தோழர்களே!

நான் சிறைவாசம் சென்றுவிட்டு வந்ததைப் பாராட்டுவதற்காக என்று இக்கூட்டம் கூட்டப்பட்டு என்னைப் பற்றி பலர் பலவிதமாகப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். இது ஒருவித பழக்க வழக்கத்தை அனுசரித்திருப்பதாக மாத்திரம் நான் கருதுகிறேனே ஒழிய இதில் ஏதாவது நல்ல பொருள் இருப்பதாக நான் கருதவில்லை. முதலாவதாக இப்பொழுது நான் மற்றவர்களைப் போல் சிறை செல்ல வேண்டுமென்று கருதி நானாக சிறைக்குப் போகவில்லை. ஆனால் சிறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதற்காக பயந்து பின் வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதற்காகவே நான் சிறை செல்ல நேர்ந்தது.

அதாவது குடி அரசு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும், சப்பையானதுமான வியாசத்திற்காகத்தான் நான் சிறைக்குப் போக நேரிட்டதே தவிர, மற்றப்படி செல்லத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் "குடி அரசு"ப் பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் என்னை வருடக்கணக்காய் தண்டிக்கக்கூடியதும், நாடு கடத்தக்கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காக தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதை இப்போது நான் கவனித்துப் பார்த்தால் காங்கிரசிற்கு பாமர ஜனங்களிடத்தில் இருந்த செல்வாக்கின் பயனாய், நமது வியாசங்களை பொது ஜனங்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள் என்கின்ற தைரியத்தால் சர்க்கார் அப்பொழுது சும்மா இருந்தார்கள் என்று தோன்றுகிறது.

ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட சிறிய வியாசங்களையும் கண்டு, இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்கார் பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதென்பது நன்றாய்த் தெரிகிறது.periyar with cadresஇதிலிருந்து நாம் என்ன நினைக்க வேண்டி இருக்கிறதென்றால் நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும், சுயமரியாதை கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும், சர்க்கார் இப்போது உணர்வதாகத் தெரிகிறது. அன்றியும் மற்றும் பல புதிய புதிய தீவிரக் கொள்கைகளையும் ஜனங்கள் வரவேற்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இதுவரை நமது நாட்டில் இருந்து வந்த அபிப்ராயங்கள் எல்லாம் "வெள்ளைக்காரருக்கு இந்நாட்டில் என்ன வேலை, அவர்களுக்கு ஏன் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம், கருப்பு மனிதனுக்கு ஏன் நூற்றுக்கணக்கான பத்துக் கணக்கான ரூபாய்கள் சம்பளம்? அவர்களுக்கு ஏன் பெரிய அதிகாரம், நமக்கு ஏன் சின்ன அதிகாரம் என்பது போன்ற பிரச்சினைகளே தேசீயம் என்னும் பேரால் முக்கியமாய் இருந்து வந்தது. இதன் பயனாய் அரசாங்கத்தார்களும் இங்குள்ள பணக்காரர் படித்தவர் மேல் ஜாதிக்காரர் ஆகிய ஒரு சிறு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஏதாவது வாய்ப்பூசி மக்களின் "தேசீய அபிலாஷைகளை" திருப்தி செய்து வந்து கொண்டும் இருந்ததால் பாமர ஜனங்களின் எண்ணம், உணர்ச்சி, ஊக்கம் எல்லாம் அதிலேயே ஈடுபட்டுக் கிடந்தது. ஆனால் இப்பொழுதோ நாட்டில் வரவர அந்த எண்ணங்கள் மறையத் தொடங்கி விட்டன. அவை வேறு விதமாக பரிணமிக்க ஆரம்பித்து விட்டன.

எப்படிஎன்றால் "வெள்ளையனுக்கு ஏன் 1000, 5000 ரூபாய் சம்பளங்கள், கருப்பனுக்கு 100, 50, 10, 5 ரூபாய் வீதம் சம்பளம் என்பது போய், மனித சமூகத்தில் யாராயிருந்தாலும் ஒருவனுக்கு ஏன் 5000, 10000 ரூபாய் சம்பளம், மற்றவருக்கு ஏன் 5 ரூபாய் 10 ரூபாய் சம்பளம் என்கின்ற உணர்ச்சி தோன்றி எல்லா மக்களும் ஜாதி, மதம், தேசம் என்கின்ற பேதமும் பிரிவுமில்லாமல் சகலரும் சமமாய் பாடுபட வேண்டும், பயனை சமமாய் அடைய வேண்டும் என்கின்றதான ஒரு சமதர்ம உணர்ச்சியில் திரும்பி விட்டது. இந்த நிலைமையானது ஆட்சிக்காரருக்கு மாத்திரமோ, அல்லது அரசாங்க உத்தியோகஸ்தருக்கு மாத்திரமோ விரோதமானதென்றோ, அடக்கி விடவேண்டியதென்றோ தோன்றாமல் நம் நாட்டில் உள்ள எல்லா பணக்காரர்களுக்கும், எல்லா மேல்ஜாதிக்காரர்களுக்கும் (அதாவது பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், போகபோக்கியம் அனுபவிக்கவும் கருதும் மக்களுக்கும்) படித்தவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் தோன்றி விட்டதுடன் இவர்களால் வாழ்ந்து வந்த மதப்புரோகிதர்கள் என்பவர்களுக்கும் தோன்றி விட்டது. ஆதலால் இந்தக் கூட்டத்தார்கள் எல்லோருமே அக்கொள்கைக்கு எதிரிகளாய் இருப்பதில் நான் அதிசயப்படவில்லை என்பதோடு, இதற்காக நான் ஜெயிலுக்குப் போக நேரிட்டதிலும் அதிசயமில்லை.

நிற்க இப்பொழுதுள்ள நிலையில் ஜெயிலில் அதிக கஷ்டமில்லை. முன்பு சிறிது கஷ்டம் இருந்தது உண்மைதான். 1921ம் வருஷத்தில் நானும், இங்குள்ள தோழர்கள் ஈஸ்வரன், ஜெயா முதலியவர்கள் கைதியாக்கப்பட்டபோது, கையில் குட்டை போடுவதும், துன்பப்படுத்துவதுமான தொல்லைகள் மிகுந்திருந்தன. அந்தக் காலத்தில் பட்ட கஷ்டங்கள் இப்பொழுதொன்றுமில்லை. அப்பொழுது இங்குள்ள தோழர் ஜெயாவை ஜெயிலில் இருந்து வண்டியில் போட்டு வெளியில் அழைத்து வரப்பட்டது. உயிர் பிழைப்பாரோ என்றுகூட சந்தேகிக்கப்பட்டது. இப்பொழுது ஜெயிலில் கஷ்டமில்லை என்பதோடு, என் போன்றவர்கள் அங்கு வெகு மரியாதையாக சாமி, பாபுஜி என்று உள்ளிருப்பவர்களாலும் அழைக்கப்படுவதோடு கூட, ஜெயில் அதிகாரிகள் பயந்து நடக்கும்படியான நிலைமையிலேயும் இருக்கிறது.

என்னைப் பொருத்தவரையில், நான் பி. வகுப்பில் இருந்தாலும், எனக்கு வெண்ணையும் பாலும், பழமும், சில சமயங்களில் மாமிசமும் கிடைத்து வந்தது. அதுபோல் இங்கு எனக்கு வீட்டில் கூட திரேக நிலைமைக்கு ஏற்ற சாப்பாடு கிடைக்க மாட்டாது. வெய்யிலின் கொடுமைதான் தாங்க முடியவில்லை. ராஜமகேந்திர ஜெயில் எவ்வளவு கேவலமான நிர்வாகமுடையதாய் இருந்தாலும், கஷ்டமான ஜெயில் அல்ல. Habitual Prisoners என்னும் கருப்புக் குல்லாய்க்கார திருடர்கள் ஜெயிலாய் இருந்த போதிலும், கைதிகள் எவ்வித கேள்வி கேட்பாடு இல்லாமல், இஷ்டப்படி உள்ளே திரியலாம். கைதிகளுக்கு வேலையும் கிடையாது. அங்கும் கஞ்சா குடியும், பீடி, சிகரெட்டு குடிப்பதும், வெத்திலைபாக்கு புகையிலை போட்டு ஆனந்தப்படுவதும் சர்வ சாதாரணம். ஜெயிலுக்குள்ளேயே கைதிகள் கஞ்சா செடி வளர்க்கிறார்கள். அந்த செடியில் ஏதாவது சில பூக்களை சொருகி வைத்து பூச்செடி மாதிரி செய்து விடுகிறார்கள். அதை ஜெயில் சூப்ரண்டு கவனிப்பதில்லை. மற்ற சில்லரை அதிகாரிகள் வழக்கம்போல் அதனால் லாபமடைகின்றார்கள். நான் பல ஜெயிலில் பார்த்திருந்தாலும், ராஜமகேந்திரபுரம் ஜெயில்போல் பொருப்பற்றதும், அதிக குற்றங்கள் நடப்பதுமான ஜெயில் பார்த்ததில்லை. சூப்ரண்டு நல்லவர் என்று சொல்லலாம். ஆனால் நிர்வாகத் திறமை போராது. சிப்பந்திகளுக்கு பணமே பிரதானம். அவர்கள் அடிக்கடி கைதிகளால் அவமானப்படுவதை லக்ஷியம் செய்வதில்லை. அங்குள்ள டாக்டர்களும் அப்படியே. இவற்றைப் பற்றி மற்றொரு சமயம் பேசுகிறேன்.

எனக்கு கோவை சிறையிலிருக்கும்போது காலில் வீக்கம் இருந்தது. அந்த வீக்கம் ராஜமகேந்திர ஜெயிலுக்குப் போன பிறகு தானாக வடிந்து போய்விட்டது.

நிற்க சட்ட மறுப்பு இயக்கத்தைப்பற்றி சிலர் பேசினார்கள். அவ்வியக்கம் சர்க்கார் அடக்குமுறையினாலேயே நின்றுவிடவில்லை. அந்தக் கொள்கையானது மக்களால் அலக்ஷியப்படுத்தப்பட்டு வெறுத்துத் தள்ளப்பட்டு விட்டதால் அது நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. ஒன்றுக்கு முதவாத கொள்கையை கட்டிக் கொண்டு மாரடிப்பது பைத்தியக்காரத்தனமென்று பொது மக்கள் உணர்ந்து விட்டார்கள். சட்ட மறுப்பு கட்சியே பொஸ்ஸென்று போய்விடுமென்றும், அது மக்களுக்கு கஷ்டத்தையே விளைவிக்கும் என்றும் மக்களுக்கு 10 வருஷ காலமாக எச்சரிக்கை செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். அதன் பயனாய் தேச பக்தர்கள், தேசீய வாதிகள் என்பவர்களால் நான் பலமாய்த் தாக்கப்பட்டேன் என்றாலும், முடிவில் சட்ட மறுப்பு பயனற்றதாகவும் பைத்தியக்காரத்தனமாகவுமே முடிந்தது.

நான் ஜெயிலுக்குப் போய் கொஞ்ச வருஷங்களாகி விட்டது. இதற்குமுன் ராஜத்துவேஷ கேசில் அரஸ்ட் செய்யப்பட்டு இருந்தாலும், சர்க்காரே அவைகளை வாபீஸ் வாங்கிக் கொண்டார்கள். பிறகு சமீபத்தில் திருச்சியில் கத்தோலிக்க கிருஸ்தவ திருமணத்தின் போது போலீசாரால் அரஸ்ட் செய்யப்பட்டும் முடிவில் வழக்கே தொடராமல் போய் விட்டது.

மற்றபடி நான் இப்போது வெளியில் வந்ததில் இந்த இரண்டு நாளிலேயே, ஏன் வந்தோம் என்றே தோன்றுகிறது. இப்பொழுது என்ன செய்வதென்றே புரியவில்லை. மற்றும் சிவில் விவகாரத்துக்காக அரஸ்ட் செய்யப்பட்டேன். ஆனால் காயலா நிமித்தம் இரண்டு மாதத்திற்குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டேன் என்றாலும், இவைகள் எல்லாம் "தேசபக்தன்" என்ற பெயர் அடைய முடியவில்லை. ஆனால் இப்பொழுது சர்க்கார் அந்தக் குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள். இதன் பயனால் அறியாமை மிகுந்த பாமர ஜனங்களால் நான் பாராட்டப்படக் கூடும். மற்றபடி அறிவாளிகள் நான் ஜெயில் சென்றதைப் பாராட்ட யாதொரு விஷயமுமில்லை. இதில் எந்த வித்தியாசமும் அடங்கியிருக்கிறதாக சொல்வதற்கும் இடமில்லை. எப்படி இருந்த போதிலும் அரசியலைப் பற்றி நான் கொண்ட அபிப்பிராயம் இன்று இந்தியா முழுதும் பரவி விட்டது. அது மாத்திரமல்ல. உலகமெங்கும் சட்டமிருக்கிறது. நமது இந்தியாவை எடுத்துக் கொண்டால் நமது அபிப்பிராயங்களைக் கொண்ட கக்ஷிகள் மத்திய மாகாணத்திலும், ஐக்கிய மாகாணத்திலும், பம்பாயிலும், பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் இருந்து வருகிறது. நாம் "முன்னதாக தெரிவித்தது பிசகு" என்று மட்டும் சொல்லலாம். அந்த "தப்பு" நம்மீது இருந்தாலும் இப்பொழுதுள்ள வாலிப இந்தியா அங்கீகரிக்க முன் வந்ததைப் பார்த்து நாம் பூரிப்படையாமல் இருக்க முடியவில்லை. நமது மாகாணத்தைப் பொருத்தவரை காங்கிரஸ்காரர்களும் நாமும் எப்படியாவது ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டுமென்று யோசனை கூறப்பட்டது. காங்கிரஸ் அதற்குத் தன்னை தகுதி உடையதாக்கிக் கொண்டால் நான் தயாராயிருக்கிறேன்.

நிற்க, சுயராஜ்யக் கக்ஷியின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது பழைய குடி அரசைப் புரட்டிப் பார்த்தால் தெரிய வரும். சுயராஜ்யக் கக்ஷியின் யோக்கியதையை அறிய ஆசையுள்ளவர்கள் ஒரே ஒரு விஷயத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அதாவது அதன் தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியவர்கள் யார் என்று பார்த்தாலே போதும்! தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களே (!) அதன் முக்கிய தலைவராய் விளங்குகிறார். மற்றபடி நான் அதைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. (தொடரும்)

(குறிப்பு: 20.10.1933 குடி அரசில் "ஏன் இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும்" என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதற்காக 6 மாத சிறை தண்டனைக்குப் பின் 15.05.1934 இல் விடுதலை பெற்று வெளிவந்தபோது 17.05.1934 இல் ஈரோடு சுயமரியாதை வாலிபர் சங்கத்தாரால் நடத்தப் பெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பாராட்டுக்குப் பதில் அளித்து ஆற்றிய சொற்பொழிவு.

புரட்சி சொற்பொழிவு 20.05.1934)

Pin It