சென்ற மாதம் கடைசி வாரத்தில் தமிழ் நாட்டில் இரண்டு மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாடு. மற்றொன்று கோவையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு. முன்னையதற்கு பொப்பிலி ராஜா தலைவர். பின்னையதற்கு தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் தலைவர். இருவர்களுடைய பேச்சுச் சுருக்கமும் வேறு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்டிஸ் மகாநாட்டில் ஒரு பெரிய மாறுதல். அதாவது அது தன் அஸ்திவாரத்திலிருந்தே ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்திக்கொண்டது. இனி அதைப் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்றோ, வகுப்புவாதிகள் மகாநாடு என்றோ, பார்ப்பனத் துவேஷிகள் மகாநாடு என்றோ ஒருவராலும் சொல்ல முடியாதபடி செய்து கொண்டதுடன் எவ்வித வகுப்பு நிபந்தனையும் இல்லாமல் எல்லா வகுப்புகளுக்கும் சம சுதந்திரமும், சம சந்தர்ப்பமும், சம நீதியும் வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இருக்கிறது.

இதற்குக் காரணம் "வகுப்பு வாதம்" என்று பார்ப்பனர்கள் போட்ட கூச்சலாயிருந்தாலும் இருக்கலாம். அல்லது பிரிட்டன் அதிகார வர்க்கத்துக்கோ, அல்லது அரசாங்க வர்க்கத்துக்கோ ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று இருந்த நிபந்தனையின் காரணம் இன்னது என்று விளங்காமல் இருந்தானும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஜஸ்டிஸ் கட்சி இப்பொழுது ஒரு அரசியல் கட்சி என்கின்ற "பெருமையை" அடைந்துவிட்டது.

periyar 359இந்த மாறுதலுக்கு அஸ்திவாரமாயிருந்தவர் தோழர் சர். ஷண்முகம் என்பது நமது அபிப்பிராயம். மற்ற ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஷண்முகம் ஆட்டத்துக்குத் தாளம் போட்டவர்களேயாவார்கள் என்பதும் நமது அபிப்பிராயம்.

சமூக வாழ்விலுள்ள உயர்வு தாழ்வை ஒழிக்கவும், தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமும், சமசந்தர்ப்பமும் அளிக்கவும் ஜஸ்டிஸ் கட்சியை ஒரு உப கருவியாக உபயோகித்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தின் மீது தான் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கக்ஷியை அனுசரித்து அதில் சிறிது கலந்து வந்ததே ஒழிய அதுவே சர்வ வியாதிக்கும் சஞ்சீவி என்று கருதியல்ல.

இதன் பயனாய் சில நன்மைகள் ஏற்பட்டன என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கக்ஷியானது நாதனற்று சிலருடைய வாழ்வுக்கும், பெருமைக்கும், பணம், பதவி சம்பாதிப்பதற்கும் மாத்திரம் பயன்படத் தக்கது என்று உலகோர் இகழும்படியாகக் கூட 4,5 வருஷகாலம் கஷ்டப்பட்டுவிட்டது என்பதானது, நாம் மறைத்ததாலேயே மறைந்து விடும் என்று நம்ப முடியாது.

இப்போது அக்கக்ஷி ஒரு முக்கிய கொள்கையையே தியாகம் செய்து விட்டது என்பதோடு மாத்திரமல்லாமல் ஒரு தகுதியான தலைவரையும் பெற்றுவிட்டது. ஆதலால் வரப்போகும் அரசியல் சரித்திரத்தில் (சமூக சரித்திரத்தில் அல்ல) ஒரு நல்ல ஸ்தானத்தைப் பெற்று சென்னை மாகாணத்தை இந்திய மாகாண வரிசையில் முதல் ஸ்தானத்தில் இருத்தி வைக்கும் என்பது நமது நம்பிக்கை.

அதன் இன்றைய தலைவர் செல்வந்தரேயானாலும், சிறு வயதினரேயானாலும், அக்கக்ஷியில் இருந்து வரும் வேலைத் திட்டத்துக்கு மிகப் பொருத்தமானவரும், மிக மிக அவசியமானவரும் இன்றியமையாதவரும் ஆவார் என்று சொல்லலாம்.

அவர் 1932ல் ஜஸ்டிஸ் கக்ஷிக்குத் தலைவராவதற்குப் பலாத்கார உதவியும் தேவை இருந்தது என்று நாம் கேள்விப்பட்டோம். ஆனால் இப்போது ஜஸ்டிஸ் கக்ஷித் தலைமை ஸ்தானம் என்கின்ற கிரீடம் வேறு எவர் தலைக்கும் பிடித்தமும் பொருத்தமும் இல்லாததாகி, அதுவாகவே அவரைப் போய் அடைந்து விட்டது.

இதற்குக் காரணம் இந்த இரண்டு வருஷ காலத்திய அவருடைய நிர்வாகமானது அவருடைய சொந்த எதிரிகளும், ஜஸ்டிஸ் கக்ஷியின் பிறவி எதிரிகளும் கூட குறைகூற முடியாதவாறு நடந்திருக்கிறதே.

அவரது இந்த இரண்டு வருஷத்திய சம்பளம் சுமார் லக்ஷ ரூபாயையும் கக்ஷி நன்மைக்கே பயன்படுத்தியுள்ளார். அது மாத்திரம் அல்லாமல் தன் சொந்தப் பணத்தையும், லக்ஷக் கணக்கில் கட்சிக்காகவென்று செலவு செய்திருக்கிறார்.

இதிலிருந்து பணத்தாசையால் இவர் இந்தப் பதவிக்கு வந்ததாக யாரும் சொல்ல முடியாது. அன்றியும் பதவி ஆசை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களது பாட்டனார் காலத்திலேயே அதாவது மந்திரிப் பதவிக்குக் குண்டு போடும்படியான அவ்வளவு மதிப்பும், பெருமையும் இருந்த காலத்திலேயே வேண்டாம் என்று உறுதிப்படத் தள்ளிவிடப்பட்டிருக்கிறது.

தேசிங்கு ராஜன், நெப்போலியன் ஆகியவர்கள் சரித்திரம், கதைப் பிரசங்கங்கள் ஆகியவை போல் இன்று ஆந்திர தேசத்தில் கூத்து, பாட்டு முதலியவை மூலம் பொப்பிலி ராஜ்யத்தைப் பற்றி நடக்கின்றன. ஆதலால் சரித்திர கால முதல், இன்றைய பண உலகம் வரை அவரது மேன்மைக் குணம் காரணமாகவே தலைமை பதவி அவரைப் போய் அடைந்திருக்கிறது.

செல்வம், செல்வாக்கு, பதவி, பெருமை ஆகியவைகள் உள்ள ஒருவன் செல்வத்தை, செல்வாக்கை, பெருமையைத் தியாகம் செய்வதுதான் உண்மையான தியாகமே ஒழிய, ஒன்றும் இல்லாதவன் தான் எல்லாவற்றையும் பிறக்கும்போதே தியாகம் செய்து விட்டேன் என்று சொல்வதில் எவ்வளவு தியாகம் இருக்கக் கூடும்?

சரீரத்தில் பலமும், தக்க ஆயுதமும் உள்ளவன் சகிப்புத்தான் அஹிம்சா தர்மத்தை அனுசரித்ததாகலாமே ஒழிய பலவீனர், பயங்காளி, ஆயுதமற்றவர்களின் சகிப்பு அஹிம்சாதர்ம சகிப்பு ஆகாது. அதுபோல்தான் பொப்பிலி ராஜாவின் தியாகம், தாராளம் முதலியவைகள் தலைமைக்கு ஏற்றது என்கிறோம். இவ்வளவும் இருப்பதுடன் அவர் தலைமை தாங்கும் கட்சிக்கு ஒரு கொள்கை, அல்லது ஒரு வேலைத் திட்டம் இல்லாவிட்டால் ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைத்தது போல்தான் முடியும்.

அக்கட்சியில் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலும் கட்சிக்கொள்கைக்குச் சம்மந்தமில்லாமலும், வயிற்றுப் பிழைப்பையே பிரதானமாய்க் கொண்டவர்களும், வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் விற்கும் "தியாகி" களாகவுமே இருக்கிறார்கள். பலர் தங்களை ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லிக் கொண்டு தியாகராய மண்டபத்தைச் சுற்றிக் கொண்டு திரியாவிட்டால் உப்புக்குக் கூட வகையில்லாமல் திண்டாடக் கூடியவர்களாகவுமிருக்கிறார்கள். நாமினேஷன்கள் வேண்டும். எலெக்ஷன்களுக்குப் பணம் வேண்டும். பிள்ளைகளுக்கு உத்தியோகம் வேண்டும். பட்டங்கள் வேண்டும். பதவிகள் வேண்டும். ஆனால் கட்சிக்காக இந்த 17 வருஷ காலமாக ஜஸ்டிஸ் பத்திரிக்கைக்கு ஒரு சந்தா கூட கொடுத்தறியார்கள். இப்படிப்பட்டவர்கள் சென்னை மாத்திரமல்லாமல், மாகாணம் பூராவும் இருக்கிறார்கள் என்று சொல்லுவதால் சென்னை வாசிகளுக்கு ஒரு ஆருதல் ஏற்படலாம்.

இன்றைய தினமும் சொல்லுகிறோம். சுருக்கமாகச் சொன்னால் நாயர் பெருமானுக்குப் பிறகு, தியாகராயருக்குப் பிறகு தோழர் பொப்பிலி ராஜாவே தகுந்த தலைவர் என்று கூறலாம். அவர், அவருடைய சுற்று வட்டக் கூட்டத்தாரால் ஏமாற்றப்படாமல் அவர்களுக்கு அடிமையாகாமல் கட்சிக்குத் தக்கதொரு வேலைத் திட்டத்தை ஏற்படுத்தி சர்வாதிகாரியாக நடந்து நாட்டுக்கு ஏதாவது பயன் உண்டாகும்படியான காரியம் செய்து புகழ் பெற்றால் பெறட்டும். இல்லாவிட்டால் எத்தனையோ கோடான கோடி ஜீவராசிகள் பிறந்து வயிற்றை நிரப்பி வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மாண்டு மடிந்து மண்ணாகின்ற கூட்டத்தில் ஒருவராய் இருந்தால் இருக்கட்டும்.

முடிவாகச் சொல்வதென்னவென்றால், தோழர் ஈ.வெ. ராமசாமியால் ஜஸ்டிஸ் மகாநாட்டுக்கு அக்கட்சி வேலைத் திட்டமாக சில தீர்மானங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை மகாநாட்டில் வைப்பதற்கே சில "ஜஸ்டிஸ்வாதிகள்" ஆ÷க்ஷபித்தார்கள் என்றாலும், இத் தீர்மானங்கள் பொப்பிலி ராஜாவின் சம்மதத்தின் பேரிலேயே அனுப்பப்பட்டதால் மகாநாட்டு மேஜைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடைசியாக அத் தீர்மானங்கள் மகாநாட்டு யோசனைக்குக் கொண்டு வரப்படவில்லை. பல தோழர்களின் கிளர்ச்சியின் பயனாய் டிசம்பர் மாதத்தில் கூடும் நிர்வாகக் கமிட்டியில் பைசல் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதோடு பொப்பிலி ராஜா அவர்கள் அத் தீர்மானங்களைச் சில வார்த்தைத் திருத்தங்களோடு ஒப்புக் கொள்ளுவதில் தனக்கு ஆ÷க்ஷபனை இல்லை என்றும் சொல்லியிருக்கிற தைரியத்தால், டிசம்பர் கூட்டத்திற்கு இத் தீர்மானங்கள் கொண்டு வருவதைத் தோழர் ராமசாமியும் ஒப்புக் கொண்டார். அப்பொழுது என்ன செய்வார்கள் என்பது பற்றிப் பலருக்கு இப்போதே ஜோசியம் தெரிகிறது என்றாலும், டிசம்பர் வரை பொறுத்து இருப்பதால் ஒன்றும் முழுகிப் போய்விடாதென்றே கருதுகிறோம்.

கோவை மகாநாடு

கோவை மகாநாட்டிற்கு தோழர் சி.ஆர். ஆச்சாரியார் தலைமை வகித்தார்.

ஜஸ்டிஸ் கக்ஷியில் பலரைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்ததற்கு நேர் விரோதமாய் கோவை மகாநாட்டில் காங்கிரசில் இருந்து பலரைத் தள்ளி விடவும், சிலரை வந்து சேராமல் இருக்கத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ராட்டினம் சுற்றுவதும், நூல் சந்தா கொடுப்பதும், கதரையே கட்டுவதும் முதலாகிய காரியங்கள் அரசியல் சமூக இயல் ஆகியவற்றில் தீவிர எண்ணம் இருக்கின்றவர்களுக்கும், சொந்த புத்திக்கு மதிப்பு கொடுப்பவர்களுக்கும் காங்கிரசில் இடமில்லாமல் செய்து விட்டது. காங்கிரசின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கூடியவர்களுக்கே காங்கிரசில் வழி கதவு திறக்கப்பட்டு விட்டது. எப்படியிருந்தாலும் தலைவர் ஆச்சாரியார் அவர்கள் நல்ல தியாகம் செய்தவர். காங்கிரசினால் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர். மற்ற காங்கிரஸ்காரர்களைப் போல் அவரும் இன்று தனது வக்கீல் வேலைக்குச் செல்வாரானால் 4000, 5000 ரூபாய் மாத்திரமல்லாமல் தோழர்கள் அல்லாடி எத்திராஜ் முதலியவர்களைப் போல் 10 ஆயிரம் 20 ஆயிரம் சம்பாதிக்கக் கூடிய நிலைமை கூட ஏற்படலாம். ஆதலால் அவருடைய தியாகத்தில் யாருக்கும் விவகாரம் இல்லை என்றே கருதுகின்றோம்.

ஆனால் பார்ப்பனர்கள் மண்வெட்டி எடுப்பதை அவர் விரும்புவதில்லை. இந்த ஒரு எண்ணம் அவரது தியாகத்தைப் பயனற்றதாக்கிவிட்டது. அவரது பார்ப்பன அபிமானத்தைக் கூட நாம் ஆட்சேபிப்பதில்லை. அதற்காக, பழமையை ஆதரிப்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அபார மூளை சக்தி உண்டு. அதற்கு யாவரையும் மயங்கச் செய்து விடும் வல்லமையும் உண்டு. ஆனால் அதைப் பழமையில் இறக்கிவிட்டதுதான் நமக்கு பயனற்றதாகக் காணப்படுகின்றது. கேவலம் ஒரு இந்திய சட்டசபைத் தேர்தலில் அவர் இரங்கியதின் பயனாய் அவர் சறுக்கி விடப்பட்டு விட்டார். அவர் வெற்றி பெற்றாலும் கூட, மேலால் அடையப் போகும் பலன் என்ன என்பது வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்ததேயாகும்.

இது நிற்க, "சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசுக்கு வர ஆசைப்படுகிறார்கள். ஆனதால் அவர்களை வரவேற்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். ஆசைப்படுவதாகவே வைத்துக் கொண்டு, இதற்காக நன்றி செலுத்துகின்றோம். ஆனால் பேச்சளவில் வரவேற்பதாய்ச் சொல்லிவிட்டுக் காரிய அளவில் கதவைச் சாத்திவிட்டார். அதாவது ராட்டினம் சுற்றி நூல் நூற்று கதர் கட்டிக் கொண்டு வரட்டும் என்கிறார். மதக்காரர்கள் கூட இப்படித்தான் சொல்லுகின்றார்கள். எப்படி யிருந்தாலும் ஜஸ்டிஸ் கக்ஷியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பிறகு, காங்கிரசில் சேருவதை எந்தப் பார்ப்பனரல்லாதாருடைய கொள்கையும் ஆட்சேபிக்காது என்றே கருதுகிறோம்.

ஒரு மனிதன் ஜஸ்டிஸ் கட்சியிலும் காங்கிரசிலும் அங்கத்தினராய் இருப்பதை எந்தக் கொள்கையும் இப்போது தடுத்து விடுவதில்லை.

இப்போது வகுப்புத் தீர்ப்பும் ஊமையாய் இருக்கிறது. எலக்ஷன் காலத்தில் மாத்திரம் சிறிது கஷ்டம் ஏற்படலாம். என்றாலும், தோழர் மாளவியாவைப் போல் நடந்து கொள்ளுவதின் மூலம் அக்கஷ்டத்தையும் நீக்கிக் கொள்ளலாம்.

ஆதலால் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்கள் வரும்போது, பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் காங்கிரசில் பார்ப்பனரல்லாதார் போய்ச் சேருவது என்பதில் விசேஷ குற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. காந்தியார் காங்கிரசை விட்டு விலகுவது வெறும் மிரட்டலாய் இல்லாமல் உண்மையாய் இருக்குமானால், காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் குறைந்தாலும் குறையலாம்.

சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் தீவிர மாறுதல் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆதலால் பம்பாய் காங்கிரசுக்குப் பிறகு காங்கிரசைப் பற்றிய நமது அபிப்பிராயத்தைத் தெரிவிப்போம்.

(பகுத்தறிவு தலையங்கம் 07.10.1934)

Pin It