப்பிற்குரிய வரலாற்றையும், போற்றுதலுக்குரிய பண்பாட்டையும் கொண்ட அறிவுமிகு ஆக்கமிகு மாந்தர்களாகவும் வாழ்ந்த குடி சாக்கியப் பெருங்குடியாகும். இச்சாக்கிய இனக்குழு, கபிலன் "சாங்கியம்' என்ற தத்துவ தரிசனத்தின் மூலமே சாக்கியர் எனப் பெயர் பெற்றது. இவர்களுடைய தத்துவ மூலாம்பரம், சாங்கியத்தை அளித்த கபிலடமிருந்து தொடங்குகிறது.

Budha
சாக்கியர்களின் தத்துவமே சாக்கியமாகும். இடைநிலை இலக்கணப் போலியின் காரணமாகவே "சாக்கியம்' என்பது "சாங்கியமாக' மருவியது. சமூக நிகழ்வுகளுக்கான வரைமுறையே சாக்கியமாகும். எது விதைக்கப்படுகிறதோ, சூழலின் தன்மையோடு அது வளர்த்தெடுக்கப்படும் என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். கடவுளோ அல்லது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட எதனாலும் விளைவின் போக்கை வடிவமைக்க முடியாது என்பதில் சாக்கியர்கள் தீர்க்கமாக இருந்தார்கள். சாக்கியர்களால் இத்துணைக் கண்டம், தத்துவங்களின் தளகர்த்தர்களைக் கொண்ட குழுமங்களாகவே காட்சியளித்தது.

சாக்கியர்களின் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் பலமடைந்த காலத்தில்தான், இத்துணைக் கண்டத்தில் மருத்துவம், கணிதம், வானவியல் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. சாக்கியர்கள் மானுடம், இயற்கை குறித்து சுயவிமர்சனம் உள்ளிட்ட விமர்சனம் செய்யும் உரிமையை, தனிமனித வாழ்வியல் மற்றும் சமூக இயக்கத்தில் கறாராக மேற்கொண்டார்கள். ஒரு திடமான மனிதத் திரளான இவர்கள், ஒட்டுமொத்த மனிதர்களின் சமத்துவ லட்சியத்திற்கு முழு விசுவாசமாக இருந்தவர்கள். இவர்கள் உயிர்ப் பரிணாம வளர்ச்சியில் உச்சமான மானுட வம்சத்தை கூட்டுப் பிராணிகள் (social animal) என்று பிரகடனப்படுத்தி, அதில் எவ்வித அய்யத்திற்கும் இடமில்லாத இயற்கைப் பண்பைக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய இத்தகைய மாண்புகள்தான் மானுட ஒருமைப்பாட்டிற்கு என்றும் எதிரிகளான பிறவி முதலாளிகளான பார்ப்பனர்களிடமிருந்து, அவர்களின் அடிவருடிகளான பார்ப்பனியர்களிடமிருந்து எழுந்த கடுமையான சமூக ஒடுக்குமுறையான சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடும் வலிமையை அளித்தன.

சாக்கியர்கள், வாழ்வுரிமை எனும்போது அது மரம், மலை, மண், பிரபஞ்சம் என்ற சகல உயிரினங்களுக்குமானது என்பதை மனங்கொண்டே தத்தம் செயல்பாடுகளைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இயற்கையுடன் மானுடத்தினுடன் ஒத்திசைவு என்பதே, சாக்கியர்களுக்கு ஒரு தொடர் நிகழ்வின் விளைவாகிக் கொண்டிருந்தது. சாக்கியர்கள் தங்கள் தங்கள் சுவாசத்தின் ஈரத்தில், சக மனிதர்களின் இருப்புகளையும் தாங்கிக் கொண்டிருந்தார்கள். சாக்கியர்கள் தங்கள் மரபாலும் வரலாற்றாலும் உட்படுத்திக் கொண்ட இடங்களைப் புராதன பொதுவுரிமை பொதுவுடைமை அமைப்பாக நிறுவிக் கொண்டார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியாது; பிரபஞ்சம் ஒரு மாயை. மனித வாழ்வில் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தும் முற்பிறவியின் வினை. கடவுளை நம்பு; மோட்சம் அடைய எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஞானமார்க்கம்; கர்ம மார்க்கம் வீணானது என்றெல்லாம் பித்தலாட்டக் கருத்து முதல்வாதத்திற்கு எதிராக உலகத்திலேயே தன் முதல் தத்துவப் போர் தொடுத்தவர்கள் சாக்கியர்கள். உலக வரலாற்றில் நடைபெற்ற/நடைபெறும் எல்லா முன்னேற்றங்களுக்கும் அறிவியல் வளர்ச்சிகளுக்கும் ஆதாரமாக இருந்து வருவது, பொருள் முதல்வாதம்தான். சமுதாய வளர்ச்சியில் கருத்து முதல் வாதத்தை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்த முழு மனிதர்கள் வரலாற்றில் சாக்கியர்கள். இயற்கை முழுவதும் மிகச் சிறு பொருளிலிருந்து மிகப் பெரிய பொருள் வரையிலும் மணலின் சிறு துகள்களிலிருந்து சூரியன் வரையும் உயின் மூலக் கருவிலிருந்து மனிதர் வரையிலும் சமுதாய வளர்ச்சியில் முக்கியத்துவம் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு தத்துவ ஞான உலகில் சாக்கியர்களின் பொருள் முதல்வாதத் தத்துவத்திற்கும் உண்டு.

இயற்கையை மனிதர் மேலும் மேலும் அறியும்போது, மனிதருக்கும் பொருளுக்கும், மனிதருக்கும் இயற்கைக்கும், ஆத்மாவுக்கும் உடலுக்கும் இடையே முரண்பாடு என்ற இயற்கைக்குப் புறம்பான மடமையான கருத்து மறையும் என்று ஏங்கெல்ஸ் குறிப்பிடுவதற்கு முன்பே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்தவர்கள் சாக்கியர்கள். சாக்கியர்கள், உலகத்தைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பிரபஞ்சத்திற்கப்பால் இருக்கும் ஒரு தெய்வீக சக்தி, இங்குள்ள எல்லா அசைவுகளையும் நிர்ணயிக்கின்றது என்ற கருத்தை அடியோடு மறுத்தார்கள். மனிதர்களிலேயே சிறந்தவர்கள் தன்னிலிருந்து தொடங்கிச் சமூகத்திற்காக வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் தங்கள் மனித இருப்பில் தங்கள் தெளிவை நின்று நிதானித்து, சலித்துப் புடைத்து தேர்ந்தவர்கள். மனிதர்கள் என்பவர்கள் தனித் தனியானவர்கள்; ஆனால் சமமானவர்கள் என்பதை வரையறை செய்தவர்கள். காலத்தை மீறி இவர்களே நிலைப் பெற முடியும். தங்களது மெய்யுணர்வைக் கொட்டி வைக்க மானுடப் பரப்பின் மீது சாக்கியர்கள் கொண்ட காதலே, அவர்களுக்கிருக்கும் மெய்யான ஆளுமையாகும்.

இவர்கள் தன்னையும் காதலித்து சக மனிதர்களையும் காதலிப்பவர்கள். ஒரு தலைக் காதல் இல்லாத இந்த உண்மை மனிதர்களே சாக்கியர்கள். மனிதர்களாய் வாழ நேர்ந்ததில் தானும் வாழ்ந்து சகமனிதர்களையும் வாழ வைக்க வேண்டுமென்ற ஆசையைத் தவிர, வேறெந்த ஆசையும் இவர்களுக்கில்லை. வாழும் மானுடத்தின் வளரும் மானுடத்தின் தவிர்க்க முடியாத செயலாகக் கூட்டுறவைப் பேணியவர்கள். இவர்களுக்கான வாழ்வு, தங்களுக்குள் மட்டுமில்லை; இனத்திலுமிருந்தது.

Ambedkar
சாக்கியர்கள் உன்னதமான தத்துவச் சிந்தனைகளை வளர்க்கும் கூரிய அறிவு பெற்றவர்கள். அன்புள்ளம், நட்புணர்வும், மனிதநேயம் கொண்டவர்கள். மானுடத்தில் சாதனைகளுக்கு மேல் சாதனைகள் நிகழ்த்த எட்டிய சிகரங்களை விட்டு விட்டு மேலும் உயர்ந்த சிகரத்தைத் தொட்டுப் பிடிக்க வேண்டும் என்பதே வரலாறு முழுவதும் இவர்களின் இதய தாகமாகும். மானுடத்தின் அழகுக்காகவும், உண்மைக்காகவும், நீதிக்காகவும் தங்களைத் தகவமைத்துக் கொள்ளுதல், மனித இயல்பான தத்துவத் தேட்டம், பாலி தமிழ் இலக்கியத்தின் தரவுகள் ஆதல், உலகின் மானுடத் தரத்திற்குத் தங்களை நிறுவிக் கொள்ளுதல் ஆகியனவே சாக்கிய இனக்குழு மாண்பாகும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இதுதான் இயக்கவியலாகும். சாக்கியர்கள் இவ்வியக்கவியலை "தம்மம்' என்று அழைத்தார்கள். இந்த தம்மம், தன் வீச்சில் எவ்வளவு வலிமையாகயிருந்தாலும், அது நிலை குலையாது. சாக்கிய இனக் குழுவில் மனித இருப்பில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்களே வீரர்களாக அங்கீகக்கப்படுவார்கள். மாறாக, தம்ம வீச்சிலிருந்து விலகி வாழ்வது சாக்கிய தம்மத்திற்கு ஏற்புடையது அல்ல. இது, சாக்கியத் தலைவர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க இயலாத, குடிமக்கள் இயன்ற அளவிற்குப் பின்பற்ற வேண்டிய நியதியாகும்.

இயற்கையின் இயங்கியலோடு வாழ்வின் இக்கட்டுக்களை மோதியுடைத்து, தர்க்கம் விளைவிப்பதில் சாக்கியர்கள் வல்லுநர்களாக இருந்தார்கள். இச்சை, அன்பு, சோகம், காதல், பிரிவு, அக்கறை, பாசம் போன்ற உணர் விருப்புகளில் சுழன்று தன்னை தங்கள் இனத்திற்காக கரைத்துக் கொள்ளும் வழிகாட்டிகளாக இருந்தார்கள். எந்தச் சுகத்துக்கும் சொரிதலுக்கும் தம் சுயமரியாதையை, சுதந்திரத்தை விற்றுவிடாமல், எந்த உடுக்கடி மடத்திலும் ஒட்டிக் கொள்ளாமலும் மனித சிறப்புக்கும் கருத்து மோதலுக்கும் எப்போதும் பின் வாங்காதவர்களாக இருந்தார்கள். சொல்வதைக் கூர்மையாகவும் வெளியிட, சாக்கியர்கள் தவறியதே இல்லை.

சாக்கியர்கள் பார்ப்பனிய திசைதோறும் இருள் தீற்றும் இழிந்த கருத்தாடல்களை, செயல்களைக் கேள்விக்குள்ளாக்கியவர்கள். பார்ப்பனியத்தால் உருக்குலைந்த மாந்தன் வெடித்தெழும் குரலாய் அறைகூவல் விடுத்தவர்கள். எவர் விழிப்புடன் இருக்கிறாரோ அவரே மனிதர் ஆவார். மனிதர்கள் தங்களுக்கானத் தீர்வை நோக்கித் தாங்களே போராட வேண்டுமேயொழிய பிறரை நம்பியிருக்கக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள். வரலாறு அறிந்தவரை மனித நாகரிகத்தின் அடையாள காலத்தில் இத்துணைக் கண்டம் "ஜம்பு தீபம்' என்றும் "நாவலந் தீவு' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதன் மக்களில் மூலமானவர்களே சாக்கியர்கள்.

சாக்கியர்கள் மனித குலத்தின் தொடக்க தொல்குடி. சாக்கியர்கள் இவ்வுலகில் கருத்து முதல்வாதக் கருவிகளான கடவுள், மதம், சாதி, மோட்சம், நரகம், ஊழ்வினை, ஆன்மா, வர்ணபேதம், வர்க்கபேதம், ஆண் பெண் பேதம் ஆகியவற்றை உரிமை உடைமைவாதிகள் புகுத்தப்படுவதற்கு முன்பே பிறந்து வளர்ந்தவர்கள். மானுடத்தின் எதிர்மறைகளை அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். இவர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மானுட உலகத்திற்கு மொழி, கருத்தியல், மார்க்க நெறி, தத்துவம், பண்பாடு, வாழ்வியல் பாங்கு, சக மனிதர்களிடம் ஒப்புரவாக ஒழுகும் வழிமுறை ஆகியவற்றைத் தங்களின் கொடையாக ஈந்தனர். கபிலன் நீட்சியாக புத்தன் தலைமையை ஏற்று பிறவிப் பவுத்தர்களாயினர்.

சாக்கிய இனக்குழுவின் சமத்துவம், சகோதரத்துவம், புராதனச் சமூக சனநாயகம் இவைகளை எதிர்த்தே இங்கு பார்ப்பனியம் ஊடுறுவியது. புத்தரது காலம் வரை சாக்கியப் பழங்குடியரசுகள் முழுமையாக அழிக்கப்பட முடியவில்லை. கி.மு. 544 மே மாத (வைசாக பவுர்ணமி) முழு நிலவில் கோதமர் பேரொளியடைந்தார். சித்தார்த்த கோதமர் புத்தரானார். இது, மனிதகுல வரலாற்றின் மாபெரும் நிகழ்வானது.
மானுடத்தின் நேர்மறையும் - எதிர்மறையும்
சாக்கியம் (நேர்மறை) ஆரியம் (எதிர்மறை)
1. எல்லாமே மாறுதலுக்குட்பட்டது. எல்லாமே மாயை
2. உடல் நலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு மூலப் பொருட்களால் ஆனது. உடல் நலம், நீர், காற்று, நெருப்பு, மேல் உலகம் ஆகிய அய்ந்து மூலப் பொருட்களால் ஆனது.
3. கர்மம் உண்டு. ஆத்மா இல்லை. வாழும் மனிதர்கள், தான் வாழும் காலத்தில், தான் செய்யும் விளைவிக்கும், தன் அக புறச் சூழலில் நிகழும் வினைக்கும் உட்படுத்தப்படுகிறார். இதுவே கர்மம் எனப்படும். கர்மம் உண்டு. ஆத்மா உண்டு. ஆத்மா வழியே கர்மம் தொடர்கிறது.
4. அகிம்சை என்பது ஒரு கொள்கை. (கொல்லாமை என்பது ஒரு விதி) அகிம்சை என்பது ஒரு தத்துவம். (கொல்லாமை என்பது சட்டம்)
5. நிர்வாணம் என்பது வாழும் காலத்திலேயே அடையக் கூடியது (பற்றற்றத் தன்மை). நிர்வாணம் என்பது இறைவனடி சேருவது மூலம் உறுதி செய்யப்படுகிறது.
6. மரணத்திற்கு முந்தைய வாழ்வே கணக்கிடக் கூடியது. மரணத்திற்குப் பிந்தைய வாழ்வே கணக்கிடக் கூடியது.
7. மக்களைத் தேடி துறவிகள் செல்ல வேண்டும். துறவி என்பவர் சிறந்த மனிதருக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர். துறவியின் செயல்பாடுகள் வெளிப்படையானவை. துறவி சிறந்த தனிமனிதருக்காக சீலத்துடன் வாழ வேண்டும். துறவி என்பவர் ஒழுக்கமானவர். துறவிகள் கடவுளின் பிரதிநிதிகள். மக்கள் அவர்களை நாடிச் செல்ல வேண்டும். மக்கள் துறவியுடன் பயபக்தியுடன் பழக வேண்டும். துறவி என்பவர் புனிதமானவர்.
8. பெண் ஆணின் சரி பகுதியாகப் பார்க்கப்படுகிறார். சித்தார்த்தர் துறவறம் புறப்பட்டபோது தன் மனைவியை மறுமணம் செய்யக் கேட்டுக் கொண்டார். பெண் ஆணின் உடைமையாக கருதப்படுகிறார். ஆண் தன்னுடைய உடைமையான பெண்ணை விற்கவும் கொலை செய்யவும் உரிமை பெறுகிறான் (அரிச்சந்திரன், ராமன் செயல்பாடுகள்).
9. பெண்கள் துறவிகளாக முடியும். பிக்குணிக்கெனத் தனிச் சங்கம் உண்டு. பெண்கள் சிறந்த தொண்டர்களாக, அடிமைகளாக முடியுமே தவிர, ஒருபோதும் துறவிகளாக முடியாது.
10. கடவுள் இல்லை. அவதாரம் இல்லை. மனிதர்களுக்கு மறுபிறவி இல்லை. கடவுள் உண்டு. அவதாரங்கள் உண்டு. மனிதர்களுக்கு மறுபிறவி உண்டு.
11. உடலில் வெப்பமே உயிர் எனக் கொள்ளப்படுகிறது. உயிரைப் பற்றிய வரையறை இல்லை. உயிரைக் கொடுப்பதும், எடுப்பதும் கடவுள். உயிர் தனித்த பொருள். கடவுளின் இச்சைக்குட்பட்டது. உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது. மந்திரம் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டது.
12. சமூக வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை வலியுறுத்தப்படுகிறது. இறைவன் விட்ட வழி. ஒவ்வொரு தனிமனிதரும் இறைவனிடம் தொடர்பு கொண்டவர்.
13. மைத்ரி (அறிவு சார்ந்த கருணை) முதன்மைப்படுத்தப்படுகிறது. கருணை (பரிதாபம் சார்ந்த கருணை) முதன்மைப்படுத்தப்படுகிறது.
14. மானுட ஓர்மையே முதன்மையானது. வர்ணாசிரமமே/ஆணாதிக்கமே/ வர்க்க வேறுபாடே முதன்மையானது.
15. பொதுவுரிமை - பொதுவுடைமையே நோக்கமானது. தனி உரிமை - தனி உடைமையே நோக்கமானது.
16. சுதேசிகளின் வழிமுறையைக் கொண்டது. விதேசிகளின் வழிமுறையைக் கொண்டது.

Pin It