இந்தத் திருமணம் சுயமரியாதைக்காரர் திருமணமேயொழிய, சுயமரியாதைத் திருமணமல்ல. உண்மையான சுயமரியாதைத் திருமண முறை வர இன்னும் நாளாக வேண்டும். இம்முறை என்னால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சொன்னாலும், இது பழைய முறைக்கு மாறுதல் முறையாகும்.

இம்மாறுதல் முறையைக் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம், பெண்களின் அடிமைத் தன்மையைப் போக்க வேண்டும். சடங்குகளை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவேயல்ல. பெண்கள் ஆண்களைப் போன்று அடிமை நீங்கி சமத்துவமாக வாழ வேண்டுமென்பதை முக்கியமாகக் கொண்டதாகும்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள், ஆண்களுக்குத் தொண்டூழியம் செய்யக் கூடியவர்கள், ஆண்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றிருக்கிற அடிமைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதற்காகவேயாகும். திருமணம் என்கின்ற இம்முறையானது தமிழனுக்குக் கிடையாது. தமிழனுக்கு இருந்தது என்பதற்கு ஆதாரமில்லை. வாழ்வின் முக்கியமான இம்முறையைக் குறிப்பிடக் கூடிய தமிழ்ச் சொல் தமிழில் கிடையாது. நாம் ஏற்படுத்திய சொல் தான் திருமணம் என்பதாகும். இப்பெயருக்கும், இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. நம் நாட்டிற்குப் பார்ப்பனர்கள் வருவதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையே கிடையாது.

தமிழர்கள் ஆண்களும், பெண்களும் அன்பால், காதலால் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவியாக வாழவில்லை. இம்முறையானது பார்ப்பனருடைய நாட்டிலிருந்து வந்தது என்பதற்கும், இம்முறை பார்ப்பனர்களால் அவர்களிடையே ஒழுக்கம் குன்றியபோது ஏற்பாடு செய்யப்பட்டது என்பதற்கும், தமிழர்களின் பழைய நூலான தொல்காப்பியத்தில் ஆதாரங்களிருக்கின்றன. மனுதர்ம சாஸ்திரத்தின்படி சூத்திரர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. பார்ப்பான் சூத்திரன் வீட்டிற்கு வந்து சூத்திரனுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது சாஸ்திரமாகும். எனவேதான் பார்ப்பான் சூத்திரனுக்குத் திருமணம் செய்து வைக்கிறபோது அவர்களுக்குப் பூணூலை மாட்டி பார்ப்பானாக்கித் திருமணம் செய்து வைப்பான். தாலி கட்டுவது என்பது பெண்களின் அடிமையை வலியுறுத்தக் கூடியதேயாகும். நம்முடைய நல் வாய்ப்பின் காரணமாக இன்றைய அரசு அமையப் பெற்றதால் அண்ணா அவர்கள் முதல் காரியமாக, சட்டப்படிச் செல்லாதென்றிருந்த இம்முறையினைச் சட்டப் பூர்வமாக்கினார்கள்.

இரண்டாவது, இம்முறையானது பகுத்தறிவுள்ள மனிதர்களை மடையர்களாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். பொருத்தம், ஜாதகம், ஜோசியம், நேரம், நாள், நட்சத்திரம் என்பவையும், பகலில் விளக்கு வைப்பது, அம்மி, அரசாணி போன்றவை வைப்பதெல்லாம் தேவைக்கும், அவசியத்திற்கும், அறிவிற்கும் சம்பந்தமற்றதாகும். உலகிலுள்ள 400 கோடி மக்களில் 370 கோடி மக்களுக்கு இந்தச் சடங்குகள் எதுவும் கிடையாது. இதெல்லாம் மனிதனை மடையனாக்குவதற்காகவேயாகும்.

மூன்றாவது பெரிய கேடு மதம், ஜாதி பார்ப்பதாகும். மக்களை ஒதுக்கிப் பிரிவுபடுத்துவதாகும். இம்மூன்றையும் ஒழிப்பதே சுயமரியாதை இயக்கமாகும். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து செய்யவேண்டும். பொருத்தம் என்பது ஆண், பெண்ணையும், பெண் ஆணையும் விரும்புவதே தவிர, எவனோ போடுகிற முடிச்சியிலோ, ஜாதகத்திலோ இல்லை.

பெண்களை 20 வயதுவரை படிக்க வைக்கவேண்டும். பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக் கொள்ளவேண்டும்.  உலகில் மனித சமுதாயத்தைப் பற்றி எவனுமே சிந்திக்கவில்லை. வந்த பெரியவர்கள், இலக்கியங்கள் எல்லாம் பெண்களை அடிமையாக இருக்கவேண்டும். ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்று தான் சொல்கின்றன. பொது இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற திருக்குறள் கூட, பெண்களை இழிவுபடுத்துவதாக, அடிமைப்படுத்துவதாகவே இருக்கின்றது. மனித சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமானால், பெண்கள் அறிவுபெற வேண்டும். மனிதன் சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் பார்த்து நடக்காமல் தங்களின் அறிவைப் பார்த்து அதன்படி நடக்க வேண்டும்.

ஆண்களும், பெண்களும் பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். அரசாங்கம் இதற்கு ஏற்பாடு செய்ய ஏனோ தயங்குகின்றது.  ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகினால்தான் அவர்கள் அனுபவம் பெற முடியும்.

வாழ்க்கையில் நாம் பிறருக்கு நம்மாலியன்ற உதவியைச் செய்ய வேண்டும். வரவிற்கு அடங்கி வரவிற்குள் செலவிட்டுச் சிறிதாவது மிச்சம் செய்ய வேண்டும். கடன் வாங்குவதால் மனிதன் தன்மானத்தையும், சுதந்திரத்தையும் இழக்க நேரிடுகிறது. பெண்கள் ஆடம்பரமாக வாழக் கூடாது. நிறைய நகை போட்டுக் கொள்வது உயர்ந்த விலையுள்ள உடைகள் அணிவது, சிங்காரம் செய்து கொள்வதுகூடாது. சாதாரணமாக வாழவேண்டும்.

அரசாங்கத்திற்கு இன்னும் துணிவு வரவில்லை. துணிவு வந்தால் ஒரு பெண் மீது இத்தனை கிராம் தங்கத்திற்கு மேலிருக்கக் கூடாது என்று தடை செய்யவேண்டும். குழந்தை பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்று, தப்பினால் இரண்டு அதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அரசாங்கம் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும். இரண்டிற்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் பிரமோசன் கொடுக்கக் கூடாது.

(22.8.1971 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)விடுதலை, 28.9.1971

--------------------------------------------------------------------------------

மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் - என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.

அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.

மணமக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கோவிலுக்கோ, குளத்திற்கோ, குப்பைத் தொட்டிக்கோ போகக் கூடாது. வேண்டும் என்றால், வெளி மாநிலங்களுக்கோ  வெளிநாட்டிற்கோ சென்று சுற்றிப் பார்த்து உலக அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். சிறீரங்கத்திற்கோ, காசிக்கோ சென்றால், எதைப் பார்க்க முடியும்? அந்த அழுக்குருண்டை `சாமியைத்தானே பார்க்க முடியும்? இதனால் `கடுகு அளவு முன்னேற்றமாவது ஏற்படுமா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.

-----------------

(14.7.1971 அன்று மாப்படுகையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) விடுதலை, 23.7.1971.

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It