periyar sleepingசென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல் துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று மூன்று மாதம் கடுங்காவலும், முன்னூறு ரூபாய் அபராதமும், அது செலுத்தப்படாவிட்டால், மேல்கொண்டு 3 µ, தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மன உறுதியையும் அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதானாலும் இச்செய்கைக்கு சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.

அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும், அனுபவிக்கத் தயாராயிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களை தலைவர்கள் என்பவர்கள் சரியான வழியில்நடத்தி பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கல்லாத காரியங்களைச் செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம்.

ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப்பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காக சத்தியாக்கிரகம் செய்யலாம். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு சிலையை விகாரமாக்குவது மகாத்மாவின் தத்துவப்படி பார்த்தால் எல்லை கடந்த பலாத்காரமாகும் என்றே நமக்குப் புலப்படுகிறது. நல்ல விஷயங்களுக்கு ஏற்பட்ட பொருளை இம்மாதிரி விஷயங்களுக்கு செலவு செய்வதை நாம் பாராட்ட முடியாததற்கு வருந்துகிறோம். நீல்துரை அக்கிரமக்காரர் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் செய்த அக்கிரமத்தை விட அதிகமான அக்கிரமங்களும் கொடுமைகளும் செய்து வருகிறவர்களையெல்லாம் நாம் என்ன செய்துவிட்டோம்? அப்பேர்ப்பட்டவர்களை எல்லாம் பலாத்காரமில்லாமல் மனமாற்றமடையும்படி நாம் அவர்களை வேண்டிக் கொள்ளுகிறோமேயல்லாமல் அவர்களுடைய கையையும், காலையும் ஒடிக்கப் போகிறோமா? அல்லது ஒடிக்க எண்ணுகிறோமா? அந்தப்படியே இதிலும் நாம் நடந்துகொள்ள வேண்டியதிருக்க இம்மாதிரி நடக்க துணிந்ததானது வருத்தப்படத்தக்கதேயாகும். இம்மாதிரியே ஒவ்வொரு காரியத்திற்கும் செய்ய ஆரம்பிப்போமானால் கடைசியாக அது எங்குபோய் நிற்கும் என்கிற ஒரு முடிவு கட்டவும் முடியாது. அன்றியும் நாம் நினைக்கிற காரியமும் கை கூடாததுடன் அது முறை அல்லவென்றே சொல்லுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.08.1927)

“திராவிடன்” வேண்டுமா? வேண்டாமா?

சகோதரர்களே!

பார்ப்பன ஆட்சியாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், பார்ப்பன மதத்தாலும், பார்ப்பன பத்திரிகை பிரசாரத்தாலும் நீங்கள் இழந்து கிடக்கும் சுயமரியாதையும், சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் திரும்பவும் அடைய வேண்டுமா? வேண்டாமா? வேண்டுமானால் அதற்கென்றே உங்கள் தொண்டர்களால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகி நடத்தப்பட்டு வரும் ‘திராவிடனை’ வாங்கிப் படியுங்கள். ‘திராவிடன்’ தான் போலி தேசீயத்தையும் சுயராஜ்யப் புரட்டையும் தைரியமாய் வெளியாக்கி சுயமரியாதைக்கென்றே உழைப்பவன். எனவே, ‘திராவிடன’ன்றிக் கண்டிப்பாய் உங்களுக்கு கதி மோட்சமில்லை; இதை நம்புங்கள்.

(குடி அரசு - அறிவிப்பு - 28.08.1927)

Pin It