periyarr 350லேவாதேவி கடையில் அடுத்தாள் என்ற முறையில், பெட்டியடியில் வேலை பார்க்கும் கணக்கப்பிள்ளைகளும், செட்டிப்பிள்ளைகளும் காலை 7மணி முதல் இரவு10மணி வரை சதா கடைவேலைகளிலேயே ஈடுபட்டு சற்றேனும் ஆறுதலில்லாமலும் உலக நடவடிக்கை மற்ற இதர காரியங்களை கலந்து பேசவோ, கொஞ்சமும் நேரமில்லாமலிருப்பதை முன்னிட்டு நாளது வருஷம் கார்த்திகை மாதம் 15 தேதி இரவு தைப்பிங் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் சுவாமி புறப்பாடன்று மேல்கண்ட எல்லோரும் ஒன்று கூடி இது விஷயமாகத் தினசரி காலை 6-30 முதல் 7-30 வரையிலாவது அல்லது மாலை 4 மணி முதல் 5.30 வரையிலாவது ஓய்வு வேண்டுமென்பதைப் பற்றி ஆலோசித்து தீர்மானப்படுத்திக் கொண்டு கோவில் திண்ணையில் கூடி உட்கார்ந்திருந்த அவர்களின் மேலாள் என்று சொல்லும் பெரிய செட்டியார்களிடத்தில் இவர்களுடைய அனுதாபத்தைத் தெரியப்படுத்தினார்கள்.

என்ன சொல்வது கடைசியில், “உடும்பு வேண்டாம் கைய விடுங்க” ளென்று சொன்ன முறையில் வந்து விட்டது. என்ன பரிதாபம்! மேலாள்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொண்டு “என்னடா லீவு. செட்டிய வீட்டு முறையில்லை. காலங்கெட்டுப் போச்சு. அடுத்தாள்கள் எப்படிக் கூடிப் பேசலாம். மேலாளும், அடுத்தாளும் சமமாக போச்சு. அந்த நாளில் சட்டை போடக் கூடாது, காலில் நடையன் போடக்கூடாது, முளங்காலுக்கு மேல் வேட்டி கட்ட வேணும். இப்போது அந்த சுதந்தரங்கள் கொடுத்ததாலல்லவா வந்தது கேடு. இவன்களை இனி இப்படி விடப்படாது. சமையல்காரன்களிடம் சொல்லி சோறு போடாமல் செய்தால் என்ன செய்வார்க”ளென்று ஒவ்வொரு மேலாளும் அவர்கள் அடுத்தாள்களை கடுஞ்சொற்களால் ஏசி, படுத்தாத பாடு படுத்தி விட்டார்கள். பாவம்! என்ன செய்வார்கள்.

உலகம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும் சமயத்தில் இந்த ஒரு சமூகத்தார், இளம்பிராயத்திலுள்ள சிறுவர்களை, ஆடு மாடுகளை அடைத்து வைத்து வைக்கோல், புல் போடுவதைப்போல் கருதி, இந்தக் கொடுமை செய்தால் அவர்கள் எப்போது சுகதேகியாகவும், உலக நடவடிக்கை தெரிந்தவர்களாகவும் வரக்கூடும்.

ஆகையால், எனது நண்ப சகோதர செட்டியார்களே! அவர்களையும் உங்களைப்போல் நினைத்து, அவர்கள் கேட்ட வண்ணம் உங்கள் வேலைகளுக்கு பாதகம் ஏற்படாமல் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் தங்களுக்கதனால் என்ன குறைவு? அவர்கள் கேட்பதும் உலகப் பொருத்தமான விஷயமென்பதை தங்கள் சமூகத்தினர் சற்று ஆலோசித்துப் பார்த்தால் தெரியும். இம்மாதிரி கேள்விகள் மற்ற சமூகத்தினரை இந்த இளம் குழவிகள் கேட்டிருந்தால் மிகப் பிரியத்தோடு சிரமேல் தாங்கி ஆதரித்திருப்பார்கள். தங்களின் பொறாமையாலல்லவா தென்னாடு இந்நிலைமையிலிருக்கிறது. நம் சமூகத்தாரில் சிறு பிள்ளைகளுக்கு இந்த ஆதரவு கொடுக்காத நீங்களா சுயராஜியத்திற்கு ஒற்றுழைக்கப் போகிறீர்கள்?

சத்திரம், கோவில், மடம், பூரி தானம், சிரார்த்தம் இவைகளைச் செய்வது மட்டும் சிறந்த தர்மமென்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவைகளெல்லாம் சோம்பேறிகளுக்கு வழி காட்டியே. ஆனதுபற்றி, சிறியேன் விடுத்த வியாசத்தைக் குறைவு படுத்தாது அடுத்தாள் கோறின விஷயங்களை கவனித்து அவர்களுக்குச் சிறிதளவு ஓய்வுக்கு ஆதரவு செய்தால் நம் சமூகத்தினர்களும் இதர சமூகத்தினர்களுமுடைய நீண்டகால பழம்வழக்கங்களில் மாறுதலடைந்து முன்னேற்றமடைந்து விட்டார்களென்ற பெருமை எல்லோருக்கும், சரீரப் பயிற்சியும், கால தேச வர்த்தமானங்களையும் அறிந்து கொள்ள செட்டி கடைகளில் வேலை செய்கின்றவர்களுக்கு ஓர் சந்தர்ப்பமும் ஏற்படும். வேறு விஷேசித்து என்ன உரைக்கப் போகிறேன்.

இங்ஙனம்

உண்மை உரைப்போன்.

(குடி அரசு - கட்டுரை - 01.03.1931)

Pin It