அன்புள்ள ஆசிரியர்களே! அருமை மாணவர்களே! தாய்மார்களே!

periyarஇன்று என்னை என்றுமில்லாமுறையில் ஒரே மூச்சில் உயரத்தூக்கி, வானளாவப் புகழ்ந்து விட்டீர்கள் தினமும் உங்கள் முன்னாலேயே இருக்கிறேன். எண்ணற்ற தடவைகள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டும் இருக்கிறோம். அப்படி இருந் தும், ஏதோ புதிதாக எங்கிருந்தோ வந்த வனைப் போன்று என்னை நினைத்து நான் வெட்கப்படும் அளவில் பாராட்டிப்பேசியும், நாடகங்கள் நடத்தி மகிழ்ச்சியூட்டியும், வாழ்த்துமடல் கொடுத்து வாழ்த்துரைகள் கூறியும் பெருமைப்படுத்தினீர்கள். இதன் முலம் உங்களுக்கு என் மீதுள்ள அன்பையும், ஆதரவையும் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுகிறது. நீங்கள் வாழ்த்திப் புகழ்வதன் மூலம், என்னுடைய ஆயுள் விருத்தியடைவது எப்படியிருந்தாலும், என்னுடைய தொண்டில் மேன்மேலும் ஈடுபடப்போதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

கடவுளைப் பற்றிய கருத்துக்கள்

இங்கு நடத்தப்பட்ட நாடகக் காட்சிகளில் சிலவற்றை சிலர் விரும்புவர், சிலர் வெறுப்பர், விரும்புகிறவர்கள் இதன் நோக்கங்களின் உயரிய கருத்துக்களைப் பின்பற்ற ஆசை கொண்டவர்கள், வெறுப் பவர்கள் இக்கருத்துக்களை ஜீரணிக்க போதிய மனோதைரியமும், ஊக்கமும் அற்றவர்கள் அவர்கள் தான் கடவுள் இல்லை என்ற சொல்லையும், கடவுள் உண்டு என்ற சொல்லையும் உண்டாக்கியவர்கள்.

கடவுள் இல்லை என்றோ, உண்டு என்றோ யாரும் கவலைப்பட வேண்டியதே இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லு வதால் இருக்கும் கடவுள் அழிந்து போகாது. கடவுள் உண்டு என்று சொல்வதால், இல் லாத கடவுளை உண்டு பண்ணப் போவதும் இல்லை. ஏனெனில் கடவுள் என்ற சாதனத்திற்கு அப்பேர்ப்பட்ட குணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே கடவுளைப் பற்றிய விஷயமெல்லாம் அவரவர்களின் சொந்த விஷயம். அந்த கடவுளை ஒருவன் தன்னளவில் உண்டு என்றோ இல்லை என்றோ வைத்துக் கொள்வதில் தடை ஒன்றும் இல்லை.

பொது இடங்களில் கடவுளுக்கு வேலையில்லை

ஆனால், அந்தக் கடவுளைப் பொது வான இடத்தில் கொண்டுவரும்பொழுது தான், அதன் விஷயத்தில் கவலை கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒருவன் உண்மையில் கடவுள்பால் பக்தியும், நம் பிக்கையும் உடையவனாக இருப்பானாகில் அது அவனுடைய சொந்த நலனுக்கே அன்றி பிறருடைய நலனைக்கோரிதான் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள வேண்டியதில்லை.

அதைப் போன்றே கடவுளிடம் அவநம்பிக்கையும், பக்தி இன்மையும் உடையவன். அதனால் ஏற்படும் கஷ்டங் களுக்கும், கெடுதிகளுக்கும் ஆளாகக் கூடியவன், அப்படி இருந்தும், கடவுள் பக்தர்கள் என்பவர்களோ மற்றவன் கடவுள் இல்லை என்று கூறுகிறானே என்று அலறி அடித்துக்கொண்டு, அதனால் தனக்கு ஏதோ நஷ்டம் ஏற்பட்டதைப்போல் எண்ணிக்கொண்டு கடவுள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இதனால் என்ன விளங்குகிறதென்றால், உண்மையறியா, பகுத்தறிவற்றவர்களின் செயல்தான் கடவுள், பக்தி, மோட்சம், நரகம் என்பவைகள் என்ற உண்மைகள் விளங்குகின்றன. எனவே மனிதனிடம் பக்தி வளர வளர மற்றவர் களுக்குகேடு விளைகிறதென்றே கொள்ள வேண்டும்.

மாணவர் கடைப்பிடிக்க வேண்டியவை

மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல் முதலியவைகளாகும். இவைகள் நமக்குக் கடவுளை விட மேலானது. இவைகளைக் கொண்டவன், உலகத்தில் போற்றப்படுவான், எல்லாவித செல்வத்தையும் அடைந்தவனாகிறான்.

பிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தலே ஒழுக்கம்

ஒழுக்கமெனப்பட்டது பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் இருத்தல், நம்முடைய மனம் நோகாமலிருக்க பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதே போல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும் அதைப்போன்றே பிறர் நம்மிடம் நடந்து கொள்வதைக்கண்டு நாம மனவேதனை அடைவோமாகில், அதைப்போன்றே பிறரிடம் நாம் நடந்துகொள்வது பிறருக்கு கேடு விளைவித்தல் என்பதாகும்.

ஒழுக்கமே முக்கியமாகும் எனவே மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். மற்ற வர்க்கு நன்மை செய்யாமல் இருந்தாலும் பாதகமில்லை ஆனால் தீமை செய்யாமல் இருப்பதே மேலாகும்.

பள்ளிக் கட்டுப்பாட்டுக்கு அடங்க வேண்டும்

மற்றும் மாணவர்கள் இப்பள்ளியைப் பொறுத்தமட்டிலும் முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியது அரசாங்கத் திட்டங் களுக்கு ஏற்ற வண்ணம் எங்களால் நடத் தப்படும் இப்பள்ளியின் சட்ட திட்டங் களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் தனிப்பட்ட கொள்கைகளையும், தனிப்பட்ட விஷயங்களையும் இங்கு காண்பிக்கக் கூடாது அவரவர்கள் மனத்திற்குப் பட்ட கருத்துக்களை வெளியுலகில் உபயோகித் துக் கொள்ளலாமே தவிர அவற்றை இப்பள்ளியை பொறுத்த மட்டிலும் உபயோ கிக்கக்கூடாது குறிப்பாக கூறுமிடத்து இப்பள்ளி மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வெளியில் சென்று உத்தியோகங்கள் வகிக்கும்பொழுதும், இப்பள்ளிக்கு எவ்வித கெட்ட பெயரையும் உண்டாக்காத முறையிலும், பிறர் இப்பள்ளியைப் பற்றி தவறாக எண்ணாத முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். நான் மேன்மேலும் இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்துவதற்கு உங்களின் நற்குணமும், நல்லொழுக்கமும் தான் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத் தையும் கொடுக்கும்.

பள்ளி பிரச்சார சாதனமல்ல

என்னுடைய கொள்கைகளைப் பரவச் செய்வதற்கு நான் இதை ஒரு சாதனமாக பயன்படுத்திக் கொள்ளுபவன் அல்ல, என் கழகக் கொள்கைகளுக்கும் இப்பள்ளிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அன்றியும் என் கழகக் கொள்கைகளை பரவச் செய்வதற்கு தமிழ்நாட்டில் பரந்த இட மெல்லாம் இருக்க இப்பள்ளியின் மூலம் தான் கழகக் கொள்கைகளை நிலவச்செய்ய வேண்டும் என்ற அவசியம் சிறிதளவும் கூட இல்லை.

கழகப்பற்று பள்ளிக்கு வெளியிலே இருக்கட்டும்

எனவே, மாணவர்களாகிய நீங்கள் என்னை இப்பள்ளி நிறுவனர் என்ற முறையில் மட்டும் பாராட்டினால் போதும். அதுதான் எனக்கு மகிழ்வூட்டும் செய்தி என்றும் கூறுவேன். நான் ஒரு கழகத்தின் தலைவன் என்ற முறையில் இங்கு உங்கள் முன் பாராட்டப்படுவேனாகில் அது முற்றிலும் எனக்கும் இப்பள்ளிக்கும் இழுக்கைத் தேடித்தரும் செயல் என்று தான் கொள்ள நேரிடும். எனவே என் கழகப் பற்றுடையவர்கள் என் கொள்கையைப் பின்பற்ற விரும்புவார்களானால், அவை களை பள்ளியைவிட்டு வெளியில் சென்ற பிறகுதான் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

என்னுடைய கடந்த சுமார் 35 ஆண்டுகளாக என் சொந்த காரியம் என்பதை விட்டொழித்தவன் எனக்கு சொந்த காரியம் என்பதே இன்றைய நிலையில் அடியுடன் மறைந்துவிட்டது சொந்தக்காரியம் இல்லை யேல், மற்றப்படி பிறரைப் பொறுத்தே எதுவும் இருக்கும் அவசியம் ஏற்படுகிறது எனவேதான். என் முயற்சியெல்லாம் பொதுத்தொண்டிற்கென்றே பெரிதும் செலவாகிறது.

(திருச்சி-புத்தூர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மாணவ ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் சார்பாக மேற்படி பள்ளி நிறுவனர் தந்தை பெரியார் அவர்களின் 77-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு 22.9.1955 ஆம் தேதி காலையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பெரியார் பேசியது)

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It