தோழர்களே,

நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடைபெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இதைப் பல அரசியல்வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம்.

அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்தியமானதும் ஏற்றதுமானதுமான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட்டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாயமாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர்கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்கவர்களா? இவை ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10பேர்களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர்கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.

இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75 பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன். அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இடமில்லாத படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பதுமில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாணயக் கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.

இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவமாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவது போல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவவொட்டாமல் செய்யப் பயனளிக்கும்படியான முயற்சி சர்க்காரால் செய்யப்படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள். இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ளவில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.

நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய்யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களிலும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படுகிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டியவர்களாகிறோம்.

ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப் படுத்தப்படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மானவுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர்.சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டையார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத்தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டுவுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொது நலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.
இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி, நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுறமிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில் நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.
உதாரணமாகச் சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கை ஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண்டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனைபேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத்திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.

ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட்டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு சொரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல்வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.

இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக் கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்யவில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.

இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.

காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையாயுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லாவிட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீசுவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழிதன்மையில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முசுலிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறித்தவர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில் யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக்கிறார்களா?

உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?

மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித்துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற்றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல் மில்முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர் னர் வைசிராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும்பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும் பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.

நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது, எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள்களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித்திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர்களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப் பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவைகளால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.

இன மானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.

ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவதற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத்தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப்பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லுமேயானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிகமிகப் பொருத்தமானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.

தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறித்தவ அனாதை காப்பு இடத்திலேயோ விட்டுவிட்டு வாருங்கள்.

உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளைகளைப் பெற்று விடத்தான் நேரும்.

எதிரிகளின் அரண் இப்போது கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது.
------------------------------------
2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டு விழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு - ”குடிஅரசு” - சொற்பொழிவு - 09.03.1946

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It