மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற வேண்டுமானால், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட, மதமாற்றத்திற்கு எதிரான ஆணையை (கடிதம் நகல் எண்: 81 / நாள் : 19.9.2000) உடனடியாக இன்றைய தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்று, சென்ற மாத "தலித் முரசி'ல் குறிப்பிட்டிருந்தோம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில், கவுதம சன்னா எழுதிய "மதமாற்றத் தடைச் சட்டம் : வரலாறும் விளைவுகளும்' என்ற முக்கிய நூல், மறுக்க முடியாத ஆதாரங்களுடன் தற்பொழுது வெளிவந்துள்ளது. இந்நூலில் இருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். "மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தாகி விட்டது' என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியை அளிக்கிறது இந்நூல்.
நூல்: மதமாற்றத் தடைச் சட்டம் : வரலாறும் விளைவுகளும்
ஆசியர் : கவுதம சன்னா
வெளியீடு : "மருதா' 226(188) பாரதி சாலை, ராயப்பேட்டை,
சென்னை - 600 014
பக்கங்கள் : 112
விலை ரூ. 60
மதமாற்றத் தடைச் சட்டம் 18.6.2004 அன்று நீக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டதாகவும், முடிந்து போன ஒரு கதையை மீண்டும் எழுப்பி தேர்தல் ஆதாயம் அடைய முயல்வதாக தி.மு.க. கூட்டணியினர் மீது ஜெயலலிதா குற்றம் சாட்டினார். ஆனால், அச்சட்டம் நீக்கப்பட்டது குறித்த அரசாணையை அவர் பத்திரிகைகளில் வெளியிடவில்லை. தேதியை மட்டும் குறிப்பிட்டாரே தவிர, அந்த ஆணையின் நகலையோ, அந்த அரசாணையின் எண்ணையோ அவர் குறிப்பிடவில்லை.
திருவாளர் கருணாநிதி முதல்வர் ஆகிவிட்டார். அவருக்கு முன் உள்ள பணி, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது. மதமாற்றத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். "நீக்கப்பட்ட சட்டத்தை மீண்டும் ஒரு முறை நீக்குவது மோசடி' என்று ஜெயலலிதா எதிர்த்தார். இருப்பினும், மதமாற்றத் தடைச் சட்டத்தை நீக்க சட்ட முன்வரைவு 31.5.2006 அன்று, தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி, "முன்னாள் முதல்வர் இன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அந்நாளில் 21.6.2004 ஆம் தேதி, மதமாற்றத் தடை அவசரச் சட்டத்தை வாபஸ் வாங்க பேரவையில் ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். சிறுபான்மையினரின் குரலை சமாதானம் செய்வதற்காக, புதிதாக சட்டசபையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி சமாளித்தார்கள். ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும், அவையில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கையெழுத்திட்ட கோப்பு இன்னும் சாட்சியாக உள்ளது'' ("தினகரன்' 1.6.2006) என தனது அடுக்கு நடை வசனத்தில் தன் வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆனால், இதில் எந்த அளவு நேர்மை இருக்கிறது?
...இந்த ரத்து மசோதாவை ஆதரித்து, நம் மரபுப்படி ஆதரவு அறிக்கைகள், நன்றி அறிவிப்புகள் ஆகியவைகளோடு தேர்தலில் ஜெயலலிதாவை பழிவாங்கியவர்கள், தம் அறிக்கைகளில் கருணாநிதியை புனிதப்படுத்தினார்கள். இந்தப் புனிதப்படுத்தலுக்குத் தகுதியானவர்தானா திருவாளர் கருணாநிதி அவர்கள்? மதமாற்றத் தடைச் சட்டத்திற்குத் தானும் ஒரு மூலவராக இருந்ததை தனது சாதுர்யத்தின் மூலம் மறைத்து, 2006 தேர்தல் வெற்றியை அவர் கைப்பற்றினார்.
தன் "மூலவர் ஸ்தானத்தை' இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பதற்கு, அவர் வெளியிட்ட அந்த ஆணையே சாட்சி - Govt.letter (MS) No.81 Adi Dravidar & Tribal Welfare Dept. dated 19.9.2000 - "பிறப்பால் கிறித்துவர் இந்துவாக மாறினால், ஆதி திராவிடர் சாதிச்சான்று பெறவோ, இட ஒதுக்கீட்டுக்குரிய சலுகையைத் துய்க்கவோ தகுதி இல்லை...”'
ஆனால், இந்த ஆணை ஒரு பொதுவான மதமாற்றத் தடைச் சட்ட ஆணையல்ல. அது, தலித் மக்கள் மட்டுமே மதம் மாறுவதற்கானத் தடை ஆணை. இந்த ஆணையைக் குறித்து எந்த ஒரு கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை இந்த ஆணை, கடந்த தேர்தல்களில் மய்யப் பொருளாகி இருந்தால், தலித் விரோதிக்கான பட்டத்தை அவர் எளிதில் வென்றிருப்பார். மதமாற்றத் தடைச் சட்டத்தின் நீக்கத்தை சட்டப் பேரவையில் வைக்காமல், அவசரச் சட்டத்தின் மூலம் நீக்கியதே போதும் என்பதற்கு ஆதரவாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை - ஜெயலலிதா சுட்டிக் காட்டியிருந்ததை ஏற்றுக் கொள்ளாத முதல்வர் கருணாநிதி, தலித்துகள் விஷயத்தில் அப்படி நடந்து கொண்டாரா?
உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தனிநபருக்கான தீர்ப்பை, அன்றைய முதல்வர் கருணாநிதி தலித் மக்களின் மதமாற்றத் தடை ஆணையாக மாற்றிய ஆணை மீது, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், நிலுவையில் இன்னும் ஆணையாகவே - சட்டப்படி அது வாழ்கிறது! இந்த தலித் மதமாற்றத் தடை ஆணைதான் ஜெயலலிதா வெளியிட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தின் மூலவேர். இந்த மூல வேரை அதன் மூலவர், இந்நாள் முதல்வர் திருவாளர் கருணாநிதி கிள்ளி எறிவாரா?''