“மேட்டூர் அணை திட்டம்” விஷயமாய் அதிலுள்ள ஊழல்களையும் தனிப்பட்ட வகுப்பினர் நன்மைக்காக நமது பணம் எவ்வெவ் வழிகளில் வீணாவதாயிருக்கிறது என்பதுபற்றியும் “ஜஸ்டிஸ்” பத்திரிகை கொஞ்ச நாளைக்கு முன் பொதுவாக சில குறிப்பு எழுதி இருந்ததற்காக சட்ட மெம்பர் ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டசபையில் வெகு ஆத்திரமாகவும் ஆணவமாகவும் அலட்சியமாகவும் அப்பத்திரிகையை பேர் சொல்லாமல் மறைமுகமாய் அவமதித்துப் பேசியதும் “இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேண்” என்று “வீர முழக்கம்” செய்ததும் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதன் பேரில் “ ஜஸ்டிஸ்” பத்திரிகையானது அத் திட்டத்தின் உள் ரகசியங்களையும் புரட்டுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புட்டு புட்டு விளக்கி மேட்டூர் திட்டத்தின் புரட்டு என்கிற தலையங்கத்தில் 3, 4 வியாசங்கள் எழுதினதும், சர். சி.பி அவர்களை குற்றவாளியாக்கி விசாரணை வைக்க வேண்டுமென்று எழுதி வந்ததும் வாசகர்களுக்கு தெரிந்திருக்கும்.

periyar veeramani 640

அதன் பேரில் சர்.சி.பி. அவர்கள் பெட்டியில் பாம்பு அடங்கினது போல் அடங்கி விட்டதோடு தான் எந்த பத்திரிகையையும் லட்சியம் செய்யப் போவதில்லை எந்த பத்திரிகைக்கு பயப்படப் போவதில்லை என்றாரோ அப் பத்திரிகையையே லட்சியம் செய்து அரசாங்க தோரணையில் ஒரு விளம்பரம் செய்து மக்களுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார். அவ்விளம்பரமானது “ஜஸ்டிஸ்” பத்திரிகையிலும் “திராவிடன்” பத்திரிகையிலும் சட்டமெம்பர் மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றத்துக்காகவாவது பதில் சொல்லுவதாயில்லாமல் பூசி மெழுகி பாமர மக்களை ஏமாற்றி பணத்தைப் பாழ்பண்ண செய்வதாயிருக்கிறதேயல்லாமல் இவ்வளவு பணம் கோடிக்கணக்காய் கொள்ளை போகிறதே என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களை ஒரு கடுகளவாவது சமாதானப்படுத்துவதற்கு லாயக்கில்லாததாகவே இருக்கிறது.

“ஜஸ்டிஸ்” பத்திரிகையானது மேட்டூர் திட்டத்தின் ஊழல்கள் விஷயமாய் எழுதியிருப்பதின் சாராம்சமென்னவென்றால், இத்திட்டத்தின் கருத்தானது பொது மக்களின் நன்மையை யுத்தேசித்ததல்லவென்றும் பார்ப்பன அதிகாரிகளும் பார்ப்பன பென்ஷன் அதிகாரிகளும் மற்றும் பார்ப்பன மிராஸ்தார்களும் ஆகவே முன்கூட்டியே பட்டுக்கோட்டை தாலூக்காவில் முக்கியமாக அங்குள்ள புன்செய் நிலங்களையெல்லாம் மிகவும் சலீஸான விலையில் வாங்கி வைத்துக் கொண்டு காவேரி தண்ணீரைக் கொண்டுபோய் பாய்ச்சிக் கொள்ள ³ பார்ப்பன அதிகாரிகள் செய்து கொண்ட ஏற்பாடுதான் மேட்டூர் திட்டமே அல்லாமல் மற்றபடி இத்திட்டத்தால் நம் நாட்டிலுள்ள எல்லா வகுப்பார்களும் சமமாய் ஒருவித பயனும் அநுபவிக்க முடியாதென்பதும்.

இத்திட்டத்திற்காக கடன் வாங்கிச் செலவு செய்யப்படும் பணத்திற்குத் தகுந்த வட்டி கூட இதில் கிடைக்க முடியாதென்பதும் இத்திட்டத்திற்காக செலவு செய்த பணத்திற்கு ஏற்படும் வட்டிக்குக்கூட மற்ற ஜனங்களால் செலுத்தப்படும் வரியிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டி வரும் என்பதும் இத்திட்ட தண்ணீரைப் பெரும்பாலும் அநுபவிக்கிறவர்களான பார்ப்பனர்கள் “நாங்கள் ஏக்கராவிற்கு விதிக்கப்பட்டிருக்கிற 15 ரூ. கந்தாயம் கொடுக்க மாட்டோம்; ஐந்து ரூபா வீதம் தான் கொடுப்போம் பெற்றுக்கொள்ள இஷ்டம் இல்லையானால் உங்கள் தண்ணீர் எங்களுக்கு வேண்டுவதில்லை; புன்செய் வேளாண்மை செய்து கொள்ளுவோம்” என்று சொல்லி விடுவார்களானால் சர்க்காரார் பேசாமல் ஒப்புக்கொண்டு அவர்கள் கொடுக்கிற பணத்தை ஒப்புக் கொள்ள வேண்டுமே தவிர மற்ற நீர்ப்பாசனங்களில் பலனையனுபவிக்கிறவர்கள் கிடைத்த தண்ணீரை அநுபவித்துக்கொண்டு விதித்த தீர்வையைக் கொடுத்துத்தான் தீரவேண்டுமென்று சட்டப்படி கட்டுப்பட்டிருப்பதுபோல் மேட்டூர் திட்டத்தின் தண்ணீர் அனுபவிக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு வித கட்டுப்பாடாவது, சட்டமாவது ஒப்பந்தமாவதில்லையென்பதும் இத்திட்டமானது சரியானபடி ஆராய்ச்சியுடன் நிறைவேற்றப்பட்டதல்லவென்பதும், அந்த இலாகா சம்பந்தமான நிபுணர்களுடைய அபிப்பிராயம் மாறுபட்டிருக்கிறதென்பதும் இத்திட்டத்திற்காக செலவிடும் பெரும் பகுதியான பணங்களையெல்லாம் யந்திரங்களுக்காகவும் சாமான்களுக்காகவும் வெளிநாடுகளுக்குப் போகவும் பார்ப்பன அதிகாரிகளும் வெள்ளைக்கார அதிகாரிகளும் மாதம் ரூ.1000, 2000, 3000 கணக்காகச் சம்பளங்கள் பெறவும் அவர்களுடைய பிள்ளை குட்டிகளும் சுற்றத்தார்களும் சில்லறை உத்தியோகங்களை அநுபவிக்கவும் கண்ட்ராக்ட் பலனை அநுபவிக்கவும் உபயோகப்படும்படியாக இருக்கிறதே யல்லாமல் பொது ஜனங்களெல்லாரும் கிரமமாய் அநுபவிக்கும் மாதிரியாயில்லை என்பதும் ஆகிய இன்னும் பலவித கருத்துக்கள் கொண்ட குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது.

இவற்றிற்கு ஒன்றிற்காவது சட்ட மெம்பர் சரியான பதில் சொல்லாமலும் இத்திட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றுவதற்குமுன் சட்ட மெம்பர் என்னென்ன பேசினாரோ அவைகளை எல்லாம் லட்சியம் செய்யாமல் இப்போது அதற்கு நேர் விரோதமாய் மாற்றிச் சொல்லியும் வருகிறார். சாதாரணமாக நமது சர்க்காரார் இம்மாதிரியான நீர்ப்பாசனங்களுக்கு திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே அது நஷ்டம் அடையாமலும் அதினால் பின்னால் எவ்வித கஷ்டம் ஏற்படாமலும் இருப்பதற்கு ஒரு சட்டம் செய்து கொள்வது வழக்கம். இத்திட்ட விஷயத்தில் நமது சட்ட மெம்பர் சட்டம் செய்து கொள்ளாமல் காரியத்தை நடத்துகிறார் என்று “ஜஸ்டிஸ்” பத்திரிகை சாட்டிய குற்றத்திற்கு சட்ட மெம்பர் விளம்பர மூலமாய் பதிலளிக்கையில் என்ன சொல்லுகிறாரென்றால் அம் மாதிரியான சட்டம் இல்லாததினால் ஒன்றும் முழுகிப்போய் விடாதென்றும், பூமிக்குடையவர்கள் தங்களுடைய நன்மையை உத்தேசித்தே சர்க்கார் ஏற்படுத்துகின்ற வரியைக் கொடுத்துத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுவார்களென்றும் சமாதானம் சொல்லுகிறாரேயல்லாமல் ஏன் தான் சட்டம் செய்து கொள்ளவில்லையென்பதற்கு சரியான பதில் சொல்லவில்லை.

இதற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சட்டமெம்பரே சட்டசபையில் பேசும்போது என்ன சொல்லியிருக்கிறாரென்றால் இத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னால் ஒரு சட்டம் செய்து கொள்ள வேண்டுமென்றும், அப்படி ஒரு சட்டம் செய்து கொள்ளாவிட்டால் பூமிக்குடையவர்களால் சர்க்காரார் நஷ்டமடைய வேண்டி வந்துவிடுமென்றும், சட்டமில்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசாங்கத்தாரும் சீமை அரசாங்கத்தாரும் உத்தரவு கொடுக்கமாட்டார்கள் என்றும், ஆகையால் சட்ட மேற்பட்டால் தான் திட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றும் சொல்லியிருக்கிறார். முன்னுக்குப் பின் முரணானதும் கண்ணியத்திலேயே சந்தேகப்படத்தக்கதுமான இந்த விஷயமொரு புறமிருக்க மற்றொரு விஷயத்தைப் பற்றி கவனிப்போம்.

அதாவது இத்திட்டத்தில் பலனையடைய ஏற்கனவே பூமி வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களென்றும் அவர்களிற் பெரும்பாலும் பென்ஷன் உத்தியோகஸ்தர்களும் சட்டந்தெரிந்தவர்களுமென்றும் முன்பே சொல்லியிருக்கிறோம். ஆகவே பார்ப்பனர்கள் இப்பொழுது சட்டமெம்பர் செய்திருக்கும் குற்றத்தைத் தெரிந்தும் அதில் சர்க்காருக்குள்ள பலக் குறைவைத் தெரிந்து கொண்டும் தாங்களெந்த விதத்திலும் சர்க்காருக்கு இவ்வளவு வரிதான் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்கிற தைரியத்தினால் “ஏக்கரா ஒன்றுக்கு 5 ரூ. வீதம் தான் நாங்கள் வரி கொடுக்க முடியும், அதற்கு மேல் கொடுக்க முடியாது. உங்களுக்கு இஷ்டமிருந்தால் தண்ணீர் விடுங்கள் இல்லாவிட்டால் எங்களுக்குத் தண்ணீர் வேண்டியதில்லை” என்று பார்ப்பனர்களெல்லோரும் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடாய் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுவதில்லை என்று சொல்லி விட்டார்களானால் அவர்களிடத்தில் வரி வசூலிக்க சர்க்காருக்குச் சட்டமெங்கே இருக்கிறது? இத்திட்டத்திற்காக சர்க்காரார் வாங்கின கடனுக்கு வட்டி கட்டுவதற்காக இத்திட்டத்தில் சம்பந்தப்படாதவர்களும் சர்க்காரார் கேட்கிற வரியை கொஞ்சமும் ஆnக்ஷபிக்காமல் கொடுத்துத் தீரவேண்டியவர்களும் மற்ற வேறு திட்டங்களின் நீரைப் பாய்ச்சிக் கொள்ளுகிறவர்களுமான தஞ்சை ஜில்லா குடியானவர்களிடமிருந்து தானே வசூலிக்க வேண்டும்.

அதோடு மேட்டூர் திட்டத்தின் தண்ணீரைப் பாய்ச்சிக் கொள்ளுகிற பார்ப்பன மிராஸ்தார்களிடமிருந்து அவர்கள் கொடுக்கிற வரியை வாங்கிக்கொண்டு அவர்களுக்குத் தண்ணீர் விட்டுத் தானே ஆக வேண்டும். விடுவதில்லையென்று சர்க்கார் சொல்லி விடுமேயானால் அந்தத் தண்ணீரை என்னதான் செய்வது? வேறு புது வாய்க்கால் வெட்டி வேறெந்த ஊருக்காவது தண்ணீர் திருப்புவதானால் அந்தச் செலவுகளுக்குப் பிடிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு எங்கே போவது? ஆகவே மேட்டூர் திட்டத்திலுள்ள ஊழல்களும் சட்ட மெம்பரின் குற்றங்களும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளும் நம்முடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சட்டசபையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மண்ணாங் கட்டி பொம்மைகளின் யோக்கியதைகளும் இவர்களுக்கு ஓட்டுக் கொடுத்தனுப்பிய ஓட்டர்களாகிய பாமர ஜனங்களின் பக்குவங்களும் தெரிந்துகொள்ள இந்த ஒரு விஷயமே போதுமானதென்று நினைக்கிறோம். மேட்டூர் திட்டத்திலுள்ள மற்ற புரட்டுகளை சாவகாசமுண்டானபோது விவரிக்கலாம்.

(குடி அரசு - கட்டுரை - 27.03.1927)

Pin It