நல்ல வேளையாக கடவுள் நம் முகத்தில் மூக்கை அமைத்தார்; இல்லாவிட்டால் மூக்குக் கண்ணாடி போட முடியுமா? இதிலிருந்தே கடவுள் எவ்வளவு கெட்டிக்காரர் என்பது தெரியவில்லையா? ஏ, நாஸ்திக பிண்டமே!

kuthoosi gurusamy 300அதிலென்ன சந்தேகம்? அவசரமாக சிருஷ்டித்ததில் முதுகில் இரண்டு கண் வைக்க மறந்து போனதைத் தவிர, கடவுளின் மனித சிருஷ்டியில் வேறு என்ன தவறு சொல்ல முடியும், ஆஸ்திகக் கொழுந்தே!

நெற்றியை இவ்வளவு அகலமாகவும் நீளமாகவும் வைத்திருப்பது எதற்காகத் தெரியுமா? நாஸ்திக பிண்டமே!

நம் முதுகை நெற்றியைவிட அகலமாகவும் நீளமாகவும் உண்டாக்கியிருக்கிறாரே எதற்காகத் தெரியுமா? ஆஸ்திகக் கொழுந்தே!

நெற்றியில் விபூதியாவது திருமண்ணாவது இட வேண்டும் என்பதற்காகவேதான் கடவுள் இப்படி சிருஷ்டித்திருக்கிறார், நாஸ்திக பிண்டமே!

அப்படியானால் அதைவிட; வசதியாக உள்ள முதுகிலும் ஏதாவது சித்திரம் வரையலாகாதா, ஆஸ்திகக் கொழுந்தே!.....

இந்தமாதிரி ஆஸ்திக - நாஸ்திகப் போராட்டம் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே வந்திருக்கிறது.

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்த நாட்டில், அதுவும் இந்து மதத்தார்களிடையேதான் இந்தச் சச்சரவு அதிகமாயிருந்து வந்திருக்கிறது! குப்பையுள்ள இடத்தில் தானே தீப்பற்றும்? இதிலென்ன அசியம்?

ஒரு மோட்டார் காரைப் பார்த்தவுடனேயே இது ‘இன்ன மேக்’ என்று கூறுவது போல், ஒரு மனிதன் நெற்றியைப் பார்த்தவுடனேயே இவன் இன்ன கூட்டம், என்று தெரிந்த கொள்வதற்காகவே நெற்றிக் குறி ஏற்பட்டிருக்க வேண்டும். இதில் எந்த விதமான மதமோ-கடவுளோ கிடையாது. கதர்ச் சட்டையோ, கருப்புச் சட்டையோ, சிவப்புச் சட்டையோ போடுவதற்கு எந்த மதத்தையும் கடவுளையும் கேட்டோமா? போலீஸ்காரரும் போஸ்ட்மெனும் உடுப்புப் போட்டுக் கொள்வதற்கு எந்தக் கடவுளை அனுமதி கேட்டார்கள்?

நெற்றியில் சித்திர வேலைப்பாடு செய்வதும் இதே மாதிரித்தான். அதில் கடவுளோ மதமோ கிடையாது.

நெற்றியில் திருநாமம் போடுகிறார்களே, இவர்களுக்குத் திருநீறு பூசுகிறவர்களைக் கண்டால் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. திருநீற்றுக்காரர்களுக்கும் நாமக்காரர்களைப் பிடிப்பதில்லை!

“அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில் மண்ணு!” என்று சொல்கிறவர்களில் எவரும் தம் நெற்றியின் ஒரு பாதியில் திருநீறும் மறு பாதியில் திருமண்ணும் சாத்திக் கொள்வதுமில்லை!

நெற்றியில் பலர் பல மாதிரி வேலைப்பாடுகள் செய்கிறார்கள்! இவர்களில் திருமண் சாத்துகிறவர் மீதுதான் எனக்குத் தனி ஆசை! ஏனென்றால் வர்ண வேலைப்பாடு! “ஹிந்து” பத்திரிகையில் முதல் பக்கத்தில் வரும் சினிமா விளம்பரம் மாதிரி, ‘பளிச்’ சென்று வெகு தொலைவில் கூடத் தெரியும்! பாக்கி சாம்பல், சந்தனம், குங்குமம், சாந்து- இந்தியாதிச் சித்திரக்காரர்கள் சாதாரணப் பேர்வழிகள்! ஓவியக் கலை உணர்ச்சி இல்லாதவர்கள்! திருமண் பூச்சில் அந்த அமைப்பே ஒரு தனி! அமாவாசை இருட்டில் கூட அரை மைல் தொலைவுக்கு ஆள்வருவது, தெரியுமே!

ஆனால் இந்த திருமண் நெற்றியாளர்களிடம் எனக்கு ஒரே ஒரு குறை மட்டு முண்டு. அதை மறைத்து வைக்கப் பிரியமில்லை. இவர்களிடையே ஒற்றுமை கிடையாது. விபூதிக்காரர்கள் கூடத்தான் “நீ தாழ்ந்த ஜாதி,” “நான் உயர்ந்த ஜாதி,” என்று பிளவுபட்டுக் கிடக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். “சைவம் - திருநீறு” என்று சொல்லிக் கொண்டு பேச்சில் குழைவார்களே யொழிய, ஒருவர் வீட்டில் ஒருவர் உண்ணக்கூட மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் விபூதி பூசுவதை அடிப்படையாக வைத்து ஒருவர்க்கொருவர் பகைத்துக் கொள்வதே கிடையாது!

உதாரணமாக, தண்ணீரில் குழைத்து முப்பட்டையாக அடிப்பவர் ஒரு கட்சியென்றும், அப்படியே தூளாக அள்ளித் தேய்த்துக் கொள்கிறவர் ஒரு கட்சி யென்றும் அவர்களுக்குள் வேற்றுமை கிடையாதல்லவா?

அப்படியிருக்க திருமண் நெற்றியார் மட்டும் ஏன் ‘லு’ (தென்கலை) என்றும் ‘ரு’ (வடகலை) என்றும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் (ஸ்ரீரெங்கநாதரின் ஹெட் க்வார்ட்டர்ஜிலேயே!) இந்த ‘லு’ மார்க் - ‘ரு’ மார்க் சண்டை கிளம்பியது! கோவில் யானையின் நெற்றியில் எந்த மாதிரி நாமத்தைப் போடுவது என்ற சச்சரவு ஏற்பட்டது. நெற்றியில் ஒரு மாதிரி நாமமும் பின்புறம் (‘பிருஷ்ட பாகம்’ என்று சமஸ்கிருதத்தில் மரியாதையாகச் சொல்வதுண்டு!) மற்றொரு மாதிரி நாமமும் போட்டார்களாம்! கடைசியில் இந்த வழக்கு கைஹகோர்ட் வரையில் வந்து வெள்ளைக்கார நீதிபதியின் (மெட்ராஸ் கிளப்பில் எத்தனை வெள்ளைக்காரர் எள்ளி நகையாடினார்களோ!) தீர்ப்பினால் ஒரு மாதிரி முடிவடைந்தது! இதைப் பற்றி சுயமரியாதைக்காரர் அடிக்கடி எடுத்துச் சொல்லி, ஊர் சிரித்து, நெற்றியைச் சுத்தமாக்கிக் கொண்டவர்கள் எத்தனையோ ஆயிரம்! ஸ்ரீரங்கம் கதை பழங்கதையாகி விட்டபடியால் சுயமரியாதைக்காரர் பிரசாரத்திற்காக ஒரு புது விஷயத்தைத் தந்திருக்கிறார்கள், நமது நாமதாரி பக்தர்கள்!

திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி கோவிலில் ஸ்ரீவேதாந்த தேசிகர் சந்நிதியின் வடகலைப் (‘ரு’ மார்க்) பாசுரம் பாடுவதை தென்கலை (‘லு’ மார்க்) பக்தர்கள் தடுக்கக்கூடாது என்று சித்தூர் சப்ஜட்ஜ் தீர்ப்புக் கூறிவிட்டாராம். அதன்படி 1949 அக்டோபர் 3-ந் தேதியன்று வடகலை வாழித்திருநாமப் பாசுரங்கள் பாடப்பட்டனவாம்!

வெற்றி! வெற்றி! வடகலைக்கே வெற்றி! தென்கலை ஒழிக! வடகலை ஓங்குக! - என்று யாரும் கூச்சலிடக் கூடாது!

ஏனென்றால் இத்தீர்ப்பின்படி இந்தப் பாசுரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏராளமான போலீஸ்காரர்கள் சந்நிதியில் காவல் காத்தார்களாம்! எதற்காக? ஸ்ரீ வைஷ்ணவத் திருமேனிகள் ஒருவர்க்கொருவர் திருச்சாத்துப்படி செய்து கொள்ளாது தடுப்பதற்காக!

திருமண் திருநெற்றிக்காரர் வெட்கப்பட வேண்டிய செய்தி! கண்ணீர்த் துளிகளைக் குடம் குடமாகக் கொட்ட வேண்டிய செய்தி! “ரு” என்பதற்குக் கீழே ஒரு சிறு கோட்டை இழுப்பதற்காக இவ்வளவு சச்சரவு இருக்கலாமா?

திருமால்தான் ஆகட்டும்! இந்தக் கேலிக் கூத்துக்கு இடந்தரலாமா? ஒவ்வொரு கடவுள் மின்சார விளக்கே கூடாது என்று பலத்த கிளர்ச்சி செய்து வருகின்ற இக்காலத்தில், (“மவுண்ட் ரோடு மகா விஷ்ணு”) பத்திரிகையில் கூட ஒரு நிபுணர் இதைப் பற்றிக் கண்டனக் கணையை வீசியிருக்கிறார்! பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் தன் பக்த கோடிகளுக்கிடையே இந்தச் சில்லறைப் பூசல் உண்டாகும்படி விட்டு வைக்கலாமா?

வட கலைக்குப் பிறகுதான் தென் கலை (‘லு’ மார்க்) வந்தது, எதற்காக இந்த அநாவசியமான முன்னேற்றம்? ஒரே கொள்கை! ஒரே லட்சியம்! ஆனால் ஒரு கோடு மட்டும் அதிகம்! இதிலென்ன முன்னேற்றம் வாழ்கிறது? உலகத்தார் (மற்றக் கடவுள்கள் உள்பட) நம்மைக் கண்டு சிரிக்க மாட்டார்களா? இவ்வளவு பெரிய அவதார மூர்த்திக்கு இந்தச் சிறு விஷயம் புலப்படாமற்போனது ஏனோ?

வேண்டாம், திருமாலே! உம் பக்தர்களை ஒன்று படுத்துங்கள்! அல்லது அடியோடு அழித்தாவது தொலையுங்கள்! மானம் போகிறது! சைவர்கள்கூடச் சிரிக்கிறார்கள்!

- குத்தூசி குருசாமி (03-11-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It