periyar 350மதுரை முனிசிபல் சேர்மென் திரு.ஆர்.எஸ். நாயுடு அவர்களைத் தமிழ்நாட்டவர்கள் நன்கு அறிவார்கள். அவர் பழம் பெரும் கீர்த்தி வாய்ந்த நாயுடு குடும்பத்தில் தோன்றி மேல் நாட்டுக்குச் சென்று படித்து பாரிஸ்டர் பரீட்சையில் தேறி மதுரை ஜில்லாவில் ஒரு பிரபல வக்கீலாக இருந்தவர். அவருடைய நாணயத்தையும் பெருந்தன்மையையும் சாமார்த்தியத்தையும், அறிந்த மதுரைவாசிகள் அவரை மதுரை நகர முனிசிபல் கவுன்சிலுக்குச் சம்பளம் பெறும் சேர்மெனாகத் தெரிந்தெடுத்து அவரிடம் முனிசிபல் ஆட்சியைப் ஒப்புவித்தார்கள்.

அவர் சற்று பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியு டையவராதலால் மதுரைப் பார்ப்பனர்கள் அவருக்கு பலவிதத்திலும் தொல்லை விளைவித்து வந்தும் அதாவது சென்னை கார்ப்பரேஷனில் திரு.ஜெ. வெங்கிட்ட நாராயண நாயுடு அவர்களைச் சுயராஜ்ஜியக் கட்சியின் பெயரால் சென்னை பார்ப்பனர்கள் நசுங்குச் சேட்டைகள் செய்து வந்தது போல் செய்து வந்தார்கள். திரு.ஆர்.எஸ். நாயுடு அவர்கள் அவ்வளவையும் சமாளித்து தைரியமாய் நின்று மேற்படி பார்ப்பனர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் விஷமங்களுக்கும் சற்றும் சளைக்காமல் ஒரே முகமாய் நின்று அம்முனிசிபாலிட்டியை முன் இருந்த நிலைமையை விட பொருள் வரும்படியிலும், நிருவாக கண்டிப்பிலும், சுகாதாரத்திலும், செலவு சிக்கனத்திலும், இம்மாகாணத்திலுள்ள மற்ற முனிசிபாலிட்டிகளுக்கு ஒரு மாடல் முனிசி பாலிட்டியாக அதாவது, வழிகாட்டி முனிசிபாலிட்டியாக ஆக்கி வைத்தார் என்பதை அவரது விரோதிகளும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

அன்றியும், மதுரையில் உள்ள எந்தப் பார்ப்பனராவது அவர்கள் வலையில் சிக்கிய பார்ப்பனரல்லாதாராவது திரு. ஆர்.எஸ். நாயுடு அவர்களின் கண்ணியத்தைப் பற்றியோ, நாணயத்தைப் பற்றியோ, நாளது வரையில் ஒரு சிறு வார்த்தை கூட சொன்னதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் திரு. நாயுடு அவர்கள் ஆபீசு நிர்வாகத்தில் பெரிதும் பார்ப்பனரல்லாதார்களுக்கே உத்தியோகம் முதலானவைகள் வழங்கி வருவதால், பார்ப்பனர்கள் தங்கள் பரம்பரைக் கொள்கைப்படி அவரை கவிழ்க்க சூழ்ச்சி செய்ய வேண்டியதும், பார்ப்பனரல்லாதார்களிலும் சொந்த அதிர்ப்தியும் அபிப்பிராய பேதமும் ஏற்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள அவர்களை உபயோகித்துக் கொள்வதும் சாதாரணமாய் எதிர்பார்க் கக்கூடிய காரியமே ஆகும். ஆகையால் இக்காரணங்களால் திரு. நாயுடு அவர்களுக்கு விரோதமாக அங்கு ஒரு கட்சி இருந்து கொண்டு அவரது நல்ல நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது யாவருமறிவார்கள்.

மதுரைப் பட்டணமானது சுமார் 150000 ஜனத் தொகையும் சுமார் 10, 15 - லட்ச ருபாய் வரும்படியுமுள்ளதும் சென்னை மாகாணத்தில் சென்னைக்கு அடுத்தபடி ஜனத்தொகையிலும் வரும்படியிலும் இரண்டாவது முனிசிபாலிடியும் ஆகும். அப்பேர்ப்பட்ட முனிசிபாலிடியை திறமையாக நிர்வாகம் செய்து தக்க அளவுக்கு வரும்படியையும் சிக்கன செலவையும் காட்டி அதன் பயனாக மக்களுக்கு அதிகமான சௌகரியத்தையும் செய்யக் கூடிய ஒருவருக்கு அக்கம் பக்கத்திலுள்ள சம்பளம் பெறும் சேர்மெனுடைய வும் முனிசிபாலிடிகளுடையவும் நிலையையும் தன்மையையும் அனுசரித்து அதற்கு தக்கபடி சம்பளம் கொடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காதென்று நினைக்கின்றோம்.

அன்றியும் அவருக்கு இப்போது கொடுக்கப்பட்டு வரும் மாதம் 1000 சம்பளம் நமது நாட்டின் பொது நிலையை பார்த்தால் ஒருக் காலமும் குறைந்ததல்ல வென்று சொல்லுவோம். ஆனாலும் மற்ற முனிசிபாலிடிகளில் இருந்து வரும் சம்பளம் அதே மதுரை முனிசிபாலிடியில் திரு நாயுடு அவர்களின் கீழ் வேலைபார்க்கும் உத்தி யோகஸ்தர்களுடைய சம்பளம் முதலியவைகளைப் பார்க்கும்போது மதுரை முனிசிபாலிடியின் யோக்கியதைக்கு தகுந்தபடியும் சிப்பந்தி சம்பளத்தை விட எஜமான சம்பளம் அதிகமாயிருக்க வேண்டும் என்பதையும் யாவரும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். சம்பளம் இல்லாத கௌரவ சேர்மெனாக யிருந்தால் இந்தக் கணக்கு பார்க்க வேண்டியதில்லை. சம்பள சேர்மென் என்று வைத்த பிறகு முக்கியமாய் அந்த முனிசிபாலிட்டியிலுள்ள எந்த சிப்பந்தியினுடையவும் சம்பளத்திற்கும் குறையாத சம்பளம் தான் சேர்மெனுடைய சம்பளமாக இருக்க வேண்டும்.

நிற்க, மற்ற சம்பளம் முனிசிபாலிடிகளின் யோக்கியதைகளையும், சம்பளத்தையும் கவனித்து அந்த விகிதாசாரம் தமக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் திரு நாயுடு அவர்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு உத்தியோகஸ்தருக்கு தம்மை விட குறைந்த சம்பளம் வாங்கும் சேர்மெனிடம் தக்க மதிப்பும் மனப்பூர்வமான கீழ்ப்படிதலும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியவே முடியாது. ஒரு சமயம் வார்த்தை அளவில் வேண்டுமானால் தர்க்கம் பேசலாமேயொழிய காரியத்தில் அந்தந்த சம்பளத்திற்கேற்ற இயற்கைத் தன்மை மாறவே மாறாது. இதை உத்தேசித்தே மதுரை முனிசிபல் மெஜாரிடி கவுன்சிலர்கள் சேர்மென் ஸ்தானத்தின் கவுரவத்தை காப்பாற்றக் கருதி சிப்பந்தி சம்பளத்தைவிட சேர்மேனுக்கு அதிகச் சம்பளம் இருக்க வேண்டும் என்கின்ற நியாயமான எண்ணத்தின் மீது சமீபத்தில் சேர்மெனுக்கு ஒரு சம்பளத் திட்டம் முனிசிபல் கவுன்சில் கூட்டத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் சில கவுன்சிலர்கள் பார்ப்பன சூழ்ச்சியாலும் சில கவுன்சிலர்கள் சொந்த அபிப்பிராய பேதத்தாலும் சில கவுன்சிலர்கள் உண்மையிலேயே முனிசிபாலிட்டியின் நன்மையைக் கோரி என்கின்ற எண்ணத்தின் பேரிலும் இத் தீர்மானத்தின் மீது அதிருப்தி கொண்டு தங்களுடைய சம்மதமின்மையைக் காட்டினார்கள். அந்தப்படி காட்டிக் கொள்ள அவர்களுக்கு தாராளமாய் உரிமையுண்டு. என்றாலும் பார்ப்பனர்கள் வழக்கம்போல் இந்த சம்பவத்தைத் தங்களுக்கு அனுகூலமாக கொண்டு பாமர மக்களிடம் விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்றாலும் நியாயபுத்தியுள்ள மெஜாரிட்டி கவுன்சிலர்கள் இதைப்பற்றி தீர கவனித்து இவ்விஷமப் பிரசாரத்திற்கு சிறிதும் பயப்படாமல் சேர்மென் ஸ்தானத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டி ஏதாவது சிறிதானாலும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்கின்ற தீர்மானத்துடன் தயாராய் வந்திருந்தார்கள். ஆனால் இதைச் சேர்மென் திரு. நாயுடு அவர்கள் நன்றாய்த் தெரிந்திருந்தும் யார் எதிர்த்தாலும் பிரேரேபணை பெருமித ஓட்டுகளால் நிறைவேறும் என்பதை உணர்ந்திருந்தும் தாம் அதை ஏற்றுக் கொள்ளாமலும் ஓட்டுக்கு விடாமலும் தைரியமாய் பெருந்தன்மையுடன் எழுந்து மறுத்து விட்டதுடன் தீர்மானம் கொண்டு வந்தவர்களையும் வாப்பீசு வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

உடனே அங்குள்ளவர்கள் சேர்மெனுடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கரகோஷம் செய்தார் கள். ஆனால் இந்த பெருந்தன்மையான காரியத்தை பாராட்டாமல் சில பார்ப்பனர்களும் அவர்களது வாலுகளும் மற்றும் சில பொறுப்பற்றவர்களும் இதைப் பற்றி பரிகாசம் செய்யக்கூடும். அதாவது “சேர்மென் பயந்து கொண்டார்” என்றும் கலகக்காரர்கள் “பொதுஜனங்கள் வெற்றிபெற்று விட்டார்கள்” என்றும் யோக்கிய பொறுப்பற்ற முறையில் பேசவும் எழுதவும் கூடும். ஏனெனில் நமது நாட்டில் சிலருக்கு இதைத் தவிர வேறு வழியில் பிழைப்பு மார்க்கமில்லாமல் போய்விட்டது.

யாரையாவது குத்திவிடுவதும், எவருக்காவது கோபம் வரச்செய்வதும், அப்படிச் செய்யப்பட்டவர்கள் கோபத்தில் ஏதாவது செய்ய மாட்டார்களா அதைப் பிடித்துக் கொண்டு மேலே போகலாமென் பதும் ஆகியவைகளே இப்போது இவர்களால் செய்யக்கூடுமான நிர்மாண காரியங்களாக இருக்கின்றன. ஆதலால் மதுரை முனிசிபல் கவுன்சிலர்கள் அப் பொறுப்பற்றவர்களின் எழுத்தையும் பேச்சையும் பிரமாதமாகக் கருதக்கூடா தென்றே சொல்லுவோம். தவிர நாம் மேலே காட்டிய சம்பள வித்தியாசங்களைச் சரிபடுத்தி சேர்மென் ஸ்தானத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற மதுரை முனிசிபல் கவுன்சிலர்கள் ஒன்று கூடி ஏதாவது ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இதற்காகச் சேர்மென் அவர்கள் சம்பளத்தை உயர்த்தியே ஆக வேண்டுமென்பதாகவே நாம் சொல்ல வரவில்லை. சேர்மென் அவர்கள் சம்பளத்தை உயர்த்துவதை விட சிப்பந்தி சம்பளத்தைக் குறைப்பது நல்ல காரியமாகும் என்றும் சொல்லு வோம். அது முடியாவிட்டால் உயர்த்தி தான் ஆகவேண்டும் என்பதையும் வலியுறுத்தாமலிருக்க முடியவில்லை. ஆதலால் மதுரை முனிசிபல் கவுன்சிலர்கள் விஷமக்காரர்களின் வீண்கூச்சலுக்குப் பயந்து கொள்ளாமல் ஏதாவது ஒரு மார்க்கத்தை சீக்கிரம் செய்ய வேண்டியது அவசியமான காரியமாகும்.

(குடி அரசு - கட்டுரை - 07.07.1929)

Pin It