பல்லாயிரக்கணக்கமான ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது முத்துக்குமாரையும் கொன்று தின்று ஏப்பம் விட்டிருக்கிறது அதிகார அரசியல். நேற்று முன்தினம் (31.01.09) மூலக்கொத்தடம் சுடுகாட்டில் அந்த உணர்வாளனின் உடல் எரியூட்டப்பட்டது.

முதல்நாள் நாங்கள் போனபோது, முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொளத்தூரின் அனைத்துக் கடைகளும் -'டாஸ்மாக்' எனப்படும் மதுக்கடை தவிர்த்து- மூடப்பட்டிருந்தன. அரசால் நடத்தப்படும் சாராயக் கடைக்கு மட்டுமே அன்றைக்குத் துக்கவிலக்கு. முதலில் கண்ணில் பட்டவர்கள் கைகளில் குண்டாந்தடி ஏந்திய ஏராளமான பொலிசார்தான். காரை நேர்வழியில் அண்ணா சிலை வரை கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. எங்கெங்கோ சுற்றுவழி பிடித்து ஓரளவு அருகில் கொண்டு சென்று நிறுத்தியபோது இளம் பழுப்புநிற உடையணிந்த கலகம் அடக்கும் பொலிசார் இரும்புத் தொப்பிகளோடும் குண்டாந்தடிகளோடும் பிரசன்னமாகியிருந்தனர். கம்பி வலை யன்னல்களோடு கூடிய காவல் வண்டிகளும் தயார்நிலையில் இருந்தன. கூட்டத்திற்கு அருகில் செல்ல பொலிசார் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அரசியல் தலைவர்கள் வழக்கம்போல உணர்ச்சிவயப்பட்ட குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். சன இரைச்சலில் சரியாகக் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை.

மேடைக்குப் பின்புறம் இருந்த ஒரு இடத்தில் முத்துக்குமாரின் உடல் கண்ணாடிப் பேழைக்குள் அஞ்சலிக்கென வைக்கப்பட்டிருந்தது. பொசுங்கிக் கரிந்த அவ்வுடலை நெருங்கக் கூட்டம் விடவில்லை. தவிர, பார்ப்பவரைத் தன்னைத்தான் பார்க்கிறார் என்று நினைக்கத் தூண்டும் உள்ளத்தின் நேர்மை கண்களில் துலங்கும் அந்தப் புகைப்பட முகத்தை மட்டுமே நினைவிலிருத்த உள்ளுர விரும்பினேன். அருகிலிருந்த வீடொன்றின் மாடியில் ஏறியபோது அலைமோதும் கூட்டத்தைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இலக்கியக் கூட்டங்களிலும் ஏனைய அரசியல் கூட்டங்களிலும் போலன்றி குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் கலந்துகொண்டிருந்தார்கள். கைகளில் புகைப்பட மற்றும் வீடியோ கருவிகளுடன் பத்திரிகையாளர்கள் தகுந்த இடம்தேடி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். முத்துக்குமார் தனது உடலில் மூட்டிய அனல் எல்லோரது கண்களிலும் படர்ந்திருந்தது. ஒருகணம் இது வேறு தமிழகம்; இது வேறு இளைஞர்கள் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

தலைவர்கள் பேச்சில் தமக்கு உவப்பான இடம் வரும்போது கூட்டம் ஆரவாரித்தது; சிலசமயங்களில் அவர்களையே மறுத்துரைத்தது. 'பேசு' என்றது. 'பேசாதே' என்றது. வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் எத்தனையோ கூறியும் முத்துக்குமாரின் உடலை அன்றைக்கு தகனம் செய்ய எடுத்துப் போக விட மறுத்துவிட்டனர் இளைஞர்கள். 'என்னுடைய உடலைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திப் போராடுங்கள்' என்ற முத்துக்குமாரின் உருக்கமான வேண்டுகோள் அவர்களுள் பதிந்திருந்தது. எதற்கும் கைதட்டும் கைகட்டும் தொண்டர்களாக இல்லாமல் முதல்முறையாக அந்த இளைஞர்கள் கட்டளையிடுபவர்களாகக் காணப்பட்டார்கள். எப்பேர்ப்பட்ட பெருந்தலையாக இருந்திருந்தாலும், அங்கே முத்துக்குமாருக்கு எதிராக ஒரு சொல் வீசப்பட்டிருந்தால் அவரைக் கீழே தள்ளி முத்துக்குமாருக்குப் பக்கத்திலேயே படுக்க வைத்துவிடுவார்கள் போலிருந்தது. தி.மு.க.வைச் சேர்ந்த பாபு அஞ்சலி செலுத்துவதற்காக பொலிசாருடன் முத்துக்குமார் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்குப் போனபோது கற்களும் சொற்களும் பறந்ததாகவும் அவர் அவசரமாக அஞ்சலித்துவிட்டு பதறியடித்துக்கொண்டு திரும்பியதாகவும் சொன்னார்கள். அந்த இடம் அத்தகு வெப்பக்காற்றை ஒருபோதும் அறிந்திராது.

'வாழ்க' 'வாழ்க' என்று ஒலித்த கோசங்கள் இப்போது 'ஒழிக' 'ஒழிக' ஆகவும் 'எச்சரிக்கை'யாகவும் எழுந்தடங்கிக் கொண்டிருந்தன. மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டனவே அன்றி தமிழக அரசுக்கெதிராக ஒரு சொல்லைத்தானும் மறந்தும் உச்சரிக்காத 'தெளிவு' வியக்க வைத்தது. 'வீரவணக்கம் வீரவணக்கம்' என திருமாவளவன் சொல்ல கூட்டம் எதிரொலித்ததானது பழைய நாட்களுக்குள் இழுத்தெறிந்தது. அங்கே பெருமளவில் திரண்டிருந்த ஈழத்தமிழர்களில் பலர் அதை உணர்ந்திருக்கக்கூடும்.

வைகோ அவர்களின் பேச்சைக் கேட்டபோது வருத்தமாக இருந்தது. 'இவ்வாறாக கூட்டத்தைத் தன் பேச்சுவன்மையினால், கணீரென்ற குரலால் கட்டிப்போடக்கூடிய ஒருவர், ஈழத்தமிழர்கள்பால் எப்போதும் கருணையுள்ளத்தோடு இருக்கக்கூடிய ஒருவர் சமரசங்களால் தன்னிலையிலிருந்து சரிய நேர்ந்ததே…' என்று எண்ணும்படியாக அவர் பேச்சு உணர்வுபூர்வாக எழுச்சியூட்டுவதாக இருந்தது. நரிக்கு வாலாக இருப்பதை விட பன்றிக்கு வாயாக இருப்பது நன்று என்பது பல இடங்களில் பொருந்தத்தான் செய்கிறது.

நாங்கள் திரும்பிச் செல்லவேண்டிய தொலைவின் உறுத்தலால், இருளடர ஆரம்பித்ததும் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. மறுநாள் போவதாக எண்ணமிருக்கவில்லை. ஆனால், வீட்டில் இருப்பது குற்றவுணர்வைத் தந்தது. பிற்பகல் 3.15அளவில் நாங்கள் அவ்விடத்தைச் சென்றடைந்தபோது கூட்டம் கொதிநிலையில் இருந்தது. முதல் நாளைக்காட்டிலும் அதிகமான பொலிஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் சென்ற சில நிமிடங்களிலேயே முத்துக்குமாரின் உடல் ஊர்தியில் ஏற்றப்பட்டது. ஒரு வீட்டின் மாடியிலிருந்து கண்களில் நெருப்புடன் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கமுடிந்தது. உடலைத் தாங்கிய ஊர்தியில் ஏற முண்டியடித்தது கூட்டம். அப்படி ஏறியவர்களை இயக்குநர் அமீர் கீழே இறங்கும்படியும் இல்லையெனில் வண்டியில் அமரும்படியும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். மெதுவாக மிக மெதுவாக ஊர்தி கிளம்பவும் நாங்களும் கீழே இறங்கி ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். கோபத்துடன், ஆற்றாமையுடன், கண்ணீருடன் புழுதி கிளப்பி நகரவாரம்பித்தது ஊர்வலம். காலகாலமாக நாங்கள் இப்படித்தான் நடந்தோம். நடந்துகொண்டிருக்கிறோம்; இனியும் நடக்கவேண்டியிருக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

'காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!'என்று எழுதிவைத்துவிட்டுப் போனான் முத்துக்குமார். அறிக்கை அம்பு விடுவதல்லால் வேறொன்றும் செய்யத் திராணியற்றவர்களின் மீது அவனது சொல்லம்பு பாய்ந்திருக்கிறது. நல்லவேளையாக முத்துக்குமார் செத்துப்போனான் என்று ஒரு கட்டத்தில் நினைக்கத்தோன்றியது. இல்லையெனில், உண்மைகளைப் புட்டுப்புட்டு எழுதிவைத்த கடிதத்திற்காகக் காலங்கடந்தேனும் கொலைசெய்யப்பட்டிருப்பான். அறிக்கைகளும், கடையடைப்புகளும் உண்ணாநிலைப் போராட்டங்களும் மனிதச் சங்கிலிக் கைகோர்ப்புகளும் செய்யத் தவறியதை சாதாரண இளைஞன் ஒருவன் தனது உயிர்க்கொடையால் செய்துகாட்டியிருக்கிறான் என்பதுதான் இன்றைய சுடுசெய்தி. அரசியல் கயமையாளரை இன்று சுட்டுக்கொண்டிருக்கும் செய்தி. உறங்குவதாய் பாசாங்கு செய்துகொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பமுடியாதென்று அறிந்து தன்னையே சுட்டு எழுப்பியிருக்கிறான் முத்துக்குமார். தனது மரணத்தை எப்படியெல்லாம் திரிபுபடுத்துவார்கள் என்பதை அறிந்து அவன் எழுதிவைத்த வாக்குமூலம் ஆவணப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது கண்கூடு.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று கேட்டு, பள்ளப்பட்டி என்ற இடத்தில் தீக்குளித்த ரவிக்கு நேர்ந்த கதிதான் முத்துக்குமாருக்கும் நிகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 'ஸ்டவ்' வெடித்ததில் தீப்பிடித்தது என்றும், குடும்பச் சண்டையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்டார் என்றும் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது அவரது செயல். "எங்க வீட்டுல ஸ்டவு கிடையாது. சிலிண்டரு கிடையாது. காடா விளக்கு சிம்னி விளக்குதான் வைத்திருக்கிறோம்"என்று ரவியின் மனைவி சொல்லியிருக்கிறார். இல்லாத ஸ்டவ் வெடிக்கும் விசித்திரத்தை நாம் வேறெங்கிலும் பார்த்திருக்கமுடியாது.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, 100 அடி உயர செல்பேசி கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் கடலூரைச் சேர்ந்த நீதிவளவன் என்ற இளைஞர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் இடுப்பெலும்பும் கையெலும்பும் முறிவடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். 'ஈழம் வெல்லும்; அதைக் காலம் சொல்லும்' என்று நல்லவேளையாக அவரும் எழுதிவைத்துவிட்டுத்தான் அந்த முயற்சியில் இறங்கிருக்கிறார். அதிகாரங்களின் மீது அவ்வளவு நம்பிக்கை! இலங்கையில் போர்நிறுத்தத்தை வேண்டி, சென்ட்ரல் புகையிரத நிலையம் முன்பாகத் தீக்குளிப்பதற்கு முயன்ற, சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, திருநெல்வேலியிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் முன்னால் தீக்குளிக்க முயன்ற நடராஜன் என்ற ஜோதிடரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 'தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டது மற்றும் தற்கொலைக்கு முயன்றது'போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 27பேரின் காலவரையறையற்ற உண்ணாவிரதம், இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இன்றும் (திங்கட்கிழமை) ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை காலவரையறையற்று மூடும்படியாக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடாலடியான அறிவிப்பும் வெளியேற்றமும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைத் திகைப்பிலாழ்த்தியிருக்கிறது. மாணவர்களின் கிளர்ச்சியைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடு என்று சொல்லப்படுகிறது. எதிர்வரும் 4ஆம் திகதியன்று பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி அனைத்து மக்களுக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருக்கும் இவ்வேளையில், 'உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி தற்போது முழு அடைப்பு நடத்துவதென்பது சட்டத்துக்குப் புறம்பான செயல்' என்றும் - 'எங்கும், யாரும் முழு அடைப்பு நடத்தக் கூடாது'என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மீறிச் செயற்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறெனில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசு விரும்பவில்லையா? ஈழச்சிக்கல் தொடர்பாக தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்று காத்திருந்தது கனியும் நேரத்தில் தமிழக அரசு பின்னடிப்பது ஏன்? மாணவர்கள் என்ற மகத்தான சக்தி வெறும் புத்தகப் பூச்சிகளாக இல்லாமல் சமூகப் பொறுப்புணர்வோடு அநீதிக்கெதிராகக் களமிறங்குவதானது அதிகாரத்தின் மனச்சாட்சியை எந்தவகையில் தொந்தரவு செய்கிறது? 'இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்' என்று விடுத்த வேண்டுகோள்களில் ஒருதுளியும் உண்மை இல்லையா? சிந்திய கண்ணீர் ஒப்புக்குப் பாடிய ஒப்பாரிதானா? ஆக, முன்பொரு தடவை கூறியதுபோல அரசுகள் எல்லாம் சம்பந்தக்குடிகள்; ஒரே துருப்புச் சீட்டான வாக்குச்சீட்டை பணபலம் மற்றும் அடியாள் பலத்தின் முன் இழக்கச் சம்மதிக்கும் மக்கள் அவர்கள் அளவில் பூச்சியத்திற்குச் சமானம்.

இன்று தமிழகத்தில் மூண்டிருக்கும் நெருப்பு முத்துக்குமார் என்ற இனமானமுள்ள, அறிவார்த்தமான இளைஞன் பற்றவைத்தது. அது எவ்விதம் சாத்தியமாயிற்று? கட்சியின் குரலால் அவன் பேசவில்லை; நாற்காலியின் நாக்கால் உரைக்கவில்லை; எலும்புத் துண்டுகளை எறிபவர்களை அவன் மிகச்சரியாக இனங்கண்டிருந்தான். சில கடல் மைல் தொலைவே உள்ள ஈழம் பற்றியெரிந்து கொண்டிருக்கையில் இன்னமும் படுக்கையறைக் கதைகளையும், இணையத்தில் கொஞ்சியதையும், சிந்துபாத் பயணங்களையும், 'கல்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி' என்ற பெருங்காயம் வைத்த பாண்டக் கதைகளையும் எழுதி 'ஊமைச் செந்நாய்'கள் போல இராமல் உண்மையைத் தன் எழுதுகோலில் ஊற்றி எழுதினான்.

ஈழச்சிக்கல் தொடர்பாக கள்ள மௌனம் சாதிப்பவர்களின் எழுத்துக்களை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். இங்கே பிரபலமாக எழுதிக்கொண்டிருக்கிற சில 'பெருந்தலை'கள் சாதிக்கும் கள்ள மௌனத்திற்கும் அபத்தார்த்தம் பொருந்திய 'ஐயகோ என்னினம் அழிகிறதே'க்களுக்கும் பெரிய வித்தியாசங்களில்லை. எழுத்து என்பது, சக மனிதனுக்கு அநீதி நேரும்போது ஆயுதமாகவேண்டும். அவள்-அவன் அழும்போது கைக்குட்டையாகவேண்டும். முத்துக்குமாரின் கண்ணீரில் சூடு இருந்தது. அது இடையில் கிடக்கும் கடல்போல உப்புக் கரித்தது. அவன் மூட்டிய தீயை அணைத்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். அதிகாரத்திற்கும் மக்களின் மனச்சாட்சிக்குமான கயிறிழுத்தல் ஆரம்பமாகிவிட்டது.

முத்துக்குமார் மூட்டிய தீ அணைய இடங்கொடுப்பதும், மூண்டெரியத் தூண்டுவதும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது. தாதாக்களைத் தேவதூதர்களாக நம்பியிருந்த காலங்கள் கழிந்துகொண்டிருக்கின்றன எனச் சும்மாவானும் நம்ப ஆசையாய்த் தானிருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிக் கனவு காணவேண்டுமென்கிறார்கள். என்ன செய்வது? தொடர்ந்து துர்க்கனவாகத்தான் வந்துகொண்டிருக்கிறது. 

- தமிழ்நதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It