பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என்று காந்தியார் எழுதியிருப்பதாக நமக்கு நினைவிருக்கிறது. இன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் உரிமை குறைந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமாகும்.
“படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதே கிடையாது. மோட்டார் கார், நகை நட்டுகள், உயர்தர உடைகள், உல்லாசப் பொழுதுபோக்கு, (சினிமா, நாடகம், இசைவிழா, அரட்டைக் கச்சேரி போன்றவை) ஆகிய ஆசைகளைத் தவிர இவர்களுக்கு வாழ்க்கை இலட்சியம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.”
கொத்துக் கொத்தாக நகை அணியும் பித்து நம்குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகையணிவதைத்தான் நான் இங்குக் குறிப்பிடுகிறேன். ஓரளவு நகைகளுக்கு மேல் அணிகிறவர்களுக்குத் தண்டனை அல்லது வரி விதிக்கச் சட்டமியற்றும் சர்க்காரை நான் வரவேற்கிறேன். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து நேரிடுவதும் உண்டு. ஆடைகளுக்கென்று அபரிமிதமாகப் பணத்தை அள்ளி இறைத்து வாழ்க்கையில் அல்லலுறும் நம் குலத்தவரை எண்ணியும் இரங்குகிறேன். கைத்தறித் துணிகளை நாம் கட்டிக் கொண்டால், கைத்தறி நெசவாளரின் துயரத்தைப் போக்குவதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க முடியும் என்று சென்னையில் நடைபெற்ற நாடார் மகாசன சங்க 23-ஆவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய உயர் திருவாளர் நாகர்கோவில் டாக்டர் ஜான் ஹிலக்கையா அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதை வரவேற்கிறோம். அறிவுரையைப் பாராட்டுகிறோம்.
நாடார் குலப் பெண்களைக் குறித்துக் காட்டும் இவர் இப்படிக் கூறியுள்ளாரெனினும், செல்வர் வீட்டுப் பெண்களுக்கும் இக்கூற்றுப் பொருந்தியதாகும். இத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்ற சுயமரியாதை இயக்கம் ஓரளவு உணர்ச்சியூட்டியிருக்கிறது. காந்தியார் அவர்களின் பிரச்சாரமும் ஓரளவு வெற்றி தந்திருக்கிறது. என்றாலும் இந்த நகைப் பித்தும் உயர் தரமான உடைப்பித்தும் பணம் படைத்த வீட்டுப் பெண்களைக் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.
இவள் இன்னார் மகள் அல்லது இன்னார் மனைவி, இவ்வளவு சொத்துக்குச் சொந்தக்காரி என்று பிறர் கூறிப் புகழ வேண்டும் என்பதற்காகவே அலங்காரப் பதுமைகளைப் போல் 5000, 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட உடைகளைச் சுமந்து கொண்டு திரிகின்றார்களேயல்லாது, இவள் இன்ன தொழில் நிபுணத்துவம் பெற்றவள்! இவள் இந்தத் துறையில் திறமைசாலி என்ற பெயர் வாங்கவேண்டுமென்ற எண்ணமோ இத்தகைய பெண்களுக்கிருப்பதில்லை.
பணத்தைச் சேமித்துப் பத்திரப்படுத்த முடியாத பழங்காலத்தில் நம் பெண்கள் நடமாடும் பாங்குகளாகவும், இரும்புப் பெட்டிகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். ஆனால், பணத்தைச் சேமிக்கக்கூடிய பல நூறு துறைகள் பெருகிக் கிடக்கின்ற இந்தக் காலத்தில் இது அவசியமா என்பதைப் பணம் படைத்த வீட்டுப் பெண்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நகையணிவதுதான் அழகு என்றால், நகையணியாத ஆண்கள் அழகாயில்லையா? நகை என்பது பெண்களின் உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பவுன்விலங்கு என்பதைப் பெண் இனம் மறக்கக் கூடாது. நகைகளிலும், உயர்தரமான உடைகளிலும் பாழாக்கப்படுகின்ற பணம், குடும்பத்துக்கோ, சமுதாயத்துக்கோ பயன்படாமல் வீணாகிறது.
இதை எப்படித் தடுக்க முடியும்? திரு. ஹிலக்கையா அவர்கள் கூறியிருப்பதுபோல் தண்டனையோ வரியோ விதித்தாக முடியாது. தண்டனையை அனுபவித்து விடுவார்கள், குடிவெறியர்கள். இன்று துணிந்திருப்பதுபோல வரியையும் கொடுத்து விடுவார்கள், பணம் படைத்தவர்களாதலால்.
ஒருக்கால் நகையைப் பறிமுதல் செய்வது என்ற மாதிரியான சர்வாதிகார உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்தான் முடியும். ஜனநாயக முறைகளால் இப்பேர்ப்பட்ட சமுதாய வெறிக் குணங்களை ஒழிக்க முடியாது. “அளவுக்கு மீறிய நகை” என்ற பாதுகாப்பு இருக்கக்கூடாது.
மக்களிடையே அறிவு பரவுவதன் மூலமேதான் இந்த மனப்பான்மை அடியோடு மாறவேண்டும். நெற்றியில் நாமமோ விபூதியோ அடித்துக் கொண்டு வருகின்ற பள்ளிச் சிறுவனைக் கண்டால், உற்ற பள்ளிச் சிறுவர்கள் எவ்வாறு கைதட்டி நகைத்துக் கேலி செய்கிறார்களோ அதுபோல, நடமாடும் நகை அலமாரிகளாகக் காட்சியளிக்கின்ற பெண்களைக் கண்டு (பைத்தியக்காரரைச் செய்வதுபோல்) மற்ற பெண்கள் கைதட்டிக் கேலி செய்யக் கூடிய நிலைமை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும்.
படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணக்காரர் வீட்டுப் பெண்களுமே இத்துறையில் மற்ற நகைப்பித்துப் பெண்களுக்கு நல்வழி காட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும்.
எந்த நாட்டையும் பீடிக்காத இந்த நகைப் பித்துப் பீடை தமிழ்நாட்டைப் பிடித்திருக்கிறது. பணம் படைத்த ஒரு சிலரைப் பார்த்து, நடுத்தரக் குடும்பப் பெண்களும் நகைப்பித்துப் பிடித்தவர்களாகி விடுகிறார்கள். இதனால் சச்சரவும், திருமணத் தடைகளும் பெண் இனம் துணையில்லாது வெளிச் செல்ல முடியாத வேதனை நிலையும் ஏற்பட்டிருப்பதைத் தவிர நன்மை ஏதாவது உண்டா? பெற்றோர்களும் பெண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நகை அணிவதுதான் அழகா?
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: பெரியார்