சென்னை தண்டையார்பேட்டையில் 31.1.1966ஆம் நாள் தோழர் ப.ஜீவானந்தம் சிலை திறப்புவிழா! விழாவிற்கு மறுநாள், தோழர் பாலதண்டாயுதம் எழுதிய 'ஜீவா வாழ்க்கை வரலாறு' நூலை வெளியிட்டு தந்தை பெரியார் ஆற்றிய உரை :

பேரன்புமிக்க தலைவர் அவர்களே !  பெருமைமிக்க தாய்மார்களே! தோழர்களே!  உயர்திரு. பி.சி. ஜோஷி அவர்களே! வணக்கம்.periyar 431மறைந்த நண்பர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை இன்று வெளியிடும் பணியை எனக்கு அளித்துப் பெருமைப் படுத்தியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் (31.1.1966 ) நடைபெற்ற ஜீவா சிலைதிறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை நண்பர் பாலதண்டாயுதம் அவர்கள் அழைத்திருந்தார். நான் அதில் கலந்து கொள்வோர் பெயர்களைக் கேட்டதும், "என்னவோ அய்யா மன்னிக்கனும், எனக்கு வர விருப்பமில்லை " என்று கூறினேன்.

நண்பர் பாலதண்டாயுதம் விட்டபாடில்லை. "அப்படியானால் மறுநாள் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறோம். அதில் தாங்கள், நான் எழுதிய " ஜீவா வாழ்க்கை வரலாறு” நூலை வெளியிட வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார். நானும் ஒத்துக் கொண்டேன்.

நேற்றைக்குச் சேலத்தில் கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவே புறப்பட்டுக் காலையில்தான் சென்னை வந்தேன்.

நண்பர் ஜீவா வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியவர் நண்பர் பாலதண்டாயுதம் ஆவார். அதனை ஏதோ ஓரளவுக்குப் படித்துப் பார்த்தேன்; நல்ல வண்ணமே எழுதியுள்ளார்.

என்றாலும் ஜீவாவைப் பற்றிய வரலாறு எழுதவேண்டிய அளவுக்கு இல்லாமல் ஏதோ கால்பாகம் தான் இது என்று கூறுவேன்.

தோழர்களே! ஜீவாவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் காங்கிரசில் இருந்து வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துப் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வந்த காலத்தில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மப்பட்டு என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

அதற்குப் பக்கத்து ஊருக்கு அருகில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக ஜீவா இருந்தார். அவரும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவரும் கூட்டத்தில் நமது கொள்கையினை ஆதரித்துப் பேசினார்.

எனக்கு அவரது பேச்சு மிகவும் பிடித்திருந்தது. பிறகு நான் அவரை "என்ன பண்ணிகொண்டு இருக்கின்றீர்கள் " என்று கேட்டேன். "பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்" என்றார்.

நான் கூறினேன். "பெரியவர்களுக்கே சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறு பையன்களுக்கு அவசரம் இல்லை. எனவே வேலையை விட்டுவிட்டு வாருங்கள் " என்றேன். அவரும் அப்படியே வேலையைத் துறந்து சுயமரியாதைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. அவர் நல்ல பேச்சாளி. பேச்சாளிகளில் பலவிதம் உண்டு . தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளப் பேசுபவர்கள் ; தாம் எவ்வளவு படித்துள்ளோம் என்பதைக் காட்டிக் கொள்ள பேசுகின்றவர்கள் ; பிறரைச் சிரிக்க வைக்க வேண்டும் , கைதட்டல் வாங்க வேண்டும் என்று பேசுகின்றவர்கள். இப்படிப் பலவிதம் உண்டு.

பேசுகின்றவர்கள் எப்படி விஷயத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி விளங்க வைப்பது என்பதை எண்ணிப் பார்த்துப் பேசுவார்கள்.

தோழர்களே! கேட்கிறவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால் நல்ல பேச்சாளிகள் தோன்றுவார்கள். ஜீவாவிடம் எந்த விஷயத்தை எடுத்துக் கொடுத்தாலும் தக்க ஆதாரத்தோடும் புள்ளிவிவரங்களோடும் பேசுவார். மக்கள் மனத்தில்படும்படிப் பேசுவார் எவ்வளவு பிடிவாதக்காரர்களையும் மனம் மாற்றிவிடுவார்.

எங்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கை : 'கடவுள், மதம், சாஸ்திரம் இல்லை; ஜாதி இல்லை; ஏழை பணக்காரன் இல்லை; இவை ஒழிய வேண்டும் ' என்பது ! இவற்றை விளக்கிப் பிரச்சாரம் செய்வதில் ஜீவா தலைசிறந்து விளக்கினார்.

நான் ரஷ்யாவுக்குப் போய்வந்த காலத்தில் (1931-32) எங்கள் பத்திரிகை பேரிலும், எனது பேரிலும், எனது மனைவி நாகம்மா, தங்கை கண்ணம்மா, எனது அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, தோழர் ஜீவா முதலியோர் பேரிலும் அரசாங்கம் பழிவாங்கும் முறையில் நடவடிக்கை எடுத்தது.

ஆட்சியின் அடக்குமுறை காரணமாக நானும் சிறைக்குச் சென்றேன். பத்திரிகையில் ஏதோ ஒரு கட்டுரையை எழுதிய காரணத்திற்காக ஜீவா அவர்களையும் அரசாங்கம் கைது செய்தது. கைது செய்ததன் கருத்து 'பொதுஉடைமை இயக்கத்தை அழித்து விடவேண்டும் ' என்பதேயாகும்.

இந்த நிலையில் திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அரசாங்கத்திற்கும் எனக்கும் ராஜி செய்ய முன்வந்தார்.

'கம்யூனிஸ்ட் பிரசாரம் பண்ணவில்லை என்று எழுதிக் கொடுக்கும்படியும் , அப்படிச் செய்தால் விட்டு விடுவதாகச் அரசாங்கத்தார் சொல்கின்றார்கள் ' என்று சொன்னார்.

அதற்கு நான் "அப்படி எல்லாம் தரமாட்டேன். எனது கொள்கை இதுதான். அதாவது எனக்குப் பலாத்காரத்தில் (வன்முறையில்) நம்பிக்கை இல்லை. பலாத்காரமில்லாமல் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் மக்களிடம் பேதமில்லாமல் செய்வதுதான் என்கொள்கை. இதற்காக அரசாங்கத்துடன் கூடியவரை ஒத்துழைத்து அரசாங்கத்திற்கு விரோதமில்லாமல் தொண்டாற்றுவதுதான் எனது கொள்கை " என்று கூறி ஒரு ஸ்டேட்மெண்ட் விடுவது என்று ராஜி பேசிக் கொண்டேன்.

ஏன் அப்படி என்றால் அப்போது ஜஸ்டிஸ்கட்சி ஆட்சியில் இருந்தது. நான் அந்தக் கட்சிக்கு ஆதரவாய் இருந்தவன். ஆதலால் அந்தப்படி எழுதிக் கொடுத்தேன்.

அப்போது ஜீவா சிறையில் இருந்தார். அந்த அறிக்கையில் அவரிடமும் கையெழுத்து வாங்கினேன். உடனே அவரும் என் அண்ணனும் விடுதலை ஆனார்கள்.

ஜீவாவுக்கு நான் அந்த அறிக்கையை வெளியிட்டது பிடிக்கவில்லை. அதனால் , 'கருத்து வேற்றுமை ' என்று கூறியபடிக் கொஞ்சநாள் பொறுத்து விலகிக் கொண்டார். முக்கிய காரணம் , நான் ஜஸ்டிஸ் கட்சியினரை ஆதரித்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அதன் காரணமாக விலகி விட்டார்.

அப்படி விலகி விட்டாலும், சாகிறவரையிலும் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தோம்.

முதல் பொதுத்தேர்தலில் (1952 ) நான் கம்யூனிஸ்ட்களைப் பலமாக ஆதரித்தேன். அவர்கள் வெற்றிக்காகப் பாடுபட்டேன். நல்ல அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

காங்கிரசை விட எதிர்க்கட்சிக்காரர்களே அதிகமான பேர்கள் வந்தும் கூட , நமது ஜனநாயகத்தின் யோக்கியதை தோற்றுப்போன காங்கிரசுதான் பதவிக்கு வந்தது.

தோற்றுப்போன காங்கிரசின் பேரால் முதல்மந்திரியாக வந்தவர் ஆச்சாரியார். "எனது முதல் நம்பர் எதிரி இந்த கம்யூனிஸ்ட்டுகள் தான் , இரண்டாவது எதிரி இந்த ராமசாமி தான்" என்று என்னையும் சேர்த்துச் சொன்னார்.

ஜீவானந்தம் அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார். "இராஜாஜி இப்படி கூறுகின்றாரே " என்றார். அதற்கு நான்," நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நானே என்னைக் காப்பாற்றிக் கொள்ளுகின்றேன் " என்றேன்.

ஜீவா அவர்கள் கட்சிக்காக , அதன் கொள்கைக்காகக் கடைசி வரையில் உண்மையாகவே உழைத்தவர். அவருக்குக் கட்சியைப் பற்றிச் சில மனக்குறை உண்டு . என்றாலும் அதுபற்றி என்னிடம்மட்டும்தான் கூறுவார் ; மற்றவரிடம் கூறவே மாட்டார்.

நேற்று ( 31.1.1966 ) சிலைதிறப்பு விழாவின்போது இராஜாஜி ஏதேதோ பேசியதாகவும் காமராஜர் அவர்கள் மறுத்துக் கூறியதாகவும் பத்திரிகையிலும் பார்த்தேன், நண்பர்களும் கூறினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியினைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது ; எனக்குச் சொல்லவும் உரிமையுண்டு.

நமது நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு வருஷங்களாக இருக்கின்றது. அது எந்த உருப்படியான காரியத்தையும் செய்து வெற்றி பெறவில்லையே!

தோழர்களே! கம்யூனிஸ்ட் கட்சி நமது நாட்டில் வளரவேண்டிய அளவுக்கு வளரவில்லை. நாட்டில் எந்த எந்த சொத்தைக் கொள்கையினைக் கொண்ட கட்சிகள் எல்லாம் தலைதூக்கி ஆடுகின்றன. உன்னதக் கொள்கையுள்ள கட்சி வெற்றி காணாதது ஏன்?

மிகவும் உன்னதமான கொள்கையினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொதுஉடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன காரணம்?

கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர். கம்யூனிஸ்டுகளுக்குக் கடவுள் பற்றோ மதப்பற்றோ சாஸ்திரப் பற்றோ ஜாதிப் பற்றோ நாட்டுப் பற்றோ ஏன், மொழிப் பற்றோ கூட இருக்கக்கூடாது. இலட்சியப் பற்று, வளர்ச்சிப்பற்று மட்டும்தான் இருக்க வேண்டும்.

நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்ன இன்ன மாறுதல் பண்ணியது என்று சொல்ல முடியவில்லையே!

இராமாயணத்திலும், பாரதத்திலும் பழைய இலக்கியங்களிலும் நம்பிக்கை வைப்பவர்கள், எப்படிக் கம்யூனிட்டாக இருக்க முடியும்?

விபூதியும் நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசம் பேசுபவர்கள் எப்படி உண்மைக் கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?

கம்யூனிஸ்டுகளுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்டுக்கு நாட்டுப்பற்றுதான் எதற்கு? அவனுக்கு நாடே கிடையாதே, அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்ட்டுக்குக் கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்க வேண்டும்?

நமது நாட்டு பத்திரிகைக்காரர்கள் பெரிதும் அயோக்கியர்கள். ஆனபடியால் 100க்கு 5 பேர்கள் கூட அதில் யோக்கியர்களாக இல்லை.அவர்கள் கம்யூனிச எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்களே ஒழிய , கம்யூனிசத் தத்துவத்தினைப் பிரசாரம் செய்வதில்லையே .

நண்பர் பாலதண்டாயுதம் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார். எப்படி நேற்று இராஜாஜியைக் கூப்பிட்டுவிட்டு வம்பிலே மாட்டிக் கொண்டார்களோ , அதுபோல இவர் எழுதியுள்ள புத்தகத்தில் என்னையும் எதிர்த்துத் தாக்கி வம்பிலே மாட்டிக் கொண்டார்.

இந்த புத்தகத்தில் 50ஆம் பக்கத்தில் "பகுத்தறிவின் பெயரால் நமது பண்டைய தமிழ் இலக்கியங்களை வெறுக்கும் போக்கு ஒன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது” என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி இவர் குறிப்பிட்டுத் தாக்கியதானது என்னைத்தானே ஆகும்?

மேலும் கூறுகின்றார் "வாழ்வும் சமயமும் பிரிக்க ஒண்ணாத வகையில் பின்னிக் கிடக்கும் இந்த நாட்டில் சமயநூல்களை ஒதுக்கித் தள்ள முடியாது” என்று!

இவர் இப்படி என்னைத் தாக்கியது பற்றி எனக்குக் கவலை இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இப்படிப் புத்தி வரலாமா? இலக்கியமும் மதமும் இவர்களுக்கு என்ன அழுகின்றது? அவற்றைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கு இருக்கலாமா?

தோழர்களே! நான் சவால்விட்டே கேட்கின்றேன். நமக்கு என்ன அய்யா யோக்கியமான இலக்கியம் உள்ளது? இராமாயணமும், பாரதமும், சிலப்பதிகாரமும் வெங்காயமும் எந்த முறையில் மக்களுக்குத் தேவையான இலக்கியமாகும்? அதில் கம்யூனிசத்துக்கான படிப்பினை என்ன இருக்கிறது?கம்யூனிஸ்ட்டுகள் அவற்றைக் கையில் தொடலாமா?

"வாழ்வில் பின்னிக் கிடக்கும் சமய நூல்களை விலக்க முடியாது”என்கின்றார். விலக்கமுடியாது என்றால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் என்னத்திற்கு இருக்கின்றீர்கள்?

தமிழ்நாட்டில் இன்ன புலவன் பகுத்தறிவுவாதி, மனித சமுதாய வாழ்வுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் பண்ணினான் என்று கூற முடியுமா?

சும்மா வீதிக்குவீதி பாரதி விழா, பாரதியைப் பற்றிய பேச்சு என்றுகொண்டாடுகின்றார்களே. அந்தப் பாரதி என்ன அதிசயமான கருத்தைப் பாடினான்? பார்ப்பான் என்பதினால் அவனுக்குப் பெருமை அளிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கம்யூனிஸ்ட்களாகிய உங்களிடம் பெரிய திட்டம் உள்ளது. சமுதாயத்துறையில் உயர்வு தாழ்வு நீக்குவது, பொருளாதாரத் துறையில் ஏழைப் பணக்காரனை ஒழிப்பது என்பன.

உயர்சாதிக் காரன் "கடவுள்தான் என்னை உயர்சாதிக்காரனாகப் படைத்தார் " என்கின்றான். பணக்காரன் "எனக்குப் பணம் கடவுள் கொடுத்தார், நீ என்னடா கேட்பது " என்கின்றான்.

இந்த கடவுளைக் கம்யூனிஸ்ட் வெளுக்க வேண்டாமா? 'கடவுளாவது வெங்காயமாவது எல்லாம் பித்தலாட்டம்' என்று மக்களுக்கு உணர்த்திட வேண்டாமா?

தெலுங்கிலே ஒரு பழமொழி சொல்வார்கள். "நேசேவாடுக்கு கோந்திப்பில்ல எந்துக்கு” என்று.

நெசவு வீட்டில் குரங்குக்குட்டி எதற்கு ? இருந்தால் என்னவாகும்? நெசவாளி நூலை பிணைந்து கொண்டே போவதும் குரங்குக்குட்டி அறுக்கின்றதும்தானே நடக்கும்.

அதுபோல உங்கள் கொள்கைக்கும் இராஜாஜிக்கும் என்ன சம்பந்தம்? என்னத்திற்காக அவரை வம்பிலே அழைத்தீர்கள்? அப்படி வந்தவர் உங்கள் இலட்சியங்களைப் பற்றி , உங்களைப் பற்றி நாலு நல்லவார்த்தைதான் மனதார கூறுவாரா? இவற்றைப் பார்க்க வேண்டாமா?

நான் கம்யூனிஸ்ட் தலைவர்களை ரொம்பக் கேட்டுக் கொள்கின்றேன். கம்யூனிஸ்ட்டுக்களாகிய நீங்கள் பெரிய தியாகிகள் ! பல லாப நஷ்டங்கள் எல்லாம் பட்டுள்ளீர்கள். அவற்றிற்குப் பலன் வேண்டாமா?

தோழர்களே! செத்துப் போகும் நிலையில் இருந்த காங்கிரஸ் இன்று தலைஎடுத்து நிமிர்த்து நிற்கின்றதே! காமராஜர் வந்தார் , நிலைத்துப் போய்விட்டது.

உங்கள் இயக்கம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம் , சரியான பிரசாரம் இல்லாததேயாகும். நீங்கள் இனியேனும் நாத்திகப் பிரசாரம் பண்ணனும். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுக்கள் பாதிரிகளையெல்லாம் வெட்டவில்லையா? நாம் நமது நாட்டுப் பாதிரிகளான பார்ப்பனர்களை வெட்டாவிட்டாலும், அவர்கள் நம் மக்களை மக்களாக மதித்து நடக்குமாறு செய்திடவும் உணர்த்திடவும் வேண்டாமா ? அவர்களின் புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் மக்களுக்கு அம்பலப்படுத்தி யிருக்க வேண்டாமா?

இன்றைக்கு நாம் காங்கிரசை ஆதரித்தாக வேண்டும். எதற்காக என்றால், அது கொண்டுள்ள கொள்கையிலிருந்து தப்பாகப் போகாமலிருப்பதற்கு ஆகும். இன்றைக்கு காங்கிரசில் உள்ளவர்களில் கால்வாசிப்பேர்களுக்குத்தான் சமதர்ம உணர்ச்சி இருக்கின்றது. முக்கால்பாகம் பேருக்கு அது வெறுப்பாகவே இருக்கும். இந்த முக்கால்பாகப் பேர்களையும் வெளியேற்றிக் காங்கிரசைச் சுத்தப்படுத்த நாமும் ஒத்துழைத்தால்தான் முடியும். கம்யூனிசம் சமதர்ம அஸ்திவாரத்தில் தானே எழுப்பப்படவேண்டும்?

நீங்கள் ஒரு தடவைதான் சட்டசபையை விட்டுவிடுங்களேன். கட்சிப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குங்களேன். சட்டசபைக்கு நின்று இரண்டொருவர் போய் என்னதான் சாதித்து விடமுடியும்?

எனக்கு என்னமோ சட்டசபைக்குப் போகின்றது பிடிக்கவில்லை. கொள்கையினை எடுத்துச் சொல்லவாவது போகவேண்டும் என்பீர்கள். எந்தக் கொள்கையினை எந்த மந்திரி முன்பு எடுத்துச் சொல்லி வெற்றி பெற்றீர்கள்?

நான் சட்டசபைக்குப் போகவில்லை. எனக்கு நாட்டில் மரியாதை இல்லையா ? செல்வாக்கு இல்லையா? எங்கள் கட்சி சட்டசபைக்குப் போகாததினால் அழிந்துபோய் விட்டதா?

நான் இராமாயணத்தைக் கொளுத்தியவன், கீதையை கொளுத்தியவன், இராமன் படத்தை எரித்தவன், பிள்ளையார் சிலையை வீதிக்கு வீதி போட்டு உடைத்தவன்தானே அய்யா?

எனக்கு நாட்டில் என்ன மரியாதை கெட்டுவிட்டது. நீங்கள் என்னை எவ்வளவோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

மக்கள் மனத்தில் மூடநம்பிக்கைகளும் முட்டாள் தனமான பற்றுக்களும் குடிகொண்டிருப்பதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். மக்களை எல்லாம் இந்த உன்னதக் கொள்கைக்குப் பக்குவம் உடையவர்களாக ஆக்க வேண்டும். நீங்கள் உங்களைத் தொண்டர்களாகக் கருத வேண்டும் ."

தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட "ஜீவாவின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தின் முதலாவது படியைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர் திரு.பி.சி. ஜோஷி அவர்கள் பணம் செலுத்தித் தந்தை பெரியாரிடம் பெற்றுக் கொண்டார். அடுத்து விழாத்தலைவர் திரு.காட்டே அவர்களும் அடுத்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசி மணலி திரு. கந்தசாமி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

 தந்தைப் பெரியார் அவர்களும் பத்துப் புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள்.

 "இது முதலாகவாவது இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தலைசிறந்த பிரபலக் கட்சியாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்." எனப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

 (விடுதலை 2.2.1966)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.