சபா திவானின் ‘டெல்லி - மும்பை - டெல்லி’
களிப்பு, துய்ப்பு, இன்பம், கொண்டாட்டம் இவை மனித உயிர்களுக்கு மட்டும் உரிய உணர்ச்சிகள் இல்லை. இவை உலக ஜீவராசிகளின் உயிர்த் தொடர்ச்சி அறுபடாமல் காக்கும் ஜீவ சக்தி. ஆனால் நம் பெரும்பாலான இந்தியச் சமூகங்களில் இன்று ஆட்டம், கொண்டாட்டம் என்பது பொது வெளியில் ஆண்கள் ஆட, சமூகம் ரசிப்பதும், உள் அரங்கில் பெண்கள் ஆட, ஆண்கள் ரசிப்பதுமாக இருக்கிறது. ஒரு பிரிவினர் தமது சுகத்திற்காகப் பிறரை பயன்படுத்தும் போது அது சுரண்டலாக மாறுகிறது. வர்க்கச் சுரண்டலைப் போல இது பாலின்பச் சுரண்டல். பொதுவெளியில் பெண்களின் உடல் இயக்கம் தடை செய்யப்படுகிறது. மறைமுக வெளியில் அவளது உடல் பாலின்பத்திற்காக இயக்கப்படுகிறது.
சமூகப் பொதுவெளியில் பெண்களுக்கான உடை வரையறைகளும் நடைமுறைகளும் அச்சு, காட்சி ஊடகவெளிகளில் அனுமதிக்கப் படுகின்றன. அதுபோல் சமூகப் பொது வெளியில் தடை செய்யப்பட்ட பெண்களின் ஆட்டம் திரைப்படம் மற்றும் உல்லாச விடுதிகளின் கூடாரத்துள் அனுமதிக்கப்படுகிறது. அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட சமூக ஒழுக்கம் ஒன்றாகவும் ஆனால் அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவும் உள்ளது. இந்த முரண்பட்ட சமூகக் கலாச்சார வெளிக்குள் வகுத்துக் கொண்ட, பின்பற்றப் படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட துய்ப்பு தொடர்பான செயல்பாடுகள் பெண்களுக்கு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. ஆனால் ஆண்கள் தடையற்ற சுதந்திரத்துடனும் தன்னிச்சையுடனும் காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர். இதன் தொடர் வினையாக பெண் உடல் நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டு பொது சமூக மனோநிலை சுவீகரித்துக் கொள்கிறது. இதன் விளைவாக ஆரோக்கியமான மனநிலையற்ற வக்கிரம் பிடித்த மனிதச் சமூகம் உருவாகிறது.
இந்த ஆணாதிக்க மேலாண்மைச் சமூகம் பெண் உடலை குடும்ப வெளிசார்ந்த இடத்தில் புனித பிம்பமாகவும் அதன் அகம்சார்ந்த துய்ப்புவெளியில் நுகர்வுப் பொருளாகவும் வைத்திருக்கிறது. ஏற்றத் தாழ்வான சாதிப் படிநிலையுடைய இந்தியச் சமூகங்கள் பெண்களை - வீட்டு விலங்கு, செல்லப்பிராணி, சர்க்கஸ் விலங்கு போன்று வளர்த்தெடுத்து வருவதை இதன் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும். சமூகம் விலங்குகளை தன் வசம் பழக்குவதற்கும் பெண்களைப் பழக்குவதற்கும் ஒரே மாதிரியான உத்தியையே கையாள்கிறது.
தமிழகத்தில் அறுவடை மற்றும் விழாக்களை ஒட்டி நடைப்பெற்ற ஊரே சேர்ந்து பங்கெடுக்கும் கோலாட்டம், கும்மி மற்றும் துணங்கைக்கூத்து போன்ற கலை வடிவங்கள் இன்று முற்றிலுமாக வழக்கொழிந்து வருகின்றன. (இன்று மேடை கலையாகிவிட்டது) சில பழங்குடி சமூகங்களில் மட்டுமே ஆட்டம் கொண்டாட்டம் பொதுமைப்படுத்தபட்டு இன்றும் தொடர்கிறது. இராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப் புறக்கலைக் கேளிக்கை ஆட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் ஆட, ஊர் சாதிக் கூட்டம் ரசிப்பது - பழந்தமிழகத்தில் நிலவிவந்த சதிர் போன்ற செவ்வியல் (சின்ன மேளம், பெரிய மேளம் உட்பட) நடனங்கள் - ஒதுக்கப்பட்ட தாசி பெண்கள் ஆட ஆண்கள் ரசிப்பது - சிலர் ஆட பலர் ரசிப்பது. அதுவும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள் ஆட ஆண்கள் ரசிக்கும் அந்தக்கால வழக்கம்தான் இன்று வெவ்வேறு வடிவங்களில் காலமாற்றத்திற்கு உட்பட்டு மதுவிடுதி நடனமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.
கலைவடிவங்களை சமூகக் கலைஞர்கள் பொது வெளியில் நிகழ்த்துவது வேறு; பிறரை அனுமதிக்க முடியாத குறிப்பிடப்பட்ட பகுதியினருக்காக நிகழ்த்துவது வேறு. ஒன்று - அங்கீகரிக்கப்பட்ட கலைவடிவமாக இருந்தாலும் அது ஒடுக்கப்பட்ட பெண்களை பொதுவெளியில் ரசிக்கும் மேல்சாதி ஒடுக்குமுறை கலாச்சாரம். இரண்டு - ரகசிய தனியிடங்களில் பெண்களை ஆடவிட்டு ரசித்தபடி குடித்து, கூத்தாடி தன் வரைமுறையற்ற சுதந்திரத்தைப் பறைச்சாற்றும் வக்கிரக் கலாச்சாரம்.
குடும்பவெளிக்குள் ஆணின் உடல் இச்சையை தீர்க்கும் பெண் பத்தினியாகவும், பொதுவெளிக்குள் ஆணின் உடல் இச்சையைத் தீர்க்கும் பெண் பரத்தையாகவும் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. நவீன தாசி ஆட்டத்தின் அரங்கமாக நம்நாட்டு மதுவிடுதி கூடங்கள் மாறிவிட்டன. ஆண்களின் காமப்பசிக்குத் தீனிபோட பொதுமகளிர் தேவைப்படுவது போல ஆண்களின் மன அயர்ச்சியைப் போக்கவும் அவன் தன்னை தொடர்ந்து காமக் கருவியாகப் புதுப்பித்துக் கொள்ளவும் இது போன்ற நிகழ்வுகள் தேவை. இதற்காக ஆண் சமூகம் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தனக்காக ஊழியம் செய்ய உருவாக்கப்பட்டதுதான் இந்த பாலியல் அடிமைக் கலாச்சாரம்.
ரியா, டெல்லியிலிருந்து ரயிலில் மும்பை சென்று மதுவிடுதிகளில் சில வாரங்கள் தங்கி ஆடிவிட்டு டெல்லி திரும்புகிறார். பிறகு சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் டெல்லி செல்கிறார். இப்படத்தில் தன் வாழ்க்கையை சொல்லும் ரியா, தன்னை போன்ற ஆயிரக்கணக்கான நடன பெண்களின் பிரதிநிதியாகிறார். “பதிமூன்று வயதில் திருமணமாகி பதினேழு வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருபது வயதில் விவாகரத்து பெற்றேன். எப்படி சமைப்பது, ஆணுடன் எப்படி பழகுவது என்று எதுவுமே எனக்குத் தெரியவில்லை. என் வயதொத்த பெண்கள் தெருவில் விளையாடிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தபோது குடும்பத்தின் எல்லா பாரங்களும் என் மீது ஏற்றப்பட்டிருந்தது. சமைக்கத் தெரியவில்லை, கணவனுடன் பழகத் தெரியவில்லை என்று தினமும் என்னைக் கொடுமைப்படுத்தினர். எனக்கு ஒரே சிந்தனை மட்டும்தான் இருந்தது - இக்கொடுமையிலிருந்து எப்படி மீள்வது. மீண்டுவிட்டேன், ஆனால் என் குழந்தைகள் எனக்குக் கிடைக்கவில்லை” என்கிறார்.
நவநாகரீக தோற்றத்தில் இருக்கும் ரியாவுக்கு தன் பெயரைக்கூட எழுதத் தெரியவில்லை. பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட அவளின் தங்கை உதவுகிறாள். தன் தந்தை இறந்தபின் தாய், தங்கை, தம்பிக்காகவும் குடும்பத்தை நடத்தவும் சிறு சிறு கம்பெனிகளில் வேலை செய்ததாகச் சொல்கிறாள். வருமானம் போதாமல் கஷ்டபடும்போதுதான் தன் பகுதி பெண்கள் மூலமாக பூகொடுத்து வரவேற்கும் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்ததாகவும் அதற்குக் கிடைத்த குறைந்த ஊதியம் போதவில்லை என்பதால் நடனப் பெண்ணாகப் பணிபுரியத் தொடங்கியதாகவும் சொல்கிறாள். இத்தொழில் தனக்குப் பிடித்திருப்பதாகவும் தனது குடும்பத்திற்குத் தேவையான வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறாள். தான் சுதந்திரமாக இருப்பதாகவும், தான் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடிவதாகவும் சொல்கிறாள். ஆனாலும் டெல்லி போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வந்து என் அம்மாவை மிரட்டுவதால் சமூக உறவு பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறாள்.
மும்பை ரயில் பயணத்தில் தன் தாயைப்பற்றி பேசும்போது சொல்கிறாள் “என் தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிப்பார். என் அம்மா அவ்வளவு துன்பத்தையும் தாங்கிக் கொண்டார். இவன் சாவமாட்டானா என்று எதிர்பார்த்தார். என் தந்தை இறந்த பிறகு அக்கொடுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. இப்பொழுதுதான் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்” இது இந்திய - கணவன் மனைவி உறவு குறித்து தெரிவிக்கப்பட்ட தைரியமான கருத்து.
மும்பைக்கு வரும்போது ஏஜெண்ட் வீட்டில் தங்குகிறாள். அவன் மனைவியும் இவளுடன் நடனமாடுகிறாள். கூட்டுக் குடும்பம்போல் ஐந்தாறு பெண்கள் ஒன்றாகத் தங்கி ஒன்றாகச் சமைத்து சாப்பிட்டு மாலையில் தங்கள் குழந்தைகளிடம் ‘அம்மா ஆபீஸ் போறன் டாட்டா சொல்லு’ என்றதும் அழும் குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு மதுவிடுதிக்குச் செல்கிறார்கள். ஒப்பனை அறையில் தங்களை அலங்கரித்துக் கொண்டு அன்றைய பேஷன் ஆடைகளை அணிந்து குறை இருட்டில் சினிமாப் பாட்டு பின்னணியில் அலற கண்ணாடிக்குவளை சத்தமும் குடிகாரர்களின் உளறலும் நிறைந்த கூடத்தின் நடுவில் ஆடத் தொடங்குகின்றனர். ஆண்கள் தள்ளாடியபடியே வந்து ரூபாய் நோட்டுகளால் அபிஷேகம் செய்கின்றனர். உடனே பணியாட்கள் அப்பணத்தைப் பொறுக்குகிறார்கள்.
“இதற்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் அந்த முதலாளி கொடுக்கிறான். வாடிக்கையாளர்கள் கொட்டும் பணம் மொத்தமும் முதலாளிக்கே. பரிசுப் பொருட்கள் கொடுத்தால் இன்றைய சந்தை விலையில் பாதி விலையை முதலாளிக்குக் கொடுத்துவிட வேண்டும். மேலும் பணம் கொட்டும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து வரவைத்தால்தான் எங்களுக்குத் தொடர்ந்து அங்கு வேலை கிடைக்கும். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான பணம் கொட்டும் பல வாடிக்கையாளர்களை வைத்திருக்க வேண்டும். ஏஜென்டுகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். பகலில் அவ்வாடிக்கையாளர்களுடன் செல்போனில் தொடர்புகொண்டு கிளுகிளுப்பாகப் பேச வேண்டும். அவர்களுடன் சினிமா, பீச் என்று கம்பெனி கொடுப்பதும் சில சமயங்களில் அவர்களுடன் உடலுறவுக்குச் சம்பதிப்பதும் நேர்கிறது” என்கிறாள் ரியா.
இப்படம் ஒரு ஆண்டுகாலம் தொடர்ந்து ரியாவின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. மும்பை அரசாங்கம் பார் நடனத்திற்கு தடைவிதித்ததும் இவள் பெங்களூர் நகரத்தில் சில மாதம் நடனமாட போய்வருகிறாள். பிறகு அரபு நாடுகளுக்குச் சென்று வருகிறாள். அதுவும் சரிவராமல் தான் காதலித்து வந்தவனை திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டுடன் வாழ்கிறாள். “தான் விரும்பிய இக்குடும்ப வாழ்க்கை தன்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பதாகக் குறைபடுகிறாள். தன்னை தனியே காய்கறி வாங்கக்கூட அனுப்ப பயப்படுகிறார் என் மாமியார். என்னுடைய கடந்தகால வாழ்க்கை யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று நினைக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதும் வீட்டாரின் மேலதிகக் கண்காணிப்பு வளையத்துக்குள் அடைப்பட்டுக் கிடப்பதாலும் ரொம்ப நாட்கள் இவ்வாழ்க்கையை நான் தொடர முடியாது என்று நினைப்பதாகவும்” சொல்கிறாள். இத்துடன் இப்படம் முடிகிறது.
நடுத்தர மற்றும் நட்சத்திர மதுவிடுதிகளில் ஆடும் பெண்கள் பெரும்பாலும் படித்த ஓரளவு வசதியோ அல்லது பெரும் பணக்கார குடும்பங்களிலிருந்து விரும்பி வந்த மாடல் அழகிகளோ ஆவர். அடித்தள மத்தியதர வர்க்க மதுவிடுதிகளில் ஆடும் பெண்கள் பெரும்பாலும் வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்கவே வருகின்றனர். இப்பெண்களின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் மேலும் அதிர்ச்சி தருகிறது. பன்னாட்டு வளர்ச்சித் திட்டங்களால் அகதியாக்கப்பட்டு தங்கள் நிலத்தைவிட்டு துரத்தப்பட்ட பழங்குடிப் பெண்கள், வறட்சியால் பஞ்சம் பிழைக்க வேலை தேடி நகரத்தின் வீதிகளில் அலையும் கிராமப்புற பெண்கள், நகரமயமாதலில் பாதிக்கப்பட்டு வேலையிழந்த புறநகர் பெண்கள். இந்த நடனப்பெண்கள் எழுபத்தைந்து சதவீதம் பேர் அதிகம் படிப்பறிவில்லாதவர்கள். மும்பை அரசாங்கம் மது விடுதி நடனத்தை தடைசெய்த போது அதிகமாக பாதிக்கப்பட்டது இப்பெண்களே. ஏனெனில் கிராமத்தில் விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. படிப்பு இல்லாததால் நகரத்திலும் வேலை கிடையாது.
சென்ற ஆண்டு மகாராஷ்டிரா அரசு பார் நடனத்தை தடை செய்ததை எதிர்த்தும், ஆதரித்தும் பல போராட்டங்கள் நடந்தன.
1. பெண்ணியவாதிகளும் பல முற்போக்குக் குழுக்களும் மனித உரிமை அமைப்புகளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை நடனமாட அனுமதிக்கவேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். வேலையிழக்கும் பெண்கள் நேரடியாக விபச்சாரத்திற்குத் தள்ளப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எச்சரித்தனர். இதனால் ஏற்படும் சமூக பாதிப்பும் எய்ட்ஸ் போன்ற நோய்களும் மிகப் பெரிய பிரச்சனையாக எதிர்காலத்தில் உருவாகி அரசுக்கு சமூக, பொருளாதார நெருக்கடியை உருவாகும் என்று சுட்டிக் காட்டினர்.
2. ஆனால் சில பெண்ணியவாதிகளும் பிற்போக்கு சக்திகளும் நம் குடும்ப ஆண்களும் பெண்களும் அரசின் உத்தரவை வரவேற்றனர். இதனால் நம் கலாச்சாரம் தூய்மை அடையும். இதே போல் பாலியல் தொழிலாளியையும் ஒழித்துவிட்டு சமூகத்தை ப்ளீச் செய்துவிடுங்கள் என்கின்றனர். அதற்காக இப்பெண்களை தூக்கில் போடக்கூட இவர்கள் தயார்.
சபா திவான் எடுத்த “டெல்லி மும்பை டெல்லி” என்ற விவரணப்படத்திலிருந்து பல உண்மைகளை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதையொட்டி சில அநீதிகளும் புரியவந்தது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டில் கிட்டத்தட்ட 40கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ, இந்த பார்களுக்கு வரும் ஆண்களின் பாக்கெட்களில் எப்படி இவ்வளவு அபரிமிதமான பணம் சேர்கிறது வாரி இறைப்பதற்கு. இந்த ஆண்கள் மிகவும் அபாயகரமானவர்கள். இவர்கள் இரவு விடுதிக்குவர லஞ்சம் வாங்கத் தயங்காத அரசுத்துறை அதிகாரிகள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டையே விற்று ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள். உல்லாசமாக வாழ கூலிப்படையாக இருக்கத் தயங்காத கொலைகாரர்கள். அதிக லாபம் சம்பாதிக்க உணவுப்பொருளில் நச்சுப்பொருள்களை கலக்கத் தயங்காத வியாபாரிகள். போலி மருந்துகளைத் தயாரித்து கொள்ளையடிக்கும் முதலாளிகள். கொத்தடிமைகளாக வேலைவாங்கி சொத்துச் சேர்க்கும் பண்ணையார்கள். இதுபோல் கூறிக்கொண்டே போகலாம். அறமற்ற முறையற்ற வழிகளில் வரும் கருப்புப் பணம் இந்த வழிகளிலும் வாரி இறைக்கப்படுகிறது.
இந்த மதுவிடுதிகளையும் விபச்சார விடுதிகளையும் நடத்துபவர்கள், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள், அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான வடிக்கையாளர்கள் இவர்கள் யாரும் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல. இவர்கள் இந்திய தந்தைமார்கள், கணவன்மார்கள், சகோதரர்கள். விபச்சார விடுதிக்கோ உல்லாச நடன விடுதிக்கோ செல்லும் ஆண்களின் அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் சமூகத்தில் எந்த பங்கமும் இழப்பும் நேர்வதில்லை. சமூகக் கலாச்சார ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் இவர்கள் என்றும் கட்டுப்பட்டவர்கள் இல்லை. இவர்கள்தான் நமது அரசு அதிகாரிகள், இவர்கள்தாம் நமது நாட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள், இவர்கள்தாம் நம்மை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் தாம். . . இவர்கள்தாம் பெண்கள் ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று போதிப்பவர்கள். இந்த மகான்கள் சகல உரிமைகளுடன் சுகபோகத்துடன் இங்கு வாழ்ந்து வரும் போது இத்தொழிலுக்கு பல்வேறு வாழ்வியல் நிர்ப்பந்தங்களாலும் வறுமையாலும் தள்ளப்பட்ட பெண்கள் மட்டும் சமூகத்தால் ஒதுக்கப்படுவதும் பழிக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் ஏன்? பெண்களை மட்டும் குற்றவாளியாக்கி தண்டிக்க நினைப்பவர்கள் முதலில் தங்கள் வீட்டு ஆண்களிடமிருந்து சமூகத் தூய்மையாக்கத்தைத் தொடங்குங்கள்.
சபா திவான் இயக்கிய “டெல்லி மும்பை டெல்லி” ஆவணப்படம் 26.2.2006 அன்று டெல்லி, இந்தியன் ஹபிடட் மையத்தில் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்குப் பின் இப்பெண்களின் மீது செலுத்தப்படும் சமூகக் கொடுமைகளையும் நிர்ப்பந்தங்களையும் பற்றி விவாதித்தோம். “சில நடனப் பெண்கள் தங்கள் குழந்தைகளை வெளி மாநிலத்தில் விடுதிகளில் தங்கி படிக்க வைக்கிறார்கள். அல்லது வெளிமாநிலத்தில் உள்ள தங்கள் பெற்றோரிடம் விட்டு வைத்திருக்கிறார்கள். அதனால் குழந்தைகள் நோயுறும்போது மிகுந்த மனஉளச்சலுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளைப் பார்க்கப் போனால் வேலைபோகும் அபாயம். ஏஜென்ட் மற்றும் போலீஸ் தரும் தொல்லைகள். தங்களுடனே இருக்கும்படி குழந்தைகளின் வற்புறுத்தலும் நிர்ப்பந்தமும் தன் உறவினர்களும் சமூகமும் தரும் புற நெருக்கடிகள் என இப்பெண்கள் பன்முக நெருக்கடிகளுக்கு இடையில் சிக்கித் தவிப்பதாக” சபா திவான் தெரிவித்தார்.
டெல்லி மும்பை டெல்லி (2006)
ஆவணப்படம் - 63 நிமிடங்கள்
இயக்கம் - சபா திவான்,
ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு - ராகுல் ராய்
எடிட்டிங் - அனுபாமா சந்திரா
ஒலி - ஆஷிஸ் பாண்டியா, சுந்தர்