சென்னை மணலி விடுதியில் நடந்த அக்கிரமம் நம் மனத்தைப் புண்படுத்துகின்றது. இவ்விடுதியிலுள்ள ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் தன்னை அறியாமல் ஒரு பார்ப்பன மாணவன் சாப்பாட்டுப் பேழையை (டிபன் பாக்ஸ்)த் தொட்டு விட்டான், உடனே பார்ப்பனரல்லாதார் தருமத்திலிருந்து தெண்டச் சோறு சாப்பிடும் அப்பார்ப்பன மாணவனுக்கு கோபம் வந்து விட்டது.
என் சாப்பாட்டைத் தொடவா நேர்ந்தது என்று பலவாறு அரற்றி சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டு, பிராமண சூப்பரின்டெண்டெண்டிடம் போய் முறையிட்டான். அவர் பார்ப்பனரல்லாத மாணவனைப் பார்ப்பனச் சாப்பாட்டைத் தொட்ட குற்றத்திற்காக வாயால் வசை புராணம் பாடி அனுப்பி விட்டார். ஆனால், இது அப்பார்ப்பன மாணவனுக்கு ஒப்பவில்லை.
தன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனுக்கு வெறும் வசை புராணம் மட்டுமா என்று ஆத்திரம் அவனுக்கு அடங்காது கிளம்பி விட்டது. ஆகையால் அப் பார்ப்பன சூப்பரின்டெண்டெண்டுக்கு மேல் அதிகாரியாய் உள்ள “சித்தாந்தம்” ஆசிரியரும் ஒரு வக்கீலுமான திரு “பாலசுப்ரமண்யம்” அவர்களிடம் சென்று முறையிட்டான், முறையிட்டதுதான் தாமதம்.
நம் பார்ப்பன முதலியாராய திரு.பாலசுப்பிரமணியத்திற்கு பெரும் சீற்றம் உண்டாய் விட்டது. அவருடைய பெருத்த கொழுத்த உடம்பு துடித்தது. “கொண்டுவா பார்ப்பன மாணவனின் சாப்பாட்டுப் பேழையைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனை” என்றார். பழைய காலத்து அயோத்தி ராமன் காட்டில் தவம் செய்த சூத்திரனை எவ்வாறு கொன்றானோ, அவ்வாறே சித்தாந்தப் பார்ப்பன முதலியாரும் பார்ப்பன மாணவன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனைக் கடிந்து வெருட்டி ஆறு அடி அடித்தாராம்.
பாவம் ஏழைப் பார்ப்பனரல்லாத மாணவன் என்ன செய்வான்? அடி பொறுத்துக் கொண்டான்; கோர்ட்டிற்குச் சென்று சித்தாந்த ஆசிரியர் மேல் கிரிமினல் வழக்குத் தொடுக்கலா மென்றாலோ, வயிற்று சாப்பாட்டில் இடி விழுந்துவிடும், கையிலோ பணம் இல்லை, ஆகையால் சித்தாந்த ஆசிரியர் தப்பித்துக் கொண்டார். இல்லாமல் போனால் ஒரு கை பார்த்து விடலாம்.
சித்தாந்த ஆசிரியர் பி.ஏ.பி.எல். படித்திருந்தும், தமிழில் பெரிய புலவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தும் என்ன பயன்? சிறிதாவது சுயமரியாதையாவது, உணர்ச்சியாவது அன்றி பகுத்தறிவாவது இருந்தால் இவ்வண்ணம் செய்வாரா? ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் பார்ப்பான் சாப்பாட்டுப் பேழையைத் தொட்டால் என்ன தீட்டு வந்து விட்டது? இதை ஆய்ந்து நோக்கினாரா? சித்தாந்த ஆசிரியர் சரியான பார்ப்பனரல்லாதாராய் இருந்தால் அப்பார்ப்பனரல்லாத மாணவனுக்கு நேர்ந்த அவமானம் தனக்கும் தன் வகுப்பாருக்கும் நேர்ந்ததென்று கருத வேண்டாமா? இத்தகைய சுயமரியாதையற்ற அறிவுகெட்ட பார்ப்பனரல்லா பாலசுப்பிரமணியங்கள் இருந்தால் ஏன் பார்ப்பனர்கள் வருணாச்சிரமக் கொழுப்பு பிடித்தாட மாட்டார்கள்? என்று தான் இவருக்கு சுயமரியாதை உணர்ச்சி உண்டாகுமோ? அன்றுதான் இவரை நாம் அசல் பார்ப்பனரல்லாதார் என்று கருதுவோம்.
இனி மணலி விடுதியில் மட்டுமல்ல. எங்கும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் இவ்வாறுதான் துன்புறுகின்றார்கள். இவர்கட்கு எப்பொழுதுதான் விடுதலை பிறக்குமோ? நம் சுயமரியாதை அரசாங்கம் வந்தால் விடுதலை! விடுதலை!! என்று திராவிடன் 28. 8. 29 வெளியீட்டிற் கூறப்பட்டுள்ளது.
பார்ப்பனனின் சோற்றைத் தீண்டிய பார்ப்பனரல்லாத மாணவர் இந்நாகரிக காலத்தில் சைவசித்தாந்தப் பேராசிரியர் சட்டதுரந்தரர் திருவிலாப் பாலசுப்பிரமணியத்தின் கசையடிக்கிலக்காயினார். இவரது சித்தாந்தமும், சட்டப்பயிற்சியும், ஒரு மாணவரை இச்செயல் பொருட்டுக் கசைகொண்டடிக்கும் முடிவைப் பற்றியதெனில், அந்தோ, இவரது சைவசித்தாந்தத்திற்கு நாம் மிகவும் இறங்குகின்றோம்.
மாட்டு மலத்தை உண்டு, மாட்டுச் சிறுநீர் பருகி, மாட்டு மலத்தைச் சாம்பராக்கி அங்கம் முழுதும் பூசி, கொட்டையணிந்து, லிங்கத்திற்குப் பூசை புரியும் இச்சித்தாந்த ஆசிரியரிடம், வயிற்றுக்குச் சோறின்றி இவ்விடுதியில் அபயம் புகுந்த ஒரு மாணவர் மீது, கருணையினையும், நீதியினையும் நாம் எதிர்பார்ப்பது மிகவும் மடமையே.
பூணூல் தரித்த பார்ப்பனனிலும், பூணூல் தரியா இப்பார்ப்பனனை நாம் கல்லென்போமா, மரமென்போமா, இரும்பென்போமா, அல்லது காடு வாழ் விலங்கென்போமா? என்னென்போம்? மதவெறிகொண்ட சித்தாந்திகளிடம் நாம் கருணையை எதிர்பார்க்கவில்லை. ஆயின் சட்டம் பயின்ற ஓர் மனிதரிடம், ஆண்பிள்ளை யினிடம், நற்குடும்பத்தில் உதித்தாரிடம் நடுநிலைமையை எதிர்பார்க்கின்றோம்.
நடுநிலைமையற்று, ஆண் தன்மையற்று தன் பயிற்சியெல்லாம் இரண்டு எழுத்துக்கள் என்னும் முடிவிற்கே ஒப்படைத்துவிட்டதன் பயனாய், பரவிய எண்ணம் அற்று, பார்ப்பனியத்தையும், அதனைப் பாதுகாக்கக் கசை அடியையும் கைக்கொண்ட, ‘சித்தாந்தம்’ ஆசிரியர் இனியேனும் தம் மூளையில் சிறிது அறிவும், மனதில் கருணையும் பிறக்குமாறு இவர் தன் வழிபடு கடவுளாகிய லிங்கத்தை வணங்கித் துதிப்பாராக.
பார்ப்பனரல்லாத ஒரு மாணவர் கசையடியேற்ற ஒரு கொடுமையை ஏனைப் பார்ப்பனரல்லாத மாணவர்கள் கண்டும் வாளாவிருந்திருக்கின்றனர். பொறுமை கடலினும் பெரிதென்பர்.
ஆயினும் சுயமரியாதை இவ்வண்டத்தினும் பெரிது; சித்தாந்தத்திலும் பன்மடங்கு பெரிது; இவ்வாசிரியர் அறிவிலும் ஒழுக்கத்திலும் ஓராயிரம் மடங்கு பெரிது என்பதை நாம் நம் வகுப்பு மாணவர்கட்கு நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
இக்கொடுமையை எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும், நாம் அமைதியை இழப்போம் என்றஞ்சுவதனால், இதைப் பற்றி விரித்துரை வரையாது விடுக்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள் இத்தகைய செயல்களைக் கண்டும், கேட்டும் எத்துணை நாட்கள்தாம் சும்மாவிருக்கப் போகின்றனர் என்று கேட்கின்றோம்.
(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 01.09.1929)