என் உபயோகத்துக்கல்ல. என்னிடம் எட்டு ஜோடி பூட்ஸ்கள் இருக்கின்றன. அவ்வளவு பெரிய உத்யோகஸ்தனோ, என்று நினைக்க வேண்டாம். அவைகள் 20 வருஷங்களாக இருப்பவை! பல அளவுகளைக் கொண்டவை! எத்தனையோ சக்கிலித் தோழர்களைக் கேட்டுப் பார்த்துவிட்டேன். எடுத்துப் போக மறுத்து விட்டார்கள்! ஒரு ஆள் மட்டும் நான் இரண்டனா தந்தால் எடுத்தப் போவதாகச் சொன்னான்! எட்டு ஜோடிகளையும் அரையாணாவுக்காவது விற்று விடுவது என்ற பிடிவாதத்தில் வைத்திருக்கிறேன்.

kuthoosi gurusamy 268ஆனாலும் ஒரு ஜோடி பூட்ஸ் தேவை என்று சொன்னேனே, அது எதற்காக என்பதைக் கடைசியில் சொல்கிறேன். அவசரப்படுபவர்கள் இந்த இடத்தில் நிறுத்திக் கொண்டு கடைசிப் பகுதியைப் படித்துவிட்டு, பிறகு வேண்டுமானால் இங்கிருந்து படிக்கலாம்.

சட்டசபை மெம்பர்கள் வர வர சுத்த மோசமாகிக் கொண்டே யிருக்கின்றனர். இனிமேல் ஒரு புது விதியை ஏற்படுத்தினால்கூட நல்லது என்று நினைக்கிறேன். “நான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அங்கே வாயைத் திறப்பதே இல்லை,” என்று சத்தியம் செய்து கொடுக்கச் சொல்ல வேண்டும்! இப்போதே பலர் இம்மாதிரி வாக்குறுதி எதுவும் தராமலே “சும்மா யிருக்கின்ற திறம் அரிது” என்ற பெரியவர் வார்த்தையைத் தூள் தூளாக நொறுக்கி விட்டனர். இவர்கள் நடுப்பகல் சிற்றுண்டி நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் வாயைத் திறப்பதே இல்லை! மகாத்மா காந்தி வாரத்திற்கு ஒரு நாள் மவுனவிரதம் இருந்ததைப் பற்றி எவ்வளவோ பிரமாதப் படுத்தினார்களே! நம் சட்டசபை மெம்பர்களில் எத்தனையோ மகாத்மாக்கள் இருக்கிறார்கள்! அதனாலேயே அவர்கள் பெயர் பத்தரிகைகளில் வருவதில்லை!

மெம்பர்கள் பேசுவதானால் பல ஆபத்துக்களிருக்கின்றன. பேசுவதானால் பல விஷயங்களைப் படித்துத் தொலைக்க வேண்டும். எந்த அபத்தத்தையாவது சொல்லித் தொலைத்து முட்டாள் பட்டம் வாங்கிக் கொள்ளாமலிருக்க வேண்டும். நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டர்களைச் சரிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

எல்லாத் தொல்லைகளையும் விடப்பெரிய தொல்லை ஒன்றிருக்கிறது. மெம்பர்கள் பேசும்போது மந்திரிகள் அதைக் கேட்க வேண்டுமாம்!

சென்னை சட்டசபையில் அடிக்கடி மந்திரி நாற்காலிகள் காலியாகவே இருக்கின்றனவாம். மெம்பர்கள் சென்ற வாரம்கூட இது பற்றிக் குறை கூறினார்கள். அந்தச் சமயத்தில் போலீஸ் மந்திரியார் நுழைந்தாராம்!

இந்த வாரம் டில்லி சட்டசபையிலும் இதே குறை! பட்டாபி சீதாராமையா பேசும்போது மந்திரி நாற்காலிகள் காலியாயிருந்தனவாம்! “நாங்கள் என்ன, வேலையற்றவர்களா, இப்படிக் காலி நாற்காலிகளைக் கட்டி அழ?” என்று கோபமாகக் கேட்டாராம்!

மந்திரிகள் மெம்பர்களை இப்படி அலட்சியப் படுத்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். அப்படிக் கேட்பதே தப்பு. யார் என்ன பேசினாலும் கட்சிக் கூட்டத்தில் செய்த முடிவுப்படித்தானே மசோதாக்கள் நிறைவேறப் போகின்றன? அதற்குப் பேச்சு எதற்கு? தலைவர் எதற்கு? மந்திரிகள் கேட்பதுதான் எதற்கு? அதைவிட ஒரு ஆட்டம் ‘பிரிட்ஜ்‘ (அல்லது பத்தாம் பசலி மந்திரிகளானால் 304 ஆட்டம் ஆடலாம்) போட்டாலும் பலனுண்டே! சட்டசபையில் பொடி போடலாமா? சிகரெட் குடிக்கலாமா? படிக்கலாமா? என்று பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறட்டை விடாமல் தூங்கலாம் என்று சபைத் தலைவர் கூறி விட்டபடியால், அவர்கள் நிம்மதியாகத் தூங்குவதற்காக பெண் மெம்பர்கள் தாலாட்டுப் பாடலாமா என்ற கேள்வி எழுகின்றது. இன்னும் பல சந்தேகக் கேள்விகள் எழுகின்றன. மற்றொரு சமயம் சொல்கிறேன். போர்மென் அவசரப்படுகிறார்!

இங்கு எடுத்துக்கொண்ட விஷயம் ‘காலி நாற்காலிகள்’ பற்றியது. மந்திரிகள் இல்லாவிட்டால் என்ன? காலி நாற்காலிகளிடம் ஏன் பேசக் கூடாது? நான் அறிந்தவரையில் இரண்டொரு மந்திரிகளைவிட காலி நாற்கலிகளே புத்திசாலிகளாக இருக்கின்றன. அவைகள் முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டாமலாவது இருக்கின்றனவே! அது போகட்டும்.

இந்த நாட்டை ஒரு ஜோடி மிதியடிக் கட்டைகளே ஆட்சி புரிந்திருக்கின்றன. ‘ஒரு ஜோடி செருப்பு’ என்று அய்யா அடிக்கடி சொல்வார்! அதுவும் ஒரு நாள், இரண்டு நாளல்ல. 14 வருஷம்! அதாவது மன்னன் இருக்க வேண்டிய அரியணையின்மீது அவனுடைய மிதியடிகள் இருந்தனவாம்! ஆகையால் காலி நாற்காலிகளிடம் பேசுவதில் அவமானம் எதுவுமில்லை. வேண்டுமானால் மந்திரிகளிள் அடையாளமாக (பரதன் செய்ததுபோல) அவரவர் பூட்ஸ்களை நாற்காலியில் வைத்து விட்டுப் போக வேண்டும் என்று உத்தரவிடலாமே! நாற்காலி மீது ஒரு நியூஸ் பேப்பரை விரித்து அதன்மீது அவரவர் திருப்பாதுகையை (‘பூட்ஸ்’ என்பது இங்கிலிஷ் பெயர்) வைத்து விட்டால், “கனம் விவசாய மந்திரி அவர்கள் இதற்கு என்ன சமாதானம் கூற முடியும் எனக் கேட்கிறேன்,” என்று அந்த ஜோடியைப் பார்த்து கனம் அங்கத்தினர்கள் அதட்டிக் கேட்கலாமே!

இந்த என் யோசனையைத் தவறு என்றோ, தகாதது என்றோ ‘வல்கர்’ என்றோ, கருதுகிறவர்கள் ராமாயண விரோதிகள்! ஆஸ்திகத்துக்கு எதிரிகள்! இந்து மத துரோகிகள்! அவர்கள் சென்று அமர்வதற்காக நரகத்தில் பல நாற்காலிகள் காலியாகவே இருக்கின்றன என்பதை எச்சரித்துக் கூறுகின்றேன்.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It