(தனது 76 வது பிறந்த நாளையொட்டி,1954,செப்டம்பர் 17ஆம் நாள் 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார் வெளியிட்ட வேண்டுகோள்)

என்னுடைய  பிறந்த நாளாகிய இன்று ஒரு அறிக்கை விட வேண்டுமென்று என் தோழர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சினை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சினை என்றும் கருதுகிற ஒரு விஷயத்தைப் பற்றி பொது மக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

periyar_668     தோழர்களே! தமிழ்நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில் துறையிலும் தலையெடுக்கவொட்டாமல் மட்டந் தட்டிக்கொண்டே வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம் பெறவோ, இதுவரை வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதியோ வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள்ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.

     இந்தக் காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும் நான் உறுதியாகக் கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர் கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன்.

     இது ஒரு புறமிருக்க இந்த சந்தர்ப்பத்தையும் நடப்புகளையும் ஆதரவாகக் கொண்டு உள் நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோக ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்ப்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

     உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகாணத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லாக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட)ப் பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக் கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத் துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து 'மெயில்' முதலிய பத்திரிக்கைகளின் கருத்துகளையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துகளையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

     இதை எதற்காகக் குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே.

     நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத் துறையில்-தமிழன், பார்ப்பனரல்லாதான் என்கிற பெயரால் தனக்குரியப் பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர்கள் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கியப்பின் மீதி-அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைக் காட்டி பதவிகொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும்; அவனுக்குக் கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்குக் கொடுப்பதும், அவர்களுக்குக் கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்குக் கொடுப்பதுமாய் சூழ்ச்சிசெய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள். வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது.

     இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது; இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு-தென்னாடு என்று பிரிந்து விட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாரி நாடு என்னும் பேரால் ஆந்திரநாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்துவிட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

     இதை ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கை(மக்கள் தொகை)யில் பார்ப்பனர் 100க்கு இரண்டே முக்காலும், கிறிஸ்தவர் 100க்கு 4-லும், முஸ்லிம்கள் சுமார் 100க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100க்கு 8-ம், கர்நாடகர்கள் 100க்கு 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கையில் தமிழ்நாட்டார் - தமிழர் அல்லாதவர்கள், 100க்கு 25 பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்தக் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100க்கு 60 பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100க்கு 75 பேர்களாகவும் இருக்கிறார்கள். இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, சமுதாயத் துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலே காட்டிய இந்தக் கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

     தமிழர்கள் சமுதாயத்துறையில் கீழான சாதியாராக-சூத்திரர்களாக இருப்பதைப் பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர். அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கியதை இவர்களுக்கு இல்லாமல் இருந்தும் தமிழர்களைவிட இவர்கள் மூன்று பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்து வருகிறார்கள்.

     இதில் குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணாச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள் ஆனதனால் வகுப்புவாரி(இட ஒதுக்கீடு) உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனர் அல்லாதார் என்கிறக் கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே-அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்-அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனர் இல்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்: (இப்படிக் கூறிவிட்டு தமிழ்நாட்டின் தலைமை செயலகம் உள்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மாவட்டக் காவல் துறை நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த  தமிழர் அல்லாத பிற மொழியாளர்களின் நீண்ட பட்டியலை பெரியார் எழுதுகிறார். - அறிவுக்குயில்)

     அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும். மற்ற இலாக்காக்களிலும் 100க்கு 90 பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரெட்டேரியட், போலீஸ் முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை-திரு ஆச்சாரியார் அவர்கள் காலத்திலேயே ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.

     தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் காணோம். ஆகையால்,ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

     சமீப காலத்தில் திருவாங்கூர்-கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமைக் கேட்டதற்காக, தமிழர்களை அந்த நாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்த அளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத் தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப் பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுபாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்த நாள் விழா வேண்டுகோள்.

அனுப்பி உதவியவர்: அறிவுக்குயில்

Pin It