சகோதரர்களே!
இன்றைய கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள் எல்லாம் நடந்தேறிவிட்டன. இனி இக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது சில வார்த்தைகளையாவது நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இதனால் சுகாதார விஷயத்தைப் பற்றி அதிகம் சொல்ல எனக்கு சுகாதார விஷயத்தில் போதிய ஞானம் இல்லா விட்டாலும், அனுபவத்தைக் கொண்டு ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
சுகாதாரம் என்பது மக்களுக்கு மிகவும் அவசியமானவைகளில் ஒன்றாகும். அதற்காகத்தான் இப்போது அரசாங்கத்தாரின் முயற்சியாலும், மற்றும் சில அறிவாளிகளின் முயற்சியாலும் சில வருஷங்களாக நமது நாட்டில் இந்தமாதிரி சுகாதார வாரக் கொண்டாட்டமென்பதாக பலவிடங்களில் நடை பெற்று வருகின்றனவென்றாலும், உலகத்திலேயே நாகரீகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் எல்லாம் நமது நாடே சுகாதார விஷயத்தில் மிக்கக் கவலையீனமாகவும், கேவலமாகவுமிருந்து வருகின்றது.
இவ் விஷயங்கள் வெளிநாடுகட்குச் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். வெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும், அனுஷ்டிப்பு முறைகளும் நேர் தலை கீழாகயிருக்கின்றன. அதாவது நமது நாட்டு சுகாதாரமெல்லாம் ஒரு ஜாதி மனிதனை மற்றொரு ஜாதி மனிதன் தொட்டால் தோஷம், மற்றொரு ஜாதி மனிதன் பார்த்தால் தோஷம், வேறொரு ஜாதி மனிதன் நிழல் மேலே பட்டால் தோஷம், இன்னொரு ஜாதி மனிதன் தெருவில் நடந்தால் தோஷம் என்கிற முறையிலிருக்கிறதே தவிர மற்றபடி மனிதன் அசிங்கமாக இருக்கக் கூடாது, துர்நாற்றம் வீசக் கூடாது கெட்ட காற்று சுவாசிக்கக் கூடாது, தொத்து வியாதிக்கிருமிகள் இருக்கக் கூடாது, கெட்டுப் போன பதார்த்தமாயிருக்கக் கூடாது என்கிறது போன்ற கவலைகள் சுத்த சுத்தமாய்க் கிடையாது.
இதன் காரணமெல்லாம் மனிதனுக்குச் சுகாதார ஞானம் இல்லாததேயாகும். ஒரு மனிதன் பணக்காரனாக வேண்டும், பெரிய உத்தியோகஸ்தனாக வேண்டும், பெரிய பண்டிதனாக வேண்டும், பெருமையுடையவனாக வேண்டும் என்கின்றது போன்ற விஷயங்களில் அதிக கவலை வைத்திருக்கின்றானே ஒழிய நல்ல திடகாத்திர திரேகத்துடனிருக்க வேண்டும். சுகஜீவி யாயிருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் கவலைப்படுவதில்லை.
மேல்நாட்டார் முதலியவர்கள் தாங்கள் உலகத்தில் இருப்பதே சுகமாய் வாழ்வதற்கென்றும், சுகாதார முறைப்படி இருப்பதற்கே சம்பாதிப்பதென்றும் சுகாதார வாழ்க்கையை அனுசரித்தே தனது பொருளாதார நிலைமை என்று கருதி அதற்கே தனது கவனத்தில் பெரும் பாகத்தைச் செலவு செய்கிறான்.
அதனாலேயே மேனாட்டுக்காரன் நம்மைவிட இரட்டிப்புப் பலசாலியாகவும், சுக சரீரியாகவும், அதிக புத்தி கூர்மையும், மனோவுறுதியும் உடையவனாகவுங், நம்மை விட இரட்டிப்பு வயது ஜீவியாகவும் இருந்து வருகிறான்.
நமது மக்களின் சராசரி வயது 24 லேயாகும். வெள்ளைக் காரனின் சராசரி வயது 45 ஆகும். இதற்குக் காரணமென்ன என்பதை நாம் கவனிப்பதில்லை. சுகாதாரத்தினால் இன்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவு தான் நமக்கு உண்டு.
நமக்கு காலரா வந்தால் ஓங்காளியம்மனின் குற்றமென்று பொங்கல் வைக்கவும், வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மனின் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம் வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதலை செய்து கொள்ளுவோம்.
நரம்புச் சிலந்தி வந்தால், சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படியென்றால் குழந்தைகளுக்குக் காயலா வந்தால் பாலாரிஷ்டம் என்போம், கிரகதோஷ மென்போம். செத்து விட்டால் விதி மூண்டு விட்டதென்போம்.
ஆகவே இந்த மாதிரி வழிகளில் தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது பானத்திலாவது காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும் படியான அறிவோ படிப்போ நமக்குக் கிடையாது.
நமது நாட்டு சுகாதாரத்தின் யோக்கியதை தெரிய வேண்டுமானால் மிஸ் மேயோவின் “இந்தியத் தாய்” என்னும் புத்தகத்தைப் பார்த்தால் சிறிது விளங்கும். நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்கு முன்புறமாகக் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம்.
பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தைகளுக்குப் பொது வீதிகளேதான் கக்கூஸ்களாயிருக்கின்றன. பெரிய ஆட்களுங்கூட இராத்திரி நேரங்களில் ரோட்டு ஓரங்களில் ஜலமல வுபாதைக்கு இருப்பதே வழக்கம். வாய்க்கால், குளம், கிணறு, குட்டையாகி யவைகளின் கரைகளையேதான் பொது ஜனங்கள் கக்கூசாக உபயோகித்து வருகின்றார்கள்.
அங்குளங்களிலேயே கால் அலம்புவது முதலிய அசிங்கியங்கள் செய்கின்றார்கள். நமது வீட்டு ஜலதாரைத் தண்ணீரெல்லாம் கிராமங்களில் தெரு நடுவில் ஓடுவதும், அதையே மக்கள் மிதித்து, மிதித்து நடப்பதும் மழை வந்தால் கரையிலுள்ளத் தண்ணீரும் தெருவிலுள்ள தண்ணீரும் வழிந்தோடி வாய்க்கால்களிலும் குளம் குட்டைகளில் விழுவ தும் அதையே மறுபடியும் ஜனங்கள் குடிப்பதும், குளிப்பதுமான காரியங் கள் செய்வதும், சர்வ சாதாரண வழக்கமாயிருக்கின்றது.
பட்டணங்களிலும் ஜலதாரைத் தண்ணீரெல்லாம் ரோட்டின் இரு மருங்குகளிலும் பள்ளம் வெட்டி ஓடச் செய்வதும் அப்பள்ளத்து ஓரத் திலேயே திண்ணைபோட்டு சதா அங்கேயே உட்கார்ந்து கொண்டு வியாபாரம் முதலியவைகள் செய்வதும், பலகாரக் கடை முதலியவைகள் அந்த டிச்சின் ஓரத்திலேயே சுடுவதும், அங்கேயே வைத்து விற்பதுமாகிய காரியங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
நமது நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களிலோ அவற்றின் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்குமே சுகாதாரம் என்றால் என்னவென்று தெரியாது. டிச்சின் மேல் வைத்து வியாபாரம் செய்வதற்கே லைசென்ஸ் கொடுப்பார்கள்.
சுகாதாரத்திற்கு ஏற்பட்ட பணத்தையெல்லாம் சுகாதார உத்தியோகஸ்தர்களும், சிப்பந்திகளுக்கும் சம்பளமாய் கொடுத்து நல்லபேர் வாங்குவதற்கே செலவு செய்து விடுவார்கள்.
அந்த உத்தியோகஸ்தர்களும், சிப்பந்திகளும் தங்கள் எஜமானனுக்கு சுகாதார அறிவு கிடையாது என்பது நன்றாய்த் தெரியுமாதலால் அவர்கள் எஜமானர்களுக்கு சலாம் போட்டு அவர்களை புகழ்ந்து பேசி திருப்தி செய்வதிலேயே தங்கள் காலத்தைக் கடத்தி வாங்கிய சம்பளத்திற் குக் கடனைக் கழித்து விடுவார்கள். தெருவில் குப்பையைப் போட்டால் வீட்டுக்காரனைக் கேட்கமாட்டார்கள்.
கேட்டால் அவன் நாளைக்கு ஓட்டுப் போட மாட்டான். எச்சிலையையும், குழந்தைகள் மலத்தையும், சாம்பல் முதலிய குப்பைகளையும் தாராளமாய் வீதிகளில் கொட்டுவார்கள். அவர்களுக்குச் சிறிதும் அறிவும் இருக்காது, பயமுமிருக்காது. கேட்பதற்கு ஆளுமில்லை.
ஊரைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும். அக்கொசுக்களினால் வீட்டிற்கு இரண்டொருவர் காயலாவாயிருந்து கொண்டேயிருப்பார்கள். இதற்கு என்ன காரணமென்பதே சுகாதார சிப்பந்திகளுக்குத் தெரியாது.
அதன் பொறுப்பும் அவர்களுக்கில்லை. மேல் நாடுகளில் இவ்விஷயங்கள் கேட்பதற்கே ஆச்சரியப்படத்தக்க தாயிருக்கும். அவர்களின் சுகாதார அறிவே அற்புதமான பழக்க வழக்கங்களாயிருக்கும்.
ஒவ்வொரு வீட்டுக்காரனும் தனது வீட்டுக் குப்பைச் செத்தைகளைக் கொட்டிவைக்க அவனவன் வீட்டில் ஒரு மூடிபோட்ட குப்பைப் பெட்டியை வைத்திருப்பான். ஒவ்வொருவனும் அதில் கொட்டியே மூடிவிடுவான். வீதியில் ஒரு கிழிந்தத் துண்டுக் கடிதத்தைக் கூட போட மாட்டான். எவ்வளவு தூரமானாலும் நடந்து போய் குப்பைத் தொட்டியிலிலேயே போடுவான்.
தெருவில் அசிங்கியம் செய்ய மாட்டான். எச்சில், மூக்குச்சளி முதலியவைகள்கூட துப்பமாட்டான். யாராவது செய்தாலும் அப்படிப் பட்டவனை மிக்க இழிவாயும் நாகரீகமும் மரியாதையும் தெரியாத முட்டாளென்றே இழிவாய் கருதுவான். ஜலதாரைகளை ஜனங்கள் கண்களுக்குத் தெரியாமல் பூமிக்குள் ஓடும்படியாகச் செய்வார்கள்.
ஊரைச் சுற்றி தண்ணீர் தேக்கமில்லாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். ஏதாவது தேங்கி இருந்தாலும் அவற்றில் அடிக்கடி மருந்து போட்டு பூச்சிகளும், துர்நாற்றமும், கொசுவுமில்லாமல் செய்து விடுவார்கள். மக்களிடம் வாங்கும் வரியில் பெரும்பாகத்தை சுகாதாரத்திற்கென்றே ஒதுக்குவார்கள்.
வியாதிக்கும், கடவுளுக்கும் ஒருக்காலமும் சம்மந்தப்படுத்த மாட்டார்கள். நமது மக்களுக்கும் சுகாதார அறிவு வர வேண்டுமானால் கடவுள் செயல் என்கின்ற முட்டாள்தனம் முதலில் ஒழிய வேண்டும். சாதாரணமாக ஈரோட்டில் 1917வது வருஷத்திற்கு முந்தி வருஷம் ஒன்றுக்கு 200 பேருக்குக் குறையாமல் காலராவினால் செத்துக் கொண்டே இருப்பார்கள்.
சில வருஷங்களில் 300, 400 பேர் கூட சாவார்கள். அதற்காக எவ்வளவோ வேல் மிரவணையும், ஓங்காளியம்மன் பொங்கலும் வருஷா வருஷம் செய்வார்கள்.
சில சமயங்களில் வருஷத்திற்கு இரண்டு தடவைகள் கூட காலரா வந்து அநேகரை கொள்ளை கொண்டு போய் விடும். ஆனால் 1917ம் வருஷம் முதல் ஈரோட்டில் காலராவினால் வருஷம் பத்துப் பேர்கள் கூட சாவதில்லை. இதற்கு காரணமெல்லாம் கடவுள் தயவு அல்லவே அல்ல. மற்றென்னவென்றால் அந்தவூருக்குக் காவேரியிலிருந்து தண்ணீர் குழாய் வைத்து அதன் மூலம் நன்றாக வடிகட்டி மருந்து கலக்கின தண் ணீரை குடிக்கின்ற படியால் வழக்கமாக வரும் காலரா அங்கு வருவதே கிடையாது.
இல்லாவிட்டால் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியானவுடன், மார்கழி மாதத்தில் ஒரு தடவையும், பழநித் தைப்பூசம் ஆனவுடன் ஒரு தடவையும் பங்குனி மாதத்தில் பழநி உத்திரம் ஆனவுடன் ஒரு தடவை யுமாக காலரா வருவதுடன் வாய்க்கால் கரையோரங்களிலுள்ள கிராமங்களில் எல்லாம் மாரியம்மன் பண்டிகை சாட்டுவதினால், பொங்கலினாலும், கூட்டங்கள் கூடி அசிங்கியங்கள் செய்வதினாலும் காலரா ஏற்பட்டு அந்த அசிங்கியங்கள் எல்லாம் வாய்க்காலில் கலந்து வந்து கரையோரங்களிலுள்ள மற்ற கிராமத்தார்கள் அந்த தண்ணீரை சாப்பிடுவதாலும் வழக்கமாக வரு ஷம் தவறாமல் காலரா வந்து கொண்டிருப்பது வழக்கமாயிருந்து வந்தது.
ஆனால் இப்போது அது கிடையாது. இதனாலேயே மனிதன் தனது அறிவி னாலும், முன் ஜாக்கிரதையினாலும் வியாதி வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்பது தெளிவாகவில்லையா என்று கேட்கின்றேன்.
சென்னை, நாகப்பட்டினம், தஞ்சை முதலிய இடங்களில் குழாய்த் தண்ணீர் வந்த பிறகு கால், கைகள் முதலியவைகள் பெருப்பது குறைந்து விட்டதை நேரில் இன்றும் பார்க்கலாம். இப்படியே அநேக விஷயங்கள் கொஞ்ச காலத்திற்குமுன் கடவுள் செயல், விதியென்று எண்ணிக் கொண்டிருந்தவைகள் எல்லாம் இப்போது சுகாதாரத்தை சரியாய் கவனித்து அநுஷ்டித்து வந்ததினால் அநுகூலமாய் இருக்கின்றது. ஆதலால் சுகாதார விஷயம் சொந்த அறிவைக்கொண்டு கவனித்து செய்யவேண்டிய ஒரு முக்கிய காரியமாகும்.
சிறுபிள்ளைகளே இக்கூட்டங்களில் அதிகமாயிருக்கின்றபடியால் அவர்களுக்கும் சில விஷயங்கள் சொல்லுகிறேன். சிறு பிள்ளைகளுக்கு சுகாதார விஷயங்கள் சரியாய் கற்பிக்க வேண்டியது உபாத்தியாயர்கள் கடனாகும்.
நமது நாட்டு உபாத்தியாயர்களோ பெரிதும் மூட நம்பிக்கையிற் பட்டவர்களானதால் அவர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு அறிவும், சுகா தார உணர்ச்சியுமிருக்கும்; இருக்கக்கூடுமென்று எதிர்பார்ப்பது அறியாமை யாகும். நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விஷயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியாயர்களை படிப்பிவிக்கவேண்டும்.
100ல் 5 உபாத்தியாயர்களுக்குக் கூட அறிவு என்பதாக ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. தொழிலாளி வயிற்றுப் பிழைப்புக்கு ஏதோ ஒரு வேலை பழகியிருப்பது போல் உபாத்தியாயர்களும் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன வேலை பழகலாம் என்று கவலையெடுத்து கவனித்ததில் உபாத்தியாயர் தொழில் சுலபமானது என்று கருதி அதில் பிரவேசித்தவர்களேயா வார்கள்.
உலக ஞானமற்ற சோம்பேறிகள் என்றால் உபாத்தியாயர்களைத் தான் சொல்ல வேண்டும். பொறுப்பில்லாத ஒரு வேலையென்றால் உபாத்தியாயர் வேலையைத்தான் சொல்ல வேண்டும். ஆதலால் இந்த மாதிரி உபாத்தியாய தொழிலாளிகளிடம் படிக்கும் பிள்ளைகள் மூடர்களாவதில் அதிசயமில்லை.
பிள்ளைகளுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, அடக்கம் இம் மூன்றும் கிடையவே கிடையாது. வீதிகளில் பிள்ளைகள் கட்டுப்பாடின்றி திரிவதும் விஷமங்கள் செய்வதுமாகிய காரியங்களுக்கு உபாத்தியாயர்களின் பொறுப்பின்மையே காரணமாகும்.
நான் பார்த்தவரை ஒரு உபாத்தியாயருக்காவது பிள்ளைகளை அடக்கி வைக்க சக்தி கிடையாது. ஆகையால் பிள்ளைகளுக்குப் புத்தகப் படிப்பை விட அடக்கமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியமானதாகும்.
உலக இயற்கையையும் சுபாவத்தையும் சொல்லி வைக்க வேண்டும். பிள்ளைகள் முதலில் தினம் தவிராமல் காலையில் எழுந்தவுடன் வெளிக்குப் போக வேண்டும். கொஞ்சமாகவானாலும் நல்ல பதார்த்தங்களைச் சாப்பிட வேண்டும். ஒழுங்குப்படி, காலப்படி சாப்பிட வேண்டும். காலம் தவிரும்படியும், தவரி எதையும் செய்யும் படியும் விடக் கூடாது.
ஆகவே சகோதரர்களே! பிள்ளைகளே! நான் ஏதோ எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுக்குச் சொன்னேன். இவற்றுள் உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டு விடுங்கள். கடைசியாக நீங்கள் எனக்குச் செய்த கௌரவத்திற்காக நான் மறு முறையும் நன்றி செலுத்துகிறேன்.
குறிப்பு: ஈரோட்டை அடுத்த பெரிய அக்கிரகாரத்தில் மத்திய தர பாடசாலையில் 27-8-1930 அன்று நடைபெற்ற சுகாதார வாரக் கொண்டாட்டத்தில் ஆற்றிய தலைமையுரை.
(குடி அரசு - சொற்பொழிவு - 21.09.1930)