ஊரில் எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன. யார் யாரையோ, எவன் எவனையோ, கடவுளாக்கிக் கோவில் கட்டி யிருக்கிறார்கள்! பொதுப் பணத்தைக் கையாடினவன், பெண் சோரம் செய்தவன், 7000-8000 மனித ஜீவன்களின் உயிரை ஒரே சமயத்தில் குடித்து மகிழ்ந்தவன், இப்படி எத்தனையோ யோக்கியர்(?) களுக்கு இந்த நாட்டில் கோவில்கள் இருக்கின்றன. அப்படி யிருக்கும்போது எதிரியை மறைந்து நின்று கொன்ற பேடி, தனியாக வந்த பெண்ணை அவமானப்படுத்தியவன், மித்திரபேத சூழ்ச்சியால் எதிரியைக் கொன்றவன், ஆகிய கல்யாண குணங்களை(?)க் கொண்ட ஒருத்தனுக்கு மட்டும் கோவில் இருந்தால் என்ன மோசம்?

kuthoosi gurusamyதோழர் (யாருக்கோ?) ஆச்சாரியாரைக் கம்பர் மகாநாட்டுக்காரர் பேசச் சொன்னார்கள். அவர் பேசினார், இப்படியாக:-

“கடவுள், கடவுளுடைய மூர்த்திகள், கடவுளுடைய தாஸர்களான ஆழ்வார்களுக்குத்தான் நம் முன்னோர்கள் கோயில் கட்டியிருக்கிறார்கள். ஆகவே கம்பர் ஞாபகார்த்தமாகக் கோவில் கட்டுவதாக இருந்தால் ஸ்ரீ ராமர் கோயிலொன்று கட்டுங்கள். அங்கு அவரது தாஸராக, கம்பரது சிலையை நிர்மானியுங்கள். இதை விட்டு, தனியாகக் கம்பரது சிலை யொன்றை நாட்ட முற்பட்டால் வெல்லிங்டன் முதலிய பிரமுகர்களின் ஞாபகச் சிலைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கதியையே அதுவும் அடையும்.” (சு.- மி.) வேணும்! நன்றாய் வேணும். இந்தக் கம்பனுக்கு இனத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி என்பதை நயமாகச் சொல்லிக் காட்டிவிட்டார், தோழர் ஆச்சாரியார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் பூசாரியான வெல்லிங்டனின் சிலையை இந்தியர் எப்படி வெறுக்கிறார்களோ அப்படித்தான் இனத் துரோகி கம்பனின் சிலையையும் திராவிடர் வெறுப்பார்கள் என்பதை ஸி. ஆர். சூசனையாகக் காட்டிவிட்டார், பாருங்கள்! இல்லாவிட்டால் வெல்லிங்டனுக்கும், கம்பருக்கும் ஒப்பிட்டுக் கூறுவாரா, சொல்லுங்கள்!

ஆச்சாரியாரே, நல்லபோடு போட்டீர்கள்! உங்கள் சம்பந்தி ராமராஜ்யம் வேணுமென்கிறார்! நீங்கள் ராமனுக்குக் கோவில் கட்டவேணுமென்கிறீர்கள்! அதுமட்டுமா? அந்தக் கோவிலில் கம்பனை (திராவிடன் தானே!) ஒரு தாஸனாக வைக்க வேண்டுமென்றீர்களே அதுதான், மிருதங்கத்தில் அழகநம்பி வைக்கும் தீர்மானம் மாதிரி!

உங்கள் ஜாதி ராமபிரானுக்கே கோவில் இல்லை, இந்த நாட்டிலே! சேதுப்பிள்ளை ஜாதிக் கம்பனுக்குச் சிலை வேண்டுமாம்! கோவில் வேண்டுமாம்! என்ன துணிச்சல் பாருங்கள், உங்கள் எதிரிலேயே சொல்ல!

பிராமணப் பிள்ளையே பாலுக்குச் சர்க்கரை போதவில்லை யென்று கதறு கதறென்று கதறுகிறது! அதைக் கவனிக்காமல் “சூத்திரப்” (சேதுப்) பிள்ளைக்குக் கூழ் வேண்டுமாமே! நல்லா யிருக்கே நியாயம்! ஆச்சாரியார் சுவாமிகளே! உங்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்லுகிறேன், அதோ, அந்தப் பக்கத்துக் காதை என் பக்கம் திருப்புங்கள், கொஞ்சம்! “இந்தக் கம்பனும் அவன் ஜாதியைச் சேர்ந்த எவனும் ராமனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் என்றும் தாஸனாகவேதான் இருக்க வேண்டும். இவர்கள் மநுதர்மத்தைப் படித்தாலல்லவா இதெல்லாம் விளங்கும்? உங்களுக்கு ஒரு காலத்தில் தாஸர்களாயிருந்த ‘நாலாம் ஜாதிக்’ காரார்களைக் கொஞ்சம் மிஞ்ச விட்ட தவறினால் அல்லவா, இன்று உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டது? இனிமேல் ஜாக்கிரதையாயிருங்கள்! எல்லாம் தெரிந்த உங்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் ஜாதியார் விஷயத்தில் உங்களுக்குள்ள புத்தி கூர்மையும், கழுகுப் பார்வையும் பழைய வசிஷ்டருக்கே கூட இருந்திருக்க முடியாது. அவர்களெல்லாம் உங்கள் கால் தூசிக்குக் கூட இணையாக மாட்டார்கள். அந்த ராமச்சந்திரமூர்த்தி கிருபையால் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்!”

கம்பர் மகாநாட்டாருக்கும் இதே சமயத்தில் ஒரு வார்த்தை. கம்பனைக் கரைகண்ட கவிஞர்களே! மகாநாடு கூட்டியதின் பலனைக் பெற்றுவிட்டீர்கள்! எவரோ கேள்வி கேட்டதெல்லாம் இந்தச் சமயத்தில் நினைத்துத் தொல்லைப் படாதீர்கள். அப்படித்தான் கேட்டுக்கொண்டே யிருப்பார்கள். நீங்கள் “டன்கர்க்” செய்து கொண்டே காலத்தைத் தள்ளுங்கள்!

ராஜாஜி ராமனுக்குக் கோவில் கட்டச் சொல்லிவிட்டார். அவர் தானே உங்கள் கம்பனுக்கும் உங்கள் கலைக்கும், வேண்டியவர்! அவர் சொன்னபடியே செய்யுங்கள்! புறப்படுங்கள் பண வசூலுக்கு, உடனே! கட்டுங்கள் ராமன் கோவிலை! வையுங்கள், கம்பன் சிலையை, ராமன் சிலையின் காலடியில் - தாஸனாக, அதாவது, அடிமையாக! இதில் தவறொன்றுமில்லை! ஹனுமான் ராமன் பாதத்தைத் தாங்கி உட்கார்ந்திருக்கவில்லையா? அதே மாதிரிக் கம்பனையும் உட்கார வையுங்கள்! வேணும், கம்பனுக்கு! படுக்க வையுங்கள், இராமன் காலடியில்! இராமன் கால்களை ஹனுமான் மடியிலிருந்து எடுங்கள்! கம்பன் தலைமீது வையுங்கள்! கலையை வளருங்கள்!

“கம்பநாட்டாழ்வார்! திருவடிகளே சரணம்,” என்று சொல்லி நீங்கள் கம்பன் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுங்கள்! உங்களில் 63 பேர்களைத் தேர்ந்தெடுத்து, சுவர் நெடுக, சிலை உருவத்தில் நிற்க வையுங்கள்! ஓஹோ! நீங்கள் அடக்கமும் பெருந்தன்மையும் கொண்டவர்களாதலால் ஒருவேளை வெட்கமாயிருக்கிறதோ? அப்படியானால் வேண்டாம்! ஆச்சாரியார் அறிவுரையைக் கேட்டு, உடனே அதன்படி நடப்பீர்களே யானால், உங்களுக்கும் நன்மை; அவருக்கும் பெருமை; வருங்காலம் எப்படி யிருக்கும் என்பதை யார் கண்டார்கள்?

ராமனுக்குப் பதிலாக ராஜாஜிக்குக் கோவில் கட்டப்படலாம். கம்பனை வைக்குமிடத்தில் உங்களில் யாரேனும் ஒருவர் இடம் பெறலாம், அதிர்ஷ்டமிருந்தால்!

கலையின் பேரால் கம்பர் மாநாட்டைக் கூட்டிய கவிஞர் திலகங்களே! உங்கள் கலையுணர்ச்சியே உணர்ச்சி! உங்கள் இலக்கிய இன்பமே, இன்பம்! உங்கள் தமிழ் அன்பே அன்பு!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It