என் சினேகிதர் ஒருவர் பெரிய புலவர். இங்கிலீஷிலும் பட்டம் பெற்றவர் ஆனால் அந்தப் பட்டத்தை இதுவரையில் கயிற்றில் கட்டிக் கூடப் பறக்க விட்டதில்லை! படித்தது எம்.ஏ., பி.எல். செய்வதோ தமிழ்ப் பிரசங்கம்... அதுவும் சைவ மதப் பிரசாரம்! அவரைப் படிக்க வைத்த பணத்தைக் கொண்டு மாட்டுப் பண்ணை வைத்திருந்தால் இத்தனை வருஷங்களுக்குள் பழையகோட்டை மாட்டுப் பண்ணையை விடப் பெரிதாகியிருக்கும்! கோழிப் பண்ணை வைத்திருந்தால் இன்றைக்கு விற்கிற விலைக்கு முட்டை ஒன்று 0-2-6 இந்த ஊரில்; உங்கள் ஊரில் என்ன விலையோ? தினம் 40 ரூபாய் கிடைக்கும். அதாவது ஆரம்ப ஐ.சி.எஸ்.காரர் சம்பளத்தைவிட அதிகம். ‘இன்கம்டாக்ஸ் இல்லை’.

kuthoosi gurusamy 268இவரை மட்டும் குற்றஞ் சொல்லி என்ன பிரயோஜனம்? எனக்குத் தெரிந்த அத்தனை பேர் படிப்பும் இந்த மாதிரித்தான்! என்னையும் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

மேற்படி என் சிநேகிதர் நன்றாகப் படித்தவர். ஒரு நாள் தமிழ் இசைக் கழகத்துச் செயலாளர் அவரைத் தம் கழகத்தில் பேசுவதற்கு அழைத்தார். வக்கீல் - தமிழ்ப் புலவர் ஒப்புக் கொண்டார். அப்படியே பேசியும் தீர்த்தார். அந்தக் கூட்டத்திற்கு சுமார் 700 காலி நாற்காலிகளும் என்னைச் சேர்த்து 57 கலா ரசிகர்களும் வந்திருந்தனர்! பேசியது நன்றாய்த் தானிருந்தது! ஆனால் விளம்பரமில்லாத பேர்வழி! எதைப் பற்றிப் பேசினார் தெரியுமா? “கத்தரிக்காயும் கார்ல் மார்க்சும்” என்பது பற்றித்தான்! அதுவும் இசைக் கழகத்தில்! இசை - கத்தரிக்காய்- கார்ல் மார்க்ஸ்! எவ்வளவு நெருங்கிய சம்பந்தம், பாருங்கள்!

வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்குக் கூடப் பிடிக்கவில்லை. கூட்டம் கலைந்தது. புலவர் வெளியே வந்தார்.

“இதென்னய்யா, சிறிதும் பொருத்தமில்லாத விஷயங்களை ஒன்று சேர்த்திருக்கிறீரே! பேசுவதற்கு உமக்கு வேறு விஷயமா இல்லை?” என்று கேட்டேன்.

“பொருத்தமில்லாத விஷயமா? என்னைப் போன்றவன் பேசினால் இப்படித்தான் சொல்வீர்கள்! இதோ பாருங்கள்!”

தன் கையிலிருந்த ஒரு ‘பொங்கல் மலரை’ எடுத்து விரித்தார். தலைப்பிலுள்ள பெயரைக் கையால் மறைத்துக் கொண்டார்.

“இந்த நாலு வரிகளையும் படியுங்கள்!” என்றார்.

படித்தேன்:-

“திதி, நட்சத்திரம் இவற்றுக்கும் மழைக்கும் கொஞ்சம் சம்பந்த முண்டு” என்று அச்சிடப்பட்டிருந்தது!

“இதற்கு என்னய்யா சொல்கிறீர்?” என்று கம்பீரப் பார்வையுடன் கேட்டார்.

நான் சற்று யோசித்தேன். திதி - நட்சத்திரம் - மழை இசை - கத்தரிக்காய் - கார்ல் மார்க்ஸ்! திதி - நட்சத்திரம் - மழை!- என்று இரண்டு தடவை கூறினேன்! மூக்கில் விரல் வைத்தபடியே ஒரு நிமிஷம் நிதானித்தேன்.

“ஆஸ்ட்ரேலியாவில் ஆகாய விமான உதவியால் மழை! ரஷ்யாவில் வேண்டும்போது, வேண்டிய இடத்தில், வேண்டுமான அளவு மழை! வர்ண ஜப சக்தியுள்ளவர் வாழும் இடத்தில் மழையே யில்லை! கொழுநற்றொழுதெழுவாள் பெய் எனப் பெய்யும் மழை,” என்ற நாட்டில் மழையில்லை! இதிலோ, திதி - நட்சத்திரம் - மழை என்றிருக்கிறது!” - என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டேன். ரயில் வண்டிப் பிரயாணத்தின்போது பயிர்கள் மழையில்லாமல் வாடிக் கிடந்தது என் மனக்கண் முன் வந்தது. எனவே கோபமும் வந்தது!

“இதைத்தானே கேட்கிறீர்? எவனோ பித்தலாட்டக்கார பஞ்சாங்கப் பார்ப்பான் எழுதியிருக்கிறான்; கிழித்தெறியுமய்யா! திதியாம் நட்சத்திரமாம்! மழையாம்! சம்பந்தமாம்,!” என்று ஒரே போடாகப் போட்டேன்!

மறைத்திருந்த தன் கையை எடுத்தார்! எழுதியவர் பெயரைப் பார்த்தேன்! திடுக்கிட்டு விட்டேன்! ஒரு கவர்னரின் பெயர் இருந்தது!

“ஏன், ஓய்! மிரள மிரள விழிக்கிறீர்? ஒரு கவர்னர், அல்லது ஒரு மந்திரி, அல்லது ஒரு பணக்காரன் என்ன அபத்தத்தைச் சொன்னாலும் அதைப் “பெரிய விஷயம்” என்பீர்கள்! என்னைப் போன்ற ஏழை - விளம்பரமில்லாதவன்- எவ்வளவு நன்றாகப் பேசினாலும் முகத்தைச் சுளிப்பீர்கள்! உங்களைச் சொல்லவில்லையய்யா? இந்தக் குருட்டு உலகமே அப்படித் தானய்யா இருக்கிறது! ஏழையின் சுய அறிவுக்கு எங்கே மதிப்பு தருகிறார்கள்?” என்று கேட்டார்.

அவர் அப்படிச் சொன்னது சரியா? தவறா? நீங்களே அவ்வப்போது யோசித்துப் பாருங்கள்.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன் 

Pin It