இந்து மதத்துக்கு ஆதாரமாகவும், மத தத்துவங்களாகவும், பண்டிதர்களிடையும், பாமர மக்களிடையேயும் செல்வாக்குப் பெற்றிருப்பவை புராணங்களேயாகும். அப்புராணங்கள் பெரிதும் சைவம், வைணவம் என்று சொல்லப்படும் இரு உட்சமயத்தைப் பொறுத்ததேயாகும். இன்று பெரிதும் வைணவம், சைவம் என்னும் இருசமயம்தான் இந்துமதமாய் இருந்து வருகின்றது என்றாலும், இந்துமதத்தில் சங்கரர் மதம், மத்துவாச்சார் மதம் முதலியவைகளும் அடங்கும். புராணக் கோட்பாடுகளின் படியும், வேதசாஸ்திரக் கோட்பாடுகளின்படியும், அநேக கடவுள்களும், அநேக தேவர்களும், அக்கடவுள்கள் ஆகியவர்களுக்குப் பல பெண்டு பிள்ளைகளும், குடும்பம் விவகாரங்களும், லீலை முதலிய காம விளையாட்டுகளும் கணக்கிலடங்காத அளவுக்கு உண்டு.

இக்கடவுள்களில் முக்கியமாகவும், பிரதானமாகவும் சொல்லப்படும் கடவுள்கள் மூன்று. இம்மூன்று கடவுள்களுக்கும் முதற்கூறிய பெண்டுபிள்ளை, குடும்பம், வீடுவாசல், லீலை, திருவிளையாடல் மற்றும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற உத்தியோகம், விருப்பு, வெறுப்பு, பொறாமை ஆகிய காமவிவகாரம் முதலிய குணங்களும் உண்டு. இவைகளை விவரிப்பதும், விளக்குவதும் தான் புராணம் என்று சொல்லப்படுவதாகும்.

இப்புராணக் கோட்பாடுகளின்படி பிரம்மாவின் உத்தியோகம் படைத்தல், விஷ்ணுவின் உத்தியோகம் காத்தல், சிவனுடைய உத்தியோகம் அழித்தல். இந்த மூன்று இலாக்காக்களின் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்கள் வேலை செய்து கொண்டு வருகிறார்களாம். இவர்களின் யோக்கியதையைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். இவர்களின் யோக்கியதை முழவதையும் எழுதுவதென்றால் இப்புத்தகம் இடங்கெடாது என்று அஞ்சுகிறோம். ஆகையால், ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு பதம் என்னும் பழமொழியை அனுசரித்து இம்மும்மூர்த்திகளின் யோக்கியதையைக் கூடியவரையில் சுருக்கமாகவே ஆராய்வோம்.

 

பிரம்மா :

முதலில் பிரம்மா என்பவரைப்பற்றி பார்ப்போம். புராணங்களில் பிரம்மாவினுடைய யோக்கியதையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தால்; முதலில் இவர் ஒரு பெரும் புளுகர் என்பதும், பொய்சாட்சி ஏற்படுத்துபவர் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் யார் பெரியவன் என்னும் விஷயமாய்ச் சண்டையிட்டுக் கொண்டார்களாம். அச்சமயத்தில் சிவன் இவ்விருவருக்கும் மத்தியில் ஒரு மலையுருவெடுத்து நின்று என் அடிமுடியைக் காண்பவரே பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்றியாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் உருவெடுத்துக் கொண்டு முறையே அடியையும், முடியையும் காணச் சென்றார்களாம். ஆனால், விஷ்ணு அடியைக் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டார். பிரம்மா முடியைக் காணமுடியாமல் தவிக்கும் போது ஒரு தாம்பூ சிவன் முடியிலிருந்து விழுந்ததாம். பிரம்மாதான் முடியைக் கண்டதாகப் பொய் சாட்சி சொல்லும்படி அத்தாழம்பூவிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கீழே வந்து தாம் முடியைக் கண்டுவிட்டதாகவும் அதற்குச் சாட்சியாகத் தாழம்பூவைக் கொண்டு வந்ததாகவும் சொன்னார். சிவன் இந்தப் பொய்யையறிந்து பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போகக்கடவது என்று சாபம் கொடுத்தாராம். இந்தப் புராணக்கதையினால் பிரம்மாவினுடைய யோக்கியதை வெளியாகியது.

இனி பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போனதன் காரணம் வேறு ஒரு விதமாகவும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், பிருகு என்னும் ஒரு ரிஷி இருந்தாராம். அவருக்கு புலொமை என்னும் ஒரு மனைவி இருந்தாளாம். மும்மூர்த்திகளுக்கே பெண்டாட்டிகள் இருக்கும் போது ரிஷிகளுக்கும் பெண்டாட்டியில்லாமல் இருக்குமா? இவர் தமது மனைவியோடு வாழுங்காலத்தில் ஒருநாள் மும்மூர்த்திகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சோதிக்க வேண்டுமென்னும் ஆசை இவருக்கு உண்டாயிற்றாம். உடனே இவர் பிரம்மலோகம் சென்று பிரம்மா இருக்கும் மாளிகையில் புகுந்தாராம். அச்சமயத்தில் பிரம்மா தன் மனைவியோடு சுகித்துக் கொண்டிருந்தாராம். அதையறிந்த பிருகு உனக்குக் கோயில் இல்லாற் போகக்கடவது என்று சபித்தாராம். ஆகையால், பிரம்மாவுக்குக் கோயில் இல்லாமற் போய்விட்டதாம்.

இந்த இரண்டு கதைகளில் இரண்டு காரணம் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இதிலிருந்து என்ன ஏற்படுகிறது என்றால் பிரம்மாவுக்கும் சிற்றின்ப சுகத்தில் மிகுந்த விருப்பமுண்டாயிருந்தது என்று ஏற்படுகிறது. இது கடவுள் தன்மைக்கு அழகா? என்று யோசித்துப் பாருங்கள். சிலர் பிரம்மா தன் மனைவியிடத்தில் தானே சுகித்துக் கொண்டிருந்தார்? இது உலக வழக்கந்தானே? தன் மனைவியிடத்தில் கணவன் சேர்ந்து சுகிப்பது தவறல்லவே என்று சொல்லக்கூடும். இதை நாமும் ஒப்புக்கொள்கிறோம் என்றாலும், இவர் இன்னொரு வேலை செய்திருக்கிறார். அதையும் சொல்லி விடுகிறேன்.

பிரம்மா ஒரு காலத்தில் பத்மை என்னும் ஒரு பெண்ணை உண்டாக்கினாராம். பிறகு அவள் வெகு அழகாயிருப்பதைக் கண்டு தன் மகள் என்றும் யோசியாமல் அவளைக்கூடி கற்பழித்துவிட்டாராம். இந்தச் சரித்திரமும் புராணங்களில் காணப்படுகிறது. இன்னும் சுப்பிரமணியரால் இவர் சிறையிடப்பட்டது முதலியவைகளைப் பற்றி சொல்லப்புகின் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். இதனால் மகளை மணந்து கொண்டவர் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

விஷ்ணு :

இனி விஷ்ணு என்பவருடைய யோக்கியதையைப் பற்றிக் கவனிப்போம். இவர் எவ்வளவு அயோக்கியத்தனமான காரியங்களையும் முன்பின் பாராமல் செய்து விடுவார். இவர் செய்துள்ள காரியங்களில் அறிவாளிகள் ஒப்புக்கொள்ளக்கூடிய நன்மைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். காமம், வஞ்சனை, பொறாமை, தந்திரம், அநியாயம் முதலிய குணங்கள் இவரிடத்தில் பதிந்து கிடக்கின்றன. அப்படியிருந்தும் இவருக்குக் கோயில், குளங்களும், தேர் திருவிழாக்களும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இவர் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைக் கொன்று யாகம் செய்து வந்த முனிவர்களையும், ரிஷிகளையும் காப்பாற்றுவதற்காகவும் யாகம் செய்யக்கூடாது என்று சொல்லித் தடுத்துவந்த அரக்கர்களை ஒழிப்பதற்காகவும் வேண்டி இராமாவதாராம் செய்தார் என்றால் இவருடைய குணம் எப்படிப்பட்டதென்பதை நன்குணரலாம். இவர் செய்த அவதாரங்களுக்கும், கற்பழித்தல், வஞ்சித்தல், சாபம் பெறுதல், சாபவிமோசனம் பெறுதல் முதலியவைகளுக்கும் கணக்கு வழக்கு இல்லை. இவற்றையெல்லாம் சொல்லப்போனால் இப்புத்தகம் இடம் கொள்ளாது. ஆகையால் இவரைப்பற்றி ஒரு விஷயத்தை மாத்திரம் எழுதிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

சலந்தரன் என்னும் அரசன் இருந்தானாம். அவன் காலநேமி என்பவன் மகளாகிய கற்பிற் சிறந்த பிருந்தை என்பவளை மணந்து அரசாட்சி செய்து கொண்டிருக்கையில் தேவர்களையெல்லாம் வெற்றி கொண்டு கைலாயஞ்சென்று சிவனை எதிர்த்துச் சண்டை செய்தான். சிவன் கிழவடிவம் கொண்டு நிலத்தை வட்டமாகக் கீறி இதை நீ தூக்க முடியுமா? என்று கேட்டராம். சுலந்தரன் இதுதானா பிரமாதம் என்று சொல்லி அதைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள அது வெடித்து அவனைக் கொன்று விட்டதாம். அவனுடைய சேனைகளும், சிவனுடைய நெற்றிக் கண்ணால் எரிந்து போய் விட்டனவாம். சுலந்தராசுரன் சிவனோடு சண்டை செய்து கொண்டிருந்த நாளில் விஷ்ணு என்பவர் சலந்தரன் மனைவி பிருந்தையின் மேல் காமங்கொண்டு அவள் பதிவிரதை என்பதை மறந்து அவளைச் சேருவதற்காக ஒரு சூது செய்தார்.

அதாவது, சலந்திரனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பக்தர்களை அசுரச் சேனைகள் போல வடிவம் எடுத்துக் கொள்ளச் செய்து சலந்தராசுரன் சண்டையிலிருந்து திரும்பிவருவது போல பிருந்தையிடம் சென்றாராம். இச்சூது அறியாத பிருந்தை தன் கணவன் என்றே நினைத்துக் கொண்டாளாம். பிறகு விஷ்ணு தினந்தோறும் அவளைக் கூடி இன்பந்துய்த்தாராம்! அந்தோ! அயோக்கியப் பாதகர்கள்கூட இக்காரியஞ்செய்ய அஞ்சுவார்கள் என்றால் கடவுள் என்று கொண்டாடப்படும் மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே ஒரு கற்பரசியை வஞ்சகமாகக் கற்பழித்தாரென்றால் இதைவிடக் கொடுமை என்னத்தான் வேண்டும். இவரையும் கடவுள் என்று கும்பிடுகிறார்களே! இருக்கட்டும், கதையைத் தொடர்வோம்.

கடைசியில், பிருந்தை இவர் இன்னார் என்பதைத் தெரிந்து கொண்டாளாம். அவள் கற்பரசியாகையால் அகலிகை, அருந்ததி முதலியவர்களைப்போல் உயிர் வாழ்ந்திருக்கச் சகியாமல், நெருப்பை உண்டாக்கி அதில் விழுந்து இறந்துவிட்டாளாம். அச்சமயத்தில் அவள் விஷ்ணுவுக்கு ஒரு சாபம் கொடுக்கிறாள். அதாவது விஷ்ணுவின் மனைவி தன்னை (பிருந்தை)ப் போலவே மாற்றான் கையில் அகப்பட்டுக் கற்பழியட்டும் என்று சாபம் கொடுத்தாளாம். ஆனால், காமப்பித்துக் கொண்ட விஷ்ணு பிருந்ததை இறந்துவிட்ட பிறகும், அவள் மேல் மோகங்கொண்டு அவள் இறந்த சாம்பலில் துளசி புரண்டு புரண்டு அழுதாராம். எவ்வளவு மானக்கேடு பாருங்கள்! பிறகு அந்தச் சாம்பலில் துளசி உற்பத்தியாயிற்றாம். அவர் பிருந்தை மேலுள்ள காதலால் அத்துளசியை மார்பில் அணிந்து கொண்டாராம்.

இக்காலத்திலும் விஷ்ணு கோயில்களில் துளசிதான் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதையும், அங்கு செல்லும் பக்தர்களுக்குத் துளசி கொடுக்கப்படுவதையும் எல்லோரும் அறிவார்கள். பிருத்தையினிடத்தில் விஷ்ணு நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர் எத்தகைய அயோக்கியத்தன முள்ளவர்கள் என்பது நன்கு விளங்கும். வேலியே பயிரை மேய்வது போல பிருந்தையின் கற்பைக் காக்கவேண்டியது கடவுள் என்று சொல்லப்படும் இவரது கடமையாயிருக்க இவரா கற்புடைய பிருந்தையை ஏமாற்றி வஞ்சகமாகக் கழிபழித்தாரென்றால் இவர் அயோக்கியத்தனம் உள்ளவர் என்பது சொல்லாமலேயமையும் ஆனால், இத்தகைய கடவுளின் சீடர்கள் எனப்படுவோர் இதற்கு ஒரு நொண்டிச் சமாதானம் சொல்லுகிறார்கள். அதென்னவென்றால் பிருந்தை கற்பழிவாளானால் சலந்தராசுரன் செத்துப்போவானென்றும், அவள் கற்புடையவளாயிருக்கிற வரையில் சலந்தரனுக்குச் சாவு வரக்கூடாதென்று வரம்பெற்றிருந்தானென்றும் ஆகையால், அவன் சாகும்பொருட்டு விஷ்ணு பிருந்தையைக் கற்பழித்தாரென்றும் சொல்லுகிறார்கள்.

இவர்களின் சமாதானங்களும் அகச்சான்று புறச்சான்றுகளும் வெகு விநோதமாகவிருக்கின்றன. சலந்தரன் இறப்பான் வேண்டி பிருந்தயை விஷ்ணு கற்பழித்தார் என்பது பெரும் பொய். அவர் காமவிகாரங்கொண்டு வேண்டுமென்றே பிருந்தையைக் கற்பழித்தார். இதற்குச் சான்று என்னவென்றால் பிருந்தை நெருப்பில் விழுந்து எரிந்து சாம்பலாய்விட்ட பிறகுங்கூட விஷ்ணு அவளையே நினைத்து வருந்தி அச்சாம்பலில் புரண்டு புரண்டு அழுதார்! அம்மட்டோ? அந்தச் சாம்லில் துளசி முளைக்க அதையும் பிருந்தையின் மேலுள்ள அன்பினால் விஷ்ணு அணிந்து கொண்டார். இவர் கற்பழிக்க வேண்டுமென்று மாத்திரம் கருதியிருந்தால் இவ்விதம் செய்திருப்பாரா? நிற்க,

பிருந்தையின் சாபம் விஷ்ணுவை விடவில்லை. அச்சாபத்தின் பலனாகத்தான் விஷ்ணு இராமனாகவும், லட்சுமி சீதையாகவும் பிறந்து இராவணனால் சீதை தூக்கிக் கொண்டு போகப்பட்டாளெனறு சில புராணங்கள் சொல்லுகின்றன. இச்சமயத்தில் வாசகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். அதாவது சீதை இராவணனால் கட்டாயம் கற்பழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே. எப்படியென்றால் பிருந்தை நெருப்பில் விழும்போது விஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம் என்னவென்றால், உன் மனைவியும் என் கதியடையட்டும் என்பதே. அதாவது பிருந்தை விஷ்ணுவினால் கற்பழிக்கப்பட்டது போல உன் மனைவியும் உன்னைப் பிரிந்து கற்பழிக்கப்படட்டும் என்பதேயாகும்.

அவ்வாறேதான் இராமாவதாரத்தில் விஷ்ணு சீதையைப் பிரிந்து வருந்தினார் என்பதோடு மாத்திரமல்லாமல், வால்மீகி சீதை இராவணனால் கற்பழிக்கப்பட்ட விஷயத்தை நேர்முகமாகச் சொல்லாவிட்டாலும் ஊகித்தறியும்படியான வித்ததில் மறை முகமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விஷயம் இராமாயணம் ஆராய்ச்சி என்னும் நூலைப் படித்தால் தெளிவாக விளங்கும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து விஷ்ணு எனப்படும் கடவுள் செய்துள்ள எண்ணிரந்த அயோக்கியத்தனங்களில் நூற்றில் ஒரு பாகம் மட்டும் விளக்கப்பட்டது. அதாவது விஷ்ணு கற்புள்ள ஒரு மங்கையை வேண்டுமென்றே கற்பழித்து அதன் பலனாகச் சாபத்தையும் அடைந்து ஒரு பாவமும் அறியாத தனது மனைவி லட்சுமியும் பழியடைவதற்குக் காரணமாயிருந்தார் என்பதே.

சிவன் :

இனி, சிவன் என்னும் கடவுளைப்பற்றி ஆராய்வோம்.

இவரும் அயோக்கியத்தனத்தில் விஷ்ணுவுக்குக் குறைந்தவர் அல்லர். இவர் தமது பக்தர்களைச் சோதிக்க விரும்பினால் பண்டார வேஷம் போட்டுக் கொண்டு தன் பக்தனிடம் சென்று பக்தா உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்கும் அத்தகைய பெரியவர். எத்தகைய பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாயிருந்தாலும் சிவ சிவா என்று தன் பேரைச் சொல்லிவிட்டால் அவர்களுக்கு உடனே மோட்சம் அளிக்கும் கருணாநீதி. இப் பெரியாருடைய யோக்கியதைகளை முற்றிலும் எழுத இப்புத்தகம் இடம் கொள்ளலாது. ஆகையால், இவர் யோக்கியதையைத் தெரிவிக்கும் பொருட்டு ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு எழுதுவோம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது அமிர்தம் யாருக்கு உரியது என்பதைப்பற்றி விவாதம் நிகழ்ந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கடைந்ததனால் கிடைத்த அமிர்தத்தை இரு பகுதியாரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது நியாயமாக இருக்க விஷ்ணு அவ்விதம் பங்கிட்டுக் கொள்ளாமல் அயோக்கியத்தனமாக ஒரு காரியம் செய்தார். அது என்னவென்றால் மிக்க அழகு வாய்ந்த ஒரு கன்னிகை போல உருவெடுத்துக் கொண்டு அசுரரிடம் வந்து உங்களுக்கு அமிர்தம் வேண்டுமா? நான் வேண்டுமா? என்று கேட்டாராம். அசுரர்கள் இப்பெண்ணின் அழகைக் கண்டு ஆசைக்கொண்டு நீதான் வேண்டுமென்று சொல்ல அந்தப் பெண் அவர்களை அழைத்துக் கொண்டு ஓரிடஞ் சென்றாள். அவ்விடத்தில் அப்பெண்ணை யார் அடைவது என்னும் விஷயத்தில் அசுரர்களுக்குள் சண்டையுண்டாகி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்து விட்டார்கள்.

பிறகு விஷ்ணுவாகிய அப்பெண்ணை சிவன் (காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றமும் இல்லாத எம்பெருமான் பார்த்து கட்டிலடங்காக் காமங்கொண்டார். இச்சிவபெருமான் தமது ஞானக் கண்ணைத் திறந்து பார்த்து அப்பெண் விஷ்ணுவின் மாறுவேடம் என்பதை அறிந்தோ, அறியாமலோ அப்பெண்ணிடம் சென்று எல்லா ஜீவகோடிகளும் உய்யும் பொருட்டு அப்பெண்ணைக் கூடிச் சையோகஞ் செய்தாராம்! இது எவ்வளவு யோக்கியமான பெருந்தன்மையான புண்ணியமான செய்கை என்பதைப் பாருங்கள். சிவன் சையோகம் செய்தார்! யாரை பெண் உருவந்தாங்கிய விஷ்ணுவை! சிவனும், விஷ்ணுவும் சையோகஞ் செய்தால் பலனில்லாமற் போகுமா? அவர்களை புத் என்னும் நரகத்திலிருந்து காப்பாற்ற ஒரு புத்திரன் வேண்டாமா? ஆகவே, ஒரு புத்திரன் தோன்றினான். அவன் பெயர் அரிகரபுத்திரன் அரிக்கும், அரணுக்கும் பிறந்தவன் என்பது பொருள். இப்புத்திரனுக்கு அய்யனார் என்றும் ஒரு பெயர் உளதாம்! இப்புத்திரனைப்பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க,

வாசகர்களே! மும்மூர்த்திகளின் யோக்கியதைகள் முழுவதும் சொல்ல முடியவில்லை. ஆயிரம் நாவுபடைத்த ஆதிசேசடனாலும் சொல்ல முடியாதென்றால் சாட்சாத் எம்பெருமான்களாகிய மும்மூர்த்திகளின் யோக்கியதைகளை ஒரு நாவு படைத்துள்ள நானா சொல்லக்கூடும்? ஆயிரத்தில் ஒரு பங்கு மாத்திரந்தான் சொன்னேன். ஆனால் இம் மும்மூர்த்திகள் சம்பந்தப்படாத புராணங்கள் கிடையாது. ஆகையால், இவர்கள் தன்மைகளையெல்லாம் எழுதப்புகின் மிகமிக விரியுமாதலின் கடைசியாக வாசகர்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்.

மும்மூர்த்திகளின் யோக்கியதையை ஒரு சிறிதாவது தெரிந்து கொண்ட பிறகு புராணங்களும், இதிகாசங்களும் நமது நாட்டில் இருக்க வேண்டுமா? அவைகளினால் மோட்சம் கிடைக்குமா? அவைகளைப் படிப்பதினால் நல்ல புத்தி ஏற்படுமா? என்பதையும் இத்தகைய புராணங்களைக் கொளுத்த வேண்டாமா? அல்லது போற்றி துதிக்க வேண்டாமா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய அயோக்கியத்தனமான தேவர்கள் வேறு மதத்திலாவது உண்டா? என்பதையும் கவனியுங்கள்.

(பெரியார் எழுதிய ‘புராணம்’ நூலிலிருந்து)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It