கலகம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் முதலிய காரியங்களைப் பார்ப்பதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் சாதாரணமாக எல்லா மக்களுக்கும் ஒரு உற்சாகமும், ஆசையும் உண்டாவது இயல்பான விஷயமாகும். அமைதியாக - பொறுமையாக - தடபுடலான காரியம் ஒன்றுமில்லாமல்- இருப்பதால் மனத்திற்கு ஒருவித உற்சாகமும் இருப்பதில்லை; என்னமோ ஒருவிதமான மந்தமாகவே இருக்கும். ஆகவே, அமைதியாக இருக்கும் மக்களை- கிளர்ச்சியான- கலகமான-ஆர்ப்பாட்டமான காரியங்களைச் செய்யும்படி தூண்டி விடுவது மிகவும் சுலபமான விஷயமாகும். கொஞ்சம் பேசுந்திறமையுடைய- எழுதுந்திறமையுடைய எவராலும் இக்காரியம் செய்ய முடியும்.

periyar 343மக்களை அடக்கி வைத்திருக்கின்ற ஒரு ஸ்தாபனத்தின் மீதோ, அல்லது ஒரு தலைவன் மீதோ அல்லது ஒரு சமஸ்தானத்தின் மீதோ, அல்லது ஒரு ஜமீன் மீதோ அல்லது ஒரு அரசாங்கத்தின் மீதோ பொது ஜனங்கள் ஒப்புக் கொள்ளும்படியான விதத்தில் குற்றங்களையும், பழிகளையும் சுமத்திச் சாதுரியமாகப் பேசினால் போதும். உடனே ஒன்றுந் தெரியாத அவர்கள் துவேஷமும், வெறியும், உணர்ச்சியுங்கொண்டு கலகஞ் செய்வதற்குத் தயாராகி விடுவார்கள். இத்தகைய துவேஷத்தை உண்டாக்கும் தலைவர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் கேட்கப் பொதுஜனங்களும் பின்வாங்க மாட்டார்கள். இதுவே, நமது நாட்டில் மட்டுமல்ல, மற்ற எல்லா நாடுகளிலும் பொது ஜனங்களிடம் படிந்து கிடக்கும் இயற்கை சுபாவமாக இருந்து வருகிறது. உள்ள நெருப்பை விசிறி கொண்டு வீசிப் பற்றவைப்பது போல் இயற்கை சுபாவத்தைப் பேச்சு வலிமையால் தூண்டிவிடுவது கஷ்ட மான காரியமல்ல. ஆனால், ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதன்கீழ் அடங்கி, உருவான வேலைகளைச் செய்யும்படி மக்களைத் திருப்புவது கொஞ்சம் கடினமான காரியமேயாகும். முதலில் திட்டங்கள் வகுப்பதும், அத்திட்டங் களை எந்தெந்த வழிகளிற்போய் நிறைவேற்றுவது என்பதுமே சாதாரண மானவர்களால் செய்யமுடியாத காரியமாகும். அதிலும், அழிக்கின்ற தொழிலிலேயே ஈடுபட்டுவிட்ட மக்களால் இவ்வாறு ஒரு திட்டத்தின் கீழ் இருந்து வேலை செய்வது மிகவும் கடினமான காரியமேயாகும்.

ஒரு நாட்டில் நல்ல அரசியல் நடைபெற வேண்டுமானால் - நல்ல பொறுப்பாட்சி- அதாவது ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டுமானால் அந்நாட்டு மக்கள் மேலேகூறியவாறு கலகத்திலும்-கிளர்ச்சியிலும் ஆர்ப்பாட்டத்திலும் அதிகமாகப் பழக்கப்படாமல் ஒரு திட்டத்தின் கீழ் அடங்கி உருவான காரியங்களைச் செய்வதில் பழக்கப்படவேண்டும். இவ்வாறு பழக்கப்பட்ட பொது ஜனங்களே ஜனநாயக அரசாங்கத்தில் அங்கம் வகித்து அதை வெற்றியோடு நடத்தக் கூடிய சாமர்த்தியமும், அனுபவமும், ஆலோசனையும் உடையவர்களாயிருப்பார்கள். அவர்க ளால் நடத்தப்படும் அரசாங்கமே சிறந்த அரசாங்கமாகவும், மற்ற நாடுகளுக் குப் பின்வாங்காத அரசாங்கமாகவும், செல்வநிலையைப் பெருக்கக்கூடிய, தொழில்கள், விவசாயங்கள் முதலியவைகளைப் புதிய முறையில் விருத்தி செய்யக்கூடிய அரசாங்கமாகவும் இருக்கக்கூடும். நாட்டின் முன்னேற்றத் திற்குரிய புதிய சாஸ்திரங்களையும், சாஸ்திர ஆராய்ச்சி சாலைகளையும் ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமாக இருக்கக்கூடும். எல்லா மக்களும் சௌக்கியமாக வாழ்வதற்கு நாடு முழுவதும் சுகாதார வசதிகளையும், வைத்திய வசதிகளையும் ஏற்படுத்தக் கூடிய அரசாங்கமாக இருக்கக் கூடும். இப்படியில்லாமல் கலகத்திலும், கிளர்ச்சியிலும்-ஆர்ப்பாட்டத்திலுமே போய்க் கொண்டிருக்கிறதிலேயே பழகிக் கொண்டிருக்கிற மக்களிடம் திடீரென பொறுப்புள்ள ஆட்சி வந்து விட்டால், அவ்வாட்சி வெற்றியுடன் நடக்க முடியாது. கலகத்திலும்- கிளர்ச்சியிலும்- ஆர்ப்பாட்டத்திலுமே அந்த ஆட்சி நடைபெறக் கூடும். இப்படி நடைபெறக்கூடிய ஒரு அரசாட்சியில் ஜனங்களுக்கு எப்படி நன்மையுண்டாக முடியும்? அரசாங்கத்தாரால் கலகங்களை அடக்குவதைக் கவனிப்பதற்கு நேரமிருக்குமா? அல்லது நாட்டின் நன்மைகளுக்கான உருவான வேலைகளைச் செய்வதற்கு நேரமிருக்குமா? என்று யோசனை செய்து பாருங்கள்.

ஆனால் ஒரு நாடு சுதந்திரம் பெற முயற்சி செய்கின்ற காலத்தில் அந்நாட்டில் பெருங்கலகங்கள் நடப்பது சகஜந்தான் என்பதை எந்நாட்டிலும் நடைபெற்ற சரித்திர உண்மைகளைக் கொண்டு அறிகிறோம். ஆனால், நமது நாடோ நீண்டகாலமாக கலகத்திலேயே மூழ்கியிருந்தாலும், சுதந்திரம் பெறுவதற்குரிய வழி ஒரு சிறிதும் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம், ஜாதி, மதவேற்றுமைகளும், அவைகளால் ஏற்பட்ட துவேஷங்களுமேயாகும். எந்தச் சுதந்திரங்களுக்கும் இவைகளே தடைகளாக இருந்து வருகின்றன. சமீப காலத்தில் நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஏற்பட்டவுடன் இந்த ஜாதி, மதகிளர்ச்சிகளும், துவேஷங்களும் அதிகப்பட்டுக் கொண்டு வருகின்றதேயொழிய குறைந்தபாடில்லையென்பது நமக்குத் தெரியாத விஷயமல்ல. அரசியல் சுதந்தரம் சிறிது உண்டான பிறகும் அதிக அரசியல் சுதந்தரம் வேண்டுமென்ற கிளர்ச்சி ஏற்பட்ட பிறகுந்தான் இந்து முஸ்லீம் கலகம், பார்ப்பன பார்ப்பனரல்லாதார் சண்டை, தாழ்த்தப்பட்ட வர்கள் உயர்ந்தவர்கள் சச்சரவு, வெள்ளையர் வெள்ளையரல்லாதார் துவேஷம் இவைகள் அதிகப்பட்டன என்பதை யாரும் பொய்யென்று சொல்ல முடியாது. ஆகவே, பல ஜாதிகளும், பலமதங்களும் ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஜென்மப்பகை கொண்டு அடிக்கடி சண்டை செய்து கொண்டு வாழுகின்ற நாட்டில் சுதந்தரக் கிளர்ச்சி தோன்றுகின்ற போது இந்த ஜாதி மதவேற்றுமைகளும் துவேஷங்களும் முன்வந்து சுதந்தரக் கிளர்ச்சியை நசுக்கி விடுவது இயல்பேயாகும். இதற்கு வேறு உதாரணம் தேட வேண்டிய கஷ்டம் வேண்டாம். நமது நாடே தகுந்த உதாரணமாக இருக் கின்றது.

இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தற்போது நடைபெறும் அரசியல் கிளர்ச்சி உண்மையாக அரசியல் கிளர்ச்சியை உண்டாக்கும் பிரசாரமாக இல்லையென்பதுதான் நமது அபிப்பிராயம். உண்மையான அரசியல் சுதந்தர ஆசையுடையத் தலைவர்களும், தொண்டர்களும் இருந்தால் அவர்களுடைய எண்ணத்தில் நாம் ஒன்றும் குற்றம் கற்பிக்க முன்வரவில்லை. ஆனால், பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களுக்குள் ஜாதித் துவேஷமும், மதத் துவேஷமும் உண்டாகும் வகையில் “அஹிம்சா தர்மம்” என்ற பெயரால் பிரசாரஞ் செய்து கொண்டு வருகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு பிரசாரம் பண்ணுவதையே தேசாபிமான மாகவும் கருதுகின்றனர். இவ்வாறு பிரசாரஞ்செய்துவரும் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானிகளாலேதான் நமது நாட்டில் கலகங்கள் அதிகப் பட்டுக் கொண்டு வருகின்றன என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய தில்லை. “அஹிம்சா தர்மம்” என்று சொல்லிக் கொண்டு, அந்நிய நாட்டு மனிதர்கள் மேலும், அவர்கள் நிறத்தின்மேலும், அவர்கள் மதக் கொள்கை யின் மேலும் வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படி பிரசாரஞ் செய்து வரும் பொறுப்பற்ற வயிற்றுப்பிழைப்பு தேசாபிமானிகளின் செய்கையால் தான் நமது நாட்டில் புரட்சி இயக்கம் பலப்பட்டுக் கொண்டு வருகிறதென்று கூறுவோம். நீண்டகாலமாக வங்காளமாகாணத்தில் புரட்சி யியக்கம் இருந்து வருவது உண்மையானாலும், ஒத்துழையாமையும் “அஹிம்சா தர்மத் துவேஷப் பிரசாரமும்” ஏற்பட்ட பின்பு தான் இது அதிக மாக தலை விரித்தாடுகிறது என்பது உண்மையாகும்.

புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வாலிபர் கள். வாலிபர்கள் எந்தக்காரியத்தையும் முன் பின் யோசனையில்லாமல் உடனே செய்து முடித்து விடவேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள். அதற்காகத் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் தியாகஞ்செய்ய முன் வரும் குணமுடையவர்கள். இத்தகைய குணமுடையவர்கள் துவேஷத்தை மூட்டும் அரசியல் கிளர்ச்சியின் பலனாக அந்நியர்கள் மீது வெறி கொண்டு கொலைகளும், சதிகளும் தாராளமாகச் செய்ய முன்வந்து விட்டனர் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இச்செய்கைகளே தேசாபிமான முடையதென்றும், சுயராஜ்யம் அளிக்கக் கூடியதென்றும் அவர்கள் கருதக் கூடிய நிலைமையை நமது அரசியல் கிளர்ச்சி ஏற்படுத்திவிட்டதென்று கூடக்கூறலாம். இவர்களுடைய இக்கலகச் செயல்களை தேசாபிமானமாக வும் தியாகமாகவும் ஆரம்பத்தில் நமது நாட்டுத் தேசீயப் பத்திரிகைகள் என்பன பாராட்டவும் தொடங்கின. தேசீயவாதிகள் மேடைகளில் புகழவும் தொடங்கினர். இவர்களுடைய படங்களை வைத்துக் கொண்டாடவும், இவர்களுக்காக விழாக்கள் நடத்தவும் ஆரம்பித்தனர். ஆனால், அப்பொழுதே சில பொறுப்புள்ள தலைவர்கள் இச்செயல்களைக் கண்டித் தனர். நாணயமும், பொறுப்பும் உள்ள எவரும் இச்செயல்களை ஆதரித்து, மேலும் மேலும் வாலிபர்களுக்கு இத்தகைய விஷயங்களில் ஊக்கம் உண்டாக்க முன்வர மாட்டார்கள் என்பது நிச்சயமாகும்.

“தேசாபிமானம்” என்னும் பெயரால் வெறிகொண்டு நிரபராதிகளை யும், உத்தியோகஸ்தர்களையும் இரக்கமின்றிக் கொலை செய்யும் இந்தப் புரட்சி ஒழிய வேண்டுமானால் பொறுப்புள்ள தேசப் பிரமுகர்கள் அனை வரும் இதனைக் கண்டிக்க வேண்டும். இதனால் வரும்தீமையை வாலிபர்கள் உணரும்படி செய்ய வேண்டும். அப்படியில்லாமல் ஒரு பக்கத்தில், அந்நியர்கள் மீது துவேஷத்தைக் கிளப்பிவிடும் “அஹிம்சாதர்ம” பிரசாரமும் , ஒரு புறத்தில் புரட்சியைக்கண்டிப்பதான அறிக்கைகளும் செய்து கொண்டிருந்தால் எப்படி புரட்சி அடங்கும் என்று கேட்கின்றோம். இது, குழந்தையின் துடையையுங் கிள்ளிவிட்டு தொட்டியையும் ஆட்டிவிடுவது போலத்தானே ஆகும்.

சில “தேசீய”ப் பத்திரிகைகள் பொறுப்பின்றிக் கொலைக் குற்றங்க ளையும், கொலை செய்தவர்களையும், தேசாபிமானமாகவும், தேசாபிமானி களாகவும் போற்றி உற்சாகப்படுத்தும் முறையில் நடந்து கொண்ட காரணத்தால் தானே அச்சுச் சட்டம் ஏற்பட்டது? இவ்வாறு ‘தேசீய’ப் பத்திரிகைகள் என்பன பொறுப்பற்றதனமாக நடந்து கொண்டிராவிட்டால் அச்சுச் சட்டம் பிறந்திருக்க முடியாது என்பது உண்மை அல்லவா?

அடுத்தபடியாகத் துவேஷத்தைப் பெருக்கிவிடும் முறையில் “அஹிம்சை”ப் பிரசாரம் பண்ணியதன் பலனால் வங்காளத்தில் புரட்சி இயக்கமும் தலைவிரித்தாட தொடங்கவும், அதை அடக்க அரசாங்கத்தார் வங்காள அவசரச் சட்டத்தை ஏற்படுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு விட்டது அல்லவா?

இப்பொழுது ஐக்கிய மாகாணத்தில் வரிகொடாமை இயக்கம் ஆரம்பித்தவுடன் அரசாங்கத்தாரும் அவசரச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தி விட்டனர். இந்த அவசரச் சட்டங்களை அரசாங்கத்தார் வாபீஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெரும் கிளர்ச்சி செய்கின்றனர். புரட்சி இயக்கத் தையும், வரிகொடா இயக்கத்தையும் நிறுத்துவதற்கு ஒரு முயற்சியும் செய்யா மல், அவற்றை அடக்க ஏற்பட்ட சட்டங்களின் மேல் மாத்திரம் பழிபோட்டுக் கிளர்ச்சி செய்வதில் என்ன பலனிருக்கிறது? அவசரச் சட்டங்களுக்கு நிரபராதிகளும் ஆளாகிக் கஷ்டப்பட நேரும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். அவசரச் சட்டங்களால் இன்னும் அக்கிளர்ச்சி கள் கொஞ்சம் அதிகப்படும் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அவசரச் சட்டம் உண்டானதற்கான காரணங்களையும் ஒழிப்ப தற்கு முயற்சி செய்துக் கொண்டு அவசரசட்டங்களையும் வாபீஸ் வாங்கிக் கொள்ளுமாறு கிளர்ச்சி செய்வதே நியாயமும், ஒழுங்குமாகும்.

இவையல்லாமல், மீண்டும் நாட்டில் வரிகொடா இயக்கமும், பகிஷ்கார இயக்கமும் பலமாக ஆரம்பிக்க வேண்டுமென பிரசாரஞ்செய்யப் பட்டும் வருகிறது. திரு. காந்தியும் சத்தியாக்கிரக சண்டை ஆரம்பிப்பதாகச் சொல்லிக் கொண்டு வருகிறார். “காந்தி - இர்வீன் ஒப்பந்தம்” முடிந்தது முதல், “மறுபடியும் சத்தியாக்கிரக போர் ஆரம்பிப்பதற்கு தயாராய் இருங்கள்”, என்றே பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தனர்; வருகின்றனர். “தேசத்தின் அமைதியையும், சட்டத்தையும் , நிரபராதிகளையும் காப்பாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆகையால், அரசாங்கம் சட்டத்தையும் அமைதியையும் நிலைநிறுத்த பின்வாங் காது” என மேன்மை தாங்கிய வைசிராய் தாம் பேசும் இடங்களில் கர்ஜித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தேசத்தில் மறுபடியும், கலகம் ஏற்படுமாயின் பாமர ஜனங்களுக்குத் தான் அதிகமான கஷ்டமும், நஷ்டமும் உண்டாகும் என்பதில் ஆட்சேபனை உண்டா?

“சுயராஜ்யம்”, “காங்கிரஸ்”, “காந்தி”, “அஹிம்சை”, “தேசாபி மானம்” என்னும் பெயர்களால் காலிகளும், நாணயமற்றவர்களும், பிழைப்பற்றவர்களும் மறுபடியும் ஏமாற்றப் புறப்பட்டு விடுவார்கள். இப் பெயர்களைச் சொல்லி பாமர மக்களிடம் பொருள் பறிக்கத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களினால் மறுபடியும் புரட்சியும், அடிதடிகளும், துவேஷங்களும் அதிகப்படக் கூடும். ஆகவே, அரசாங்கத்தார் இவற்றை அடக்கச் சென்ற உப்புச்சத்தியாக்கிரகத்தின் போது அவசரச் சட்டங்கள் பிறப்பித்தது போல இன்னும் பல அவசர சட்டங் களைப் பிறப்பிக்கவும்கூடும்.

இவ்வாறு காங்கிரஸ்காரர்கள் செய்து கொண்டு வரும் பிரசாரங்கள் ஒருபுறமும், புரட்சிக்காரர்கள் நடத்திக்கொண்டு வரும் அக்கிரமங்கள் ஒரு புறமும், அரசாங்கத்தார் இவைகளை அடக்க வெளியிடும் அவசரச் சட்டங்களும், தடையுத்தரவுகளும் ஒரு புறமும் சேர்ந்து நாட்டுமக்களைச் சமாதானமின்றிக் கஷ்ட நிலையில் வாழும்படி செய்வதைத் தவிர வேறு ஒரு பலனையும் ஏழைமக்கள் காணப் போவதில்லை, அடையப்போவ தில்லையென்பது தான் நமது அபிப்பிராயம். இதனால், தற்போது உள்ளதைவிட இன்னும், நமது நாட்டின் வியாபார நிலையும், செல்வ நிலைமையும் கஷ்ட நிலைமைக்கு வந்து சேருமென்பது நிச்சயம். மற்றபடி இந்த மாதிரியான வீண் கலகங்களால் ஒரு கடுகளவும் பிரயோஜனம் உண்டாகப் போவதில்லை. நமது நாட்டுச் சாதி மத வேற்றுமைகளுக்கு அழிவு வராமல் இன்னும் கெட்டியாக ஆணியடித்துக்கொண்டு “சுயராஜ்யம்” வேண்டும் என்று கேட்பது கையாலாகத் தனம் என்று தான் கூறுவோம். சுயராஜ்யத்திற்காகச் செய்யப்படும் கிளர்ச்சியில் ஒருபாகத்தை சாதி, மதங்களை ஒழிப்பதில் செலவு செய்திருந்தால் இதுபோது நாம் எவ்வளவோ மேலான நிலையில் போய் இருந்திருக்கலாம். போதிய சுதந்தரமும் கூடப்பெற்றிருக்கலாம். ஆனால் தேசத்தைக் காட்டிலும், வருணாச்சிரம தருமத்தையும், மதத்தையும் உயிரினுஞ் சிறந்ததாக எண்ணிக்கொண்டிருக்கின்ற “தேசத்தலைவர்”களால், நமது நாடு சாதி, மத வேற்றுமை ஒழியப் போவது ஏது? இவைகள் ஒழியாதவரையில் பூரண சுதந்திரம் கிடைப்பது ஏங்கே ? ஒரு சமயம் கிடைத்தாலும் அதை வைத்து ஆளுந்திறமை தான் இருக்க முடியுமா? என்று தான் கேட்கிறோம்.

ஆகையால் இனியும் உண்மையான சமூக சகோதரத்துவ ஆசையும், உண்மையான தேச முன்னேற்ற ஆவலும் உள்ளவர்கள் அனைவரும் தேசத்தின் அமைதிக்காக உழைக்க முன் வரவேண்டும். புரட்சிச் செயல்களும், கலகங்களும் நடைபெற வொட்டாமல் எல்லா மக்களுக்குள்ளும் சகோதரத்துவமும், சுயமரியாதையும் தாண்டவமாடக்கூடிய பிரசாரஞ் செய்ய வேண்டும். குற்றமற்ற மனமுள்ள வாலிபர்கள் மனத்தில் வெறியை உண்டாக்காமல் அன்பையும், சமதர்ம எண்ணத்தையும் உண்டாக்க வேண்டும். இவ்விஷயங்களைப் பொறுப்புள்ள தலைவர்களும், தொண்டர்களும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 20.12.1931)

Pin It