periyar03டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது.  புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமியாகத் தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் “தீண்டாதவர்கள்” கோவிலுக்குள் போனால் ஒடிப் போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப் போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்.

ஒரு மனிதன் உள்ளே வந்தால்  தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்யமுடியும். ஆதலால் நாம் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு இனிமேல் டெல்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியல்லாத, கிட்டப் போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை -  28.08.1927)

***

‘ஏல விவசாயி’

                ‘ஏல விவசாயி’ என்னும் பெயர் பெற்ற ஒரு தமிழ் மாதாந்த சஞ்சிகை எமது பார்வைக்கு வந்தது.  இது எழுபது எண்பதாயிரம் ஏக்கர் ஏல விவசாய பூமிகளில் சுமார் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் பெறுமான மகசூல்களை உண்டாக்கும் 2 ஆயிரத்துக்கதிகமான  ஏல விவசாயிகளை அங்கத்தினராகக் கொண்ட திருவாங்கூர் ஏல விவசாய சங்கத்தினின்றும் வெளியிடப்பட்டு வருவது பல துறைகளிலும் ஆராய்ச்சியுள்ள திரு.ஆர். நாராயணசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டது.

விவசாயமே எல்லாத் தொழில்களிலும் சிறந்ததாயிருந்தும் நம் நாடு விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தும் விவசாய வளர்ச்சிக்குரிய புதுவிதமான கருவிகளைக் குறித்தும் புது முறைகளைப் பற்றியும் ஐக்ய இயக்கம், கூட்டுறவு இயக்கம், விவசாய சங்கம் ஆகியவைகளைப் பற்றியும் விவசாயப் பொருள்களைச் சேகரம் செய்து செலவழிக்கும் முறைகளைக் குறித்தும் நமது நாட்டில் தாய்ப் பாஷையில் உலவும் பத்திரிகைகள் மிகச் சிலவே.  ஆகவே இவ்விஷயங்களைக் குறித்தும் மிளகு, இஞ்சி, லவங்கம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, சணல் ஆகியவைகளைக் குறித்தும் விசேஷமாக ஏல விவசாயத்தைக் குறித்தும் முதலாளி , தொழிலாளிகளைக் குறித்தும் தமிழ் மொழி, தமிழ்நாடு திருவாங்கூர் சரித்திரம் அரசியல் ஆகியவைகளைப் பற்றியும் இந்த ஏல விவசாயி என்னும் பத்திரிகை எழுதி வரும்.  ஆதலால் இப்பத்திரிகையை விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், முதலாளிகள், தமிழ்நாட்டார், தாய்நாட்டார் ஆகிய அனைவரும் ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.  இதன் வருஷ சந்தா ரூ.2 . வேண்டுவோர் “மானேஜர், ஏல விவசாயி, உத்தமபாளையம், மதுரை ஜில்லா” என்ற விலாசத்திற்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம்.

                                                                 ( ப - ர். )

       (குடி அரசு - மதிப்புரை - 28.08.1927)

Pin It