periyar 234இம்மாதம் 15 தேதி இரவு ஈரோட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்துக்கு சுற்றுப் பிரயாணம் புறப்பட்ட நாம் 25 தேதி பகல் ஈரோடு வந்து சேர்ந்தோம். 16 தேதி காரைக்குடி, 17 தேதி சிவகங்கை, 18 தேதி தேவகோட்டை, 18 தேதி இரவு பள்ளத்தூர், 19 தேதி காலை புதுவயல், 19 தேதி மாலை கண்டனூர், 20 தேதி காலை சிறாவயல், திருப்பத்தூர் 20 தேதி மாலை, 21 தேதி காலை வடக்கூர், 21 தேதி மாலை நெற்குப்பம், 22 தேதி அமராவதிப் புதூர், 23 தேதி தஞ்சை, 24 தேதி திருச்சிக்கும் சென்றுவிட்டு 25 தேதி ஈரோடு சேர்ந்தோம். சுற்றுப் பிரயாணம் சரீரத்திற்கும், மனதிற்கும் மிகவும் திருப்தியளித்து வந்ததென்றே சொல்ல வேண்டும். போகுமிடங்களிலெல்லாம் அன்று மலர்ந்த சுயமரியாதை புஷ்பங்களான தனவணிக வாலிபர்களின் உற்சாகமும் ஆவலும், எழுச்சியும் இதற்கு முன் எங்கும் கண்டதில்லை என்றே சொல்லுவோம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் தன வணிகநாடு மாத்திரமல்ல, தமிழ்நாடு மாத்திரமல்ல, சென்னை மாகாண மாத்திரமல்ல, இந்திய தேசமாத்திரமல்ல உலகத்திற்கே சுயமரியாதையைத் தவிர அல்லது சுயமரியாதைக்கு தவிர வேறுமதம் இல்லை, வேறு கடவுள் இல்லை என்கிற தத்துவத்தை பரப்பி சுயமரியாதை தெய்வத்தை நிலை நாட்டப் போதிய ஆற்றலும், அறிவும், செல்வமும் படைத்தவர்களாக்கும் நமது தனவணிக நாட்டு வாலிபக் காளை கள் என்றே சொல்லவேண்டும்.

அந்நாட்டு சுற்று பிரயாணத்திற்கு ஆதியில் நாம் அழைக்கப்பட்ட பொழுது நமக்கு மிகுதியும் கலக்கம் ஏற்பட்டது. என்னவெனில் நமது சுயமரியாதைக்கு எதிரிகளாயுள்ள கூட்டத்தாரை பொன்னே போல் போற்றிவரும் ஒரு.........நாட்டிற்கு நாம் சுயமரியாதை பிரசாரம் செய்யப் போகிறோமே பலமான எதிர்ப்புகளுக்குத் தலை கொடுக்கத் தயாராயிருக்க வேண்டுமல்லவா என்கிற கவலையுடனேயே ஒப்புக் கொண்டேன். ஆனால்அங்கு சென்று அவ்விளங்காளையர்களை கண்டவுடன் சுயமரியாதைத் தத்துவம் இன்னது என்பதை நமக்கு விளக்கித் தரும் ஆற்றலுடைய காளைகளாகக் கண்டனன் என்றால் அது போழ்து நமது மகிழ்ச்சி எவ்வாறாயிருந்திருக்கும் என்பதை வாசகர்களேதான் உணர்ந்து கொள்ள வேண்டும். தனவணிக நாட்டில் சுயமரியாதைக்குச் சிறப்புதராத நகரம் இல்லை. கிராமம் இல்லை, தெரு இல்லை, வீடு இல்லை என்பதோடு அங்குள்ள மரம் செடிகளெல்லாம் சுயமரியாதைக் காற்றை வீசிக் கொண்டிருந்தன. என்றாலும் பார்ப்பன சூழ்ச்சி வாடை காட்டாத இடமில்லை என்பதையும் சொல்லித் தானாக வேண்டும். அது விபரங்களை மற்ற பத்திரிகைகள் வாயிலாகப் பார்த்திருக்கலாம். ஆனால் அவ்வளவு சூழ்ச்சிகளும் அந்நாட்டு மக்களுக்கு சுயமரியாதையின் அவசியத்தை நன்றாய் விளக்க உதவியதோடு சுயமரியாதைக்கு உண்மையான பாரம்பரியமான எதிரிகள் யார் என்பதையும், சுயமரியாதை பரவாவிட்டால் உள்ளுக்குள்ளாகவே இருந்து எதிர் பிரசாரம் செய்கிறவர்கள் யார் என்பதையும் விளக்க ஒரு தக்க சந்தர்ப்பத்தையுமளித்தது.

இந்த சுயமரியாதை பிரசாரத்திற்கு உதவியளித்து நம்முடன் கலந்துழைத்த கனவான்கள் பலராயினும் அவர்களில் முக்கியமானவர்கள் திருவாளர்கள் பள்ளத்தூர் திவான் பஹதூர் அ. முருகப்ப செட்டியார், எம்.எல்.சி. குமரன் பத்திராதிபர், ஸ்ரீமான் சொ. முருகப்ப செட்டியார், கரு. முத்து சிவலிங்க செட்டியார், அமராவதி புதூர் ஸ்ரீமான் பி.ச. சுப்பிரமணிய செட்டியார், ஸ்ரீமான் சிறாவயல் காசிநாதன் செட்டியார், காரைக்குடி ஸ்ரீமான் அரு. சோம சுந்தரம் செட்டியார், ஸ்ரீமான் தெ.லெ. அருணாசலம் செட்டியார், தேவகோட்டை ஸ்ரீமான் டி.வி. அருணாசலம் செட்டியார், ஸ்ரீமான் கிருத்தி வாசகர், சிவகங்கை ஸ்ரீமான் ராமச்சந்திர படையாச்சி, திருப்பத்தூர் ஜனாப் சுல்தான் பாக்தாத், சிறாவயல் காந்தி ஆச்சிரமத்தார் முதலியோர்கள் ஆவார்கள். அந் நாட்டுக்கும் மற்றும் அந்நாட்டில் நமது பிரசாரத்திற்கு உதவி செய்த கனவான்களுக்கும் மக்களின் சுயமரியாதையின் சார்பாக நமது நன்றியறிதலைக் காட்டுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927)

Pin It