ஈரோடு கவர்ன்மெண்ட் பெண்கள் பாடசாலையின் பெற்றோர்கள் தினவிழாவானது ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் சரஸ்வதி ஹாலில் தோழர் இ,எஸ். கணபதி அய்யரவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது கொண்டாட்டத்திற்கு பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 1000 பேருக்கு மேலாகவே கூடி இருந்தார்கள், பெண்கள் அதிகமாகக் காணப்பட்டார்கள்.

விழாவானது கும்மி, கோலாட்டம் சிறு விளையாட்டு முதலியவை களுடன் நடந்த தென்றாலும் அவற்றுள் சாவித்திரி சத்தியவான் என்கின்ற ஒரு புராணக்கதையை நாடகரூபமாக நடத்திக் காட்டப்பட்டதானது மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. நாடக பாத்திரங்கள் எல்லாம் சுமார் 10 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட அப்பள்ளிக்கூட மாணவப் பெண்களாகவே இருந்தார்கள். நாடகமானது கூடியவரை மிகவும் அருமையாக நடித்துக் காட்டப் பட்டது. இம்மாதிரியாக ஒரு நாடகம் நடித்துக் காட்ட அம்மாணவிகளை தர்ப்பித்து செய்த பெண் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரும், மற்றும் உதவி உபாத்தியாயர்களும் பாராட்டப்படத் தக்கவர்களே ஆவார்கள். மாணவர்களுடைய அறிவும் சுபாவ ஞானமும் சிலாகிக்கத் தக்கவையாகும். ஆனால் ஒரு விஷயம் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதாவது இவர்கள் நடித்துக் காட்ட எடுத்துக் கொண்ட புராணக்கதையின் முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையையும் குருட்டு பக்தியையும் வெளிப்படுத்தாமலும் அறிவு வளர்ச்சிக்காக படிப்பிக்கப்படும் பெண்களை இவ்விதம் பகுத்தறிவற்ற பிராணி கள் பிராயத்துக்கு ஆளாக்கி வைப்பதைப் பார்த்து வருந்தாமல் இருக்க முடியவில்லை என்பதேயாகும்.

Periyar 370மேற்படி கதையில் ஆரம்ப முதல் கடைசி வரை எந்த இடத்திலாவது பகுத்தறிவுக்கு ஒத்த விஷயம் கடுகளவாவது காணப்படுகின்றதா என்பதை யோசித்தால் இது யாவருக்கும் எளிதில் விளங்கும். கதைச்சுருக்கமாவது:-

“சாவித்திரி என்கின்ற ஒரு பெண் நந்தவனத்தில் விளையாடும் போது சத்தியவான் என்கின்ற ஒரு பையன் வேட்டையாடி நந்தவனத்திற்கு வந்து சேர்ந்து பெண்ணைப் பார்த்து மையல் கொள்ளுவது, பெண்ணும் பையனைப் பார்த்து மையல் கொள்ளுவது, பிறகு இருவருக்கும் கல்யாண ஏற்பாடு நடைபெறுவது, அது சமயம் மணமகன் ஒரு வருஷத்தில் செத்துப் போவான் என்று தெரிவது, தெரிந்தும் பெண் அவனையே மணம் செய்து கொள்ள விரும்புவது, பிறகு மணம் நடந்த பின் ஒரு வருஷத்தில் மணமகன் செத்துப் போவது, பிறகு மணமகள் எமன் பின்னால் எமனை விடாமல் தொடர்ந்து திரிந்து எமனை ஏமாற்றி தன் புருஷனை பிழைக்க வைத்து மகிழுவது” என்பதாகும்.

இதற்கு ஆதாரம் அப்பெண்ணின் கற்பு என்று சொல்லி அதனால் பெண்கள் எல்லோரும் கற்பாயிருக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டு கதையை முடிப்பது.

இக்கதை ஆரம்பமுதல் அந்தம் வரை எந்த இடத்திலாவது பகுத்தறிவுக்கு ஒத்த விஷயம் இருக்கின்றதா? அல்லது இன்றைய அனுபவத்திற்கு ஒத்த விஷயங்கள் இருக்கின்றனவா? என்பதை இதில் யோசிக்கத் தக்கதாகும்.

இக்கதையில் ஜோசியம் பொய்த்துப் போய் விட்டது. எமன் ஏமாற்றப்பட்டு விட்டான். கற்பு வெற்றி பெற்றது என்கின்ற மூன்று விஷயங்கள் காணப்படுகிறேன். ஜோசியத்தை நாம் நம்புவதில்லை, ஆதலால் ஜோசியம் பொய்த்துப் போவதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.

எமனையும் நாம் அப்படி ஒன்று இருப்பதாக ஒப்புக் கொள்ளுவதில்லை. ஆதலால் அதைப் பற்றியும், அவனது புத்திசாலித்தனத்தைப் பற்றியும் நாம் கவலைப்படுவதில்லை,

கற்பு என்பதாக ஒன்று இருப்பதாகவும் நாம் கருதவில்லை. ஆதலால் அதைப் பற்றியும் நாம் கவலைப்படவில்லை.

ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி மாத்திரம் மக்களுக்கு ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளோம். சாவித்திரி கற்புள்ளவளாயிருந்ததால் தன் புருஷன் இறந்து போனவனை பிழைக்க வைத்தாள் என்று சொல்லி மற்றவர்களையும் கற்பாய் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற கதைப்படியே அக் கதையை உண்மை என்றே வைத்துக் கொண்டு பார்ப்போமேயானால் இன்று உலகில் அல்லது இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான விதவைகளில் ஒரு குழந்தை விதவையாவது ஒரு மங்கை விதவையாவது கற்புள்ள விதவையாயிருந்திருக்க மாட்டார்களா? அல்லது ஒரு விதவையாவது தன் புருஷன் இறந்ததைக் குறித்து விசனப்பட்டுத் தனது கற்பை ஈடுகாட்டி அப்புருஷன் பிழைக்க வேண்டுமென்று வருந்தியிருக்க மாட்டார்களா? அந்தப்படி கற்பாய் இருந்து வருந்தி இருந்தால் இறந்த கணவன்களில் ஒருவராவது பிழைத்து இருக்க மாட்டாரா? என்பவற்றை யோசித்தால் இன்று பெண்களில் சிறப்பாகவும், குறிப்பாகவும் விதவைகளில் ஒருவர் கூட கற்புள்ள பெண்மணிகள் இல்லையென்றுதானே அர்த்தமாகின்றது. அல்லது ஒருவரும் இம்மாதிரி முயற்சிக்கவில்லை என்றுதானே அர்த்தமாகிறது. இவை ஒருபுறமிருக்க 3, 4, 5, 7, 10 வயதுகளுக்குள்பட்ட குழந்தைகள் கூட விதவைகளாக ஆகி விடுகின்றனவே அவைகள் கூடவா கற்பில்லாத பெண்மணிகளாயிருக்கும் என்பதை யோசித்தால் அப்பொழுது பெண்கள் கற்பாயிருக்க முடியவே முடியாது என்பதாகத்தானே எண்ண வேண்டியிருக்கிறது. அல்லது இக்கதை பொய்யும், முட்டாள் தனமும் நிரம்பியது என்றுதானே சொல்ல வேண்டும். சாத்தியமேயில்லாத காரியத்தில் - பலனே யில்லாத காரியத்தில் மக்கள் புத்தியை இழுத்துவிடுவதால் லாபமென்ன? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியது அறிஞர் கடமையாகும்.

இக்கதையின் சாரமானது கதையிலுள்ள எமன் என்பவன் ஏமாந்து போய் வரம் கொடுத்து முட்டாள் பட்டம் கட்டிக் கொண்டதுபோல் பெண்கள் சமூகமும் ஏமாந்து போய் இம்மாதிரியான கதைகளை நடத்தி நிரபராதிகளான பெண் சமூகத்தை - விதவை சமூகத்தை ஏன் இம்மாதிரி குற்றங்களுக்கு ஆளாக்க வேண்டும் என்று ஒருவர் கேள்பதானால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

ஆகையால் இனியாவது அருமையான ஞானமுள்ள இளங் குழந்தைகளை மிக்க போதனா சக்தியும் ஊக்கமும் உண்மை உழைப்பில் கவலையும் கொண்ட நமது கவர்ன்மெண்ட் பெண்பாடசாலை உபாத்தியாயர்கள் பகுத்தறிவுக்கு ஒத்ததும் அனுபவத்திற்கு ஏற்றதுமான விஷயங்களில் பாடுபட்டு பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

பகுத்தறிவிலும் பெண்களது உண்மையான முன்னேற்றத்திலும் கவலை கொண்டவர்கள் இதை எடுத்துக் காட்டாமல் இருக்க முடியாது.

(குடி அரசு - கட்டுரை - 12.03.1933)

Pin It