கடவுளாய்ப் பிறந்தாலும் ‘அதிர்ஷ்டம்’ இருந்தால்தான் முடியும்! எல்லாக் கடவுளுக்கும் ஒரே செல்வாக்கு இருக்கிறதா? அரச மரத்தடிப் பிள்ளையார் சாக்கடையில் மூழ்கி எழுந்த பன்றியின் ‘தெனவு’க்குப் பயன்படுகிறார். ஆனால் திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் சந்தனம் பூசி, வெள்ளிக் கவசம் பூண்டு, உல்லாசக் காற்று வாங்குகிறார்!

kuthoosi gurusamy 263“அந்த ஆள் கொடுத்து வைத்த பேர்வழி! இரண்டு பேரும் ஒன்றாகத்தான் (கல்லிலிருந்து!) பிறந்தோம்! அவன் உச்சிக்குப் போய் விட்டான்! நான் நாதியற்று நாற்றம் பிடித்துக் கிடக்குறேன்,” என்று கூறி அரச மரத்தடிப் பிள்ளையார் உச்சிப் பிள்ளையாரைத் துதிக்கையினால் காட்டி அழும்போது நாம் கூடக் கண் கலங்க வேண்டியிருக்கிறதல்லவா?

கடவுள்கள் கூட மனிதன் தயவு (பிரசாரம்) இருந்தால்தான் பெரிய கடவுள்களாக முடிகிறது!

“பாடல் பெற்ற nக்ஷத்திரம்” என்கிறார்களே! அதன் பொருளென்ன? நாயன்மார்கள் புகழ்ந்து கூறியதால் பெருமைப்பட்ட கடவுள்கள் உள்ள இடம் என்றுதானே பொருள்? ‘அமிர்தாஞ்சனம்’ இரண்டணா செலவில் செய்யப்பட்டதாயிருக்கலாம்! ஆனால் அதன் கர்த்தா நாகேஸ்வரராவ் பந்தலுவைவிட அதிக விளம்பரம் பெற்றதாச்சே! அதனுடன் வேறு எந்தத் தலைவலி மருந்தாலும் போட்டி போட முடிந்ததா? எந்தத் தலைவராலும்தான் போட்டி போட முடிந்ததா? ஆதலால் நம் கடவுள்களிலும் அமிர்தாஞ்சனங்கள் உண்டு; மனித ‘அமிர்தாஞ்சனங்கள்’ இருப்பது போல! விளம்பரத்தினாலும் இடைவிடாத “ஜே!” கூச்சலாலும் மனிதன் எப்படி உயர்த்தப்படுகிறானோ, அதே மாதிரி கடவுள்களும் உயர்த்தப்படுகிறார்கள். ரெங்கநாதர், பழனியாண்டவர், வெங்கடாசலபதி, மீனாட்சி, தியாகராஜர் முதலிய பெயர்களைக் கொண்ட கடவுளர்கள் எத்தனையோ பேருண்டு. ஆனாலும் குறிப்பிட்ட இடங்களில் உள்ளவர்களுக்குத் தானே அதிக விளம்பரம்?

கோடம்பாக்கம் பழனியாண்டவனைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாருக்குத் தெரியும்? அவர் விலாசம் C/o (கேர் ஆஃப்) ஸ்டேஷன் மாஸ்டர் என்றுதான் போட வேண்டியிருந்தது! ஆனால் இன்று தியாகராஜர்-வெறும் ராஜர் ஆகிய இருவர் உதவியினாலும், பிரசாரத்தினாலும் எவ்வளவு பெரிய உச்ச நிலையை அடைந்திருக்கிறார், பார்த்தீர்களா! சர்க்கார்கூட ஒரு தனி பஸ் விட வேண்டியிருக்கிறதே! இந்த வகையில் இந்த இரு மனிதர்களும் நவீன நாயன்மார்கள் என்றே கூறுவேன்! பாடல் பெற்ற ஸ்தலம் என்பது போல, பண உதவி பெற்ற பழனியாண்டவர் என்று கூறலாம்!

எந்தக் கடவுளுக்கு எந்த “அதிர்ஷ்ட” மிருந்தாலும் அது அழியக் கூடியதுதான்! ஆனால் நமது நடராஜர் இருக்கிறாரே, (அதாவது, மானாட, மழுவாட, மங்கை சிவகாமி ஆட, தில்லையின்கண் திருநடனம் புரியும் நடராஜரைத்தான் குறிப்பிடுகிறேன்!) அவருக்கு வந்த “அதிர்ஷ்டம்” எந்தக் கடவுளுக்கும் வராது! யாரும் பெறாத பெரிய இடத்தைப் பெற்று விட்டார்!

“உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரிய” என்று எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் அன்று சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்தார், பார்த்தீர்களா! இன்று உலகலாம் உணரக்கூடிய உயர் நிலை பெற்று விட்டார்! அழியாப் புகழ் பெற்று விட்டார்! அதாவது புதிய இரண்டணா ஸ்டாம்பு ஆகிவிட்டார்! என்ன அதிர்ஷ்டம் பார்த்தீர்களா? கண்கண்ட கந்தனோ, கண்ணனோ, கலைச் செல்வியோ, மணிபர்ஸ் தலைலியோ - எந்தக் கடவுளும் எம் நடராஜரைக் கண்டு இனிப் பொறாமைப்பட வேண்டியதுதான்!

‘சுதந்தர,’ நாளில் பல புதுத் தபால் ஸ்டாம்புகள் வெளியிடப்பட்டன. இவைகளில் தென்னாட்டுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் தான்! அதுவும் எதற்கு? வடநாட்டு தாஜ்மஹாலைப் போல் தென்னாட்டுச் செஞ்சிக் கோட்டைக்கா? அல்லத திருமலை நாயக்கன் அரண்மனைக்கா? அல்ல! எம்பிரான் நடராஜனுக்குத்தான்! அதுவும் இரண்டணா ஸ்டாம்பில்! தமிழ் இசைச் சங்கத்தார் தங்களுக்குரிய நடராஜரை இந்திய சர்க்கார் இரவல் வாங்கிக் கொண்டதற்காகப் பெருமைப்படுவார்கள் என்பது நிச்சயம்!

அதுபோல் சைவ மெய்யன்பர்கள் வைணவர்களைப் பார்த்ததும் மார்பு புடைத்து நிற்பார்கள் என்பது நிச்சயம்!

அழியாப் புகழ் (காங்கிரஸ் ஆட்சி உள்ள வரையிலாவது சொல்லுங்களேன்!) பெற்ற நடராஜர் வாழ்க! அவரைத் தாங்கி வரும் இரண்டணா ஸ்டாம்பு வாழ்க! அதன் மேல் தினம் தினம் விழுகின்ற முத்திரை வாழ்க!

மதமற்ற சர்க்காரின் முகம் கரியாகும்படி நடராஜரை நுழைத்த நண்பர்கள் வாழ்க!

- குத்தூசி குருசாமி (20-08-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It