கல்வி என்பது அறிவு பெற மட்டுமா? அதற்குள் பலபரிமாணங்கள் இருக்கின்றன. கல்வியை எந்த மொழியில் கற்பது? கல்விக் கூடங்களை யார் நிர்வகிப்பது? தரமான கல்வி என்று எதைக் கருதுகிறோம்? இதனை அரசுக் கல்விநிறுவனங்களால் தர முடியாதா? கல்வியில் அந்நிய நிறுவனங்கள் மூக்கை நுழைக்கும் காலம் வருமா? என பலப்பல கேள்விகள் இன்று நம்முன் நிற்கின்றன. இவற்றுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் பேட்டியில் பதிலளிக்கிறார். பேட்டி மயிலை பாலு.

 இன்றையக் கல்விமுறையில் ஆங்கில மோகம் ஏராளமான மக்கள்கிட்ட இருக்கு. இவர்களை மீட்க என்ன செய்யலாம்?

ஒரே வரி சட்டம் போட்டு இதை மாற்ற முடியும். தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்விதான் பன்னிரண்டாம் வகுப்புவரை என்று ஒரு சட்டம் போட்டால் இது நடக்கும். ஆனால் அந்த அரசியல் உறுதி இங்கே இல்லை.

கல்விக்கூடங்களைப் பராமரிக்கவும் கல்வி நிறுவன உழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் போதிய நிதி இல்லன்னு அரசாங்கங்கள் சொல்வது பற்றி...?

தொள்ளாயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புக்கு செலவு பண்றாங்க. பணமா இல்ல. அதுல ஆதாயம் இருக்கு. ஆனா ஒரு ஏழைக்குக் கல்வி குடுத்தா அதுல ஆதாயம் இல்ல. செலவு பண்ண மாட்டேங்குறாங்க. நூற்றிரண்டு கோடி மக்களும் நல்ல அறிவு பெற்ற மக்களா இருந்தா ராணுவத்தவிட பெரிய சக்தியா இருக்கும். இதைச்செய்ய அரசியல் உறுதி வேணும்.

அரசாங்கங்கள் இப்படி இருப்பதால்தானே தனியார் கல்வி நிறுவனங்கள் ஏராளமா வந்திருச்சி?

தனியார் கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து உண்டு. இவற்றின் மீது அரசாங்கத்துக்குக் கட்டுப்பாடு இருந்தது. இதற்கான சட்டமே உண்டு. ரொம்ப காலத்துக்கு அரசுப் பள்ளிக் கூடம் நடத்துனதில்ல. உள்ளாட்சி அமைப்புகள்தான் பள்ளிக்கூடங்களை நடத்திக்கொண்டிருந்தன. இவற்றுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் அரசு உதவி செய்தது. இவையெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா தரமான கல்வி கொடுக்கப்படுகிறதா என்று கண்காணித்துக்கொண்டிருந்தது. ஆசிரியர் நியமனம் பண்றது டிரான்ஸ்பர் பண்றது இதையெல்லாம் அரசாங்கம் செய்ததில்ல.

அப்படின்னா இதுல மாற்றம் வந்தது எப்போது?

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்துலதான் (1977-க்குப் பிறகு) பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளையெல்லாம் அரசாங்கம் நேரடிப் பார்வையில் எடுத்துக்கொண்டது. 35 ஆயிரம் துவக்கப்பள்ளிகளின் 5 ஆயிரம் உயர் நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் நியமனம், மாறுதல் எல்லாவற்றையும் அரசாங்கம் சென்னையில் உட் கார்ந்துகொண்டு கவனித்தது. இந்த மாதிரி ஏற்பாடு உலகத்துல எங்கேயும் இல்ல. இதுதான் குழப்பத்துக்கு எல்லாம் வித்து.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்த பள்ளிகள் அரசுக்கு மாற்றப்படக் காரணம் என்ன?

அந்த நாளில் ஜில்லா போர்டு (இன்றைய மாவட்டப் பஞ்சாயத்து போன்றது) பிரசிடென்ட் மந்திரியை விட அதிகாரம் உள்ள வராகவும் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எம்எல்ஏவைவிட அதிகாரம் கொண்டவராகவும் இருந்தார்கள். இதுக்காகவே இந்த ரெண்டு அமைப்பையும் சீரழிச்சாங்க. இதனால பாதிக்கப்பட்டது ஏழை எளிய வர்க்கம் தான். அவங்களுக்குத் தான் கல்வி முழுக்க முழுக்க மறுக்கப்பட்டது.

கட்டணக் கல்விங்கிறது மக்களை இப்ப விழிபிதுங்க வைக்குது. கல்வி என்பது தொண்டு என்பதிலிருந்து வசூலுக்கு எப்படி மாறியது?

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்துல கட்டணக் கல்வி முறைய கொண்டு வந்தாரு. பாலிடெக்னிக்ல தொடங்கி இன்ஜினீரிங் கல்லூரிக்குப் போயி அப்புறம் பள்ளிக் கூடங்களுக்கும் கொண்டு வந்தாரு. இன்னைக்கு நர்சரிப்பள்ளியிலிருந்து எல்லாமும் கட்டணக் கல்வியா மாறிப்போச்சு. அரசாங்கப் பள்ளிகளிலேயும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் அதிக அளவில் வசூல் பண்றாங்க.

இதுக்காகவே அரசுப்பள்ளிகள்ல தமிழ் வழி வகுப்பையெல்லாம் ஆங்கில வழி வகுப்புகளா மாத்துனாங்க. மக்களுக்கும் ஆங்கில வழிக் கல்வின்னா உயர்ந்த படிப்புங்குற மாயைய உண்டாக்கிட்டாங்க.

தனியார் கல்வி நிறுவனங்கள் தரமா இருக்கு; அரசு கல்வி நிறுவனங்கள்ல தரம் இல்லன்னு மக்கள் கிட்ட ஒரு கருத்து உருவாகி இருக்கு. இது எதனால?

அரசுப்பள்ளிகள்ல ஆசிரியர்கள் போடாம ஆசிரியர்கள் மீது மேலாண்மை செலுத்தாம அந்தப் பள்ளிக் கூடங்கள கல்வி தராத நிறுவனங்களா மாத்திட்டாங்க.

அடுத்து தனியார் கல்லூரிகள் வந்தா அதுக்குக் கம்ப்யூட்டர் கோர்ஸ் குடுத்தாங்க. பிபிஏ குடுத்தாங்க. ஆனா தமிழ்நாட்டிலேயே முதன் முதலா தொடங்கப்பட்ட பிரசிடென்சி (மாநிலக்) கல்லூரிக்குக் கூட இந்தப் பாடங்களையெல்லாம் குடுக்கல. தனியார் கல்லூரிகளுக்குப் புதுப்புது பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதிச்சு அவங்கள வளர விட்டுவிட்டு அரசுக்கல்லூரிகளை நாசம் பண்ணினாங்க.

தாய்மொழியில் கல்வி கொடுக்கணும்னு தமிழ்நாட்லதான் போராட்டம் நடக்குது. இப்படிப்பட்ட போராட்டம் வேறெந்த மாநிலத்திலேயும் நடக்கறதா தெரியலியே...

குஜராத் மாநிலத்தில் எல்லாப் பாடங்களிலேயும் பிஎச்டி பட்டம் குஜராத் மொழியிலேயே வாங்கலாம். ராஜஸ்தான்ல ஒரு வார்த்த ஆங்கிலம் தெரியாம எம்எஸ்சி பட்டம் பெறலாம். விருப்பமிருந்தா ஆங்கிலம் படிக்கலாம். இங்கேதான் ஆங்கிலம் படிக்கலன்னா வீணாப் போயிடுவோம்னு நெனைக்கிறாங்க.

ஆங்கிலக் கல்வி தேவையில்லன்னு நீங்க சொல்றீங்களா?

மொழியைக் கற்பது என்பது வேறு. ஆங்கிலம் படிச்சா மட்டும் அறிவு வந்துடாது. என்னோட அண்ணாரு எஸ்.எஸ்.கண்ணன் (சென்னையில் மார்க்ஸ் நூலகம் நடத்துபவர்) பிரான்சுக்குப் போனாரு. அங்க மூணே மாசத்துல விக்டர் ஹியூகோ நாவலைப்படிக்கும் அளவுக்கு ஃபிரஞ்சு மொழிய கத்துக்குடுத்துட்டாங்க. ஆகவே எந்த மொழியையும் கொறைஞ்ச காலத்துல கத்துக்கலாம்.

ஆனா தாய் மொழியில படிச்சத்தான் எளிமையா படிக்க முடியும். மத்தவங்களுக்கும் நல்லா எடுத்துச் சொல்ல முடியும். அறிவு என்பது பொதுச் சொத்து. அதைத் தாய் மொழியில் பெற்றால் தான் எல்லாருக்கும் கொடுக்க முடியும்.

சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்று தமிழ்ப்பாரம்பரியம் பேசி ஆட்சிக்கு வந்த வங்கதான் தமிழ் நாட்டுல முப்பத் தெட்டு வருஷமா மாறி மாறி ஆட்சியில இருக்காங்க. அப்படியிருந்தும் தமிழ் வழிக் கல்வி வேரூன்றாததற்குக் காரணம் என்ன?

குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கு ஏற்ப தமிழ் மொழி பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படல. ஒன்றாம் வகுப்பிலேயே குழந்தைகளுக்குப் பல வகையான வரிவடிவங்களைக் கொடுப்பது குழப்பத்தை ஏற்படுத்துது. உதாரணத்துக்கு உ கரக் குறியீட்டைச் சொல்லலாம். கு, ஙு, சு, ஞு, டு, து, மு,ரு என்று எத்தனை மாற்றங்கள்! குழந்தைகளுக்கு எளிமையாய்ப் புரிவது போல் எழுத்துச் சீர் திருத்தம் செய்ய வேண்டும். வார்த்தைகளில் பயன்படுத்தாத ங, ஞ் வர்க்க எழுத்துக்களை இன்னும் விடாப்பிடியா வச்சிகிட்டிருக்கோம். வரி வடிவத்தின் மேலுள்ள குழந்தைகளின் கோபம் மொழி மேலான கோபமாக மாறி விடுகிறது.

எனவே மொழியாராய்ச்சியாளர்களுடன் கலந்து வரி வடிவத்தில் மாற்றம் செய்ய வேண்டும். கற்பிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

காலனியாதிக்கத்துல ஆங்கிலம் எப்படி எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப் பட்டதோ அதே மாதிரி உலக மயத்துல இப்போது மீண்டும் ஆங்கிலத்தை அனைத்து நாடுகளின் மொழியாக, குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப மொழியாக மாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி உங்கள் கருத்து?

இப்போ கேட்ஸ்(GATS- General Agreement on Trading Servies)னு ஒரு ஒப்பந்தத்துல இந்தியா கையெழுத்திடப்போவுது. அப்படி கையெழுத்திட்டா உயர்கல்வி முழுவதையும் வெளிநாட்டவர் வந்து இங்க நடத்தலாம். அவங்க அரசாங்கத்திடமோ பல்கலைக்கழகத்திடமோ ஏஐசிடி-யிடமோ யூஜிசி-யிடமோ அனுமதி வாங்க வேண்டாம்.

அவங்களே பாடத் திட்டத்தை வகுக்கலாம்; பாடநூல்களைத் தயாரிக்கலாம்; தேர்வு நடத்தலாம்; பட்டம் கொடுக்கலாம். அதாவது இந்தியாவுக்குள்ளேயே ஒரு அயல்நாடு இருக்கும். நம்ம அரசு நிர்வாகத்துக்கு இணையா அவங்க ஒரு அரசாங்கம் நடத்துவாங்க.

அமெரிக்காவுல எல்லா வர்த்தகத்திலும் பற்றாக் குறை. அவர்களுக்கு உபரியைத் தருவது கல்வி வியாபாரம் மட்டும்தான். ஆண்டுக்கு ஏழு பில்லியன் டாலர் உபரி கெடைக்குது. கேட்ஸ் வந்துதுன்னா இந்த உபரி ஏழு டிரில்லியன் டாலரா அதிகரிச்சிடும். அதுக்காகத் தான் அமெரிக்கா பிரஷர் குடுக்குது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாம மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்.

இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் போட அரசுக்கு அதிகாரம் இருக்கு. மக்களில் பெரும்பாலோ ருக்கு இது பற்றி விவரம் தெரியறதில்ல. இதுக்கு என்ன செய்யலாம்?

அமெரிக்காவுல எந்த நாட்டோடும் ஒப்பந்தம் போட ஜனாதிபதிக்குக்கூட உரிமை கெடையாது. அவர் செனட் அனுமதியைப்பெற வேண்டும். ஆனா நம்ம நாட்டுல எந்த ஒப்பந்தத்திலேயும் அமைச்சர்களே கூட கையெழுத்துப் போட்டுட்டு வந்திடறாங்க. இத மாத்தணும். அயல் நாடுகளுடன் போடுகிற ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம்.

தமிழ் வழிக்கல்வி என்று பேசினாலும் பாட நூல்கள் தான் எழுதப்படுது. பலதுறைகளிலும் தமிழில் நூல்கள் எழுதப்படுவதோ வெளியிடப் படுவதோ இல்ல. அதனால தமிழ்ல எல்லாத்தையும் எப்படி படிக்க முடியும்னு கேக்கறாங்களே...?

கணினியுகத்துல இனி எதுவுமே கஷ்டமில்ல. தானாக மொழியாக்கம் செய்கிற முறையெல்லாம் வந்திருக்கு. அதையெல்லாம் நாம் பயன்படுத்தணும். அவ்வளவுதான்.

கல்வி, முன்பு மாநிலப் பட்டியல்ல இருந்துது. அப்புறம் பொதுப் பட்டியலுக்குப் போயிட்டுது. இதோட விளைவு என்ன? இதில் மாற்றம் வரணுமா?

எமர்ஜென்சி காலத்துல இந்திராகாந்தி ஆட்சியில கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. அது ஒரு தவறான காரியம். பின்தங்கியிருக்கிற மாநிலங்களைக் கல்வியில் முன்னேற்ற அவற்றுக்கு நிதி போதாது, நாங்க உதவி செய்து அவற்றை முன்னேற்றத்தான் இந்த நடவடிக்கைன்னு சொன்னாங்க. ஆனால் அதைத் திட்டக்குழு மூலமாகவே செய்திருக்க முடியும். உண்மையான காரணம் என்னென்னா எல்லாவற்றுக்கு மேலேயும் மத்திய அரசுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கணுங்கிறதுதான்.

கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரணும். அது மட்டும் போதாது. அதிகாரப்பரவலாக்கப் படணும். கல்வி நிலையங்களுக்கும் மக்களுக்கும் நேரடியான உறவு இருக்கும் வகையில் அவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றை நிர்வகிக்கும் அளவுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் கல்விக்கூடங்களை மக்கள் தங்களுடையதாகப் பார்ப்பாங்க.

கல்வி நிறுவனங்களின் நிர்வாக அமைப்புகள்ல குறிப்பாகப் பல்கலைக்கழக செனட் சிண்டிகேட்ல மாணவர்களின் பிரதிநிதிகளையும் இணைக்கணும்னு ஒரு கோரிக்கை இருக்கு இது சரியானதுதானா?

பல்கலைக்கழக செனட்டிலேயும் சின்டிகேட்டிலேயும் மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு வரணும்னு மால்கம் ஆதிசேஷையா விரும்புனாரு. ஆனா அதிகார வர்க்கம் இதற்கு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாம பண்ணிட்டாங்க.

கல்வியோட நுகர்வோர் மாணவர்கள்தான். அவங்களுக்கு இந்த மாதிரி அமைப்புகள்ல அவசியம் இடம் கொடுக்கணும்.

மாணவ மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உடைக்கட்டுப்பாடு கொண்டு வந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது ரொம்பவும் அபத்தமானது. உடை மட்டும்தான் ஒருத்தரைக் கவரணும்கிறது இல்ல. முகம் அழகா இருந்து கவரப்பட்டால் கரிய பூசிக்கிட்டு வாங்கன்னு சொல்லுவாரா? எடுப்பான மூக்கு இருப்பது கவர்ச்சியா இருந்தா அத மறச்சி துணியக் கட்டிகிட்டு வாங்கன்னு சொல்லுவாரா?

உடைக்கட்டுப்பாட்ட எதிர்த்து தமிழகம் தழுவிய போராட்டம் நடந்திருக்கணும். ஏன் நடக்கல? கல்லூரிகள்ல மாணவர் அமைப்புகள சிதறடிச்சிட்டாங்க. முன்பெல்லாம் மாணவர் அமைப்பை கேட்காம கல்லூரி முதல்வர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இப்போ அந்த அமைப்பை கலைவிழா நடத்தும் அமைப்பா மாத்திட்டாங்க. இதுதான் காரணம்.

Pin It