மகாத்மா காந்தியும் வர்ணாசிரமமும் என்பதாக இரண்டொரு தலையங்கங்கள் எழுதி வந்ததை நேயர்கள் படித்திருப்பார்கள் . இப்பொழுது மகாத்மா காந்தியும் பார்ப்பனீய பிரசாரமும் என்பது பற்றி எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறோமாகினும் எழுதாமலிருப்பதற்கு முடியவில்லை. இதற்கு முன் எழுதிய தலையங்கத்தில் நாம் கண்டிக்க நேர்ந்த விஷயமானது மகாத்மா அவர்கள் வர்ணாசிரம தர்மம் என்கிற ஜாதிப் பிளவுகள் உண்டு என்றும், அதுவும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்றும் அவனவன் பிறவி ஜாதிக்கேற்ற தர்மத்தையே (தொழிலையே) செய்து தீர வேண்டுமென்றும் அந்தப்படி செய்யாமல் தவறுவானேயானால் அவன் தாழ்ந்த ஜாதியான் ஆகிவிடுவான் என்றும் மகாத்மா சொல்லியும் எழுதியும் வந்த விஷயத்தைத்தான் நாம் தமிழ் நாட்டின் நிலைமையையும், நாகரீகத்தையும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், அவர்களது உரிமையையும் சுயமரியாதையையும் உத்தேசித்து கண்டிக்க நேர்ந்தது.
இப்பொழுது “குதிரை கீழே தள்ளினதல்லாமல் புதைக்குழியும் தோண்டிற்று” என்கிற பழமொழிபோல் பழய புராணப் பிரசாரம் என்கிற பார்ப்பனப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டதைப் பார்க்க நமது மனம் பதறுகிறது. பார்ப்பனரல்லாதாரியக்கத்தின் வேலையின் பயனாகவும் ‘குடி அரசி’னுடையும் மற்றும் சில தமிழ் பத்திரிகையினுடையவும் வேலையின் பயனாகவும் பிடிவாதக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சம் மூட நம்பிக்கைகளையும் புராண புரட்டுகளையும் உதறித் தள்ளி பகுத்தறிவை உபயோகிக்கலாமா என்கிற அளவுக்கு வந்திருக்கிறார்கள். நமது நாட்டுப் பார்ப்பனர்களிலும் ஒரு சாரார் இவற்றிற்கு சம்மதம் கொடுப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லாமல் தாங்களும் குருட்டு நம்பிக்கைகளிலிருந்தும் புராணப் புரட்டுகளிலிருந்தும் விலக வேண்டியது நாட்டின் முன்னேற்றத்தை உத்தேசித்து அவசியமானதென்று சிற்சிலர் பேசியும் வருகிறார்கள் . சமீபத்தில் திருவாரூரில் கூடிய வைஷ்ணவ சித்தாந்த சபை என்கிற ஒரு பார்ப்பன ஆதிக்க சபையின் 10 - வது வருஷக் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்த ஒரு பார்ப்பனர் தமது முகவுரையில் “நமது பழய அனாவசியமான குருட்டு பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் விட்டுவிட வேண்டும். அப்படிச் செய்தால் தான் நம்முடைய மதம் நிலை பெற்று நிற்கும். அதன் மூலமாக இந்துக்களாகிய நாம் கடைத்தேறலாம்” என்பதாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் பம்பாயிலுள்ள யாங்சாம்பூ என்ற ஒரு பிரபல சீனப் பெரியார் இந்தியர்கள் விடுதலை பெறாமலிருப்பதற்கு காரணம் அவர்களுடைய மூடநம்பிக்கையும் அவர்களது மத சம்மந்தமான புராணக் கதைகளுமே காரணமென்றும், இந்திய சமூகத்துக்கு இன்றியமையாத சாதனங்களென்று கருதப்படும் புராணங்களையும் கதைகளையும் பிறவற்றையும், தூர ஒதுக்கித் தள்ளி சுயமரியாதை அடையுங்கள் . அப்பொழுதுதான் விடுதலை அடைய முடியும் என்றும் சொல்லியிருக்கிறார். நாமும் இப்புராண புரட்டுகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்து சுயமரியாதை அடைந்துதான் விடுதலை பெற வேண்டுமென்பதாக இவ்விரண்டு வருஷங்களாக சலிப்பின்றி உழைத்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். இம்மாதிரியான ஒரு நல்ல சந்தர்ப்பத்தில், அதாவது ஜனங்கள் விழிப்படையக்கூடிய சமயத்தில் நமது நாட்டுப் பார்ப்பனர்கள் இவைகளுக்கு விரோதமாய் மறுபடியும் பாட்டிக் கதைகளான புராண பிரசங்கங்கள் செய்து மக்களை அறியாமை என்னும் மூட நம்பிக்கைகளில் அழுத்த மகாத்மாவைக் கதரின் பேரால் தமிழ் நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து பார்ப்பன பிரசாரம் செய்விக்கிறார்கள் .
உதாரணமாக சமீபத்தில் வேலூரில் வாலிபர்களுக்கு உபதேசம் செய்த ஒரு பிரசங்கத்தில் வாலிபர்களைப் பார்த்து “நீங்கள் ரிஷிகளும் ஆச்சாரியர்களும், பெரியோர்களும் சொன்ன அவர்களுடைய உபதேசத்தை திடீரென்று தள்ளிவிடாமல் அவைகளுக்கு பணிந்து நடக்கும் தன்மையை உங்களிடம் உண்டாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று பேசியிருக்கிறார். பரிசுத்தத் தன்மையுள்ள வாலிபர்களிடத்தில் போய் இம்மாதிரியாக அவர்களுக்கு உபதேசம் செய்தால் அவர்களுடைய பிற்கால வாழ்வு மூடநம்பிக்கையில் அழுத்தப்பட்டுப் போகுமா அல்லவா என்பதை வாசகர்களே உணர வேண்டும். அன்றியும் வேலூரில் ஒரு பெண்கள் கூட்டத்தில் பிரசங்கம் செய்யும்போது ராமாயணக் கதையை அவர்களுக்கு உபதேசித்திருக்கிறார். இவைகளை எல்லாம் மகாத்மா அவர்களிடம் உள்ள பக்தியினால் உண்மை என்று நம்பும் அவர்கள் தங்கள் குழந்தை குட்டிகளுக்கும் இதே பாட்டிக் கதையை போதிக்கவும் அதனால் நமது சமூகம் இழிவடையவும் ஏற்படுகிறதா இல்லையா? இம்மாதிரி கதைகளை ஒரு நல்ல உதாரணத்துக்காக எடுத்து கையாளுவதாகச் சொல்லிக் கொள்வதாயிருந்தாலும் அதிலுள்ள தீங்கு எந்த நன்மைக்காக எடுத்துச் சொல்லப்படுகிறதோ அந்த நன்மையைவிட ஆயிர மடங்கதிகமானதாயிருப்பதால் இதை பற்றி நாம் கண்டனம் எழுதுகிறோமே தவிர வேறல்ல.
இதை படிக்கிறவர்களுக்குக்கூட ஒருக்கால் நம் மீது வெறுப்பேற் பட்டாலும் படலாம். அதாவது இதென்ன! ராமாயணத்தைப் பற்றிக் கூட குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. வரவர ரொம்ப மோசமாய் போய்விட்டதென்று எண்ணினாலும் எண்ணலாம். தமிழ் மக்கள் சுயமரியாதை அடைய வேண்டுமானால் இவற்றையெல்லாம் குப்பையில் தள்ளினால் ஒழிய ஒரு வழியிலும் விமோசனம் கிடையாது. ஏதோ ஒரு காரியம் காதுக்கினிமையாய் இருக்கிற தென்பதற்காகவோ, பக்திக்காகவோ, பயத்துக்காகவோ ராமாய ணத்தை உண்மையில் நடந்த விஷயமென்றும் அதிலுள்ள கொள்கையின்படி நடக்க வேண்டியதென்றும் ஒப்புக் கொள்வோமானால் அதன் மூலம் மற்ற விஷயங்கள் நம்மை என்ன நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விடுகிற தென்பதை சற்று யோசித்துப் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரும்படியாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.
அதே ராமாயணத்தில் மற்றொரு இடத்தில் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது ஒரு நாள் வயோதிகப் பிராமணன் இறந்து போன தன்னுடைய வாலிப குமாரனை தூக்கிக் கொண்டு வந்து ராமன் முன்பாக போட்டு ராமனைப் பார்த்து உன்னுடைய நீதியான அரசாங்கத்தில் என்னுடைய இளவயது மகன் எப்படி சாகக்கூடும் என்று கேட்டதாகவும், உடனே அரசனாகிய ராமன் தன்னுடைய நாட்டில் இந்த பிராமணக் குழந்தை சாகும்படியான அவ்வளவு பெரிய அக்கிரமம் என்ன நடந்து விட்டது என்று சுற்றிப் பார்த்ததாகவும் அப்பொழுது தென்பாகத்தில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு சூத்திரன் கடவுளை நோக்கி தோத்திரம் பண்ணிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய நீதியான ராஜ்யத்தில் சூத்திரன் கடவுளை வணங்கினதினால் பிராமணக் குழந்தை செத்துப் போய்விட்டது. இந்த சூத்திரனைக் கொன்று விட்டால் பிராமணக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பதாக முடிவு செய்து ராமன் ஒரே வெட்டாக அந்த சூத்திரனை வெட்டி விட்டதாகவும் அதே வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் எழுதி இருக்கிறது. இவைகளை எல்லாம் நாம் ஒப்புக் கொள்ள வேண்டுமா? என்றுதான் ராமாயண பக்தர்களை கேட்கிறோம். இந்தக் கதை இந்த நாட்டிலிருக்கும் வரையிலும் தமிழ் மக்களுக்கு சுயமரியாதை ஏற்பட முடியுமா?
ராமராஜ்யம், ராம ராஜ்யம் என்று பார்ப்பனர்கள் எழுதிவைத்திருப்பதும் மகாத்மாவும் அதை படித்துவிட்டு வந்து நமக்கு உபதேசம் செய்வதும் நாமும் இந்த ராஜாங்கம் போய் ராமராஜ்யம் வந்துவிட்டால் மிகவும் நல்லது என்று நினைப்பதும், எவ்வளவு பைத்தியக்காரத்தனமான காரியமென்பதையும் ராமராஜ்யம் வந்தால் நமது கதி என்னாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். சூத்திரன் கடவுளை ஸ்தோத்திரம் செய்யக் கூடாதென்று ஒரு கதை எழுதப்பட்டிருக்குமானால் அதை உண்டாக்கினவர்கள் எவ்வளவு கொடூர புத்தியுடனும் கெட்ட எண்ணத்துடனும் எழுதி இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
தவிரவும் தமிழ் நாட்டு மாணவர்களை பகவத்கீதை படிக்க வேண்டுமென்கிறார். பகவத்கீதை பார்ப்பன பாஷை. அதன் தமிழ் வியாக்கியானத்தில் 1000 அபிப்பிராய பேதம் அன்றியும் அது பார்ப்பன மதத்தை போதிப்பதல்லாமல் தற்காலத்தில் நடக்க முடியாததும், நம்ப முடியாததும், விவகாரத்துக்கு இடமுள்ளதுமான விஷயங்களே 100 -க்கு 90 அதில் புதைந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழ் பாஷையில் உண்டாக்கின தமிழர் மதத்தையே பிரதானமாகக் கொண்ட குறளை ஏன் தமிழ் மக்களைப் படிக்கச் சொல்லக்கூடாது.
குறளைவிட கீதையில் என்ன அதிகமான நீதியும் சுயமரியாதையும் அடங்கிக் கிடக்கின்றதென்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே மகாத்மா பார்ப்பனப் பிரசாரம் செய்கிறார் என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாகக் காட்டுகிறோம்.
நிற்க, மகாத்மா காந்தியவர்கள் தமிழ்நாட்டில் கதர் பிரசாரம் பண்ணுவதை பற்றியாவது தமிழ் மக்களுடைய பணம் லட்சக்கணக்காக வசூலித்துப் பார்ப்பனர்களிடம் கொடுத்து விட்டுப் போவதைப் பற்றியாவது முறையே நமக்கு கடுகளவு ஆnக்ஷபணையும் கவலையும் இல்லை. ஆனால் கதர் பேரைச் சொல்லிக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் பார்ப்பன மதப் புராணங்களையும் பிரசாரம் பண்ணுவதைப் பற்றிதான் நாம் கவலைப் படுகிறோம்.
அதாவது இதுகாரும் நாம் செய்து வந்த வேலைகளை அடியோடு கவிழ்ப்பதற்காக வேண்டுமென்றே பார்ப்பனர்கள் இந்த பிரசாரம் செய்விக்கிறார்கள் என்பதாக முன்னமேயே நாம் குறிப்புக் காட்டி இருக்கிறோம். அது இப்பொழுது பிரத்யக்ஷமாகவே நடந்தாய் விட்டது. தமிழ் மக்களுக்கு இது ஒரு நெருக்கடியான சமயமென்பதே நமதப்பிராயம். இவற்றிற்கு பரிகாரமாக மறுபடியும் ஒரு மட்டம் தமிழ் நாட்டில் எதிர் பிரசாரம் நடைபெற வேண்டியதாய் தானிருக்கும். எதற்கென்றுதான் நமது மக்கள் வேலை செய்ய முடியும். மகாத்மா அவர்களால் இம்மாதிரியான காரியங்கள் நடைபெறுமென்று நாம் கனவிலும் நினைத்திருந்ததே இல்லை. இது ஒரு எதிர்பாராத ஆபத்தாய் வந்து சேர்ந்து விட்டது.
தவிர இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பிரமாதமாகப் பேசியிருக்கிறார். ஆனால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதற்கு மகாத்மாவுக்கு மனம் வரவில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் விஷயத்தை மகாத்மா அவர்கள் அவ்வளவு அலக்ஷியமாக கருதும்படியாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று மாத்திரந்தான் நாம் சொல்லலாமேயொழிய நாம் வேறென்ன சொல்லக்கூடும்.
(குடி அரசு - கட்டுரை - 04.09.1927)