பிரிட்டிஷ் பார்லிமெண்டைப் “பைத்தியக்காரர்கள் சபை” - என்று கூறினார், காலஞ்சென்ற பர்னார்ட்ஷா! எந்தக் கருத்தைக் கொண்டு அப்படிச் சொன்னாரோ; எனக்குத் தெரியாது.

kuthoosi gurusamy 268பார்லிமெண்ட் - சட்டசபை ஆகியவைகளெல்லாம் நம் கோவில்களைப் போல! அதாவது பல சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவைகளைக் கொண்டிருப்பவை.

ஓமலூர் கந்தசாமி என்பார் ஹிந்தியைப் பற்றி பார்லிமெண்டில் கேட்பதற்காகச் சில கேள்விகளை அனுப்பியிருந்தாராம். அவைகளை அனுமதிக்க முடியாது என்று பார்லிமெண்ட் தலைவர் கூறி விட்டாராம்.

ஏன் அனுமதிக்க முடியாது?- என்று அவரை எப்படிக் கேட்க முடியும்?

ராத்திரி நேரத்தில், அதுவும் மழை யில்லாதபோது உயிரற்ற ஒரு சிறு பொம்மையின் தலைக்கு மேலே அத்தனை பெரிய குடை எதற்காக?- என்று கோவிலுக்குள் போகிறவன் கேட்க முடியுமா?

மூடிய வாயைத் திறக்காத சாமிகளுக்கு விதவிதமான உணவுப் பண்டங்களும் பஞ்சாமிர்தமும் எதற்காக? - என்று கேட்க முடியுமா?

வயிற்றுக்குள் செல்ல வேண்டிய பாலையும், தேனையும், இளநீரையும் சாமிகளின் வாயில் ஊற்றாமல் தலையில் ஊற்றுகிறீர்களே! இது சரியா?- என்று கேட்க முடியுமா?

பார்லிமெண்ட் - சட்டசபைகள் விஷயத்திலும் இவை போன்ற மூடச் சடங்குகள் ஆயிரக் கணக்கிலிருக்கின்றன. இவை அறிவுக்குப் பொருத்தமில்லா விட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான், அங்கு செல்வோரின் கடமை! இதற்கு அளவு கடந்த பொறுமை யிருந்தால் தான் முடியும்! கலகஞ் செய்கிறவர்கள் என்று பெயரெடுத்த கம்யூனிஸ்ட் தோழர்கள் இவ்வளவு பொறுமை காட்டி வருவது எனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பெரிய அதிசயமாகத் தானிருக்கிறது! எப்போது சட்டசபைகளுக்குள் புகுந்து பொறுமையாயிருக்கக் கற்றுக் கொண்டு விட்டார்களோ, இனிமேல் இவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை!

துள்ளுகின்ற பையன்கள் அல்லது துடுக்குத்தனமான இளைஞர்கள் அடக்குவதற்காக, “இவனுக்கு ஒரு கால் கட்டு கட்டிப் போட்டால்தான் அடங்குவான்,” என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்! அதாவது திருமணஞ் செய்து வைப்பதைப் பற்றி!

இதைப் போலவே கலகக்கார அரசியல்வாதிகளை அடக்கி, அவர்களுக்குக் “கால்கட்டு” கட்டிப் போட வேண்டுமென்றால் ஒரே வழி தானிருக்கிறது. அதுதான் அவர்களைச் சட்டசபைக்குள் அனுப்பி வைப்பது!

சட்டசபையிலும் பார்லிமெண்டிலும் எல்லாமே ஒரு புது ரகம்! வெளியே யிருக்கின்ற புத்தியோ, வீரமோ உள்ளே எவருக்குமே யிருக்காது! காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் காந்தீயத்தின் பெருமையைப் புகழ்ந்து ஒரு கதர்ச்சட்டை மந்திரி பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

“ஓய்! மந்திரியாரே! சிறைக்குள்ளேயிருந்த அரசியல் கைதிகளை -30 பேருக்குமேல் – சுட்டுக் கொன்றீர்களே! இதுதான் காந்தீயமா?”- என்று நான் கேள்வி கேட்கலாம்!

“அந்த மாதிரித் தகவல் என் காதுக்கெட்ட வில்லையோ!- என்று மந்திரி கூறிவிட்டுத் தப்ப முடியுமா? உடனே கூச்சலும் குழப்பமும் உண்டாகும்! மண்மாரி பெய்யும்! (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வீரர்களாயிருந்தபோது சென்னைக் கடற்கரையில் ஆச்சாரியாருக்கு நடந்தது மாதிரி!) கூட்டம் கலைந்து போகும்!

ஆனால் இதே கேள்வியைச் சட்டசபைக்குள் கேட்டால்,-

 “இது பற்றிய தகவல் எதுவும் சர்க்கார் கவனத்துக்கு வரவில்லை,-” என்று அதே கதர்ச்சட்டை மந்திரி பதில் கூறுவர். நான் கேட்டுக் கொண்டுதான் உட்கார்ந்திருக்க வேண்டும்!

“ஏனய்யா, இப்படி புளுகுகிறீர்?” என்று திரும்பிக் கேட்க முடியுமா?

ஏதோ ஒரு ரயில்வேயில் 200 ஆண்டுகளுக்குப் போதுமான பேப்பர் கையிருப்பில் இருப்பதாக ரயில்வே ஸ்டோர் விசாரணை கமிட்டியார் ரிப்போர்ட் செய்திருப்பது உண்மையா?”- என்று தோழர் அனந்த நம்பியார் பார்லிமெண்டில் கேட்டார்.

“அதுபற்றி சர்க்காருக்குத் தகவல் கிடையாது,”- என்று ரயில்வே மந்திரி சாஸ்திரி பதில் கூறியிருக்கிறார்.

அவ்வளவுதான்! விஷயம் கப்-சிப் என்று அடங்கி விட்டது!

மந்திரிகளுக்கு இது ஒரு நல்ல வசதியான பதில்!

“காலையில் சூரியன் உதிப்பது உண்மைதானா?” என்று கேட்டாலுஞ் சரி!

“எனக்கு இதுபற்றிய தகவல் கிடைக்கவில்லை,-” என்றுதான் பதில் வரும்!

“கனம்! மந்திரியார் மனிதப் பிறவிதானா?”- என்று கேட்டாலுஞ் சரி!

“சர்க்கார் கவனத்துக்கு இவ்விஷயம் வரவில்லை,” என்று தான் பதில் வரும்!

இந்தியாவுக்கு வட எல்லையாக இமயமலை இருப்பது பற்றி சர்க்காருக்குத் தெரியுமா?” - என்று கேட்டாலும்,

“இது பற்றி எதுவும் என் கவனத்துக்கு வரவில்லை,-” என்பதுதான் பதில்!

பல ரயில்வேக்களில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்குத் தேவையான காகிதம், இரும்புச் சாமான், எலெக்ட்ரிக் சாமான்கள் - முதலியன கணக்கு வழக்கில்லாமல் கையிருப்பில் இருப்பதாகவும், இவை நாள்தோறும் கொள்ளை போய்க் கொண்டிருப்பதாகவும், இதற்கென்று ஒரு தனி ஆடிட்டர் (கணக்குச் சோதனையாளர்) நியமித்தாலுங்கூடக் கண்டுபிடிப்பது கஷ்டமென்றும், ஒரு விசாரணைக் கமிட்டியே கூறி, அது பல பத்திரிகைகளிலும் வெளி வந்தபிறகு, “எனக்குத் தகவல் கிடையாது” என்று பதில் கூறுவதென்றால், இந்த மந்திரிக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கள் வக்கீல் பொய்யையும், வியாபாரி பொய்யையும், பத்திரிகைக்காரன் பொய்யையும் ஒன்றாகச் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, “எஸென்ஸாக”ச் சாப்பிட்டுத் தேறிய பேர்வழிதான் மந்திரி வேலை பார்க்க முடியும்!

- குத்தூசி குருசாமி (09-07-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It