சட்டசபையில் கோவை ஸ்ரீமான்கள் ராவ் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் கேள்வியும், சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் பதிலும்:

சி.எஸ். ஆர். முதலியார்:- மேட்டூர் அணைக்கு அஸ்திவாரம் வெட்ட வாங்கப் போகும் குறிப்பிட்ட மாதிரி இயந்திரம் தாங்கள் வாங்க உத்தேசித்திருக்கும் கம்பெனியில் மாத்திரம் தான் கிடைக்கக் கூடியதா? அல்லது வேறு கம்பெனிகளிலும் கிடைக்குமா?

periyar on stageசர்.சி.பி. அய்யர் :- அது ஒரு குறிப்பிட மாதிரி என்று நான் நினைக்கவில்லை. இந்த குழிதோண்டும் இயந்திரம் மிகவும் பேர்போனது, சுக்கூர் பம்பாய் முதலிய இடங்களில் குழி வெட்ட இதையே உபயோகிக்கிறார்கள். (மற்ற இடத்தில் இது போன்றது கிடைக்குமா கிடைக்காதா என்று முதலியார் கேட்டதற்கு பதில் இல்லை.)

சி.எஸ்.ஆர். முதலியார் :- அது ஒரு குறிப்பிட்ட மாதிரியாய் இல்லாமல் சாதாரணமானதாயிருந்தால் தாங்கள் ஏன் மற்ற கம்பெனிகளிலிருந்தும் அதன் விலையை தெரிந்து விலை குறைவாய்க் கிடைக்கும் இடத்தில் வாங்க ஏற்பாடு செய்யக்கூடாது?

சர்.சி.பி. அய்யர் :- இதற்கு பதில் சொல்ல நோட்டீஸ் வேண்டும்.

சி.எஸ்.ஆர். முதலியார் :- குழி வெட்டும் இயந்திரம் இல்லாமல் இயந்திரத்தில் செய்தால் எத்தனை நாளில் முடியுமோ அதைவிட சீக்கிரத்தில் கூலி ஆள்களை விட்டு வெட்டி சரிசெய்து கொடுப்பதாக தக்க கண்டிறாக்டர்கள் முன் வந்தால் இயந்திரம் வாங்கும் எண்ணத்தை விட்டு கூலி ஆள்களை விட்டுக்கொண்டு வேலை வாங்க முடியுமா?

சர்.சி.பி. அய்யர் :- முடியாது

சி.எஸ்.ஆர். முதலியார் :- தண்ணீரை விவசாயிகள் எடுத்துக் கொள்ள ஒப்பியிருப்பதாகக் கனம் சட்ட மெம்பர் சொன்னார்.  வாய்க்கால் வெட்டுவதற்கு முன்னர் குடிகளிடமிருந்து விதிக்கப்பட்டிருக்கும் தண்ணீர் வரிக்கு கட்டுப்படுத்த முச்சலிக்கா வாங்குவதில் ஏதேனும் கஷ்டமுண்டா?

சர்.சி.பி.அய்யர் :- கனம் மெம்பர் அவர்கள் சொன்ன பிரகாரமே செய்ய யோஜிக்கப்படுவதுடன் அவரது யோசனைக்கு வந்தனமளிக்கிறேன்.

சி.எஸ்.ஆர். முதலியார் :- கனம் கிருஷ்ணன் நாயர் அவர்களது கேள்விக்கு விடை அளிக்கும் போது குறிப்பிட்ட ரெவின்யூ போர்டார் ரிபோர்ட்டை கனம் சட்ட மெம்பர் ஆஜர்படுத்துவாரா?

சர்.சி.பி. அய்யர்:- அது இதர ரிபோர்ட்டுகளுடன் முன்னரே சபையில் ஆஜர் செய்யப்பட்டிருக்குமென்று நினைக்கிறேன்.

சி.எஸ்.ஆர். முதலியார் :- மேட்டூர் அணை வேலைக்குத் தன்னை நியமிக்கும்படி ஸ்டோனி துரை அவர்களே கேட்டுக்கொண்டாரா?

சர்.சி.பி. அய்யர்:- நான் அக்கேள்விக்கு விடை கொடுக்க மறுக்கிறேன்.

சி.எஸ்.ஆர். முதலியார்:- ஸ்டோனி துரை அவர்கள் எந்த அணை கட்டுவதிலாவது அனுபவம் பெற்றிருக்கிறாரா?

சர்.சி.பி. அய்யர்:- இரண்டு மூன்று உத்தியோகஸ்தர்களைத் தவிர வேறு யாருக்கும் இம்மாகாணத்தில் இம்மாதிரி பெரிய திட்டங்களில் அனுபவமில்லை: அரசாங்கத்தாரும் சமீப காலம் வரை இப்படி பெரிய திட்டங்கள் ஆரம்பித்ததில்லை.

சி.எஸ்..ஆர் . முதலியார்;- மேற்குறிப்பிட்ட அம்மூன்று உத்தியோகஸ்தர்களை இத்திட்டத்திற்கு நியமிக்கப்படலாகாதா?

சர்.சி.பி.அய்யர்:- இவ்விஷயம் ஆலோசிக்கப்படும்.

சி.எஸ்.ஆர். முதலியார்:- சீதகாரி, (குளிர்ச்சி தரும் இயந்திரம்,) ஆஸ்பத்திரிக்கு மட்டும் உபயோகிக்கப்படுவதா அல்லது கிளப் சங்கத்துக்கும் பிரயோஜனப்படுவதா?

சர்.சி.பி.அய்யர்:- அது சங்கத்தின் பிரயோஜனத்திற்காக ஏற்படுத்தப்பட்டதன்று.

சி.எஸ்.ஆர். முதலியார்:- ஆஸ்பத்திரியும் சங்கமும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று கனம் சட்டமெம்பர் அவர்கள் சொல்லியிருக்க அவ்வியந்திரம் எப்படி அதற்குள் கெட்டுப்போய்விட்டது.

சர்.சி.பி. அய்யர்;- கனம் கோயமுத்தூர் மெம்பர் அவர்கள் மற்றொரு கனம் கோயமுத்தூர் மெம்பர் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்தும் கேள்வி கேட்கிறார்.  அவ்வியந்திரம் கெட்டுப்போனது எனக்குத் தெரியாது.  ஆனால் மற்றொரு கனம் மெம்பர் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்து அரசாங்கத்தார் இவ்விஷயத்தில் விசாரணை செய்வார்கள்.  ஒரு மெம்பர் கொடுக்கும் தகவலை ஆதாரமாகக் கொண்ட கேள்விகளுக்கு பதிலிறுப்பது கஷ்டமானது.

ஸ்ரீமான் ரத்தினசபாபதி முதலியார் அவர்களின் இந்தக் கேள்விகளையும் இதற்கு கனம் சர்.சி.பி.அய்யர் அவர்கள் கொடுத்திருக்கும் பதில்களையும் பார்த்தால் மேட்டூர் திட்டம் புரட்டு, ஹம்பக், ரசாபாசம் என்று “ஜஸ்டிஸ்” பத்திரிக்கை எழுதியது சரியென்று யாவருக்கும் எளிதில் விளங்கும். ஒரேமாதிரி இயந்திரம் மற்றொரு இடத்தில் சல்லீசாய் கிடைக்கிறதை ஏன் வாங்கக்கூடாது என்று கேட்டால் அதற்கு நோடடீஸ் வேண்டுமென்று சொல்லுவதும் வாங்க சம்மதிக்காததும்  பார்த்தால் அதில் சந்தேகப்பட இடமிருக்கிறதா? இல்லையா?

இயந்திரம் செய்யும் வேலையை மனிதர்கள் செய்ய தயாராயிருக்கும் போதும் இயந்திரத்தினால்  எவ்வளவு நாளில் செய்துவிடலாமோ அவ்வளவு நாளில் முடித்துக் கொடுக்கத்தக்க கண்டிராக்டர்கள் ஒப்புக் கொண்டால் அவர்கள் மூலம் வேலை நடத்தக்கூடாதா என்றால் கூடாது என்று சொல்லுகிற பதிலிலிருந்து இயந்திரத்திற்கும் சர் அய்யர் அவர்களுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் ஏற்படுகிறதா இல்லையா?  தவிர இவ்வளவு பத்து லட்சக்கணக்கான ரூபாயை நமது நாட்டு மக்கள் கூலியாக அடையக் கூடாது, வெள்ளைக்காரர்கள் தான் அடைய வேண்டும் என்ற பிடிவாதமிருக்கிறது என்பதும் எப்படியாவது வெள்ளைக்காரருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்று பார்க்கிறார்களேயல்லாமல் நாட்டுக்கு துரோகியாவதைப் பற்றி கொஞ்சமாவது கவலைப்படுவதில்லை என்று எண்ண இடமிருக்கிறதா இல்லையா? 

தவிர, மேட்டூர் திட்டம் நிர்வாகத்திற்கு ஏற்படுத்தியிருக்கிற பெரிய உத்தியோகஸ்தர்கள் இம்மாதிரி விஷயத்தில் அனுபோகமுள்ளவரா என்று கேட்டால் இம்மாதிரி அனுபோகமுள்ளவரே இந்த மாகாணத்தில் இரண்டு மூன்று பேர்கள் தான் உண்டு,  ஆதலால் அனுபோகபட்டவர்களை நியமிக்க முடியாது  என்கிற மாதிரியில் பதில் சொல்லுவதும். அந்த அனுபோகப்பட்ட இரண்டு மூன்று பெயரையாவது ஏன் நியமிக்கவில்லை என்றால் யோசிக்கலாம் என்று சொல்லுவதினால் இந்த உத்தியோகஸ்தருக்கும் சட்ட மெம்பருக்கும் ஏதாவது கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று அதாவது “நான் உங்களுக்கு அனுபோகமில்லாவிட்டாலும் உங்களை 3000, 4000ரூ. சம்பளத்தில் நியமித்து விடுகிறேன், நீங்கள் எங்கள் பார்ப்பனர்கள் அனுபோகமில்லாவிட்டாலும் அவர்களை 500, 1000, 2000 ரூ. சம்பளமுள்ள உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டும். பணம் ஊரார் வீட்டுதுதானே. உங்கள் பெரியவர்கள் சம்பாதித்ததுமல்ல  எங்கள் பெரியவர்கள் சம்பாதித்ததுமல்ல” என்கிற ஒப்பந்தமாயிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறதா இல்லையா?

தவிர, இவ்வளவு பணச் செலவு செய்து ஏற்படுத்தும் திட்டத்தின் தண்ணீரை உபயோகித்துக் கொள்ளுபவர்களிடம், இன்ன விகிதம், வரி ஏன் வசூல் செய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால், இவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்து விட்டு இனிமேல் யோசிக்கிறேன் என்று சொல்லுவதானால் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளும்  மிராசுதாரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் ஆனதால் சர். அய்யர் வேண்டுமென்றே அவர்களைக் கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டார் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா?ஆகவே நமது நாட்டாரின் பணம் சுமார் 15 கோடி அதாவது 1500 லட்சம் ரூபாய்களில் பெரும்பாகம் இயந்திர சாமான் முதலியவைகளுக்காக சீமைக்கும் பெரும்பாகம் வெள்ளைக்கார உத்தியோகத்திற்காக சீமைக்கும் பெரும்பாகம் பார்ப்பனர்கள் உத்தியோகஸ்தர்களுக்கென்றும் சம்பளமாக நமது நாட்டு பார்ப்பனருக்கும் இதன் பலன் கொஞ்ச நஞ்சம்  உள்ளதை நிலத்திற்கு உடையவர்கள் என்கிற முறையில் பார்ப்பன பென்ஷன்தார்கள், பார்ப்பன உத்தியோகஸ்தர்கள், பண மிராசுதாரர்களுக்குமே போகிறது என்பதில் என்ன ஆட்சேபணை இருக்கிறது. 

ஏதோ சில பாகம்  கண்டிராக்டர்களுக்குப் போகலாம். ஆனாலும் “தோசைக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கினது போல” உத்தியோகஸ்தர்களுக்கு  மூன்று பாகமும் கண்டிராக்டர்களுக்கு ஒரு பாகமும் இருக்கலாமேயொழிய அதுவும் வயிறாரச் சாப்பிடக்கூட கிடைக்காது.  இம்மாதிரியான வேலைகளில் அனுபோகமுள்ளவர்களும் நிபுணர்களும் இல்லையென்கிறதினாலும், கிடைக்கிறவர்களையும் வேலை வாங்க இஷ்டப்படாததினாலும் இந்த திட்டம் ஒழுங்காய் நடைபெறுமோ நடுத்தூக்கில் ஏதாவது மோசம் செய்து விடுமோ என்று பயப்படாமல் இருக்கவும் இடமில்லை.  இவைகளெல்லாம் எதைக் காட்டுகிறதென்றால் “நமது பைத்தியக்காரத்தனத்தை” வெள்ளைக்காரரும் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து கொண்டால் மேட்டூர் திட்டம் பகற் கொள்ளை மாத்திரமல்ல நம்மையெல்லாம் மேல் லோகத்திற்கு அனுப்புகிற திட்டம் கூட சுலபத்தில் நடத்தி விடலாம் என்று கூட சொல்லலாம்.

(குடி அரசு - கட்டுரை - 10.04.1927)

Pin It