தென்னிந்திய செங்குந்தர் முதலாவது மகாநாடு ஈரோட்டில் இம்மாதம் 19, 20-ந் தேதிகளில் வெகு சிறப்பாய் நடந்தேறியது. அதோடு கூடவே வர்த்தக மகாநாடும் வாலிப மகாநாடும் நடந்தேறி இருக்கின்றன. மேல்கண்ட மகாநாடுகளைத் திறந்து வைத்த கனவான்களும் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டி அக்கிராசனர்களும் மகாநாடுகளின் தலைவர்களும் செய்த சொற்பொழிவுகள் நீண்ட வியாசங்கள் ஆனதால் அவற்றைக் ‘குடி அரசி’ல் பிரசுரிப்பது சாத்தியமற்றதாய் இருந்ததால் பிரசுரிக்க முடியவில்லை, என்றாலும் மகாநாட்டுக் கொடியை உயர்த்திய காஞ்சீபுரம் மாஜி சேர்மென் திரு. ம.த. சாமிநாத முதலியார் அவர்களது உபந்யாசம் செங்குந்த சமூகத்தின் பெருமையை எடுத்துக் காட்டும் முறையில் கந்த புராணத்தில் உள்ள முருகன் உற்பவக் கதையாகவே இருந்தது.

periyarr 450மகாநாட்டைத் திறந்து வைத்த திரு.திவான் பகதூர் எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் சொற்பொழிவில் விவசாயமும் கைத் தொழிலும் நாட்டுக்கு முக்கியமென்று சொல்லி “கைத் தொழிலை விர்த்தி செய்ய வேண்டும், உலக வியாபார பாஷையாகிய ஆங்கிலத்தை விர்த்தி செய்ய வேண்டும், பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். செங்குந்த வாலிபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நெசவு சம்மந்தமான தொழில் கற்க வேண்டும்” என்றும் இது விஷயத்தில் அபிவிர்த்தி மந்திரி கனம் சேது ரத்தினமய்யரிடம் தாம் சிபார்சு செய்வதாகவும் சொன்னது மிகவும் குறிப்பிடத்தக்கதும் நன்றி செலுத்தத் தக்கதுமாகும்.

வரவேற்பு அக்கிராசனர் திரு.வி.எஸ்.செங்கோட்டையா அவர்களின் வரவேற்பு உபன்யாசம் மிக நீண்டு இருந்ததில் புராணக் கதைகளும், பண்டைப் பெருமைகளும் செங்குந்தர் பிரிவுகளும் சில பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஒற்றுமை, கல்வி, கைத்தொழில், வியாபாரம், கூட்டுறவு முறை முதலிய முக்கிய விஷயங்களைப் பற்றி தெளிவாய் எடுத்துக் கூறி வற்புறுத்தி இருப்பது மெச்சத்தக்கதாகும்.

கூட்டுறவு பாங்கி விஷயத்தைப் பற்றி அவர் சொல்லி இருக்கும் விஷயம் எல்லாவற்றிலும் முக்கியமானது என்பதோடு அச்சமூகப் பிரமுகர்கள் உடனே அமுலுக்குக் கொண்டு வர வேண்டிய காரியம் என்றும் கருதக் கூடியதாகும்.

மகாநாட்டுத் தலைவர் புதுவை திரு. எ.வி.முத்தையா முதலியார் அவர்கள் தலைமைப் பேருரை மிகமிகப் போற்றத்தக்கதாகும். பண்டைப் பெருமையைச் சொல்லி மகிழ்வதோ, புராணக் குப்பைக் கதையைச் சொல்லி பெருமை கொள்ளுவதோ ஒரு சிறிதும் அதில் இல்லை. அவர் கூறியவற்றுள் முக்கியமாக “உலகத்தில் இப்போது தோன்றி நிற்கும் உயர் இயக்கத்தில் ஒழுக்க இயக்கத்தில் சேராதவர்கள் தாழ்வடைந்து விடுவார்கள். ஒழுக்கம் குன்றி, வேஷம் மிகுந்ததாலேயே, குலம் தாழ்ந்தது, இந்தத் தாழ்ந்த நிலைக்கு மக்கள் வர நேர்ந்தது என்றும் சொல்லி “அப்பேர்ப்பட்ட உயர் இயக்கம் நடைபெறத் தடை செய்யாமல் இருப்பதே ஒழுக்கத்தின் கடமை” என்றும், வெறும் ஆசாரங்களால் கட்டுண்டு நிற்பது மனிதத்தன்மை அல்ல என்றும், உண்மையை மறைத்து நிற்கும் இருளைப் போக்க வேண்டும் என்றும், உண்மையான பரிசுத்தத்தை மறந்துவிட்டு வெறும் பழக்கம் வழக்கம் என்கின்ற மூடநம்பிக்கையில் விழுந்து உழலுகின்றோம் என்றும், செங்குந்த மக்களிடை சில உயிரற்ற ஆசாரங்கள் உண்டு என்றும், இந்தக் குல ஆசாரங்களிலேயே பிறர் ஏளனமும் அவமதிப்பும் செய்கிறார்கள் என்றும், ஒரு குலத்தவர்களை அச்சார்பாளரிடம் பரவி இருக்கும் தீய வொழுக்கங்களே தாழ்த்துகின்றன என்றும் மற்றும் பிள்ளைகளை அளவுக்கு மீறிப் பெற்று விடுவதில் உள்ள கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி பிள்ளைப் பேற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,

உண்மையின் பின் சென்றால், போலிச் சாதியார் உண்மைச் சாதியார் என்கின்ற சண்டைகள் நிகழா என்றும், பிறழ்ச்சியான வழியில் வந்தவர்கள், தாங்கள் நேர்வழியில் வந்தவர்கள் என்று சாதிக்க மாட்டார்கள் என்றும், தங்கள் வழி யாதாயினும் தங்களிடையே நல்லொழுக்கத்தை அமைத்துக் கொள்வதே முன்னேற்றத்தின் முதற்படி என்றும், உலகப் போக்கையும் உயர் இயக்கத்தையும் ஒழுக்கத்தின் உண்மையையும், அதன் அமைப்பையும் நன்றாய் அறிந்து கொண்டால்தான் நம்மிடையில் உள்ள கொடிய ஆசாரங்கள் தொலையும் என்றும், கல்வி விஷயத்தில் மேல்கண்ட ஒழுக்கத்திற்குத் துணை நிற்கும் கல்வியே வேண்டுமல்லாமல், ஒழுக்கமற்ற கல்வி வேண்டாம் என்றும்,

பெண்கள் விஷயத்தில் எங்கே பெண்கள் முன்னேற்றமடைய வில்லையோ அக்குலத்தவர்கள் தாழ்ந்த குலத்தவர்கள் ஆக இருப்பார்கள் என்றும், ஒழுக்கம் என்பது ஆண்பெண் இரு பாலாருக்கும் சமம் என்றும் சரிபகுதியான பெண்மக்களைச் சேர்க்காமல் ஆண் மக்கள் மாத்திரம் தமது ஜாதியை முன்னுக்குக் கொண்டுவர முயற்சிப்பது காலில்லாமல் நடக்க ஆசைப்படுவது போன்றது என்றும், தொழிலைப் பற்றிச் சொல்லும்போது தொழில் செய்வார்களுக்கு நாணயமும் நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்றும், தேகப்பிரயாசை கொஞ்சமானதும் கூலி அதிகம் கிடைக்கக் கூடியதுமான தொழில்கள் நடைபெற வேண்டுமென்றும், மதவிஷயத்தில் கோயில் கட்டுவதிலும் உத்சவங்கள் செய்வதிலும், பொருள்கள் செலவாகின்றன வென்றும் இதனால் என்ன பயன் என்றும், தற்புகழ்ச்சி தற்பெருமைக்கு என்கின்ற அறியாமை இல்லாவிட்டால் இச்செலவை அறிவாளிகள் செய்ய மாட்டார்கள் என்றும், அப்படி ஏதாவது கடவுள் கஷ்டநஷ்டப்படுத்தினால் அப்படிப்பட்ட கடவுள் கடவுளாகாதென்றும் கோவிலிலிருக்கும் கடவுளுக்கென்று செய்யும் காரியங்கள் யாதொரு பலனையும் கொடாது என்றும், கஷ்டப்படும் மனிதர்களை கடவுளாக நினைத்து அவர்களுக்கு வேண்டியது செய்வதே நன்மை என்றும் பலதுறைகளிலும் உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

அடுத்தாற் போல், வர்த்தக மகாநாட்டின் வரவேற்புத் தலைவர். திருச்செங்கோடு திரு. கந்தப்ப முதலியார் அவர்களின் வரவேற்பு உபன்யாசத்தில், அச்சமூகத்தாருக்கு மாத்திரமல்லாமல் பொதுவாக இந்திய வர்த்தகத்திற்கே முக்கியமான பல யோசனைகள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. கூட்டுறவுத் துறையில் வியாபாரத்தை பெருக்கப் பலவழிகளும் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செங்குந்த சமூகத்திற்கென்று ஒரு தனி கூட்டுறவு இலாக்கா ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை நாம் மனதார ஆதரிப்பதோடு அதை அரசாங்கத்தாரும் கவனிக்க விரும்புகின்றோம்.

வர்த்தக மகாநாட்டுத் தலைவர் திருவாளர். தென்காசி ப.கு.ஆறுமுக முதலியார் அவர்கள் தலைமையுரையில் வர்த்தகர்களுக்கு சில பொருத்தமான யோசனைகள் காணப்படுகின்றதுடன், நெசவுத் தொழில் நசித்துப் போவதற்குக் காரணம் போதிய ஊதியம் இல்லாததுவே என்றும், பிள்ளைகளுக்கு பழையமுறை நெசவுத் தொழிலைக் கற்பிப்பது பயனற்றதென்றும் புதிய முறைகளைக் கற்பிக்க வேண்டும் என்றும் காணப்படுவதோடு, கடைசியாக தனவந்தர்களும் சந்ததி இல்லாதவர்களும் வியாபாரிகளும் கோயில் முதலிய தர்மங்களுக்கும், மறுபிறப்பில் பயன்தருவதாய்ச் சொல்லப்படும் காரியங்களுக்கும் சில காலத்திற்காவது செலவு செய்யும் பொருள்களை நிறுத்தி இம்மை வாழ்க்கையில் நம் முன்னேற்றத்திற்காக வழங்கி வந்தால் அதைவிட பெரும்புண்ணியத்தை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று சொன்னதோடு, நூற்றாண்டுகளுக்கு முன்செய்து வந்த முறையிலேயே தொழில்களைச் செய்யக் கூடாது, நவீனமானதும் அதிக ஊதியம் தருவதுமான தறிகளையும் அவசியமான இயந்திரங்களையும் கொண்டு அப்போ தைக்கப்போது புதுமாதிரியான காரியங்களைச் செய்ய வேண்டுமென்று சொன்னவைகள் செங்குந்த சமூகத்தாரும் இதர சமூகத்தாரும் மிகுதியும் கவனிக்கத் தக்கது என்போம்.

வாலிபர் மகாநாடு

பிறகு கூடிய வாலிப மகாநாட்டு வரவேற்பு அக்கிராசனர் திரு.என்.எம். ஷண்முகசுந்தர முதலியார் வரவேற்பு உபன்யாசத்தின் ஆரம்பத்திலேயே சுயமரியாதை உணர்ச்சியையும் சமூக சீர்திருத்தத்தையும் மக்களின் விடுதலைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டியதுடன் அவற்றிற்கு வாலிபர்களே தகுந்தவர்கள் என்று வற்புறுத்தி இருப்பது நாட்டின் உண்மை நிலையை நன்றாய் உணர்ந்து கூறியதாகும். அன்றியும் விவாதமான அரசியல் துறையில் இறங்கி குழப்பம் முதலான தீய வழியிலிழுக்கப்பட்டு பேராபத்தை விளைவித்துக் கொள்வது இளைஞரியக்கத்திற்குச் சிறிதும் ஏற்காது என்று குறிப்பிட்டிருப்பது நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு வாலிபரும் கருத்தில் இருத்தி வைக்க வேண்டிய பொன்போன்ற வாசகமாகும்.

சமூக சமரசமில்லையாயின் நாம் விடுதலையைப் பெற இயலாது; பெற்றாலும் நிலைக்காது என்பது கல்லின் மேலெழுதி வைக்க வேண்டிய சொல்லாகும். முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள எதையும் ஒழிக்க வேண்டும். இத்துறையில் வயதான பெரியோர்களின் மனஸ்தாபத்தை லட்சியம் செய்யக் கூடாதென்றும், பெண் கல்வி, விதவா விவாகம் முதலிய வைகளைத் தாராள நோக்கத்துடன் வலியுறுத்தி, ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விவாகங்கள் செய்து கொண்டு பெண்களுக்கு விதவா விவாகத்தைக் கூட அனுமதிக்க ஆnக்ஷபிப்பது பெரிய பாதகமான செயலாகும் என்று சொல்லியிருப்பதும், ஒழுக்கம், தேகப் பயிற்சி ஆகியவைகளை வலியுறுத்தி இருப்பதும் வாலிபர்களுக்கு தக்க உபதேசமாகும்.

மகாநாட்டுத் தலைவர் திருவாளர் குடியாத்தம் மா.வெ. பீமராஜ முதலியார் அவர்களது தலைமைப் பேருரையில் சமூக இயக்கங்களின் அவசியத்தையும் சமூக சீர்கேட்டிற்குக் காரணம் ஜாதி வித்தியாசத்தை மதத்தோடும் கடவுளோடும் இணைத்திருப்பதே யென்பதையும், சமஉரிமையும் சமசந்தர்ப்பமுமில்லாத நாடு விடுதலை அடையாது என்பதையும் முன்னேற்றமடைந்து முதற்படியிலிருக்கும் பார்ப்பனர்களே, பிராமணசபை கூட்டும்போது நாம் நமது சமூக சபை கூட்டி சமத்துவத்திற்குப் போராடுவது குற்றமல்ல என்றும், துருக்கி, ஆப்கான், ருஷியா, சைனா, ஜப்பான் முதலிய தேசங்கள் விடுதலை பெற்றதைக் கவனிக்கும்படிக்கும் குறிப்பிட்டிருப்பதுடன் பொருள் அறியாது தேவாரம் படித்து விபூதி, ருத்திராக்கமணிவதும் அடியார்கள் சரித்திரமும் கடவுள் திருவிளையாடலையும் படிப்பதும் பாடம் பண்ணுவதும், கலாசாலை பட்டம் பெறுவதும் மதமும் கல்வியுமாகிவிடாது என்றும், உலக அனுபவமே சரியான கல்வியாகும் என்றும், புராணப் பெருமை போதாதென்றும், சுய ஆராய்ச்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டு மென்றும், குறிப்பிட்டுவிட்டு கைத்தொழில் விஷயத்தில் இயந்திரங்களோடு போட்டி போட வேண்டிய இக்காலப் போக்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்குப் போக வேண்டுமென்பது நாடு க்ஷீணித்துப் போவதற்கு காரணமாகுமென்றும் வெறும் நெசவுத் தொழிலே குலதர்மம் என்று எண்ணி இருந்ததே நமது வறுமைக்குக் காரணமென்றும், ஒவ்வொருவரும் தங்களால் கூடிய எல்லா தகுதியான தொழிலையும் செய்ய முந்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதுடன் கோவில், உத்சவங்களுக்கு பொருள் செலவிடுவது பற்றியும், கோவில்களினால் உண்டாகும் விபரீத பலன்களைப் பற்றியும், மத விஷயத்தில் முரட்டு நம்பிக்கையை விட வேண்டும் என்றும், நமக்குப் பொருந்தாததும், விளங்காததுமான நூல்களும் நமக்கு சரியென்று அனுபவத்திற்குத் தோன்றாத கொள்கைகளும் வேண்டியதில்லை என்றும் நம் மக்களுக்கு குறுகிய புத்தி உண்டானதற்கு நமது சமயத்தில் சொல்லப் பட்டவைகளை சத்தியம் என்று நம்பினதே முக்கிய காரணம் என்றும், பெண்களுக்கு சமஉரிமையும் சொத்துரிமையும் வேண்டுமென்றும் குறிப்பிட்டிருப்பதும் எல்லோரும் கவனித்துப் பார்க்கத்தக்கதாகும்.

தீர்மானங்களைப் பற்றிய முழுத் தகவல்கள் இதுவரை தெரியவில்லை. ஆயினும் கூடுமானவரை முற்போக்குள்ள அறிகுறிகளே காணப்படுகின்றன. மகாநாடு நடத்திய திறமையும், பிரதிநிதிகள் முதலியவர்களுக்கு செய்து கொடுத்த சவுகரியங்களும் போற்றற்குரியதேயாகும். பொதுக் காரியதரிசி. திரு. டி.வி. நடேசமுதலியார் அவர்களும் மற்றும் உள்ளூர் வாசிகளான திரு.ந.மு. ஷண்முகசுந்தரம், சென்னியப்பன், மீனாக்ஷி சுந்தரம், மொட்டயப்ப முதலியார், செங்கோட்டையா பிரதர்ஸ், வி.வி.சி.பிரதர்ஸ் முதலியவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் மகாநாட்டின் இவ்வளவு பெருமைக்கும் காரணமென்று சொல்வது மிகையாகாது. ஆனாலும், புராணக் கூற்றிற்கு அடிமைப்பட்டவர்களும் தங்களை உயர்ந்த ஜாதியென்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆணவப் பான்மையுடையவர்களுமாய் உள்ள ஒரு சிலரும் தங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொண்டு பகுத்தறிவிற்கு மதிப்புக் கொடுக்க இசைந்து தொண்டாற்ற முன்வந்துவிடுவார்களானால் செங்குந்த சமூகம் மாத்திரமல்ல; இத்தேச மக்கள் எல்லோருக்குமே சுதந்திர உணர்ச்சியும் சுயமரியாதையும் திடீரென்று ஏற்பட்டுவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

செங்குந்த சமூகம் ஒரு பெரிய முற்போக்குள்ள சமூகமானதாலும் தக்க செல்வந்தர்களும் ஊக்கமுள்ளவர்களும் தாராள நோக்கமுள்ளவர்களும் பொதுக்காரியங்களுக்கு தாராளமாய் உதவக் கூடியவர்களும் எவ்வித இயக்கத்திற்கும் தயாராயுள்ள வாலிபர்களும் மலிந்துள்ள சமூகமானதால் அது பிராமண மகாநாடு, சௌராஷ்டிர பிராமண மகாநாடு, விஸ்கர்மா பிராமண மகாநாடுகள் போன்று ஜாதிப் பெருமையை சொல்லிக் கொண்டு மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற மந்திரத்தில் இல்லாமல் தற்கால நிலைக்கேற்ற வண்ணம் நாட்டின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் உதவ வேண்டுமென்பதே நமது அவா. ஆதலால், இவற்றைப் பற்றி இவ்வளவு விரித்து நமது ஆசையையும் தெரிவித்துக் கொண்டோம். அடுத்த மகாநாடு இது போல் பதினாயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்யாமலும் இந்த மகாநாட்டுத் தீர்மானங்களைவிட தாராள மனப்பான்மையுடன் ஒருபடி முன்னேறியும் வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 27.01.1929)

Pin It