periyar 480நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் நம் மக்களின் அன்புக்கும், ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்பட வேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு, அதை நிர்வகிக்க அக்காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சன்னியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால், இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொது நல ஸ்தாபனங்கள் எந்நிலையிலிருக்கிறது? என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக்களாகிய சன்னியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை.

இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொது நலத்திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா? என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம் மடாதிபதிகள் தங்கள் சுயநலத்துக்கும், போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடும் என்பதாக கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும், லஞ்சமாகவும், பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்கு வழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களை தொலைத்தும் தாங்கள் வெற்றி பெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா? என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் ஸ்ரீமான் டி. ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் முப்பது லக்ஷம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வடநாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டப் போவதாகவும் அதற்கு பணம் வேண்டுமென்றும், இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களை கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் 10 வருஷத்திற்கு கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராஸ்தார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்கு கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராஸ்தாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்று ஏதாவது செல்வமுள்ளவர்களோ நமது நாட்டில் மிக மிக அருமையானதால் இந்த பணம் கொடுத்துதான் தீர வேண்டி வரும்.

ஆனால் இப்பணம் எதற்கு உபயோகப்பட போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பன பிள்ளைகள் பிழைக்கவும், கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில் கூட கோவில் கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் “சூத்திரர்கள்” உள்ளே போகக்கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெல்லாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப் போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.03.1927)

Pin It