இந்து இந்தியாவானது 33 கோடி தேவர்களைக் (33 கோடி இந்துக்களைக்) கொண்டிருந்த காலத்திலும் இந்தியாவைக் காப்பாற்றிக் கொள்ள அதற்குச் சக்தி இல்லாமல் போனதோடு இந்து கோவில்கள், அதிலுள்ள இந்துக் கடவுள்கள் எல்லாம் அன்னிய மதக்காரர்களால் இடிக்கவும் உடைக்கவும் கொள்ளை இடவும் பட்டன.

periyar 314அவ்வளவு மாத்திரம் தானா?

இந்து இந்தியா ஒழிந்த பிறகு இந்து முஸ்லீம் இந்தியாவாகி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியா தாய்நாடாக ஆகி இந்துக்கள் கோவில்களும் முஸ்லீம்கள் கோவில்களும் பதினாயிரக்கணக்காக ஏற்பட்ட பிறகும் இந்தியாவைக் காப்பாற்ற இரண்டு மதத்திற்கும் சக்தியில்லாமல் போய், ஒரு சிறிய கிறிஸ்து மத சமூகத்தார் கைக்குப் போய்விட்டது. இரு மத மக்களும் ஒரு சிறு மக்களைக் கொண்ட தேச மத கூட்டத்துக்கு "அடிமைகளாய்" இருக்கிறார்கள்.

இது மாத்திரம் தானா?

மதத்தலைவர் போன்ற கிலாபத்துத் தலைவர் ஆட்சியில் இருந்த துருக்கி தேசமானது உயிருக்கு ஊஞ்சலாடி மதத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை; மதம் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது என்ற பகுத்தறிவு வாதியின் ஆதிக்கத்தாலேயே காப்பாற்றப்பட்டது.

தோட்டத்தில் பகுதி கிணறு என்கின்றபடி, ஊரில் பகுதி கிறிஸ்தவர் கோவில்களாய் இருந்து ஜனங்களில் பகுதி பாதிரிகளாய் இருந்த ரஷியதேசம் இன்று நாஸ்திகர்கள் இடம் சிக்கிக் கொண்ட பிறகுதான் வெகு சுகப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆகவே மதங்களின் வலிமைகளைப் பற்றி பரீக்ஷிப்பதற்கு வேறு ஏதோ பரீக்ஷை இருக்கின்றதுபோல் காணப்படுகிறது. அது எதுவாய் இருக்கலாமென்றால்,

எந்த மதக்காரரும் இந்த உலகத்தில் இந்தச் சரீரத்தோடு ஒரு பலனும் அடைய முடியாமல் இந்த உலகத்தையும் இந்தச் சடலத்தையும் விட்ட பிறகு மற்றொரு உலகத்துக்குப் போய் சுதந்திரத்தோடு மோட்சத்தில் இருக்கலாம் என்பதாகும்.

ஆனால் அறிவில்லாத மக்கள் மதங்களைப் பற்றி இந்த உலகத்தில் பயனை எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் அதைவிட மூட மக்கள் இந்த உலகத்திலேயே மதத்துக்குப் பயன் உண்டு என்று சமாதானம் சொல்ல வருகிறார்களே அதுதான் அதிசயமாய் இருக்கிறது.

(பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை அக்டோபர் 1935)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.