சுயராஜ்யக் கட்சியார் என்கிற தமிழ் நாட்டுப் பார்ப்பனக் கட்சியாரின் பூளவாக்கு சென்ற மாதம் சட்டசபை வரவு செலவு திட்டத்தின் போது வெளியாய் விட்டதால், அதை மறைக்க என்னென்னமோ தந்திரங்களும் மந்திரங்களும் செய்கிறார்கள். என்ன செய்தும் அதை மறைக்க மறைக்க நாற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. இவர்களின் நடவடிக்கையைப் பற்றி இவர்களுக்கு உதவி செய்து வந்த தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தேசிய பத்திரிகைகள் என்று சொல்லப்படும் “தமிழ்நாடு”, “நவசக்தி”, “தேசபந்து” முதலிய பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும், “சுயராஜ்யா”, “ஹிந்து” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும், “வசுமதி”, “மராட்டா” முதலிய வெளி மாகாணப் பத்திரிகைகளும் கண்டித்திருக்கும் சாராம்சத்தை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். இதுகளிலிருந்து “சுதேசமித்திரன்” என்கிற ஒரு பார்ப்பனப் பத்திரிகை போக, மற்றபடி பார்ப்பனர் தயவில் நடக்கும் பத்திரிகைகள் கூட வேஷத்திற்கானாலும் கண்டிக்காமல் விடவேயில்லை. ஆகவே இப்பார்ப்பனர்களின் நடத்தை மோசமானதென்பதும் வஞ்சகமானதென்பதற்கும் இனி யாரும் சந்தேகப்பட இடமேயில்லை. ஆனால் இக்கூட்டத்தார் கொஞ்சமும் தங்கள் காரியத்திற்கு வெட்கப்படாமல், இதற்கு சமாதானம் சொல்லப் புறப்பட்டிருக்கும் யோக்கியதையைப் பார்க்கும் போது ஜனங்களை இவர்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டுவதற்காக இதை எழுதுகிறோமேயொழிய வேறில்லை.

periyar 391அதாவது, சென்ற சனிக்கிழமை மாலை சௌந்தர்ய மகாலில் “மந்திரிகளின் சம்பளத்திற்கு ஆதரவளித்ததற்கு காரணம்” சொல்லுவதற்கு என்று ஒரு கூட்டம் கூட்டி, அதில் பேசிய பேச்சுகளின் யோக்கியதையைப் பொது ஜனங்களின் கவனிப்புக்கு கொண்டு வருகிறோம். ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் தலைமை வகித்துப் பேசியதில், அவர் மந்திரிகளை ஆதரிப்பதற்கு சொல்லும் காரணங்களாவன:-

“இருக்கும் மந்திரியை துலைத்துவிட்டால், ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் வந்து விடுவார்கள். ஜஸ்டிஸ் கட்சியாரை தேசத்தார் விரும்பவில்லை.” ஜஸ்டிஸ் கட்சியார் செய்த குற்றம் என்னவென்றால் “அவர்கள் வகுப்புவாதம் பேசுகிறார்கள்.” சுற்றி சுற்றி இந்த விஷயங்களைத் தான் தங்கள் நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்லுகிறார்கள். இதிலிருந்தே இவர்கள் செய்து வந்த தந்திரமும், சூழ்ச்சியும், போட்டுக் கொண்ட வேஷமும் எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்துக் கொண்டேயல்லாமல் வேறு ஏதாவது இருக்கிறதாகத் தெரிகிறதா?

“இரட்டை ஆட்சியை ஒழிப்பதும்,” “சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதும்,” “அரசாங்கம் நடைபெறாமல் முட்டுக்கட்டை போடுவதும்” இப்போது என்னவாயிற்று? இவைகளை ஆதரித்த “தேசீயவாதிகள்” “உரிமைக்காரர்கள்” நாம் இந்த விஷயத்தை அந்தக் காலத்திலேயே எடுத்துச் சொன்னபோது, “நாயக்கர் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் விட்டார். காங்கிரசுக்கு விரோதமாய்ப் போய்விட்டார், காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய்ப் போய்விட்டார்” என்று சொல்லிக் கொண்டு திரிந்து விட்டு, இப்போது நாம் சொன்னதெல்லாம் நிஜமானவுடன் நம்முடன் கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டு “சுயராஜ்யக் கட்சி அயோக்கியக் கட்சி, பார்ப்பனக் கட்சி என்று அப்போதே சொன்னேன், இப்போதே சொன்னேன் ” என்று நாட்டுக்கு நல்ல பிள்ளைகளாகப் பார்க்கிறார்கள்.

சுயராஜ்யக் கட்சியார் அயோக்கியர்களா அல்லது அவர்களுக்கு ஆதிக்கம் தேடிக்கொடுத்து, பாமர மக்களையும் அவர்களை நம்பும்படி செய்து, சதி செய்து தேசத்தையும் சமூகத்தையும் பாழாக்கினவர்கள் அயோக்கியர்களா? என்பதை யோசிக்க விரும்புகிறோம். சுயராஜ்யக் கட்சியாரிடம் அந்தக் காலத்திலும் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே சொல்லுவோம். அவர்களை ஜனங்கள் எவ்வளவு வெறுக்க வேண்டுமோ அவ்வளவு கயா காங்கிரஸ் முதல் வெறுத்துக் கொண்டுதான் வந்தார்கள். ஆனால் எப்படியோ தந்திரத்தாலும் வேஷத்தாலும் பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்ற பலர் அவர்களை ஆதரித்ததாலும் பல கிளி பிள்ளை பத்திரிகைகள் சுயபுத்தி இல்லாமல் பிதற்றினதாலும், சுயராஜ்யக் கட்சியார் தங்கள் விஷயங்களை நாட்டில் பரப்ப முடிந்ததே தவிர வேறில்லை.

ஆனாலும் இப்பொழுதும் கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியார் செய்த தப்பிதமென்ன? “அதிகாரங்களைக் கைப்பற்ற முயற்சித்தார்கள்” என்றே வைத்துக் கொள்ளுவோம். வேறு எந்தக் கட்சி முயற்சிக்கவில்லை?

“தங்கள் இனத்தாருக்கு உத்தியோகம் கொடுத்ததாகவே” வைத்துக் கொள்ளுவோம். எந்த கட்சி அப்படிச் செய்ய வில்லை?

“ஒத்துழையாமையின் போது அதற்கு விரோதமாயிருந்தார்கள்” என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்த சுயராஜ்யக் கட்சியார் ஒத்துழையாமைக்கு அநுகூலமாயிருந்தார்களா? ஜஸ்டிஸ் கட்சியாராவது வெளியில் இருந்து கொண்டு மனதில் பட்டதை ஒளிக்காமல் சொன்னார்கள், செய்தார்கள். சுயராஜ்யக் கட்சியார் கூட இருந்தே குடியை கெடுத்தார்கள்.

மற்றபடி “ஜஸ்டிஸ் கட்சியார் சர்க்காருக்கு அநுகூலமாயிருந்தார்கள்” என்றே வைத்துக் கொள்ளுவோம். வேறு எந்தக் கட்சி சர்க்காரை எதிர்த்தது, எந்தக் கட்சி சர்க்காருக்கு ஆதரவில்லாமலிருக்கிறது? சந்தர்ப்பமில்லாத காலத்தில் சீ அந்தப் பழம் புளிக்கும் என்று சொன்னதே அல்லாமல் சர்க்கார் சம்பளம் பெறாமலும் அவர்களது பட்டம் பதவி பெறாமலும் எந்தக் கட்சி இருக்கிறது?

“ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் தேசபக்தர் என்பவர்களை வைததாகவே” வைத்துக் கொள்ளுவோம். காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி தலைவர், காரியதரிசிகள் முதலியவர்கள் தேசபக்தர்கள் என்பவர்களை ஜெயிலில் வைக்கும்படியும் அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தும்படியும் சர்க்காரையும் சட்ட மெம்பரையும், அட்வகேட் ஜனரலையும் கெஞ்சவில்லையா? ஊர் ஊராகப் போய் தேசியப் பத்திரிகை என்பவைகளின் பேரில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி ஒத்துழையாமைக் கட்சித் தலைவர்கள் முதல் எல்லோரும் சொல்லவில்லையா?

“ஜஸ்டிஸ் கட்சியார் சட்டசபையில் அக்கிரமம் செய்ததாகவே” வைத்துக் கொள்ளுவோம். காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் தேவஸ்தான சட்டம் போன்ற அவசியமும் முக்கியமான சட்டங்களை எதிர்க்கவில்லையா?

“ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள தனிப்பட்ட நபர்களில் சிலர் யோக்கியர்கள் அல்லவென்றே” வைத்துக் கொள்ளுவோம். சுயராஜ்யக் கட்சியிலும் ஒத்துழையாமைக் கட்சியிலும் உள்ளவர்கள் எல்லாம் யோக்கியர்கள்தானா? ஒருவர் கூட அயோக்கியர்கள் இல்லையா? என்று கேட்கிறோம்.

“ஜஸ்டிஸ் கட்சியில் சிலர் வயிற்றுப் பிழைப்புக் காரர்கள் இருக்கிறார்களென்றே” வைத்துக் கொள்ளுவோம். சுயராஜ்யக் கட்சியில் உள்ளவர்கள் எல்லோருமே தேச பக்தர்கள் தானா? ஒருவராவது வயிற்றுப் பிழைப்புக்காரர் இல்லையா? வென்றுதான் கேட்கிறோம்.

ஆகவே, எந்த வழியிலும் “சுயராஜ்யக் கட்சியாரை” விட “ஜஸ்டிஸ் கட்சியார்” எந்த வகையில் குற்றமானவர்கள்?

கொள்கையைப் பற்றிப் பேசுவதானாலும் “ஜஸ்டிஸ்” கட்சிக் கொள்கையானது வேறு எந்தக் கட்சிக் கொள்கைக்கு இளைத்ததாயிருக்கிறது?

யோக்கியமான பொது மனிதன் கிடைப்பானானால் எல்லா கட்சி கொள்கைகளையும் விட ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளையே உயர்ந்தது என்று சொல்லுவான். உயர்ந்ததாக இல்லாவிட்டாலும் எந்த கொள்கைக்கு மட்டம் என்று சொல்லக்கூடும்?

ஆகவே கிளர்ச்சியும், வேஷமும், யோக்கியப் பொறுப்பில்லாதவர்களின் புரட்டுகளையும் நம்பி பாமர மக்கள் ஏமாந்து “கங்காதரா மாண்டாயே” என்று கத்துவதுமல்லாமல், வேறு என்ன காரியத்தைக் கண்டு குற்றம் சொல்லக்கூடும்?

ஒருசமயம் பார்ப்பனர்களை “ஜஸ்டிஸ்” கட்சியில் சேர்த்துக் கொள்வதில்லை. இது ஒரு வகுப்பாரைத் தள்ளி வைக்கும் கட்சியாய் இருக்கிறது. ஆதலால் அது சரியான கட்சி ஆகாது என்று சிலர் சொல்லக் கூடும். முஸ்லீம் லீக் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளுகிறதா ? அந்த காரணத்திற்காக அதை யாராவது வெறுக்கப் பிரயத்தனப்படுகிறார்களா? அதை யாராவது குற்றம் சொல்லுகிறார்களா? அந்த மந்திரி சபையை அழிக்க யாராவது பிரயத்தனப்படுகிறார்களா? அதை அழிக்கப் பிரயத்தனப்படுகிறவர்களுடன் எந்த முஸ்லீமாவது சேருகிறார்களா?

எனவே, அந்த வழியிலும் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளாததால் ஒரு கட்சியையோ, சங்கத்தையோ அழிக்க வேண்டுமென்பது ஞாயமில்லை என்பதும் யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது. ஆகவே, ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரியாய் வந்து விட்டால் என்ன முழுகிப் போய்விடும்? அவர்கள் மந்திரித்துவத்தை எந்த ஜனங்கள் வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்.

பின்னை எந்தக் கட்சியின் மந்திரித்துவத்தை ஜனங்கள் விரும்பி அவர்களையே மந்திரிக்கு லாயக்காகும்படி தெரிந்தெடுத்திருக்கிறார்கள். 30 பேர்கள் உள்ள ஒரு கூட்டத்தின் மந்திரித்துவத்தையே ஜனங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகக் கருதப்படுமானால் ஏழுபேர் கூட இல்லாததான கூட்டத்தின் மந்திரித்துவத்தையா ஜனங்கள் விரும்பினதாகக் கருதுவது?

ஜஸ்டிஸ் கட்சியார் இந்த மந்திரி சபை கலைந்தால், மறுபடியும் இந்த சபைக்கு மந்திரிகளாய் வருவதில்லை என்று சொன்னால், “இந்த சபை கலைந்து மறு தேர்தல் ஏற்பட்டு மறு தேர்தலில் வந்து விடுவார்கள். ஆதலால் இந்த சபையை கலைக்க விட மாட்டோம்” என்று சொல்வதில் எவ்வளவு பேடித்தனமும், ஆண்மையற்றதனமும், அயோக்கியத்தனமும் இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

மறு தேர்தல் வந்தால், மறு தேர்தலில் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டால்தானே. அதுவும் மந்திரிகளாக இவர்களே வர வேண்டும் என்று ஜனங்கள் விரும்பினால்தானே இவர்கள் வரக்கூடும்.

ஆதலால் சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்தே மக்கள் சுயராஜ்யக் கட்சியாரின் அயோக்கியத்தனத்தைத் தெரிந்து கொண்டார்கள் என்பதும், ஜஸ்டிஸ் கட்சியாரை இன்னும் அதிகமாகத் தெரிந்தெடுக்காமல் போன முட்டாள்தனத்திற்காக வருந்துகிறார்கள் என்பதும், முன் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியாருக்குத் தேசீயக் கட்சி என்றும், அரசியல் கட்சி என்றும் நினைத்து ஆதரவு காட்டியவர்களும், உதவி செய்தவர்களும், பிரசாரம் செய்தவர்களுமான ஆசாமிகள் இப்போது வெட்கப்படுகிறார்கள் என்பதும், இவர்கள் உதவி அடுத்த தேர்தலுக்கு கிடைக்காது என்று சுயராஜ்யக் கட்சியார் முடிவு செய்து கொண்டார்கள் என்பதும் இதிலிருந்தே விளங்கவில்லையா? என்று கேட்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.04.1927)

Pin It