மதம், ஜாதி, பாஷை, கலை, நாகரீகம், பழக்கவழக்கம் முதலிய எல்லாவற்றிலும், தங்களுடையதே பெரிதென்றும், ஆகையால் தங்களுக்கே முதன்மை ஸ்தானம் கொடுக்க வேண்டுமென்றும், நீண்ட காலமாகப் பார்ப்பனர்கள் போராடிக் கொண்டும் பெரும்பாலும், இப்போராட்டத்தில் வெற்றி பெற்றுக் கொண்டும் வருகின்றனர். தங்களுக்கு ஆதிக்கமில்லாத வழியிலும், லாபமில்லாத வழியிலும், மற்றவர்களுக்கு லாபமும், ஆதிக்கமும் சிறிதளவு உண்டு என்ற வழியிலும் செய்யப்படும் காரியங்கள் எவையா யிருந்தாலும் அவைகளைப் பற்றித் தப்புப்பிரசாரம் பண்ணத் தொடங்கி விடுகின்றனர். அவைகள் தேசத்துரோகமான செயல்களென்றும், அவைகளால் தங்கள் மதத்திற்கு ஆபத்து வந்து விட்டதென்றும், பாஷைக்கு ஆபத்து வந்து விட்டதென்றும், கலைகளுக்கு ஆபத்து வந்துவிட்டதென்றும், குலைக்கத் தொடங்கி விடுகின்றனர். இது எப்பொழுதும் நமது நாட்டில் பார்ப்பனர்களால் ஆடப்படும் நாடகமாகவே இருந்து வருகின்றது.

periyar and rajajiஇதற்கு உதாரணமாகச் சென்ற 1.12.31ல் சென்னை ஆயுர்வேத சபையின் ஆதரவில் திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். அக்கூட்டம் காலஞ் சென்ற பனக்கால் அரசரின் முயற்சியினால் சென்னையில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்திய வைத்திய கலாசாலையின் நடைமுறையையும், இந்திய வைத்திய வளர்ச்சியில் சென்னை அரசாங்கத்தார் அநுசரித்து வரும் கொள்கையையும் கண்டிக்கவே கூட்டப்பட்டதாக இருக்கிறது. இவ்வாறு கூட்டம் கூட்டிக் கண்டனம் செய்வதற்குக் காரணம் என்ன என்பதைக் கூறுவதற்கு முன் அக்கூட்டத்தில் பேசிய ‘பிராமணோத்தமர்’களின் பேச்சுகளைக் கொஞ்சம் கவனிப்போம்.

“இப்பள்ளிக்கூடம் ஏற்பட்டதன் பலனாக ஆயுர்வேத வைத்தியப் பழக்கம் உள்ளவர்களுக்குக் கெடுதியும் நேரிடுகிறது. இதனால் ஆயுர்வேத வித்தைக்கே ஆபத்து ஏற்படும் போல இருக்கிறது. இந்திய வைத்தியப் பள்ளிக்கூடத்தில் தேருபவருக்கே உத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும் என்று கவர்ன்மெண்ட் உத்தரவு பிறப்பித்திருப்பதனால் எங்கள் போன்றவர்க்கு ஒருவித யோக்கியதையும் இல்லை என்று கூறுவது போலாகிறது’. “இந்திய வைத்தியமுறை விஷயமாக எங்களுடைய யோசனையையும் அனுஷ்டித்து சுத்த சமஸ்கிருத ஞானம் வாய்ந்தவர்களையும் அப்பள்ளிக் கூடத்தில் போதகராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நாங்கள் இங்கு கூற வந்திருக்கும் முக்கிய யோசனை’’என்று ஒரு பார்ப்பனர் பேசியிருக்கிறார்.

“புராதன கால வைத்தியமுறை திருப்திகரமான பலன் அளிக்க வேண்டுமாயின் கவர்ன்மெண்ட்டின் இந்திய வைத்தியப் பள்ளிக்கூடம் தற்போது நடப்பதைப்போல் நடத்தப்படுவதைவிட மூடப்படுவதே நலம் என்ற எண்ணம் எங்கள் எல்லோருடைய மனதிலும் தோன்றியிருப்பதை தெரிவிக்கவே முற்பட்டோம்”.

“ஆயிர்வேத வைத்தியம் ஆதிகால மகரிஷிகள் அனுஷ்டிக்கப்பட்ட விதமாக நீடிக்கச் செய்ய வேண்டுமென்று பரம்பரையாகப் பாடுபட்டு வரும் வைத்திய மகான்கள் கவர்ன்மெண்ட் ஆதரவிருந்தால் அந்த சாஸ்திரம் பழய மேன்மை ஸ்திதியை அடையும் என்று நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையினால் தான் இந்திய வைத்தியப் பள்ளிக்கூடம் ஒன்று ஸ்தாபிக்கப்படுவதை ஜனங்கள் ஆதரித்தனர்”.

“இப்பள்ளிக்கூடத்தை பழய முறையில் சாஸ்திர நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் விடவேண்டும். பழய வித்துவான்களைப் போற்றி ஆதரிக்க வேண்டும்” என்னும் விஷயங்கள் அச்சபையின் சார்பாக ஒரு பார்ப்பனரால் வாசிக்கப்பட்ட யதாஸ்த்தில் காணப்படுகின்றன. இன்னும் அக் கூட்டத்தில் செய்த தீர்மானங்களில் “பிராசீன சம்பிரதாய ரீதியில் ஆயுர்வேத வைத்திய சாஸ்திரத்தையும், வைத்திய முறையையும் விருத்தி செய்ய வேண்டும்” என்று அரசாங்கத்திற்கு அறிவித்துக் கொள்ளுவதாகவும், “இந்திய மருத்துவப் பள்ளிக்கூட நிர்வாகப் பொறுப்பை இந்த (சமஸ்கிருத ஆயுர்வேத) சாஸ்திரத்தில் பரிபூரண ஞானம், பரிபூரண சிரத்தை, பரிபூரண விசுவாசம் நிறைந்த வித்துவான்கள் கையில் விட வேண்டும்” என்றும் காணப்படுகின்றன.

ஆகவே, மேலே கூறிய விஷயங்களை கவனித்துப் பார்த்தால் உண்மை இன்னதென்று எல்லோருக்கும் விளங்கிவிடும். அரசாங்கத்தால் நடத்தப்படும், இந்திய வைத்திய கலாசாலையில் சமஸ்கிருத பாஷையில் உள்ள ஆயுர்வேத வைத்தியத்தையே போதிக்க வேண்டும் என்பதும், அதற்காகச் சமஸ்கிருத வைத்தியம் கற்ற பார்ப்பனர்களையே பள்ளிக்கூடத்தில் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதுமே பார்ப்பனர்களின் உள் எண்ணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு முடிவு செய்து, இம்முடிவும் அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையிலும் கைக்கொள்ளப்படுவதால் உண்டாகும் பலன் தான் என்ன என்பதையும் சிறிது யோசித்துப் பாருங்கள்.

இப்பொழுது தமிழ்ச் சித்த வைத்தியமும், ஆயுர்வேத வைத்தியம் யூநானி வைத்திய பாகங்களும், மேல் நாட்டு வைத்திய முறைக்கிணங்க போதிக்கப்படுவதால், அப்பள்ளிக்கூடத்தில் பிராமணரல்லாதார், கிருஸ்தவர், முஸ்லீம் முதலிய எல்லா வகுப்பு மாணவர்களும் சேர்ந்து படிக்க முடிகின்றது. இவ்வாறின்றிச் சமஸ்கிருத ஆயுர்வேத வைத்தியம் மட்டும் போதிக்கப்படுமானால் சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்கள் மாத்திரமே சேர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். இதனால் பார்ப்பனர்களுக்கு உத்தியோக வேட்டைக்கு வசதியும் ஏற்படும் என்கின்ற இந்தக் காரணத்தால் தான் இப்பொழுது பார்ப்பன வைத்தியர்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கி யிருக்கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

உண்மையிலேயே இந்த நாட்டில் ஆயுர்வேத வைத்தியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கும், ஆயுர்வேத வைத்தியர்களை மட்டும் தான் அரசாங்கத்தார் பாதுகாத்து உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்பதற்கும் ஏதாவது ஆதாரமோ அல்லது நியாயமோ உண்டா? என்று கேட்கின்றோம்.

பரம்பரையாக தமிழ்நாட்டில் வழங்கி வரும் வைத்தியம் சித்த வைத்தியமேயாகும். இப்பொழுதும் நாட்டுப்புறங்களிலும், நகரங்களிலும் நாட்டு வைத்தியர்களாக இருக்கின்றவர்கள் பெரும்பாலும், தமிழர்களும் தமிழ் வைத்தியங் கற்றவர்களுமேயாவார்கள். தமிழ் வைத்தியத்தில் கூறப்படும் மருந்துகளுக்கு வேண்டிய பொருள்கள் யாவும் இந்நாட்டில் கிடைக்கக் கூடியனவேயாகும். தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைமைக்கு ஏற்ற வகையில்- தமிழ் வைத்திய மருந்துகளும் அமைந்திருக்கின்றன. ஆகையால் தமிழ் வைத்தியத்தை போதிப்பதும், விருத்தி செய்வதும் சுலபமான காரியமாகும்.

இதற்கடுத்தபடியாக யூநானி மருத்துவ முறையும் , நம்நாட்டில் எளிதில் விருத்தி செய்யக் கூடியதாகும். முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் எங்கும் பரவியிருந்ததனாலும் முஸ்லீம்கள் நாடு முழுவதும் வாழ்ந்திருப்பதனாலும் அவ்வைத்தியமும் நாட்டின் நிலைமைக்கேற்றவாறே அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், ஆயுர்வேத வைத்தியமோ இந்த நாட்டிற்கு சிறிதும் ஒவ்வாததாகும் என்பதே நமது அபிப்பிராயம். அது பழங்காலத்தில் இமயமலைப் பிரதேசங்களில் வசித்துக் கொண்டிருந்த நாகரீகமற்ற நாடோடிகளால் (ரிஷிகள்) கண்டுபிடிக்கப்பட்ட முறைகளேயாகும். அந்த வைத்தியத்தில் சொல்லப்படும் மருந்துக்கு வேண்டிய மூலிகை வகைகளும், மற்றையப் பொருட்களும் இமயமலைப் பிரதேசங்களில் கிடைக்க கூடுமேயன்றி நமது நாட்டில் அகப்படமாட்டா. அன்றியும் சமஸ்கிருத வைத்தியங் கற்ற பண்டிதர்கள் நமது நாட்டில் அதாவது தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

சென்னை போன்ற நகரங்களில் நாலைந்து ஆயுர்வேத பண்டிதப் பார்ப்பனர்களும், அவர்களால் செய்து விற்கப்படும் மருந்துக்கடைகளும் இருந்து விட்டால் போதுமா? இதற்காக அரசாங்கத்தார் நாட்டில் - அனு போகத்தில் வழங்கிவரும் வைத்தியமுறையை அலட்சியஞ் செய்துவிட்டு அந்த நாலைந்து பூணூல்காரர்களுக்காக ஏழை மக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டுமா? என்று கேட்கின்றோம். ஒரு சமயம் சமஸ்கிருத ஆயுர்வேத வைத்தியத்தைப் பார்ப்பனர் படித்து அரசாங்க வைத்தியசாலைகளில் உத்தியோகம் பெற்று வந்தால் அதனால்தான் யாருக்கு நன்மையுண்டு என்று பார்ப்போம். சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்கள் கட்டாயம் வருணாசிரமத் தர்மவாதிகளாகவும் ஜாதித் துவேஷம் பாராட்டுகிறவர்களாகவும்தான் இருக்க வேண்டும். இத்தகைய துவேஷ புத்தியுடைய வைத்தியர்கள் பொது ஜனங்களுக்கு எப்படி வைத்தியம் செய்வார்கள்? பிராமணரைத் தவிர மற்றவர்களை தொட்டால் தீட்டு ஒட்டிக்கொள்ளும் அல்லவா? அதற்காக பட்டுத் துணியை கையில் போட்டு நாடிப் பார்க்கும் பழைய முறையைத் தானே கொண்டு வருவார்கள். இந்த விதமான மனப்பான்மையுள்ளவர்கள் எப்படி ஒருவருடைய வியாதிகளை அறிந்து தகுந்த மருந்துகளை கொடுத்து அதை குணப்படுத்த முடியும்? என்பன போன்ற விஷயங்களை நன்றாய் ஆலோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம். நிற்க,

இவ்வாறு பார்ப்பனர்கள் ‘ஆயுர்வேத வைத்தியத்திற்கு ஆபத்து வந்து விட்டது” என்று மாரடித்துக் கொள்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இப்பொழுதுள்ள இந்திய வைத்திய கலாசாலையில் சித்த வைத்தியம், யூநானி வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் ஆகிய மூன்றின் பாகங்களும் போதிக்கப்பட்டு வருவதாகவே கேள்விப்படுகிறோம். அப்படியிருந்தும் இவர்கள் கூச்சல் இடுவதற்குக் காரணம் பொறாமையும், துவேஷப் புத்தியும், வயிற்று எரிச்சலுந் தவிர வேறு என்னதான் இருக்கமுடியும்?

நமது நாட்டில், பரம்பரையாக வைத்தியத் தொழில் செய்து வருபவர்கள் மருத்துவ குலத்தினர் என்பது யாவரும் அறிந்த விஷயம். அப்படி யிருந்தும், ‘பரம்பரை ஆண்டியா? பஞ்சத்திற்கு ஆண்டியா?’ என்றபடி வயிற்றுப் பிழைப்புக்காக வயித்தியங்கற்றுக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களைப் பரம்பரை வைத்திய மகான்களென்றும் கூறிக் கொண்டு, தமிழ் வைத்தியத்திற்கு உலைவைக்க வழி தேடுகின்றனரே, இது எவ்வளவு நாணயமற்ற செயலாகும்? நாம் இவ்வளவும் கூறியது “தமிழ் வைத்தியந் தான் நமக்கு வேண்டியது மற்ற வைத்தியங்கள் தேவையில்லை” என்ற எண்ணத்தோடு அல்ல, பார்ப்பனர்கள் எந்தெந்த வகையில், தங்கள் ஆதிக்கத்தை நுழைக்க வேலை செய்கிறார்கள் என்பதைக் காட்டவே இவ்விஷயத்தை எழுத முன்வந்தோம். ஆபத்தில்லாமல், சுலபமான வழியில் வியாதிகளை நீக்கக்கூடிய வைத்தியமுறை எந்த நாட்டு வைத்தியமாயிருந்தாலும் அதை நாம் ஆதரித்து விருத்தி செய்ய வேண்டுமென்பது தான் நமது அபிப்பிராயம். ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது வெகு காலமாக இருந்து வருவது –ஆகையால் அதைத் தான் அரசாங்கத்தார் ஆதரிக்க வேண்டுமென்று சொல்லும் மூளையற்ற - துவேஷவாதத்தை நாம் கண்டிக்கிறோம்.

இந்த மூளையற்ற பிடிவாதத்தினாலும் எண்ணத்தினாலுமே, நமது நாட்டு தொழில்களும், கலைகளும் நாசமடைந்தன என்பதை நினைப்பூட்டுகிறோம். இவ்விடத்தில் மேலே கூறிய ஆயுர்வேத சபைக் கூட்டத்தில் தலைமை வகித்த திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் கூறிய “இங்கு கூடியுள்ள ஆயுர்வேதப் பண்டிதர்களுக்கு ஒரு வார்த்தை, நீங்கள் கேவலம் ஆஷாட பூதிகளாகச் சொன்னதையே சொல்லிக் கொண்டு பழய ஏட்டைப் புரட்டிக் கொண்டிருக்கக் கூடாது. இந்தப் பெரிய சாஸ்திரத்தை மேன்மேலும் முன்னுக்குக் கொண்டு வந்து தற்கால அவசியத்திற்கு ஏற்றவாறு ஆகர்ஷணை செய்ய வேண்டும்” என்னும் வார்த்தையையே நாமும் எடுத்துக் காட்டுகிறோம். திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் எந்தக் கருத்தோடு கூறியிருந்தாலும் அது வார்த்தையளவில் கண்மூடித்தனமுள்ள வைதீகர்களுக்கு நல்ல சவுக்கடி கொடுக்கக் கூடியதாகவேயிருக்கிறது என்பதை நினைவூட்டி முடிக்கிறோம்.

('தேசீயத்துரோகி' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 06.12.1931)

Pin It