periyar 350உயர்திரு. சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோ வுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில்,

“நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து, அவர்களுக்கு கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். எங்கள் தேசத்தில் கல்வி, கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. உங்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். தேகபலம், கல்வி இவையில்லாதவர்களையும் உபயோகித்துக் கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த்தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தியையும், நம்பிக்கையையும் உடையவர்களா யிருக்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாயிருக்கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்றதென்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள்” என்று சொன்னார்.

இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இவை தவிர, மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது,

“மதம், செல்வ நிலை, சமூக வாழ்வு ஆகிய விஷயங்களில் உங்களினின்று மாறுபட்டவர்கள் இடம் கோபியாமல், விவசாயிகளைக் கல்வி மூலம் திருத்த முயற்சிப்பது போல், இவர்களையும் கல்விமூலம் திருத்தும்படியான முறையை அனுஷ்டிக்க வேண்டாமா?” என்று சொன்னாராம். இதை மாத்திரம் நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், மதப் பித்தர்களையும், செல்வச் செருக்கர்களையும், சமூக வாழ்வில் உயர் தனம் பெற்ற அனுபவக்காரர்களையும் நல்ல வார்த்தையாலோ, பிரசாரத்தாலோ, கல்வியாலோ திருத்துவதென்பது சுலபமான காரியம் என்பது நாம் கருதவில்லை. இவர்களுக்கு ருஷியக்காரர் செய்யும் ஏற்பாடுகள் தான் பொருத்தமானதென்பது நமதபிப்பிராயம்.

ஆகவே எல்லா விஷயத்திலும் ருஷிய அரசாங்க சீர்திருத்த முறை மேலானதென்றே சொல்லுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.02.1931)

Pin It