சென்னை மந்திரிகள் “சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்களும்”, “ஒத்துழையாமைப்” பார்ப்பனர்களும் தங்களுக்கு உள் உளவாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தினால் ஆளுக்கு ஒரு விதமாய் தலைவிரித்தான் கோலமாய் உளறிக் கொண்டு வருகிறார்கள்.  “கன்னா பின்னா காவரையே, கூவரையே உங்களப்பன் வீட்டுப் பெருச்சாளி” என்னும் உளறலை ஒரு விறகுத் தலையன் பாடம் செய்துகொண்டு ஒரு சமஸ்தானத்திற்குப் போய் இதை கவி என்று சொல்லி பரிசு கேட்டதாகவும், அங்கு இந்த விறகுத் தலையனுக்கு அனுகூலமாயிருந்த ஒரு வித்வான் இதற்கு வியாக்கியானம் செய்து பரிசு பெற உதவியாய் இருந்ததாகவும் தமிழ் இலக்கியத்தில் ஒரு கதை உண்டு.   அதைப் போல் மந்திரிகள் உளறலுக்கு சுயராஜ்யக் கட்சியார் அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் வியாக்கியானம் செய்து அவர்கள் பதவி நிலைக்க மந்திரிகளை மெச்சி நற்சாக்ஷி பத்திரம் அளிக்கிறார்.

periyar and maniammaiஉதாரணமாக ஒரு மந்திரி ஒரு ஊரில் படிப்படியாகத்தான் குடியை ஒழிக்க முடியும் என்றும், மற்றொரு மந்திரி குடி தப்பா சரியா என்பதை பற்றியே தான் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும், மற்றொரு மந்திரி பணத்திற்கு என்ன செய்வதென்றும் பேசியவைகள் எல்லாருக்கும் தெரிந்ததே.   இதைப்பற்றி வரவு செலவு திட்ட விவாதத்தில் “ஜஸ்டிஸ்” கட்சியார் எடுத்து சொன்னபோது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் உடனே வக்காலத்து வாங்கிக்கொண்டு சமாதானம் சொல்ல வந்துவிட்டார்கள்.   அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் “கவர்ன்மெண்டின் முறையில் எங்களுக்குள்ள அதிருப்தியைக் காட்டிக் கொள்ளப் போகிறோமல்லாமல் (மந்திரி பேரில் நாங்கள் குற்றம் சொல்ல இடமில்லை)” “இப்பொழுது இருக்கும் மந்திரி சபை ஜஸ்டிஸ் கட்சியாருக்குப் பிடிக்காததால் அதை தோற்கடிக்கப் பார்க்கிறார்கள்.” ஆனால் ( நாங்கள் அதற்கு இடங்கொடுக்காமல் அதை நிலை நிறுத்துவோம்).

“ஜஸ்டிஸ் கட்சியார் இந்த மந்திரி சபையைத் தோற்கடித்து விட்டுத் தாங்கள் மறுபடியும் அதிகாரமடையப் பார்க்கிறார்கள்.”   ஆதலால் (நாங்கள் இந்த மந்திரிகளை எதிர்க்க முடியாது உதவி செய்துதான் தீருவோம்). “இப்போதிருக்கும் மந்திரிகள் வெளியிட்டிருக்கும் கொள்கை முற்போக்கானதாக விருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்.   இப்போதைய மந்திரிகள் மதுவிலக்கு விஷயத்தில் கஷ்டமிருப்பதாக சொல்லுவது எங்களுக்கும் தெரிகிறது. பணத்திற்கு வழி தேடவேண்டும். திருட்டுத்தனமாக மது வியாபாரம் தடுக்க வழி தேட வேண்டும்.” (இது இரண்டும் செய்யாமல் மதுவிலக்கு என்பது முடியாத காரியம்). “இந்த மந்திரிசபையை கவிழ்த்துவிட நாங்கள் இப்போது சம்மதிக்க மாட்டோம். அதற்கு தகுந்த காலம் எங்களுக்குத் தெரியும்” (அதாவது இம்மந்திரிசபை கவிழ்ந்ததும் நாங்கள் அதை அடையக்கூடிய சமயம் எதுவோ அதுதான்) என்று பேசியிருக்கிறார். இது “சுதேசமித்திரன்” பத்திரிகையிலேயே இருக்கிறது.

குறிப்பு:   

“இவ்வடையாளமிட்டது ஸ்ரீமான் மூர்த்தி அவர்கள் பேசியது”   ( . ) இவ்வடையாளமிட்டது அதில் தொக்கியிருப்பது.   ஆகவே பார்ப்பனர்களின் முட்டுக்கட்டையும் இரட்டை ஆட்சியை ஒழிக்குந் தன்மையும் வகுப்பு துவேஷமில்லாமல் தேச நன்மைக்குச் சட்டசபையில் இவர்கள் வேலை செய்யும் பொது சேவையும் இதிலிருந்தாவது விளங்கவில்லையா?   இது போலத்தான் இவர்கள் இனி வரப்போகும் முனிசிபாலிட்டி, டிஸ்ட்ரிக்ட் போர்டு முதலிய தேர்தல்களிலும் மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறப் பார்ப்பார்கள் என்பதைப் பாமர ஜனங்கள்   உணரவேண்டும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.03.1927)

Pin It