ஜாதி ஒழிய வேண்டுமென்று நாங்கள் சொல்லி வருகிறோம். அதற்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது! எல்லா பத்திரிகைகளும் எதிர்த்து நிற்கின்றன!

இந்தியாவின் படத்தின் தலைப்பில் என்னுடைய பொம்மை போட்ட தீப்பெட்டியை வைத்து, எதிரில் ஆச்சாரியாரைப் பிச்சை எடுப்பது போன்ற வேஷம் போட்டு

'ஜனநாயகமே! அது பொய்யடா! வெறும் காற்றடைந்த பையடா! ஜாதியும் ஒரு பேயடா; நான் சொல்லிவிட்டேன் இது மெய்யடா!" என்று அவர் பாடிக்கொண்டே பிச்சை எடுக்கிறதாக 'ஆனந்த விகடனே' படம் போட்டுக் காட்டுகிறது என்றால் நாம் நினைப்பது எப்படித் தவறாக முடியும்? அரசமைப்புச் சட்டம் ஒழியாதவரை ஜாதி ஒழியாது என்பதை நாம் உணர்ந்து விட்டோம்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த அரசமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு ஆள்கிற வட நாட்டான் சம்பந்தம் நமக்கு வேண்டாம் எங்களுடைய ஆட்சி எங்களுக்கு வேண்டும் என்பதற்கு அறிகுறியாக இந்தியாவின் படத்தை எரிப்போம் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டோம். அதற்காக ஒரு மாநாடு நடத்தப் போகிறோம்.

சட்டத்தை எரித்து சிறைசென்றது நாலாயிரம் என்றால் இதில் நாற்பதினாயிரம் பேர் என்று கணக்கு வரவேண்டும்! விடுதலை கணக்கு வர வேண்டும்! விடுதலை நாளிதழில் ஒவ்வொருவர் பெயரும் வந்து கொண்டே இருக்க வேண்டும். போலீஸ்காரன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்து நம்மைப் பிடிக்க வேண்டும்.

மக்களுக்கு இந்த ஆட்சி பிடிக்கவில்லை. ஜாதி பிடிக்காமல், மதம் பிடிக்காமல் செய்கிற கிளர்ச்சியில் பார்ப்பனர்கள் டில்லியை நோக்கி வருகிறார்கள் என்ற நிலைமை வரட்டுமே! அப்படிச் செய்தால் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படலாம்! அவ்வளவுதானே? நீ என்ன யோக்கியமான முறையில் ஆட்சியில் இருக்கிறாய்? சட்டத்தை மீறி நெருப்பு வைத்து, வெடிகுண்டு வீசி, வெள்ளைக்காரனுடைய சாமான்களை எல்லாம் நாசப்படுத்தி மந்திரியாக வந்த சதிக்காரக் கும்பல்தானே? அல்லது 'எனக்குத் தனித்த யோக்கியதை இருக்கிறது திறமை இருக்கிறது இந்த நாட்டை ஆள' என்று சொல்ல முடியுமா?

நான் கேட்கிறேன்: ராஜேந்திர பிரசாத்துக்கும் இந்த நேருவுக்கும் என்ன தகுதி இருக்கிறது? அல்லது காமராசர் சுப்ரமணியம் பக்தவத்சலம் கக்கன் போன்றவர்கள் எங்கிருக்க வேண்டியவர்கள்? இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? எல்லோரும் காலித்தனம் செய்து குழப்பம் உண்டாக்கித்தானே போனார்கள்? அதைத்தான் நாங்களும் செய்கிறோம்.

காங்கிரஸ்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், போஸ்டாஃபிசுக்கு (அஞ்சல் நிலையம்) நெருப்பு வைக்கிறது, தந்திக் கம்பியை அறுப்பது, இரயிலுக்கு வெடி வைப்பது என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. போலீசுக்காரனுக்குக்கூட ஒரு அடி விழாமல் நாங்கள் உஷாராக இருந்து காரியம் செய்து கொண்டு வருகிறோம். எங்களைவிட இந்த நாட்டில் பொறுப்பை உணர்ந்து எந்தக் கட்சிக்காரர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்?

நேரு தமிழ்நாடு வந்தபோது செருப்பை வீசினான். அவர்களை ஒன்றும் செய்யவில்லை! எவனோ ஒருவன் திராவகத்தை வீசினான். வீசினான் என்பதற்காகத் திராவிடர் கழகத்தார்களை இல்லாத பாடெல்லாம் படுத்தினார்கள். யாரோ சிலர் மீது பொய்க் கேஸ் (வழக்கு) கொண்டு வந்தார்கள். ருசு (நிரூபணம்) ஆகவில்லை ஏன்று கேசைத்தான் விட்டார்கள்! அதுபோலவே பூணூல் அறுப்பு கேசும் (வழக்கு) ஆகும்.

நாங்கள் செய்கிற காரியத்தினால் ஒன்றும் ஆகாது என்று நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நாம் சொல்கிற, செய்கிற காரியம் வெற்றி தரும் என்று உறுதியான எண்ணமும் அதன்மேல் எழும், அதைவிட உறுதியும் இருக்கிறது.

பார்ப்பான் ஓட்டல் முன்பு மறியல் செய்த போது இது உன்னால் முடியாது என்று சொன்னார்கள். நான் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது ஒருவர் வந்து சொன்னார். இரவோடு இரவாக எடுத்து விட்டுச் சங்கராச்சாரியார் சொன்னதாகச் சொல்கிறார் என்றார்கள். கேட்டுச் சிரித்தேன் நான் சொல்லாமல் சங்கராச்சாரியார் மேல் சொல்கிறாரே இவரைவிட அவர் வீரர் என்பதனால்.

----------------------------------------

15.08.1958-அன்று சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: -”விடுதலை” 22.08.1958

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It