periyar 522பச்சையப்பன் கலாசாலையில் ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று ஐகோர்ட்டார் தீர்ப்பு சொன்னதின் பலனாக சேர்த்துக் கொள்ள அப்பள்ளி தர்மகர்த்தாக்களில் பெரும்பாலோர் ஒப்புக் கொண்டார்களாம். இந்துக்கள் என்பவர்களுக்கும் இந்து மதம் என்பதற்கும் இதைப்போல் முட்டாள்தனமானதும் அவமானமானதுமான சம்பவம் என்பதாக மற்றொன்றை குறிப்பிட முடியவே முடியாது. ஒரு மனிதன் இந்துவா அல்லவா என்பதற்கு கூட வெள்ளைக்காரர்கள் ஏற்படுத்திய சட்டமும் கோர்ட்டுகளும் தான் தீர்மானிக்க யோக்கியதை யுடையவைகளாக இருக்கின்றதேயொழிய தர்மகர்த்தாக்களுக்கோ இந்து மதம் ஆதாரம் என்பவைகளுக்கோ இந்துமத தலைவர்கள் என்பவர்களுக்கோ கொஞ்சமும் யோக்கியதை இல்லை என்றும், வெள்ளைக்கார கோர்ட்டார் சொன்னால் தான் தர்மகர்த்தாக்கள் ஒப்புக் கொள்ளக்கூடியவர்களே ஒழிய தங்களுக்கு என்பதாக ஒரு சுயபுத்தியும் சுயமரியாதையும் இல்லையென்பதும் இதனால் நன்றாய் விளங்கிவிட்டது.

தவிர தர்மகர்த்தாக்கள் சிலரின் யோக்கியதையை பார்க்கின்றபொழுது இந்த விஷயத்தில் அபிப்பிராயம் சொல்ல நேர்ந்த ஐகோர்ட் ஜட்ஜு நல்ல வேளையாக ஒரு வெள்ளைக்காரராய் இருந்ததினாலேயே ஆதிதிராவிடர்களும் இந்துக்கள்தான் என்று சொல்ல நேர்ந்தது. அல்லாமல் மற்றபடி ஒரு பார்ப்பனனாகவோ அல்லது பார்ப்பன கொள்கையை பின்பற்றும் அவரது அடிமையாகவோ இருந்திருந்தால் இம்மாதிரி சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கத்தக்கதாவும் ஏற்பட்டுவிட்டது. அதாவது பச்சையப்பன் டிரஸ்டி கூட்டத்தில் ஆஜரான 6 டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பனர் இருந்திருக்கிறதாக தெரிய வருவதுடன் அந்த ஒரு பார்ப்பனரும் ஆதிதிராவிடர் இந்துக்களானாலும் கூட அவர்களை கலாசாலையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அபிப்பிராயங்கூறி இருக்கிறதாகவும் காணப்படுகிறது.

விபசாரத்திற்காக சாமிபோராலும் மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விடுவதை தடுக்க வேண்டுமென்று சொன்னால் அது வேண்டாம் என்று சொல்ல தேசீயத் தலைவர்கள் என்று சொல்லும் பார்ப்பனர்களிலேயே பலர் இருக்கும்போது வெறும் பார்ப்பனர்களில் ஒருவர் இதைச் சொல்லுவதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 27.11.1927)

Pin It