வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல் எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்
நீநம்பாய் என்று, நிமிர்ந்த என்கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;
உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே இருப்பாய் பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண்டே இருப்பார் தென்பாங்கை உன்பால்!
அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.
வானம்பாடி
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
More articles by பாரதிதாசன்
- மாவீரன் வ உ சிதம்பரன் (13 ஜூன் 2023)
- எந்நாளோ? (09 மார் 2020)
- தமிழ்க் கனவு (06 மார் 2020)
- தீவாளி, நல்விழா நாளா? (04 நவ 2019)
- காத்திருக்கும் கோட்சே கூட்டம்! (14 ஆக 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.