17.7.29 ந் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங், பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.
தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5-வது வயதிலேயே மணம் முடிக்கப்பட்டது. அடுத்து ஆண்டில் புருஷன் இறந்து போனான்.
இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அநுமதி இல்லாமையால் பீபியா மரண பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்து விட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்து விட்டாள்.
மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தினார்கள்.
பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர சிட்சை விதித்து மாகாண அரசாங்கத்தார் கருணைக்கும் சிபார்சு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!
(குடி அரசு - செய்திக் குறிப்பு - 11.08.1929)