முட்புதர்கள் மெய்த்ததரை எங்கும்! - எதிர்
முட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்த டுங்கும் - உள்
நடுங்கும்.
கிட்டிமர வேர்கள்பல கூடும் - அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர
மட்டையசை வால்புலியின்
குட்டிகள் போய்த் தாய்புலியைத்
தேடும் - பின்
வாடும்.
நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் சுழற்றிப் பாயவருங்
காடு - பள்ளம்!
மேடு!
கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில் - புகும்
ஒன்றி.
வானிடைஓர் வானடர்ந்த வாறு - பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! - நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும்
ஆறு - இன்பச்
சாறு!
கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும் - அடை
ஆக்கும்.
காடு
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
More articles by பாரதிதாசன்
- மாவீரன் வ உ சிதம்பரன் (13 ஜூன் 2023)
- எந்நாளோ? (09 மார் 2020)
- தமிழ்க் கனவு (06 மார் 2020)
- தீவாளி, நல்விழா நாளா? (04 நவ 2019)
- காத்திருக்கும் கோட்சே கூட்டம்! (14 ஆக 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.