கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்திரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர்துடித்திட லானேன்.
வடக்குத் தெருவெளி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.
"வளர்ப்பு மயில்களின் ஆடல் -தோட்ட
மரங்கள், மலர்க்கிளை கூட்டம்.
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்"
தோழி இவ்வா றுரைக்குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்ன இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை" வென்று சொன்னான்.
தொடர்புடைய படைப்புகள்
பந்துபட்ட தோள்
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
More articles by பாரதிதாசன்
- மாவீரன் வ உ சிதம்பரன் (13 ஜூன் 2023)
- எந்நாளோ? (09 மார் 2020)
- தமிழ்க் கனவு (06 மார் 2020)
- தீவாளி, நல்விழா நாளா? (04 நவ 2019)
- காத்திருக்கும் கோட்சே கூட்டம்! (14 ஆக 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.