periyar 465ஸ்தல ஸ்தாபனங்களில் நாமினேஷன் எடுபட்டதானது ஏழைகளுக்கு மிகவும் நன்மையானதாகும். கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாகி எலக்ஷன் காலாவதியும் குறைந்து அடிக்கடி எலக்ஷன் நடப்பதாயிருந்தால் இன்னமும் நல்லதென்றே ஏழைகள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் எலக்ஷன் வரும்போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற ஆசைதான்.

எலக்ஷனில் நிற்பவர்களும் ஓட்டுக் கேள்க்கும் போது ஓட்டர்களை கெஞ்சுவதும், பார்ப்பதும் தவிர மற்ற காலங்களில் ஓட்டர்களை கவனிப்ப தேயில்லை.

நமது எலக்ஷன்களால் அனேக பெரிய குடும்பங்கள் கெட்டுப் போய் இன்சால்வெண்டு கூட ஆகியிருக்கின்றன.

அநேக குடும்பங்கள் கடனில் மூழ்கியிருக்கின்றன. எங்கள் ஜில்லாவில் ஒரு தாலூக்காவில் தாலூகா போர்ட் எலக்ஷனினாலேயே அத்தாலூக்கா பணக்காரர்களில் சுமார் 20, 30 குடும்பங்கள் வரையில் சுமார் 15 ஆயிரம் முதல் ஒண்ணரை லக்ஷ ரூபாய் வரையில் கடன்காரர்களாக ஆகி இருக்கிறார்கள்.

இந்தப் போட்டிக்காரர்களுக்குள்ளும் இந்த மாதிரி எலக்ஷனுக்கு செலவு செய்து பதவி பெற்றவர்களுக்குள்ளும் நூத்துக்கு 4, 5 பேர்களுக்குக் கூட ஸ்தல நிர்வாக விஷயம் சரியாய் தெரிந்து பொருப்புடன் நிர்வகிக்கக் கூடிய ஞானமும் சவுகரியமும் இருக்குமோ என்பது சந்தேகமான காரியமேயாகும்.

இதன் பயனாய் கட்சி இல்லாத ஜில்லாவோ, தாலூக்காவோ, டவுனோ, கிராமமோ மிகவும் அறிது என்றே சொல்லலாம். ஆன போதிலும் இந்த எலக்ஷன்களால் மற்றொரு நன்மை உண்டு என்பதையும் நான் மறைக்க வில்லை.

அதாவது கிராமத்து மிராசுதாரர்களுக்கு இந்த எலக்ஷன்களில் ஊக்கம் ஏற்பட்டதாலும் அதனால் பட்டணங்களுக்கும், நகரங்களுக்கும் போய் பல பேர்களுடன் பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதாலும், அவர்களுக்கு சற்று விஷய ஞானம், கல்வி, அறிவு முதலியவைகள் அடைவதற்கு இடம் ஏற்பட்டு முன்போன்ற காட்டு ராஜாத்தனமில்லாமல் சற்று நாகரீகமடைகின்றார்கள் என்பதும், மற்றும் தாசி, வேசி முதலிய காரியங்களும், கலகம், காலித்தனம் முதலிய காரியங்களும் அடியோடு விலக சந்தர்ப்பங்களும் அளிக்கின்றன.

எலக்ஷன் இல்லாவிட்டால் இதில் செலவாகும் நேரமும், ஊக்கமும், முயற்சியும். பணமும் வேறு காரியங்களில்தான் செலவாக வேண்டியதாகிவிடும்.

சாதாரணமாக சட்டசபை தேர்தல்களினாலேயே அநேக ஜமீன் தாரர்கள் யோக்கியர்கள் ஆகியிருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் எலக்ஷன்கள் உத்தேசித்து பலன் கொடுக்கா விட்டாலும் வேறு பல நன்மைகள் கொடுப்பதால் அது இருக்கலாம் என்றே அபிப்பி ராயப்படுகின்றேன்.

தவிர ஸ்தல ஸ்தாபனப் புதிய சட்டத்தில் உள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைப் பற்றிச் சிலர் குறை கூறுகின்றார்கள். நம்பிக்கையில்லாத தீர்மானம் சற்று தொந்திரவு செய்வதாகக் காணப்படுவது உண்மையானாலும் ஸ்தல ஸ்தாபன இலாக்கா அரசாங்கம் பொருப்பற்றதும், சுய நலத்திற்காக நியாயத்தை தியாகம் பண்ணித் தீர வேண்டியதாயும் ஏற்பட்டுவிடுவதாய் இருப்பதால் இம்மாதிரி ஒரு தீர்மானம் இருந்தாலொழிய தலைவர்களை யோக்கியமாய் நடந்து கொள்ளும்படி செய்ய வேறு மார்க்கமே கிடையாது.

அயோக்கியர்கள் ஏதாவது சூட்சியின் பயனாய் தலைவர்களாக வந்து விட்டால் 5 வருஷ காலத்துக்கு அவரது அயோக்கியத்தனத்தில் இருந்தும் நாணையக் குறைவில் இருந்து தப்பி நிர்வாகம் ஒழுங்குப்பட வேறு வசதி யேயில்லாமல் இருப்பது மிகவும் அனியாயமாகும்.

எனது அபிப்பிராயம் பிரதிநிதியாய் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் அதாவது கவுன்சிலர்கள், மெம்பர்கள் கூட ஓட்டர்களின் மெஜாரிட்டி ஓட்டர்களால் நம்பிக்கை இழந்து விட்டால் அல்லது அந்த தொகுதியின் மெஜாரிட்டி மெம்பர்கள் சம்மதமில்லையென்று தெரிவித்துவிட்டால் மெம்பர்கள் தங்களுடைய அந்த ஸ்தானத்தை காலி செய்து விடும்படியாக சட்டம் செய்ய வேண்டு மென்பதேயாகும்.

நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அதனால் ஏற்பட்ட கஷ்டங்களை நான் நன்றாய்ப் பார்த்து இருக்கின்றேன். ஒரு உதார ணமாக எங்கள் ஊர் முனிசிபாலிட்டியையே வேண்டுமானாலும் காட்டுகின்றேன்.

முதலாவது எலக்ஷனிலேயே புரட்டுகளும் அனியாயங்களும் செய்து தன்னை தப்பாய் விளம்பரம் செய்து கொண்ட ஒரு சேர்மெனின் 3 வருஷ ஆட்சியில் மிக்க செல்வம் பொருந்திய ஈரோடு முனிசிபாலிட்டி பாப்பராகி முனிசிபல் சிப்பந்திகளின் சம்பளத்திற்கே கூட பணமில்லாமல் திண்டாட்டமாகிவிட்டது.

அந்த சேர்மெனின் திருட்டுகளையும் புரட்டு களையும் பணங்களை கையாடியவைகளையும் தனது லாபத்துக்காக முனி சிபல் கவுன்சிலர்கள் சம்மந்தமில்லாமல் பல வேலைகளை உண்டாக்கிக் கொண்டு அதன் மூலம் கொள்ளை அடித்ததையும் கைப்பிடியாய் கவுன் சிலர்கள் பிடித்துக் கொடுத்தார்கள்.

மொத்தம் 20 கவுன்சிலர்களில் 12 கவுன் சிலர் ஸ்தல ஸ்தாபன மந்திரியிடம் நேரில் சென்று இந்த திருட்டுக்களையும், நாணயக் குறைவுகளையும் எல்லாவற்றையும் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினார்கள்.

இது விஷயமாய் இவற்றிற்கு ஆதாரமாய் கணக்கு பரிசோதகர்கள் அறிக்கைகளில் காணப்பட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துக் காட்டப் பட்டது அவை மிக்க பலமான குற்றங்களாகும். 2 வருஷம் 3 வருஷம் தண்டிக்கக் கூடியவைகளாகும்.

மேலும் அதாவது முனிசிபல் ரிக்கார்டுகளில் திருத்தமும் நுழை வரியும் பொய் பில்லுகளும் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்துச் சொல்லப்பட்டது. அப்படியெல்லாம் இருந்தும் அந்தக் காலத்திய ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் லட்சியம் செய்யவே இல்லை.

அதோடு மாத்திரம் அல்லாமல் இம்மாதிரி யோக்கியதை உள்ள சேர்மன் விஷயத்தில் பச்சாதாபப் பட்டு “பிள்ளைக் குட்டிக்காரர் பிழைத்துப் போகட்டும்”என்றே கருதிவிட்டது.

கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் அனுப்பிய காலத்திலும் அதை சேர்மென்டிஸ் அலவு (தள்ளி விட்டார்) செய்து விட்டார். கடைசியாக ³ 12 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் நியமனமான கவுன்சிலர் களும் உண்டு.

ராஜினாமா செய்த பிறகும் ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் லட்சியம் செய்யவே இல்லை. இந்த நிலை அந்த சேர்மெனுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் ஆகி முன்னிலும் அதிகமாக அக்கிரமம் செய்து அந்த முனிசிபாலிட்டி பொருளாதார விஷயத்தில் ஒரு 10 வருஷத் திற்கு தலை எடுக்க முடியாதபடி அவ்வளவு பாப்பராகிவிட்டது. சர்க்காருக்கு கொடுக்க வேண்டிய வாய்தா கடன்கள் கொடுக்க முடியவில்லை. வட்டி கட்ட முடியவில்லை.

ஜில்லா போர்டுகளுக்கு வருஷா வருஷம் கொடுக்கக்கூடிய விகிதாச்சார பாகம் கூட கொடுக்க முடியவில்லை. மேலும் தனித்தனி இலாக்காக்களுக்கு ஒதுக்கி வைத்த பணங்கள் எல்லாம் கண்டபடி வேறு இலாக்காக்களின் பெயரால் பாழாக்கப் பட்டும் கையாடியும் போய் விட்டது.

அவசியமான காரியங்கள் செய்ய பணமே இல்லாமல் போய் விட்டது. இந்த அனியாயங்களை ஒழிக்க கவுன்சிலர்களாலாவது ஊர் மகா ஜனங்களாலாவது ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியாக அந்த சேர்மெனை தேர்தல் சட்டமுறையில் கோர்ட்டு நடவடிக்கையால் சுமார் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவழித்து பிரகு ஒழிக்கப்பட்டது.

இந்த மாதிரி ஆசாமிக்கு அனேக பெரிய மனிதர்கள் உத்தியோகஸ்தர்கள் சிபார்சுகள் வந்து பொது ஜனங்களுக்கு மிக்க கஷ்டத்தை உண்டாக்கி விட்டது. இப்போது ஒரு யோக்கியமான நாணயமான சேர்மென் இருக்கிற காலத்தில் பழய அக்கிரமங்களுக்காக இப்போது ஈரோடு முனிசிபாலிட்டியை ஏன் கலைத்து சர்க்கார் மேல்பார்வையில் நடத்தக் கூடாது என்கின்ற மாதிரியில் கேள்வி கேள்க்கும் படியாய் இருக்கின்றது.

இதை எல்லாம் பார்க்கும்போது நம்பிக்கை இல்லாத் தீர்மான சட்டம் சுமார் 10 மாதங்களுக்கு முன்னாலேயே ஏற்பட்டிருக்குமானால் பொது ஜனங்கள் வரிப்பணம் எவ்வளவோ மீதியாகி ஸ்தல நிர்வாக தலைவர்களும் எவ்வளவோ யோக்கியர்களாக அமயக்கூடிய மாதிரியில் வந்திருப்பார்கள். ஆதலால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இருப்பது நல்லதென்றே சொல்லலாம்.

ஆனால் சில சமயங்களில் அது தப்பாய் உபயோகிக்கப்பட்டு யோக்கியமாய் இருக்கும் தலைவர்களுக்கும் தொந்திரவு ஏற்பட்டு விடலாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனாலும் அது பெரும்பாலும் அதற்கு தகுதியானவர்களுக்கே பிரயோகப் படும்படி சீக்கிரத்தில் திருத்தமடைந்து விடும் என்றே கருதுகிறேன்.

எப்படி எனில் சர்க்காராலோ ஜில்லாபோர்ட் தலைவர்களாலோ நாமினேஷன் செய்யப்படும் அங்கத்தினர்கள் இனிமேல் இல்லை. ஆகையால் ஜனப் பிரதிநிதிகள் பெரும்பான்மையோர் அக்கிரமம் செய்பவர்கள் என்று ஜன நாயக ஆக்ஷி விரும்புகின்றவர்கள் அதில் பங்கெடுக்க ஆசைப்படு கின்றவர்கள் சொல்ல முடியாது.

ஒரு சமயம் சிலர் அப்படிச் சொல்ல வருவார் களானால் அப்படிப்பட்டவர்கள் ஜன நாயக ஆக்ஷியில் குற்றம் சொல்லு கின்றவர்கள் அதில் பங்கெடுத்துக் கொள்ளாமல் தாங்களாகவே விலகிவிட வேண்டியதுதானே ஒழிய ஒழுங்காய் நடந்து கொள்ளத் தெரியாதவர்களின் பிரதிநிதியாய் அந்த ஸ்தானத்தில் இருக்க விரும்புவது சுயமரியாதை அற்ற தன்மையே ஆகும்.

தவிரவும் தன்னை தெரிந்தெடுத்தவர்களே வேண்டாம் என்று சொல்வதை குற்றம் என்று சொல்லுவது நாணையமும் ஆகாது. அப்படி சொல்வது ஒழுங்காகும் என்று சொல்லப்படுமானால் அதே ஓட்டர்கள் முன் தெரிந்து எடுத்ததும் ஏன் தப்பாய் இருக்கக்கூடாது என்கின்ற கேள்வியும் புரப்படலாம்.

ஒரு நல்ல சேர்மெனையோ, தலைவரையோ மெம்பர்கள் அனாவசியமாக அடிக்கடி நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து நீக்குவார்களேயானால் அவர்களை தெரிந்தெடுத்த ஓட்டர்கள் கவனித்து அடுத்தத் தடவை வேறு ஒரு கவுன்சிலரை தெரிந்தெடுப் பார்கள். அல்லது அவர்கள் அதை மெம்பர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கட்டும்.

அதற்காக நாம் ஏன் எந்த அங்கத்தினர்களால் தலைவரானோமோ அதே அங்கத்தினரை நம்மை தலைவராக்கிய போது யோக்கியர் என்றும், புத்திசாலிகள் என்றும் சொல்லிவிட்டு நம்மை வேண்டாமென்று சொல்லும்போது மாத்திரம் அவர்களை அயோக்கியர் என்றும் முட்டாள்கள் என்றும் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்க்கின்றேன்.

இந்த அதிகாரம் தெரிந்தெடுப்பவர்களுக்கு இருந்தால்தான் அபேக்ஷகர்கள் பணம் கொடுத்து ஸ்தானங்கள் பெற முயலமாட்டார்கள். ஏனெனில் இப்பொழுது கொடுத்தால் அடிக்கடி மாதா மாதம் பணம் கொடுக்க வேண்டுமே என்கின்ற பயம் இருக்கும். ஆதலால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நல்ல முறையாகுமே தவிர, தவறல்ல என்பேன்.

குறிப்பு:- கரூரில் சுயமரியாதைப் பிரசாரம் - குடி அரசு 07. 12. 1930 தொடர்ச்சி

(குடி அரசு - சொற்பொழிவு - 21.12.1930)

Pin It