கோயிலுக்குள் - ‘ஒரிஜினல்’ கடவுள்கள் - கர்ப்பக்கிரகத்தில் இருக்கும். அந்தக் கடவுளின் நகல்களான ‘உற்சவர்’ வீதி உலாக்களுக்கு வருவார். வீதி உலாக்களுக்கு உற்சவர் வரும்போது, கடவுள் சவாரி செய்யும் ரதத்தை - ‘சூத்திரர்கள்’ இழுக்க, ‘சாமி’யுடன் ரதத்தில் புரோகித பார்ப்பனர் மட்டுமே பவனி வருவார்! தேர் இழுப்பதும் இப்படித்தான். ‘தேர் சக்கரம்’ ஏறி விபத்துக்குள்ளாகி நேரடி ‘மோட்சம்’ போவதுகூட ‘சூத்திரர்’கள்தான்!
கடந்த புதன்கிழமை திருச்சானூர் பத்மாவதி தாயார் (கடவுளின் பெயர்) வாகனத்தில் வந்த போது வாகனம் உடைந்துவிட்டது. இதனால் வாகனத்தில் பவனி வந்த புரோகிதப் பார்ப்பனர் கீழே விழுந்து காயமடைந்துவிட்டார். வாகனத்தில் பவனி வருவதில்கூட ஆபத்துகள் உண்டு! பத்மாவதி தாயார் உருண்டு கீழே விழுந்தால்கூட - அது சிலை தான். ஏதாவது ‘தோஷ பரிகாரம்’ செய்து கொள்ளலாம். அர்ச்சகப் பார்ப்பனர் உருண்டு கீழே விழுந்து விட்டால், ‘தோஷ பரிகாரம்’ செய்ய முடியாது.
“அட, போங்கடா, தோஷமாவது, பரிகாரமாவது, உடனே என்னை டாக்டரிடம் கொண்டு போங்கோ, சாகடித்து விடாதீங்கோ” என்றுதான் அர்ச்சகப் பார்ப்பனரே கதறுவார்!
கடந்த 15 ஆம் தேதி - திருப்பதியில் ‘ஏழுமலையான்’ ஊஞ்சலாட்டம் நடக்க இருந்தது. அதற்காக பக்தர்களிடம் விசேட டிக்கட்டுகள் விற்கப்பட்டன. அலங்கரித்து அழைத்து வரப்பட்ட ஏழுமலையான், ஊஞ்சலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஊஞ்சல் சங்கிலி திடீரென்று அறுந்து விழுந்து விட்டது. உடனே அவசர ஆலோசனை நடத்தி ஊஞ்சல் சேவையை நிறுத்துவது அபசகுணம் என்ற முடிவுக்கு அர்ச்சகர்களும் அதிகாரிகளும் வந்தனர். ‘ஊஞ்சல் சேவை’யைப் பார்த்து ரசிக்க சிறப்புக் கட்டணம் செலுத்தி வந்த பக்தர்கள் ஆத்திரமடையவே - ஊஞ்சல் பலகையை தரையில் வைத்தே ஏழு மலையானை அதில் உட்கார வைத்து, ‘ஆடுது பார்; ஆடுது பார்’ என்று ‘பிலிம்’ காட்டிவிட்டார்களாம். தரையிலிருந்த ஊஞ்சல் பலகை ஆடுவதாக பக்தர்களும் கற்பனை செய்து - ஏழுமலையானை தரிசித்தார்களாம்!
“ஏழுமலையானை ஊஞ்சலில் ஆட்டுவதாகக் கூறி டிக்கட்டுகளை விற்றுவிட்டு, ஊஞ்சலையே ஆட்டாமல் இருப்பது மோசடி; நுகர்வோர் நீதிமன்றத்தில் தான் வழக்கு போட வேண்டும்” என்று கூட பக்தர்கள் ஆவேசப்பட்டார்களாம்! இதுகூட நல்ல யோசனை தான்.
உரிய கட்டணத்தை செலுத்தி - சிறப்பு பூஜை நடத்தி பகவானிடம் கோரிக்கையை வைக்கிறோம்; அப்படியும் கோரிக்கை கைகூடவில்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று சட்டம் கொண்டு வரலாம் என்பது நமது தாழ்மையான ஆலோசனை! அதேபோல் பகவானுடன் சேர்ந்து பவனி வரும் புரோகிதப் பார்ப்பனர்களுக்கு, மருத்துவ இன்சூரன்ஸ், விபத்து இன்சூரன்சுகளை செய்யலாம். அர்ச்சகர் சங்கம், இப்படி ஒரு நியாயமான கோரிக்கையை முன் வைத்தால் நாம்கூட ஆதரிக்க தயாராக இருக்கிறோம். காரணம், விபத்துகளை, பகவானால் தடுக்கவே முடியாது என்ற உண்மை - நம்மைவிட அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
தான் ஆடப் போகும் ஊஞ்சல் அறுந்து விழுவதைக்கூட தடுக்கும் சக்தி ஏழுமலையானுக்கு கிடையாது. தனக்கு அருகிலேயே சவாரி செய்யும், அர்ச்சகர் விபத்துக்குள்ளாமல் தடுக்கும் சக்தி பத்மாவதி தாயாருக்கும் கிடையாது; இனி, கோயிலுக்குள் இருக்கும் மூலவர்களுக்குக்கூட - இன்சூரன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தால்கூட நல்லது என்று பரிந்துரைக்கிறோம். (அடிக்கடி சாமிகள் திருட்டுப் போவதால்) இப்படி எல்லாம் கடவுள் சக்தியை கேலி செய்யாதீங்கோ என்று ராமகோபாலன்கூட எதிர்க்க மாட்டார். கோயில்களுக்கு மேலும் நவீன ஆயுதங்களுடன் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் போராடுகிறவராயிற்றே! கடவுள் “சக்தி” மீது அவருக்கு அவ்வளவு அபார பக்தி!